Monday, December 29, 2014

TCS ஆட்குறைப்புக்கு எதிராக ஒன்றிணைக்கும் அமைப்பு FITE

நேற்று ஒரு பதிவு இட்டிருந்தேன். 25 ஆயிரம் பேரை ஐடி நிறுவனங்கள் வேலையைவிட்டு நீக்கியதற்கு உங்களால போராட முடியவில்லையே என்று. அதற்கு இளந்தமிழகம் அமைப்பில் இருந்து ஒருவர் என்னை தொடர்புகொண்டார். இளந்தமிழகம் அமைப்பு இந்த பிரச்சினையை ஒட்டி மிகத்தீவிரமாக இயங்குவதாக தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன் தமிழ் நாசர் எனக்கு டிசிஎஸ் layoffக்கு எதிரான facebook eventல் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனக்கு அது பற்றி நிறைய கேள்விகள் இருந்ததால் நேரில் பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். (அவர் என்னோடு போபால் வந்தவர்.)
நேற்று மாலை 3.30க்கு அதிகாரப்பூர்வமாக Forum for IT employees (FITE) என்ற அமைப்பு துவங்கப்பட்டிருக்கிறது. ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான தொழிற்சங்கம் போல இது இயங்கும்.

இது பற்றி அமைப்பில் இருக்கும் நண்பரிடம் பேசினேன். டிசிஎஸ் ஈவண்டுக்கு உலகம் முழுக்க இருக்கும் சுமார் 200 பேர் மேல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.பிப்ரவரி இறுதிக்குள் 25 ஆயிரம் பேரை வெளியேற்ற வேண்டும் என்பது தான் டிசிஎஸ்சின் இலக்கு. அதற்குள் இந்த போராட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பது தான் திட்டம் என தெரிவித்தார்.
சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண், ஐடி நிறுவனம் ஒன்று தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். இழப்பீடு கூட பெற்றார். பத்திரிக்கையில் படித்தேன்.

எனவே நிச்சயமாக நம்மால் சட்டப்பூர்வமாக ஜெயிக்க முடியும். நிறுவனங்கள் புத்திசாலித்தனமாக "நாங்களா டெர்மினேட் பண்ணா நிறைய problem வரும். நீங்களே பேப்பர் போட்டுட்டு போயிட்டா பிரச்சினையே இல்ல" என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். "நீங்களே அனுப்புங்க.. நான் பாத்துக்கறேன்" என்று சொல்வது தான் புத்திசாலித்தனம்!
FITE அமைப்பு நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது (பட உதவி : visai.in)

இப்போதைக்கு வேலையை விட்டு அனுப்பப்பட்டவர்களை போலவே வேலையில் இருப்பவர்களும் ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே கார்பரேட்டுகளுக்கு எதிராக நாம் வெல்ல முடியும். "இல்ல எனக்கு தான் வேலை இருக்கே. நான் ஏன் போராடணும்.. எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கு என்ன? அவனுக்கு திறமை இல்ல. அதனால வேலைய விட்டு அனுப்பறாய்ங்க" என்றெல்லாம் டுபாக்கூர் விட்டால் உங்களை எந்த அந்நிய சக்தியாலும் காப்பாற்ற முடியாது

FITE அமைப்பை தொடர்புகொள்ள http://fite.org.in/contact-us/

(குறிப்பு : டிசிஎஸ் layoffக்கு எதிரான பெட்டிசனில் கையெழுத்திட்டு ஆதரவை தெரிவியுங்கள் நண்பர்களே
https://www.change.org/p/international-labour-organization-… )

தொடர்புடைய பதிவுகள் : http://www.visai.in/2014/12/30/launched-forum-for-it-employees/

Saturday, December 27, 2014

PK திரைப்படம் விமர்சனம்

இன்று தான் PK திரைப்படம் பார்த்தேன். மதத்திற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை என்பது தான் ஒன்லைன். அதை எவ்வளவு நேர்த்தியான கதை மூலம் சொல்லமுடியுமோ அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

வேற்றுகிரகத்திலிருந்து வருகிறார் அமீர்கான். அவருடைய கிரகத்தை தொடர்புகொள்ள ஒரு செயின் மாதிரி வைத்திருக்கிறார். அதை எவனோ திருடிவிடுகிறான். அதை எப்படி தேடிகண்டுபிடிப்பதென தெரியாமல் போலீஸை அணுகுகிறார்.

"யோவ் இவ்ளோ பெரிய சிட்டில யாரன்னு போய் தேடுவேன்.இதெல்லாம் கடவுள் தான் கண்டுபுடிச்சி தர முடியும்." என்கிறார். எல்லோரும் இதையே சொல்கிறார்கள். எனவே கடவுளை தேடி பயணத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு மதத்தினர் கோவிலுக்கும் செல்கிறார். சாமியாரிடம் செல்கிறார்.. அவர்களின் அபத்தமான பதில்களில் திருப்தி பெறாமல், எதிர்கேள்வி கேட்கிறார்..

உண்மையில் கடவுளை தேடி செல்லும் எல்லோருக்கும் இது போன்ற அபத்தமான பதில்களே வரும். கடைசியில் மொக்கையாக அன்பே கடவுள், நாம தான் கடவுள், எல்லோருமே கடவுள் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். அறிவியல் பூர்வமாக அணுகுவதென்றால் "கடவுள் துகள்" ( God particle or God Damn Particle) என்றெல்லாம் செல்லுவோம்.


உண்மையில் இரண்டு கடவுள் இருக்கிறார். ஒன்று கடவுள், இன்னொன்னு நீங்கள் உருவாக்கியவர். என்பதாக படம் முடிகிறது.

(குறிப்பு : கடவுளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பது போலவே எனக்கும் ஒரு ஒன்லைன் தோன்றியிருக்கிறது.. கம்யூனிசத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொடர்பில்லை என்பதே)

Sunday, December 7, 2014

போபால் பயணத்துளிகள் - 2

போபால் மக்கள் எளிமையாக இருக்கிறார்கள். குறிப்பாக உணவுப்பொருள்களெல்லாம் நல்ல தரத்தோடும், விலை மலிவாகவும் கிடைக்கிறது. டீ எல்லா கடையிலும் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நம்மூர் டீகளில் தான் கலப்படம் செய்துவிடுகிறார்கள். பாலில் தண்ணியை வாரி கொட்டி விடுகிறார்கள். அங்கே டீ வெறும் 5 அல்லது 6 ரூபாய்க்கு கிடைக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் பகிர்ந்த அனுபவம்.

* வெளியில் ஒரு கடைக்கு 5 பேர் சகிதம் சாப்பிட சென்றிருக்கிறார்கள். மொத்தமாக 175 ரூபாய் ஆகி இருக்கிறது. என்னண்ணே மொத்தமா இவ்ளோ பேர் சாப்பிட்டிருக்கோம், தள்ளுபடி எதுவும் இல்லையா? என்றிருக்கிறார்கள். அப்ப 170 ரூபாய் குடுங்க போதும் என்றிருக்கிறார்.

* ஒருவர் வாழைப்பழம் ஒரு சீப்பு வாங்கியிருக்கிறார். கடைக்காரர் 40ரூபாய் விலை சொல்லியிருக்கிறார். என்னண்ணே அநியாய விலையா இருக்கு. என்றவுடன் அப்ப 30 ரூபா குடுங்க போதும் என்றிருக்கிறார். திடீரென எதோ யோசித்தவர் அந்த சீப்பு பழத்தோடு நாலு பழம் எக்ஸ்ட்ரா கொடுத்து இப்ப 40 ரூபாய் கொடுங்கள் என்றிருக்கிறார்.

* ஒரு கடையில் சப்பாத்தி சாப்பிட்டோம். வெறும் 3 ரூபாய் தான். softஆக பஞ்சு மாதிரி இருந்தது. சிக்கன் சன்னா வைத்தார்கள். நான்கு பீஸ். ஒவ்வொரு பீஸையும் கடித்தால் பஞ்சு மாதிரி இருக்கிறது. நல்ல பதமாக வேக வைத்ததாக இருந்தது. 5 பேர் வயிறு நிறைய சாப்பிட்டும் 130 ரூபாய் தான் ஆனது

* அங்கிருந்த போது நியூ மார்கெட் பகுதியில் இருந்த தியேட்டருக்கு நண்பரோடு சென்றோடு சென்றேன். zid திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சென்னை தேவி தியேட்டர் போல மிகப்பெரியதாக இருந்தது. நாங்கள் வியாழக்கிழமை சென்றோம். இரவுக்காட்சி. வெறும் 40 பேர் தான் இருந்தார்கள். நம்மூர் போலவே பேன்ட் பாக்கெட்டையும் சட்டை பாக்கெட்டையும் அமுக்கி பார்த்து தான் உள்ளே அனுப்புகிறார்கள் ( ஆண்களுக்கு மட்டும்) நண்பர் ஒருவரிடம் சிகரெட் வைத்திருக்கிறீர்களா என தீவிரமாக விசாரித்தே உள்ளே அனுப்பினார்கள்.

உள்ளே ஒரு குரூப் எல்லா சீட்டிலும் பான்பராக் துப்பி வைத்திருந்தார்கள். இரவு 9 மணிக்கு படம் போட்டு 11.30 மணிக்கெல்லாம் முடித்து விடுகிறார்கள். அந்த இரவிலும் எல்லோரும் சாதாரணமாக ரோட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மூர் போல 10 மணிக்கே இழுத்து போத்திக்கொண்டு பொண்டாட்டியை கட்டிபிடித்து தூங்குவதில்லை. குறிப்பாக யாரும் ட்ராபிக் ரூல்ஸை மதிப்பதே இல்லை. ட்ராபிக் போலீஸையும் மதிப்பதில்லை. ரோட்டில் எல்லோரும் கொலை வெறியோடு தான் பைக்கை செலுத்துகிறார்கள். 3 பேராக அசால்டாக செல்கிறார்கள்.

ரோடு க்ராஸ் பண்ணுபவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டே செல்ல வேண்டி இருக்கிறது!

போபால் பயணத்துளிகள் - 1

சென்னையிலிருந்து போபாலுக்கு பதிவு செய்திருந்த டிக்கெட் வெயிட்டிங்கிலேயே இருந்தது. அதனால் ஜெனரல் டிக்கெட் எடுத்து unreservedல் அடித்து பிடித்து ஏறி உட்கார்ந்துகொண்டோம்!
ராத்திரி 12 மணி இருக்கும்.. அர்ஜன்டாக மூச்சா வந்தது.. "இவனுங்க கிட்ட மல்லு கட்டி பாத்ரூம் போறதுக்கு அடக்கிகிட்டே இருந்துடலாம்" என்றார் நண்பர்!

ஆத்தரத்த அடக்கலாம்.. ஆனா மூத்தரத்த அடக்கமுடியுமா? ஒவ்வொரு இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள வழியிலும் ஆசாமிகள் உட்கார்ந்திருந்ததால், நான் ஒவ்வொரு சீட்டின் தலைமாட்டிலும் கால் வைத்து பாத்ரூம் நோக்கி முன்னேறினேன்!

பாத்ரூமுக்கு வெளியே பத்து பேர் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கால் வைக்கவே இடம் இல்லை.. ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டேன். :O ஏற்கனவே உள்ளே ஒரு ஆள் ஆக்கிரமித்திருந்தார். நான் இரண்டு சீட்டுக்கு நடுவே கால் வைத்து பாத்ரூமுக்கு தாவலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்!

மனதை திடப்படுத்திக்கொண்டு தாவ முயற்சித்தேன். முடியாமல் நடுவில் ஒரு பக்கம் காலை வைத்து, பாத்ரூமில் ஒரு காலை வைக்கும்போது ஒரு ஆசாமியின் முகத்தில் என் கால் பட்டு, அதில் இருந்த நீர் பட்டு, அவர் தூக்கம் கலைந்து எழுந்து.. எதெதோ திட்டினார். இந்தியாவின் இன்னொரு முகத்தை அங்கே தான் பார்த்தேன்!

67 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில் நாம் அடைந்திருக்கும் அதிக பட்ச வளர்ச்சி அது!

- - - - - - - - - -

இங்கிருந்து ரயிலில் செல்லும்போது டிடிஆரிடம் பேசி ரிசர்வில் இடம் பிடித்துக்கொண்டோம். ஏற்கனவே அங்கே நான்கைந்து நண்பர்கள் தட்கலில் புக் செய்து வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் ஆர்.எஸ்.எஸ்காரர். அவ்வப்போது இவர்கள் அவரை சீண்டும் விதமாக இந்துத்துவா திணிப்பு, மோடி என்றெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள்.

இத்தனைக்கும் அவர் இவர்களுக்கு இட்லி கொடுத்தார், அவர் கொண்டுவந்த உணவுகளை பகிர்ந்துகொண்டார், அவர் மனைவியும் நல்ல விதமாகவே நடத்தினார்.
அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வந்தேன். இவர்களின் எந்த பேச்சுமே அவரை கோபப்படுத்தியதாகவோ,அவர் உணர்ச்சி வசப்பட்டதாகவோ கூட நினைவில்லை. நான் எச்.ராஜாவை அவரோடு பொருத்தி பார்த்துக்கொண்டேன்!

- - - - - - - 

போபாலில் (மத்திய பிரதேசம்) கடந்த பதினைந்து ஆண்டுகளாக பா.ஜ.க அரசு தான் ஆட்சியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் நடத்தக்கூடிய வகுப்புகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு பாடத்தில் கீதையை சேர்த்திருக்கிறார்கள். பா.ஜ.க இன்னும் பத்து ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பொருத்தி பார்த்துக்கொள்கிறேன்!

- - - - - - - -

போபால் போய்விட்டு இன்று காலை (டிசம்பர் 6) தான் சென்னை வந்தடைந்தேன்! ரயிலில் மிகச்சிறந்த குரூப் அமைந்துவிட்டது.. வழி நெடுக பேசிக்கொண்டே வந்தோம். நேற்று காலை 9 மணிக்கு ரயில் ஏறியதுமே பேசத்துவங்கியவர்கள் தான்.. மதியம் 3 மணி வரை தண்ணி கூட குடிக்காமல் பேசிக்கொண்டிருந்தோம்.. ( தண்ணி காசு குடுத்து வாங்ககூடாதாம்.. )
நாங்கள் முரட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்து எங்களிடம் பதறியடித்து ஓடிவந்த ஆசாமி.. "யார் சார் நீங்கள்லாம்.. என்னென்னவோ விசயங்களையெல்லாம் பேசறீங்க.. எதாவது காலேஜ் பசங்களா?" என்றார்!
"சார் சீரியசா பேசிகிட்டு இருக்கோம். உங்கள்ட்ட அப்றமா பேசறோம்" என சொல்லி அனுப்பி வைத்துவிட்டோம்! ‪#‎தட்‬ இந்த அவமானம் தேவையா மொமண்ட்!

 - - - - - -

காலையில் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

"போபால்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்த?" என்றார்

"ரூம் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன்"

"நான் அதை கேக்கல.. அங்க போன நினைவா எதாவது பொருள் வாங்கிட்டு வந்தியா"

"நினைவை ஏன் பொருளோடு தொடர்புபடுத்துகிறீர்கள். போதுமான நினைவை மனதில் சுமந்து வந்திருக்கிறேன்" என்றேன்! # எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கு!


Friday, November 28, 2014

அசோகர் ஏன் மரம் நட்டார்!

அசோகர் மரம் நட்டார்னு சமூக அறிவியல் பாடத்துல ஒரு வரி வரும்.. நமக்கு அசோகர் பத்தி தெரிஞ்ச அதிகபட்ச வரலாறே அது தான். ஏன் மரம் நட்டாருன்னு நாமளும் கேட்ருக்க மாட்டோம்.. கேட்டாலும் வாத்தியார்களுக்கு பதில் தெரியாது!

இல்ல குத்து மதிப்பா.. அப்போ எல்லாரும் நடை பயணமா தான் போவாங்க அவங்க இளைப்பாறன்னு தான் பொதுவா பதில் சொல்லுவாங்க.. ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல.
அசோகர் தன் கடைசிகாலத்தில் புத்த மதத்தை தழுவினார். புத்தர் மரத்தடியில் தான் பிறந்தார். மரத்தடியில் தான் ஞானம் பெற்றார். மரத்தின் கீழ் தான் உயிர்விட்டார். புத்த மதத்தை பரப்பும் நோக்கில் தான் அசோகர் மரம் நடச்சொன்னார்! இல்லன்னா வேலை மெனக்கெட்டு ஏன் அப்டி சொல்லப்போறாரு?

அப்போ எல்லாரும் என்ன இன்னைக்கி மாதிரி மரம் வெட்டிகிட்டு இருந்தாங்களா? இல்ல இன்னைக்கி மாதிரி மரம் நடுவிழான்னு நடத்திகிட்டு இருந்தாங்களா? கங்கை சமவெளியில் அதற்கான அவசியமே இல்லை.

அதே போல அசோகரின் அரசு வெறும் மரம் நடுவதற்கான உதவி மட்டும் தான் செய்யும்.. மக்கள் தான் மரம் நட்டு பராமரிக்க வேண்டும். அது தான் அசோகரின் உத்தரவு. என்னவோ அசோகரே தெருத்தெருவா மரம் நட்ட மாதிரி தான் பேச வேண்டியது! இதையெல்லாம் பாடபுத்தகத்துல வெச்சா வாய்க்கா தகராறு ஆயிரும்.
நாம குத்து மதிப்பா தெரிஞ்சி வச்சிருக்கறதுக்கு பின்னாடி நிறைய அரசியல் இருக்குன்னு ரொம்ப நாள் கழிச்சி தான் தெரியவருது!

Tuesday, November 25, 2014

தற்கொலை தேவி - 3

அந்த எண்ணுக்கு கால் செய்தேன்.. பிஸி என்று வந்தது. யாரோடோ பேசிக்கொண்டிருப்பாள் போல. திரும்பவும் பத்து நிமிசம் கழிச்சி பேசிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. எப்படி மறந்தேன் என்றே நினைவில்லை.

போன் எடுத்து கால் செய்யலாமென்று பார்த்த போது ஒரு மிஸ்டு கால், அவள். ஒரு நிமிடம் பதட்டம். மேல் மூச்சு கீழ் மூச்செல்லாம் லேசாக வாங்கியது. என்ன பேசலாம்? ஒரு நொடி தயார் செய்துகொண்டேன்.

ரிங் போகிறது. நீஈஈஈஈஈஈண்ட ரிங்க்............................

எதிர்முனையில் ஒரு ஆண்குரல்.. சுமார் 40 வயது இருக்கும் என யூகிக்க முடிந்தது.. என் குரல் கேட்டதுமே "யாருங்க நீங்க." என்று அதட்டியது.

"நான் ப்ரியாவோட ப்ரண்டு"

"எத்தன பேர்டா இப்டி களம்பிருக்கீங்க?"

"சார் அட்சுவலி ஐ டோன்னோ. வாட் ஹாப்.. பட் த திங் இஸ்" (எதாவது பிரச்சினை என்றால் இப்படி தான் இங்கிலிஷில் பேச வேண்டும்)

"ஏன் சாருக்கு தமிழ் தெரியாதா?"

"நோ சார்.. அதாவது.. தட் ஐ டோன்ட் எக்ஸ்பெக்ட் திஸ்.. லைக் யூ நோ.. யூ நோ வாட்.. சாரி சார் ஐ திங்க் திஸ் இஸ் ராங்க் நம்பர் யூ நோ"

"மூடிட்டு போன வைடா" என்ற எதிர்முனை காலை கட் செய்துவிட்டது.

அவள் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

Monday, November 24, 2014

தினத்தந்தி செய்தி!

காலையில் தினத்தந்தி பார்த்துக்கொண்டிருந்தேன்.. ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியானேன்.. தாம்பரம் அருகே இரண்டு அக்காக்கள் சேர்ந்து தம்பியை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.. அதற்கு காரணம் தம்பிக்கு கல்யாண ஆசை வந்து மணமகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அது அந்த சகோதரிகளுக்கு பிடிக்கவில்லை.

"நீ கல்யாணம் பண்ணிகிட்டா நாளை வர்ற பொண்ணு உன்னையும் எங்களையும் பிரிச்சிடுவா" என்பதாக சண்டை போட்டிருக்கிறார்கள்! இந்த அக்காக்களுக்கு திருமண வயது கடந்து விட்டது. இருவருக்கும் திருமணம் செய்யவே விருப்பம் இல்லையாம்.

பொறுத்து பொறுத்து பார்த்த தம்பி நாமளாவது கல்யாணம் பண்ணிக்குவோம் என தனக்கு வரன் தேடத்துவங்கி இருக்கிறார். அதுவும் இந்த அக்காக்களுக்கு தெரியாமல். அட்சுவலி இந்த பையனுக்கு 7 வயது இருக்கும்போதே அம்மா அப்பா இறந்திருக்கிறார்கள். அக்காக்கள் தான் இவனை வளர்த்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த பையனுக்கு சைதாபேட்டை அருகே ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இவன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துவிடக்கூடாது.. பாஸ்போர்ட் கிடைக்க கூடாது என்பதற்காக அக்காக்கள் இவன் மீது போலீஸில் கம்ப்ளெயிண்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். வக்கீலிடம் இது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள்.

"என்னமா இப்டி பண்றீங்க" என அவர் அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டாராம். இனி நம்மால் எதுவுமே செய்ய முடியாது என தெரிந்தபின் தம்பியை கொன்றுவிட்டு இவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்! ராத்திரி வேலைக்கு போய்விட்டு தம்பி கதவை தட்டியிருக்கிறார்.
கதவை திறந்த அக்காக்களில் ஒருவர் இரும்பு அயர்ன் பாக்ஸால் தம்பியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். பின் கத்தியால் தம்பியை குத்தியிருக்கிறார்.

தம்பி தப்பித்து ஓடி வெளியே வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். விபரமறிந்த போலீஸ் பேட்ரோல் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியே லைட் அடித்து பார்த்த போது (இருட்டாக இருந்ததால்) உள்ளே ஒரு பெண்மணி ரத்தம் பீறிட படுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த அக்காக்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
குறிப்பு : சமீபகாலங்களில் சினிமாவுக்கே செல்வதில்லை. 5 ரூபாய் செலவு செய்து தினத்தந்தி படித்துவிடுகிறேன். படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

தற்கொலைச்செல்வி - 2

அவளின் எண் எனக்கு whatsupல் ரிசீவ் ஆகி இருந்தது.. நான் எதோ சும்மா வெளாட்டுக்கு கேட்டேன்.. அதுக்குன்னு உண்மையாவே நம்பர் அனுப்புவாய்ங்களா? அவ்ளோ நல்ல ஆளோடையா பழகிருக்கோம். தெரிஞ்சிருந்தா கூச்சப்படாம முன்னாடியே கேட்டு வாங்கி சாப்டிருக்கலாம்.
ஆனா என்ன பேசுவது? எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. இன்னும் பயிற்சி வேண்டுமோ?

கால் செய்தேன்.. எதிர்முனை பெண்குரல் எதோ யோசனையோடு எடுத்து "ஹலோ" என்றது..

"நீங்க இன்னும் சாகலியா?"

"ஹலோ யார் நீங்க?"

"நானா.. உங்க நண்பியோட நண்பி... ச்சீ.. சாரி நண்பியோட நண்பன்"

"சரி எதுக்கு கால் பண்ணீங்க?"

"வேற எதுக்கு.. ஒரு பெண்ணோட உயிர காப்பாத்த.. நீங்க கடந்த 48 மணி நேரத்துல மட்டும் 4 தடவை தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணதா சமீபத்திய சர்வே சொல்லுது"

"கலாய்ச்சது போதும்.. மேட்டருக்கு வாங்க"

"மேட்டரா?" ?(ச்சே.. எவ்ளோ நல்லவனா இருக்காய்ங்க.. என்னுடைய லேட்பிக்கப் தனத்தை நினைத்து வியந்துகொண்டேன்)

"மேட்டர்லாம் தப்புங்க.."

"ஹலோ ஒரு பொண்ணுகிட்ட எப்டி பேசறதுன்னு தெரியாது"

"அது தெரிஞ்சா நான் ஏங்க உங்க கிட்டல்லாம் பேசப்போறேன். எனக்குன்னு ஒரு அழகான ஆள் செட் பண்ணி.. அது கூட பேசின்னு இருப்பேன். என் நம்பர் எப்பவும் பிசியாவே இருந்துட்டு இருக்கும். எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்.. ஆனா நீங்க தற்கொலை பண்ணிக்க போய்.. உங்க வீட்ல எல்லாம் feel ஆகி.. உங்க பழைய காதலன் மனசு மாறி பிறகு feel ஆகி.. அல்லது உங்க வருங்கால காதலன் உங்களுக்காக feel ஆகி"

"ஹலோ.. நீங்க என்ன பேசறீங்கண்ணே புரியல.. நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்.. அட்சுவலி எனக்கு ஆளே கிடையாது..(இதை சொன்னபோது என் முகம் பிரகாசமானது ) உங்களுக்கு யார் என் நம்பர் குடுத்தாங்க.. நீங்க ஏன் இப்டிலாம் பேசறீங்க?"

எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது.. ஒரு முறை புரியாதவாறு மொபைலை பார்த்தேன்.. "சாரி தப்பான நம்பருக்கு பேசிட்டேன்னு நினைக்கறேன்.. பட் உங்க வாய்ஸ் க்யூட்டா இருக்கு.. நீங்க ஏன் RJவா ட்ரை பண்ண கூடாது"

"அப்டியா தேங்கஸ்.. நான் இப்போ ஆபீஸ்ல இருக்கேன்.. உங்ககிட்ட அப்றமா பேசறேன்..bye"

எனக்கு வாட்ஸ்ப்பில் வந்திருந்த மெசேஜை பார்த்தேன்.. தோழி நம்பர் மாற்றி அனுப்பிவிட்டாராம்! தட் சண்டேன்னா ரெண்டு மொமண்ட்!

தற்கொலைச்செல்வி!

தோழி ஒருவர் நான்கைந்து முறை கால் செய்திருந்தார்.. என்னவென விசாரித்தேன்! "friend.. லவ் மேட்டர். ரொம்ப depressed ஸ்டேட்ல இருக்காப்டி.. தற்கொலை பண்ணிக்குவாங்களோன்னு பயம்மா இருக்கு"

"பயப்படாத அப்டிலாம் எதுவும் நடக்காது"

"இல்ல ஒருவேள எதாவது பண்ணிகிட்டா"

"சாவட்டும்.. 110 கோடில ஒண்ணு குறைஞ்சா ஒண்ணும் கெட்டு போயிறாது"

"இல்லடா அவங்க அம்மா அப்பாவ பத்தி நினைச்சா தான் பயம்மா இருக்கு"

"இது மாதிரி தறுதலைய பெத்தா அப்டி தான்.. என்னைய கேட்டா ஒரு மாசம் முன்னாடி தற்கொல பண்ணிருக்கலாம்.. அம்மா ஜெயிலுக்கு போன சோகம் தாங்காம தற்கொல பண்ணிகிட்டான்னு சொல்லி 3 லட்ச ரூவா குடுத்துருப்பாய்ங்க"

"டேய் வெளாடாதடா.. எதாவது பண்ணு.. நான் வேண்ணா நம்பர் தர்றேன்.. நீ அவகிட்ட பேசி கவுன்சிலிங்க் பண்றியா?"

"யூ மீன் அவள்???"

"ஆமாடா..ஏன்?"

"பொண்ணா?"

"ஆமா?"

"பெண்கள் சாகக்கூடாது! நம்பர் குடு நான் பாத்துக்கறேன்" # ஓவர் ஓவர்!

Sunday, November 23, 2014

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கக்கோரி சைக்கிள் பயணம்!

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கக்கோரிய போராட்டமும் பரப்புரையும் இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒரு பயணமாக நடத்துகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கும் இந்த போராட்டம் நவம்பர் 3 ஆம் தேதி போபாலில் நிறைவடைகிறது. போபால் விஷவாயுக்கசிவு நடந்து இந்த டிசம்பரோடு 30 வருடம் ஆகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி போபால் மக்களோடு அவர்களின் நினைவுகூடலில் கலந்துகொள்கிறோம்.
சைக்கிள் பயணம் குறித்த திட்டமிடல்
 கல்வியில் தனியார் மயம் மக்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து போபால் செல்வதற்கு முன் அவர்களுடன் ஒரு நாள் உரையாட திட்டமிட்டிருந்தோம்.

அந்த ஒரு நாளாக நேற்று அமைந்தது. காலை 7 மணிக்கு இளந்தமிழகம் அமைப்பை சேர்ந்த தோழர் நாசர் வாழ்த்தி பேசிய பின் சைக்கிள் பயணம் துவங்கியது.சுமார் 18 பேர் கொண்ட குழுவாக கிளம்பி தாம்பரம் ரயில்வே மைதானத்திற்கு சென்றோம். ஞாயிற்றுகிழமை என்பதால் நிறைய பேர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களிடம் நோட்டீஸ் விநியோகித்தோம்.
சைக்கிள் பயணம் துவங்கிகுறது
சைக்கிள் பயணத்தை ஒட்டி

அங்கே கிறிஸ்துராஜா நடுநிலைப்பள்ளி இருக்கிறது. அது தான் தாம்பரத்தின் முதல் பள்ளிக்கூடம். இங்கே படித்த பலரும் இன்று மிக முக்கியமான பதவியில் இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ரயில்வே நிர்வாகம் இந்த பள்ளியை இடிக்க திட்டமிட்டிருக்கிறது. தண்டவாளம் போடப்போகிறார்களாம். மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பின் அது அப்போதைக்கு கைவிடப்பட்டிருக்கிறது. அப்போது போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் இப்போது அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். (அவர் வெள்ளை சட்டை போட்டிருந்தார். சட்டை பேக்கட்டினுள் வைக்கப்பட்டிருந்த அட்டையில் அம்மா படம் பொறிக்கப்பட்டிருந்தது வெளியில் தெரிந்தது) அவர் எங்கள் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். 


தாம்பரம் ரயில்வே மைதானத்தில்
கிறிஸ்துராஜா பள்ளி
பிறகு பூண்டிபஜார் டீக்கடையில் அங்கிருந்தவர்களிடம் பேசினோம், முழக்கமிட்டோம், டீ, வடை சாப்பிட்டோம். பிறகு ஏரிக்கரை தெரு டீக்கடையில் பேசினோம். அதன்பின் வழக்கறிஞர் இந்திராவின் வீடு வழியே சென்றபோது அவர் எங்களுக்கு வாழ்த்து வழங்கி பேசினார். அரண் அமைப்பில் இருக்கும் தோழர் மதுவின் வீடு வழியே சென்ற போது, வலுக்கட்டாயமாக உட்காரவைத்து நெல்லிக்கனி சாறு கொடுத்தார். அந்த பாணம் வாய்க்குள் சென்ற போது உடம்பெல்லாம் சிலுப்பிக்கொண்டு புதிய உற்சாகம் கிளம்பியது.
தோழர் வெஸ்ட்லிக்கு நினைவுப்பரிசு வழங்கியபோது

வழியில் தோழர் வெஸ்ட்லி எங்களை வாழ்த்தினார்.அவருக்கு நினைவுபரிசு வழங்கினோம்.நினைவுப்பரிசை வழங்கியவர் பள்ளி முழுவதும் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபகாலமாக தமிழ்வழியில் படித்ததாலேயே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பாரதி சொன்னார். எங்கள் கூட்டத்திலேயே நானும் அந்த பையனும் மட்டும் தான் தமிழ்வழியில் படித்தவர்கள். எனக்கு அவர் போல் எந்த வித மன உளைச்சலும் இல்லை. நான் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். காரணம் நான் படித்து முடித்த உடனேயே வேலைக்கு சென்றுவிட்டதாக இருக்கலாம். தமிழ்வழிக்கல்வியில் படித்த ஒருவருக்கு தன்னம்பிக்கை வரவேண்டுமென்றால் அவருக்கு வேலை கிடைக்க வேண்டி இருக்கிறது
தோழர் பிரேமா வாழ்த்திய பின்

அடுத்து தோழர் பிரேமா  வீடு வழியே சென்ற போது அவர் எலுமிச்சை சாறு கொடுத்து உபசரித்தார். வழியெல்லாம் சந்திக்கும் எல்லோரும் எதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பின்னர் தோழர் பிரேமாவோடு கண்ணகி தெரு குடிசை மாற்றுவாரியத்திற்கு சென்றோம். அங்கிருந்தவர்களிடம் பேசினோம். 

"நீங்க தமிழ்வழிக்கல்வியில் படிக்க சொல்றீங்க.. ஆனா எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இங்கிலிஷ் மீடியத்துல படிக்கறாங்க.. நாங்க எங்க பசங்கள தமிழ்மீடியத்துல படிக்க வெச்சா அவங்க மதிக்க மாட்றாங்க.. இதுக்காகவே கடன உடன வாங்கியாவது அவங்கள இங்கிலிஷ்ல படிக்க வைக்க வேண்டி இருக்கு.. என்னப்பா பண்றது" என்று ஒரு குடும்பத்தலைவி தன் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார். 

இன்று இஸ்ரோவில் மங்கள்யான் அனுப்பிய விஞ்ஞானிகள் எல்லோரும் தாய்வழிக்கல்வியில் படித்தவர்கள். இதையெல்லாம் சொன்னால் "என்னப்பா பண்றது. எங்க பசங்க முன்னேறனும்ல.. தமிழ்ல படிச்சா முன்னேறாது" என்று சொன்னார்கள். சொல்லப்போனால் பிரிட்டிஷ்காரன் இருந்தபோதுகூட நாம் தாய்வழிக்கல்வியில் தான் படித்தோம். இப்போது தான் இவ்வளவு கொடுமையாகி இருக்கிறது.

நம்மிடம் அவர்கள் ஏன் தாய்வழிக்கல்வியில் படிக்க வேண்டும் என்பதற்கான போதுமான தரவுகள் இல்லை. இன்னும் இதில் உழைக்க வேண்டி இருக்கிறது. இன்னொன்று அவர்கள் பார்த்த அரசுப்பள்ளிக்கூடங்களின் தரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வழக்கறிஞர் சங்கர் வாழ்த்தியபோது

பிறகு தாம்பரம் சேனட்டோரியம் ஆட்டோஸ்டாண்ட் பகுதிக்கு சென்றோம். அதன்பிறகு வழக்கறிஞர் சங்கர் எங்களை வாழ்த்தி பேசினார். "இன்னைக்கி ரெண்டு கிலோ மீட்டர் பைக்ல போறதுக்கே ஒரு மாதிரி இருக்கு, நீங்கள்லாம் போபால் வரைக்கும் சைக்கிள்ல போகப்போறீங்க என்பதை நினைக்கும் போது பெருமையா இருக்கு" என்றபோது நாங்கள் திருதிருவென விழித்தோம். அவர் தவறாக புரிந்துகொண்டுவிட்டார் போல. 

பிறகு மேற்கு தாம்பரத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேசினோம். எங்கள் போராட்டங்களில் பங்கெடுக்கும் ஆல்வின் என்பவரின் வீடு அந்த பகுதிக்கு பக்கத்தில் தான் இருந்தது. அவர் தன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அவரின் அம்மா எங்களை பார்த்து மிகுந்த உற்சாகம் அடைந்தார். "நல்ல வேள நம்ம பையன் நல்ல குரூப்ல தான் சேர்ந்திருக்கான்" என்பது போன்ற பெருமிதம் அவரின் முகத்தில் காணப்பட்டது.

தோழர் ஜீவா மணிக்குமாருக்கு நினைவுப்பரிசு வழங்கல்
மதிய உணவை தோழர் தயாளன் கவனித்துக்கொண்டார். பின் மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தோழர் ஜீவாவின் வீட்டிற்கு சென்றோம். ஜீவா துவங்கி வைத்த அவ்வை பள்ளிக்கூடத்தை இப்போது அவரின் மகன் மணிக்குமார் தான் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினோம். அவர் தன் அப்பாவுக்கும் இப்போது இருப்பர்வர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பொருத்திபார்த்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தோழர் காளீஸ்வரனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்

பின் மாற்று ஊடகத்தை சேர்ந்த தோழர் காளீஸ்வரன் எங்களை வாழ்த்தி பேசினார். பின் காந்தி நகர் சென்றோம். அங்கிருந்த ஆப்ரஹாம் தோழர் எங்களை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த பகுதி மக்களோடு சுமார் ஒன்றரை மணி நேரம் செலவிட்டோம். பின் தாம்பரம் கடைவீதிக்கு சென்றோம். அங்கே மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த சலீம் தோழர் எங்களை வாழ்த்தி பேசினார். அங்கிருந்த நூலகம், கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகித்தோம். பின் தி.க தோழர்கள் எங்களை வாழ்த்தினர். 

இறுதியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சானட்டோரியம் பகுதி ரயில்வே நிலையத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த தாத்தா ஒருவர் எங்கள் நோட்டீஸை பார்த்துவிட்டு ஆர்வமாகி எங்களுக்கு டாட்டா குளுக்கோஸ் நீர் வாங்கித்தந்தார். (நாங்கள் அந்த டாடா நீருக்கு எதிரானவர்கள் என்ற போதும் அவரின் அன்பால் ஏற்றுக்கொண்டோம்). அவர் இது போன்ற போராட்டங்களின் தேவை குறித்து பேசினார்.


வீடு வரும் போது மணி மாலை 7.20 ஆகியிருந்தது. அரங்கக்கூட்டத்திற்கும் மக்கள் சந்திப்பிற்கும் உண்டான வித்தியாசத்தையும் இதன் மூலம் புரிந்துகொண்டோம். அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதித்து கலைந்தோம்.

மதிய உணவு இடைவெளியின் போது ஆடு ஒன்றிடம் போராட்டம் பற்றி விவாதித்துகொண்டிருந்தேன்.. அந்த ஒளிப்பதிவு



Thursday, November 20, 2014

நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன்! யாராவது தீடீரென friend ரெக்வஸ்ட் கொடுப்பார்கள்! நாம தான் அப்பாவி ஆச்சே.. உடனே அக்சப்ட் பண்ணுவேன்.. அந்த ஆசாமியும் சும்மா இல்லாம "ப்ரோ நீங்க செம்மையா எழுதறீங்க.. உங்க பதிவு எல்லாம் சூப்பர்"ன்னு சொல்லுவாரு!

அவ்வளவு சிறப்பாவா எழுதறோம்.. இத்தன லைக் விழுதுன்னா எதுவும் இல்லாமையா! என என்னை நானே ரெண்டு ஸ்டெப் உயர்த்திக்கொள்ளுவேன்! பெரிய எழுத்தாளர் யாரையாவது பார்த்தால் "ஆமா இந்தாளு எழுதறதுக்கு பேர்லாம் இலக்கியம்னா அப்பறம் நான் எழுதறதுக்கு பேர் என்னவாம்? போய்யா சூப்பு" என்று நினைத்துக்கொள்ளுவேன்! 

நேற்று ஒருத்தன் என்னுடைய fake idயின் இன்பாக்ஸுக்கு வந்து "நீங்க செம்மையா எழுதறீங்க..வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு போயிருக்கான்" நான் அந்த ஐடில வெறும் குட்மார்னிங் ஸ்டேட்டஸ் மட்டும் தான் போட்ருக்கேன்! உண்மை என்னன்னா இவய்ங்க எல்லாருக்கும் ஒரே டெம்ப்ளேட் வச்சிருக்காய்ங்க.. "நட்பில் இணைந்தமைக்கு நன்றி,," "வருக தோழமை.. அன்பை பறிமாறுக"ன்னு.. அதுல ஒண்ணு தான் "உங்க பதிவெல்லாம் சூப்பர்"னு சொல்றது!
இது தெரியாம இலக்கியவாதியயெல்லாம் பகைச்சிகிட்டனேடா!

மாதவிடாய்

ஒரு முறை facebookல் stayfree பக்கத்திற்கு லைக் போட்டிருந்தேன்! சாட் பாக்ஸூக்கு வந்த தோழி ஒருவர் அதை காப்பி பேஸ்ட் செய்து "what's this" என்றார்! "this is also one format of feminism" என்றேன்!

உனக்கு எல்லாமே வெளாட்டா போச்சு.. நாங்க எவ்ளோ கஷ்டபட்றோம்னு உனக்கு தெரியுமா? என்றெல்லாம் பொங்கினார்! நான் லைக் போட்டதால் அவருக்கு என்ன பிரச்சினை? அது அவரை ஏன் அவ்வளவு காயப்படுத்தியது என்பதையெல்லாம் என்னால் விளங்கிகொள்ளவே முடியவில்லை!

ஒரு முறை மெடிக்கல் ஷாப்பில் stayfreeயை தனியே ஒரு பேப்பருக்குள் மடித்து கடைக்காரர் கொடுத்த போது, இதுக்கு தான் ஏற்கனவே இவ்ளோ பெரிய கவர் போட்டு குடுத்துருக்கானே.. இவன் எதுக்கு தனியா பேப்பர்ல மடிச்சி குடுக்கறான் என யோசித்துக்கொள்வேன்!

பாய்ஸ் ஹாஸ்டலிலேயே படித்துவிட்டு, பசங்களோடு மட்டுமே பழகும் சந்தர்ப்பம் வாய்த்த எனக்கு மனநல மருத்துவர் ஷாலினி எழுதிய "பெண்ணின் மறுபக்கம் புத்தகம்" பெண்களை பற்றியும் அவர்களின் உலகம் பற்றியும் ஒருவிதமான நல்ல புரிதலை ஏற்படுத்தியது!

அதே காலக்கட்டத்தில் தான் கீதா இளங்கோவன் எடுத்த "மாதவிடாய்" ஆவணப்படம் பார்த்தேன்! ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது! ஒரு பக்கம் நாம் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை பற்றி விவாதிக்கிறோம்.. அவர்களும் ஜீன்ஸ் போட்டுக்கொள்வது தான் பெண் சுதந்திரம் என்பதாக புரிந்துகொள்கிறார்கள்!

ஆனால் அவர்களுக்கென முறையான கழிப்பறை வசதி இல்லை. சானிடரி நாப்கின்களை பாதுகாப்பாக அகற்றும் எந்த முறையும் நம்மிடம் இல்லை.. இன்னமும் சானிடரி நாப்கின்கள் சென்று சேராத எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன! இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறோம்.. இது பற்றி எந்த பெரிய விவாதமும் நடந்தாக தெரியவில்லை!

மாதவிடாய் என்பது ஒரு சாதாரண நிகழ்வு, அதற்கு எதற்கு வயசுக்கு வந்த டே கொண்டாடுகிறார்கள்? அதற்கு போஸ்டர், கட்டவுட், பாலாபிஷேகம் செய்யாத குறை தான்! என்னோடு கல்லூரியில் படித்த தோழிகளோ, வேலை பார்த்தவர்களோ எப்போதாவது விடுப்பு எடுத்தால் "என்ன ஆளையே காணோம்" என்று கேட்டால், உடம்பு சரியில்லை என்பார்கள்!

"உடம்புக்கு என்ன?" என மடக்கிபிடித்து விசாரித்தால் "வயித்துவலி" என்பார்கள்! உனக்கு மட்டும் அடிக்கடி வயித்துவலி வருது என காமெடியாக கடந்து சென்ற எவ்வளவோ தருணங்கள் இருக்கின்றன.. உண்மையில் அது மாதவிடாய் நாள் என்பதை புரிந்துகொண்ட நாள் அதிர்ச்சியானது! இவர்கள் ஏன் இதை மறைக்க வேண்டும்! மறைக்கிற அளவுக்கு இது என்ன கொலைகுத்தமா?
உடை அடிப்படையில் எவ்வளவோ fashion ஆகிவிட்ட பலரும் கூட "வயித்துவலி" குரூப்புகளாகவே இருப்பது தான் கொடுமை! உண்மையில் இவர்கள் எதை மார்டனாக நம்புகிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது!

கீதா இளங்கோவன் இயக்கியுள்ள நம்பிக்கை மனுஷிகள் என்ற ஆவணப்படத்தை நாளை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை கீதா அக்காவும் Ilangovan Balakrishnan அண்ணனும் வெளியிட இருக்கிறார்கள்! அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
(நான் இப்போது அந்த ஆவணப்படத்தை தான் youtubeல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. நாளை இது பற்றி எழுதுவேன்!)

Tuesday, November 18, 2014

முல்லா கதை!

முல்லா கதைகளில் எனக்கு பிடித்த ஒரு கதை இருக்கிறது! ஒரு முறை முல்லாவுக்கு ஆணி அடிப்பதற்காக சுத்தியல் தேவைப்பட்டது! வீடு முழுக்க தேடினார். கிடைக்கவே இல்லை! சரி பக்கத்து வீட்ல போய் கேப்போம்னு, பக்கத்து வீட்டுக்காரன் கதவை தட்டப்போனார்!

திடீரென எதோ ஒரு உள்ளுணர்வு தடுத்தது! "காலங்காத்தாலயே சுத்தியல் கேக்க வந்துட்டான் பாரு"ன்னு அவன் நினைச்சிட்டா?" நாம அப்றமா வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்!

மத்யானம் போய் கதவை தட்ட சென்றார் "இப்டி மட்ட மத்தியானமா வந்து சுத்தியல் கேப்பாங்க" அப்டினு நினைச்சிகிட்டா?

ராத்திரி போய் கதவை தட்ட சென்றார் "பொண்டாட்டியோட நிம்மதியா தூங்கிட்டு இருக்கும்போது தான் வந்து உயிர வாங்குவாய்ங்க"ன்னு நினைச்சிகிட்டா?

இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றது! ஒரு நாள் எதோ ஒரு வேகத்தில் பக்கத்து வீட்டுக்காரன் கதவை தட்டி விட்டார்..அவன் கதவைத்திறந்ததுமே "யோவ் போய்யா மயிறு.. யார்க்கு வேணும் உன் சுத்தி.. உலகத்துல எங்கயுமே கிடைக்காத பிரசித்தி பெற்ற சுத்தின்னு நினைப்பு.. உன்னவிட சிறப்பான ஒரு சுத்தி வாங்கி உன் மூஞ்சில கரிய பூசறேன்யா" என்று சென்றுவிட்டார்!

தற்கொலைக் கடிதம்!

பதட்டப்படாதீர்கள்! நான் எடுக்கும் முடிவுக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்! நான் இதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தேன்.. இப்போது தான் அது நடந்திருக்கிறது! பத்து தூக்க மாத்திரைகள் கைவசம் இருக்கின்றன!

நான் ஒரு கோழை.. எனக்கு கத்தி எடுத்து கழுத்தறுத்துக்கொள்வதென்றால் பயம். தூக்கில் தொங்கி, கழுத்தெழும்பு உடைந்து கண் பிதுங்கி கோரமாக சாக துணிச்சல் இல்லை. இப்போது தூங்கிக்கொண்டே சாகும் ஒரு வலியற்ற சாவு கிடைத்திருக்கிறது!
என் சாவுக்கு யாரும் காரணமில்லை.. போலீஸ் வந்து கேட்டால் தற்கொலை என்றே சொல்லுங்கள்! என் அம்மா அப்பாவை நினைத்து தான் பயமாக இருக்கிறது! அவள் யாரையாவது திருமணம் செய்து தொலையட்டும்! எங்கிருந்தாலும் வாழ்க! 

* * *

* * *

* * *

சுரேஷ் இப்படி எழுதி facebookல் போட்டு பதினைந்து நொடிகளில் இரண்டு லைக் விழுந்திருந்தது! ஒரு ஆசாமி "நச் பதிவு தோழி" என்று கமெண்டியிருந்தார்!

பிரபல பதிவர்

பிரபல பதிவர்கள் மேல நம்மாட்களுக்கு ஆரம்பத்திலிருந்தே செம்ம காண்டு இருக்கு! இவய்ங்க என்ன நம்ம ஸ்டேட்டஸூக்கு லைக் போட மாட்றாய்ங்க? மனசுல பெரிய இவன்னு நெனப்பு.. நான் போட்றேன்லடா மயிறு. நீ மட்டும் என்னடா பெரிய புடுங்கியா.. என்றெல்லாம் பச்சையாக எழுதி ஸ்டேட்டஸ் போடாவிட்டாலும் கொஞ்சம் மானே தேனே பொன்மானேவெல்லாம் சேர்த்து நடுவில் "பிரபல" என்ற வார்த்தையை மட்டும் தேத்தி ஒப்பேத்திக்கொள்கிறார்கள்!

உதாரணத்திற்கு பிரபல பதிவர் ஒருவரை எடுத்துக்கொள்வோம்! அவருக்கு 5000 நண்பர்கள் இருக்கிறார்கள்! ஒரு ப்ரொபைலை அவர் போய் பார்த்து அவர்களின் ஸ்டேட்டஸை தேடிக்கண்டுபிடித்து அதில் காலை வணக்கம் தவிர்த்து எதோ ஒரு உருப்படியான பதிவுக்கு லைக் போட குறைந்தபட்சம் ஒரு நிமிடம் ஆகும்! 

அப்படி கணக்கிட்டு பார்த்தால் 5000 நண்பர்களின் அக்கவுண்டையும் ஒரு எட்டு எட்டி பார்க்க 5000 நிமிடம் ஆகும்! ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடம்! மொத்தம் 83.33 மணி நேரம் தேவை! அதாவது 4 நாட்கள் தொடர்ச்சியாக இதை செய்தால் தான் எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க முடியும்!

இந்த நாளு நாட்களில் ஆபீஸ் போகணும், அதுக்கு குளிச்சி பல்லு வலக்கி,மூச்சா போயி, ஆய் போயி, சாப்பிட்டு தூங்குவது, கொஞ்சமாக எச்சி துப்பிக்கொள்வது, ஆளோடு கடலை போடுவது, சாட் பாக்ஸில் fake ஐடி உதட்டை கடிப்பது தவிர்த்துவிட்டு எப்படி பார்த்தாலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 மணி நேரம் கிடைக்கும்! இதில் தங்கள் சொந்த ஸ்டேட்டஸுக்கு யோசிப்பது, யோசித்து எதுவும் தோன்றாவிட்டால் பேப்பரில் தலைப்பு செய்தி பார்த்து எதாவது தேத்துவது!

இதெல்லாம் போக கிடைக்கும் 2 மணி நேரத்தில் டேக் செய்யப்பட்ட மிக முக்கியமான பதிவுகளுக்கு பதிலளிப்பது.. மிக "நெருக்கமான" நண்பர்களின் பதிவுகளுக்கு பதிலளிப்பது, அழகிகளின் போட்டோக்களின் அடியில் "nice" சொல்வது என போய் விட்டால் எங்கிருந்து உங்க ஸ்டேட்டஸ தேடி கண்டுபுடிச்சி லைக் குடுக்கறதாம்?

இதுல வேற "வரவர நீங்க என்ன கண்டுக்கவே மாட்றீங்க"ன்னு பொண்டாட்டிங்க தொல்ல வேற! டேய் புடிக்கலன்னா மூடிட்டு ப்ளாக் பண்ணிட்டு போங்கடா.. இனி எவனாவது பிரபல பதிவர்னு ஸ்டேட்டஸ் போட்டீங்க.. கொன்னு கொன்னு!

(பிரபல பதிவர் ஒருவரோடு பேசிய போது கிடைத்த தகவல் அடிப்படையில் எழுதபட்டது)

Sunday, November 16, 2014

முத்தத்திருவிழா!

காலை எனக்கு whatsupல் வந்த அந்த மெசேஜை நினைத்தாலே கிளுகிளுப்பாக இருந்தது! ஐஐடி நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்! "முத்த திருவிழா நடத்துகிறோம்.. உங்கள் காதலியோடு வரவும்" என்ற அந்த மெசேஜை பார்த்த உடனே கொஞ்ச நெஞ்ச தூக்க கலக்கமும் தூரே போய்விட்டது!

என்னதான் காதலியாக இருந்தாலும் எப்படி எல்லோர் முன்னாடியும் முத்தம் கொடுப்பது? யாராவது போட்டோ எடுப்பாங்களோ? வீடியோ எடுத்து யூட்யூப்ல போட்டுட்டா? அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா? கொஞ்சம் பீதியாகவே இருந்தது!

மொதல்ல அவ ஒத்துக்குவாளா? அன்று தியேட்டரில் முத்தம் கொடுக்க நெருங்கிய போது மூக்கில் விழுந்த குத்து ஏனோ நினைவுக்கு வந்தது! நமக்கு வாய்த்த காதலிகள் தான் எவ்வளவு திறமைசாலிகள்!

"அட்சுவலி முத்தம் குடுத்தப்போ how do u feel?" டைம்ஸ் ஆப் இண்டியா பெண்மணி என்னை பேட்டி எடுப்பது ஒரு முறை கண்ணில் வந்து போனது! பேஸ்புக் போராளிகளை ஒரு முறை யோசித்துக்கொண்டேன்! காறி துப்புவாங்களோ? ப்ளாக் பண்ணிட்டா?

ஒரு முத்தத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இழக்கலாம்! அவளுக்கு கால் செய்தேன்! "ஹம் தேரே பினு அபி ரே நஹி சக்தே.. தேரே பினா......." ஆஷிகி பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது! என்னையும் அறியாமல் வெட்கபட்டேன்!

"ஹலோ.. என்ன?" எதிர்முனை கடுமை காட்டியது!

"ஒண்ணு சொல்லுவேன்.. கோச்சிக்க கூடாது"

"என்ன?"

"அது ஒண்ணும் இல்ல.. அது வந்து.."

"ம்ம்ம்"

"இல்ல.. வேணாம்.. ஈவ்னிங்க் பேசிக்கலாம்"

"காண்டேத்தாம சொல்ல வந்தத சொல்லு"

"அட்சுவலி.. ஐ நீட் எ கிஸ்.. யூ நோ.. நாட் பார் மை ஓன் பர்பஸ்.. இட்ஸ் அ காஸ் பார் சொசைட்டி"

"டேய்.. ஓடிரு.. நானே செம்ம காண்டுல இருக்கேன்"

"வொய் புஜ்ஜி? வாட் ஹாப்"

"தெரிஞ்சி என்ன பண்ண போற"

"என்னடா அம்மு.. நான் உன் லவ்வர் தானே.. என்கிட்ட கூட சொல்ல கூடாதா?"

"உனக்கென்ன இப்போ கிஸ் தானே வேணும்" அவள் புத்திசாலி.. நேரே பாயிண்டுக்கு வந்துவிட்டாள்!

"but i have no mood to give u kiss"

"உனக்கு மூட் வரணும்னா என்ன பண்ணனும்" ப்ரம்மாஸ்திரத்தை ஏவினேன்!

"ஒண்ணும் பண்ண வேணாம் மூடிட்டு போறியா"

"வொய்டா செல்லக்குட்டி.. உன் புருசன் தானே கேக்கறேன்"
 
"ஓடிருடா.."

குரல் கொஞ்சம் கடுமையானது! ச்சே.. வேற யாரையாவது காதலிச்சிருக்கலாம்! நமக்கு மட்டும் ஏன் இப்படி? பேசாம பேஸ்புக்ல இதையே ஸ்டேட்டஸா போட்டா? ஏற்கனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு!

பேஸ்புக்கில் யாராவது சிக்குகிறார்களா என தேடிக்கொண்டிருந்தேன்! ஒரு ஆசாமி சாட் பாக்ஸில் வந்து.. intersteller பாத்துட்டீங்களா? யாருக்குமே புரியலியாமே? என்று மொக்கை போட்டுகொண்டிருந்தார்! யோவ் ஏன்யா என் நிலைமை புரியாம காண்டேத்திகிட்டு!
துபாயிலிருந்து ஒரு fake id இன்பாக்ஸூக்கு வந்து டார்லிங்க் என்றது! முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் அவர் போட்டிருந்த மரம் நடுங்கள் பதிவை ஷேர் செய்ய சொல்லி கேட்டிருந்தார்! ரொம்ப முக்கியம்!

ஐஐடி நண்பர் கால் செய்தார்! "என்ன ப்ரோ? எப்ப வர்றீங்க" என்றார்!

"இல்ல ப்ரோ.. அட்சுவலி ஒரு சின்ன ப்ராப்ளம் ஆயிருச்சி.. ஆள் மக்கர் பண்ணுது..சோ.. முத்தம் குடுக்கறதுக்கு ஒரு ஆள் ஏற்பாடு பண்ணிங்கண்ணா பத்து நிமிசத்துல அங்க வந்துடுவேன்"
எதிர்முனை துண்டிக்கப்பட்டது! உண்மையில் முத்தம் கிடைப்பதே எவ்வளவு போராட்டமானது!

Wednesday, November 12, 2014

சிவநேசன் என்றொரு வார்டன்!

whatsappல் ஒரு வீடியோ வந்திருந்தது.. முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு வாத்தியார் மாணவர் ஒருவரை ஜெயில் வார்டன் மனநிலையில் தாக்கும் ஒரு வீடியோ.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு பகிருங்கள் என்ற கோரிக்கையோடு வந்திருந்த வீடியோ அது! நாமெல்லாம் வாத்தியாரிடம் அடியே வாங்காத சமூகத்திலிருந்தா வந்தோம்? நாம பாக்காத அடியா? மிதியா?

என்ன அப்போதெல்லாம் facebookஓ whatsappஒ இல்லை அவ்வளவே.! இப்போதெல்லாம் மாணவர்கள் வாத்தியார்களை facebookலும் whatsappலும் டீல் செய்துகொள்கிறார்கள்! பவர் ஸ்டாருக்கு தனியே ஆரம்பிக்கும் பேஜ் போல இவர்களுக்கும் ஒன்றை ஆரம்பித்து மைம் உருவாக்கி கலாய்த்து நொங்கெடுக்கிறார்கள்!

நான் படித்த போதெல்லாம் எல்லா அடியையும் பல்லை கடித்துக்கொண்டு வாங்கிக்கொண்டு "மவனே டிசி மட்டும் கைல கிடைக்கட்டும்.. உன் சங்க கடிச்சி துப்பறேன்" என்று நினைத்துக்கொள்வோம்!
பள்ளியில் நான் ஹாஸ்டலில் படித்தபோது சிவநேசன் என்றொரு வார்டன் இருப்பார்! பயங்கர கருப்பாக இருப்பார்! சாரி.. கருப்பா பயங்கரமா இருப்பார்! study hallக்கு அவர் வருகிறார் என்றாலே எவ்வளவு பெரிய ரவுடியும் கப்சிப் ஆகி விடுவான்!

அவரிடம் சிக்குகிறவன் டெல்லி ஜூவில் புலியிடம் மாட்டிய குட்டிபையன் போல கூனி குறுகி எவ்வளவு தெய்வங்களை வேண்டினாலும் காப்பற்றப்படாதவனாக சிக்கி சின்னாப்பின்னமாவான்! அவரின் அடியை வாங்கிவிட்டால் உலகில் எப்படிப்பட்ட அடியையும் தாங்கி விடும் தெம்பு வந்துவிடும்!

பத்தாவது முடிச்சி டிசியை கையில் வாங்கிய கையோடு அவரை பழி வாங்க திட்டமிட்டவர்கள் ஏராளமானவர்கள்! ஆனால் அவர் அன்னைக்கி மட்டும் தலைமறைவாகி விட்டாரோ, அல்லது டிசி வாங்கிய சந்தோசத்தில் அவரை மறந்துவிட்டார்களோ என்னவோ.. சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் அவரை நான் பார்த்த போது நல்லபடியாகவே இருந்தார்! என்னிடம் மிகுந்த மரியாதையோடு பேசினார்!

"உங்களோட அடிய வாங்கிய பிறகு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய அடி வாங்குனாலும் வலிக்கவே வலிக்காது சார்" என்ற போது அவர் வெட்கபட்டார்! உண்மையில் இவரா நம்மை அடித்தார்? ராத்திரி கனவில் வந்த அந்த கொடிய உருவம் இவருடையதா? என்ற சந்தேகம் அப்போது வந்தது!

வாழ்க்கையில் மறக்கமுடியாத காயத்தை கொடுத்த பலரும் ஒரு கட்டத்தில் நல்லவர்களாகவே தெரிகிறார்கள்!

Friday, August 1, 2014

சேரனின் C2H (சினிமா டூ ஹோம்) ஒரு அலசல்

சேரன் புதிதாக துவங்கியிருக்கும் C2H (cinema to home) என்ற முறை பற்றி படித்தேன்! (ரொம்ப லேட் தான்.. :D இருந்தாலும் எனக்கு தோன்றியதை எழுதாம விடமாட்டேனாக்கும்) அதாவது C2H என்பது திருட்டு விசிடிகளுக்கு போட்டியாக இவர்கள் ஒரு படம் வெளியாகும்போதே டிவிடி தயாரித்து வெளியிடப்போகிறார்கள்!

இந்த டிவிடிகளை விநியோகிக்க தமிழகம் முழுக்க 7000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்பது தான் நான் படித்த செய்தி. சேரன் ஜே.கே எனும் நண்பன் படத்தை எடுத்துவிட்டு வெளியிடாமல் சும்மா இருந்த சமீப மாதங்களில் சர்வே போல எடுத்து (சர்வேவா test marketingஆ என்று சரியாக தெரியவில்லை) வெற்றி பெறும் என்று உறுதியாக தெரிந்தபின்பே இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறாராம்!

இதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திரையுலகத்தினரும் ஆதரவாக இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். தியேட்டரில் பாப்கார்ன் விலை ஏறியதும் டிக்கெட் விலையும் கூட இதற்கு காரணம் என்கிறார்கள். தியேட்டருக்கு வருகிற காதலர்களோ,  குரூப்பா பத்து பேராக செல்லும் ஆசாமிகளோ ஒரு போதும் வீட்டில் இருந்து படம் பார்க்க சம்மதிக்கமாட்டார்கள்! வீட்டில் டிவிடியில் படம் பார்ப்பதைப்போல மொக்கையான விசயம் இருக்கவே முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும்.

திருட்டு டிவிடிகாரர்கள் ஒரு டிவிடியில் இரண்டு அல்லது மூன்று படம் கூட தருகிறார்கள்.அதுவும் 35ரூபாய்க்கு. இவர்கள் ஒருபடத்திற்கு மட்டுமே 50ரூபாய் வாங்கப்போகிறார்கள். இப்போதெல்லாம் திருட்டு விசிடி/டிவிடி காரர்களே முன்பு அளவுக்கு தீவிரமாக இல்லை. யார் டிவிடி வாங்குகிறார்கள்? எல்லோரும் பென் ட்ரைவில் படம் பார்க்கிறார்கள். (டிவிடி சுற்று சூழலுக்கு ஆபத்தானதாம் :D )  ஒரு முறை படம் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டு அடுத்த படத்துக்கு எளிதில் தாவிவிடலாம். எவனோ ஒரு புண்ணிவான் வாங்கிய டிவிடி உபயம்!

இன்னொரு குரூப் இணையத்திலேயே பார்த்துவிடுகிறார்கள். தியேட்டரில் ரிலீஸ் செய்ய சிரமப்படும் ஆட்களுக்கு உதவியாக இந்த திட்டம் இருக்கும் என நம்பலாம். ஆனால் டிவிடி தயாரிப்பு செலவு மற்றும் பிற செலவுகளை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என தெரியவில்லை. அப்படியே இவர்களிடம் டிவிடி வாங்குவார்களென்றால் அதற்கு ஒரே காரணம் ப்ரிண்டின் குவாலிட்டியாக இருக்கும்.

திருட்டு டிவிடிகளில் எவனாவது நடுல நடந்து போவான். திடீரென இருட்டாகிவிடும் போன்ற ஆபத்துகளை தவிர்க்க இது உதவும். இதுவும் கூட ஒரே ஒரு டிவிடி வாங்கி பென் ட்ரைவில் காப்பி செய்து பரப்ப வழிவகுக்கும்! தியேட்டர் கட்டணத்தையோ பாப்கார்ன் கட்டணத்தையோ குறைக்க முயற்சிக்காமல் இது போன்று வேலைகள் முட்டாள்தனம்.சேரன் ஆழம் தெரியாமல் காலைவிட்டுவிட்டது போல தோன்றுகிறது

Tuesday, July 22, 2014

2000ரூவா தப்பிச்சிங்க் மொமண்ட்!

கொஞ்ச நேரம் முன்பு யாரோ கதவை தட்டினார்கள்! திறந்து பார்த்தால் கோர்ட் சூட் போட்டு ஒருத்தர் நின்று கொண்டிருந்தார்! கூடவே இரண்டு கல்லூரி மாணவர்கள்! 

கோட் சூட் ஆசாமி.. மலையாளி தமிழ் பேசுவது போல பேசினார்! ஆனால் ஆளைப்பார்த்தால் மலையாளி போல தெரியவில்லை! யாரா இருந்தா என்ன? எப்டியும் இன்னும் மூன்று நிமிடத்தில் கதவை சாத்திவிட தானே போறோம் என்றெண்ணி 

“என்ன பாஸ்” என்றேன்!

தலையணை சைஸ் உள்ள புத்தகம் ஒன்றை நீட்டி.. “இந்த புத்தகம் நோளைக்கி லாஞ்ச் ஆகப்போகுது.. இந்த புத்தகத்தோட ஸ்பெசாலிட்டி என்னன்னா.. அதிக விஷமுள்ள பிராணி எதுன்னு சொல்லுங்க பாப்போம்” என்றார்!

“பாம்பு” என்றேன்!

பக்கத்தை திருப்பி காட்டி “ஜெல்லி ஃபிஷ் ப்ரோ.. அடுத்து தான் பாம்பு.. அதுவும் கடல் பாம்பு.. அதிக விஷமுள்ள பத்து பிராணி பற்றிய தகவல் இந்த பக்கத்தில் இருக்கு.. இது மாதிரி எல்லாவற்றை பற்றியும் டாப் 10 விசயம் இந்த புத்தகத்தில் இருக்கு.. இந்த புக் உங்களுக்கு ஆஃபர்ல ஃப்ரீ” என்றார்!

”ஃப்ரீயா” என்று வாயை பிளந்தேன்! இது போலவே ஒரு டிக்சனரி.. என்சைக்ளோபீடியா எல்லாமே இலவசமாம்! ஒவ்வொன்றின் பின்னாலும் விலை 1900, 1800 என்று எழுதியிருந்தது! impulse என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது!

“இப்டி 3 புக்கையும் இலவசமா குடுத்தா கம்பெனி துண்ட போட்டுட்டு போயிட மாட்டாங்களா ப்ரோ?” என்றேன்!

“இல்ல ப்ரோ.. இந்த புக்கை வாங்குனா அந்த மூணு புக்கும் ஃப்ரீ” என்று முரட்டுத்தனமான ஒரு புக்கை எடுத்தார்.. அதன் விலை 1900 மட்டுமேவாம்!

“எங்க பரம்பரையில எவனுக்குமே படிக்க தெரியாது ப்ரோ..” என்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக சொல்லி வழியனுப்பிவைத்தேன்!

(இரண்டாயிரம் ரூபாய் கைய விட்டு போகபாத்துச்சி.. விடுவனா )

Sunday, July 20, 2014

விஜய் அவார்ட்ஸ் - reputation management

இயக்குனர் ராம் பேசி முடித்ததுமே விஜய் டிவி கொஞ்சம் மானே தேனே பொன் மானேவெல்லாம் போட்டு சமாதனம் சொல்லி “ராமுக்கு நன்றி” என்று சொன்னது எனக்கு தெரிந்து தமிழ் ஊடகத்திலேயே புதிது!

முன்பு கலைஞர் பாராட்டு விழா நடந்த போது அஜீத் பேசிய பேச்சு ஊடகங்களிலும் வெளிவட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டாலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பியபோது எல்லாவற்றையும் வெட்டி விட்டார்கள்! விஜய் தொலைக்காட்சியும் அப்படியே செய்யும் என்று தான் பெரும்பாலானவர்கள் கணித்திருந்தார்கள்!

ஆனால் விஜய் டிவி இதை மிக லாவகமாக கையாண்டிருக்கிறது! இணைய மார்கெட்டிங்கில் இதை reputation management என்பார்கள்! ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் போஸ்ட் போட்டு எந்த brandஐ வேண்டுமானாலும் காலி செய்துவிடலாம் என்ற நிலை வந்த போது இந்த reputation management என்ற துறை உருவானது! கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த துறை அசுரவேகத்தில் வளர்ந்துவருகிறது!

சோசியல் மீடியா இவ்வளவு பலம் பெறாத காலத்தில் இணையத்தில் யாரைப்பற்றியாவது புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் எதாவது complaint forum தளத்தில் எழுதுவார்கள்! ”ஏர்டெல்காரன் என்கிட்ட காசு புடிங்கிட்டான்” என்பது மாதிரி எழுதினால் அதற்கு கீழே airtelன் நோடல் அதிகாரி யாராவது 24 மணி நேரத்தில் சரி செய்து தருகிறோம் என்று பதிலளித்திருப்பார்கள்! கஷ்டமர் கேர்கள் கை கொடுக்காத நேரத்தில் இது உதவும்.. ( நான் சில முறை முயற்சித்திருக்கிறேன்)

 நிறுவனங்களில் இதற்கென ஒரு டீம் இருக்கும்.. அவர்கள் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ நிறுவனம் பற்றி யாராவது தவறாக தகவல் பரப்புகிறார்களா என பார்த்துக்கொண்டே இருப்பார்கள்! அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எழுதுகிறார்களா என பார்ப்பார்கள்! (இதற்கு சில டூல்கள் இருக்கிறது)

அவதூறு என்றால் சம்பந்தப்பட்ட நபரையோ தளத்தையோ அணுகி நீக்க சொல்வார்கள்! பாதிக்கப்பட்டவர் என்றால் பாதிக்கப்பட்டவரை அணுகி பாதிப்பை சரிகட்டுவார்கள்! சரி செய்த பிறகு அதையே ஒரு போஸ்டாக போட சொல்லி விளம்பரமாக மாற்றும் உத்தியும் உண்டு :) விஜய் டிவி செய்தது இதில் ஒரு வகை!

Wednesday, June 11, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 5

கடந்தவாரம் என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். கட்டுமான நிறுவனம் வைத்திருக்கிறார். தினமும் இரு பிரபல ஆங்கில நாளிதழ்களில் தன் நிறுவனம் பற்றி விளம்பரம் கொடுக்கிறார். ஒரு நாள் விளம்பரத்திற்கு எண்ணூறு ரூபாய் ஆகிறதாம்.. மாதம் சுமார் முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை ஆகிறதாம். ”கடந்த மூன்று மாதமாக இந்த விளம்பரம் கொடுக்கிறேன்.. ஒரு கால் கூட வரல” என்று வருத்தப்பட்டார்.இணையத்தில் விளம்பரபடுத்தி எதாவது செய்ய முடியுமா பாருங்களேன் என என்னிடம் வந்தார்.

விளம்பரம் என்று வரும்போது எப்போதும் ஒன்றையே நம்பி இருக்கக்கூடாது. பரவலாக எல்லாவற்றிலும் விளம்பரம் செய்ய வேண்டும். உதாரணமாக அவர் விளம்பரம் செய்யும் பத்திரிக்கையில் ஏகபட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை விளம்பரங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் எல்லா பத்திரிக்கையிலும் ஒரு பக்கம் முழுக்க ரியல் எஸ்டேட் சார்ந்த விளம்பரங்களே குப்பை போல கொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த குப்பையிலிருந்து எப்படி எனக்கு தேவையானதை பெறுவேன்?
அவருக்கு ஒரு மார்க்கெடிங்க் ப்ளான் போட்டு கொடுத்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கென சில சதவீதம் ஒதுக்குங்கள். இணையத்திற்கு கொஞ்சம். எது சிறப்பா வருதோ அதுல அதிகமா போடுங்க.. அவ்ளோ தான் என்றேன்.  நம் பிசினஸை இணையத்தில் அசுர வேகத்தில் இறக்குவது தான் பணம் பண்ணுவதற்கான மிகச்சிறந்த உத்தி.

 நான் சிலரை தொடர்ச்சியாக பார்க்கிறேன். மிகச்சிறப்பாக இணையத்தில் விளம்பரம் செய்து மாசம் கணிசமான வருமானத்தை பார்க்கிறார்கள்.எனக்கு தெரிந்து ஒரு நண்பர். ரிலையன்ஸ் டேட்டா கார்டு விற்கிறார். ஆரம்பத்தில் அவர் தெருவில் விற்றவர் பிறகு olx தளத்தில் ஒரு விளம்பரமாக போட்டார். தினமும் மூன்று பேராவது கால் செய்கிறார்களாம். மாதம் 50 டேட்டா கார்டாவது விற்றுவிடுகிறது என்றார்.

ஒருவர் திருமணத்துக்கான சாப்பாடு ஆர்டர் எடுப்பவர். இதே olx தளத்தின் மூலம் மாதம் நான்கு பிசினஸாவது நடந்துவிடுகிறது என்கிறார். ஆடை விற்பவர், மொபைல் விற்பவர், கல்லூரிக்கு ஆள் சேர்த்துவிடுபவர் என சகலருக்கும் இப்போது இணையத்தில் தான் பிசினஸ் சக்கைபோடு போடுகிறது. ஆனால் இப்போது olxஇலும் குப்பை போல அவ்வளவு பேர் விளம்பரம் செய்கிறார்கள். விளம்பரப்படுத்துதலில் மிக முக்கியமான உத்தியே எல்லோரும் ஒரு இடத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் நாம் அந்த இடத்தில் நுழைந்துவிட வேண்டும். நிறைய பேர் வந்துவிட்டால் வேறு இடத்திற்கு ஓடிவிட வேண்டும்.

உதாரணமாக எல்லோருமே வெள்ளை சட்டை போட்டிருக்கும் ஒரு கூட்டத்தில் நாம் நம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள பச்சை சட்டை மாட்டிக்கொள்ள வேண்டும்.. அவ்வளவே.. நம்மை பார்த்து ஒன்றிரண்டு பேர் பச்சை சட்டை போடத்துவங்கினால் பிரச்சினையில்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே பச்சை சட்டைக்கு மாறுவார்கள். அப்போது நாம் சட்டையை கழட்டி தூக்கி எறிந்தால் முடிந்ததுவேலை.
அடுத்த வாரம் சட்டையை கழட்டுவோம்.

Monday, May 5, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 4

இணையத்தில் சம்பாதிக்க சின்னசின்னதாக எவ்வளவோ வாய்ப்புகள்  நாம் தினம்தோறும் கேள்விபட்டுக்கொண்டேயிருக்கிறோம். எஸ்.எம்.எஸ் அனுப்பினால் காசு.. ரீசார்ஜ் பண்ணால் காசு. ஆள் சேத்துவிட்டால் காசு. எழுதினா காசு.. லைக் பண்ணா காசு.. நின்னா காசு உக்காந்தா காசு. என ஏகபட்ட முறைகள் இருந்தாலும் நான் பரிந்துரைக்கும் முறை ஒன்று தான்!

ஒரு தளம் ஒன்று துவங்கி அதில் நேரத்தை செலவிடுங்கள். உதாரணமாக எழுதலாம். தமிழோ.. ஆங்கிலமோ. எனக்கு தெரிந்த ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள், பல்கலைக்கழகத்தில் நடக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் இதெல்லாம் தொடர்ச்சியாக ஒரு வெப்சைட்டில் போட்டு வைத்தால் என்ன? என்று அவருக்கு தோன்றியது.உடனே ஒரு தளத்தை துவங்கி அதில் அவ்வப்போது இந்த தகவல்களையெல்லாம் தொடர்ச்சியாக பதிவேற்றிக்கொண்டே வந்தார்.

முதலில் பத்து பேர், இருபது பேர் என பார்த்தவர்கள் எண்ணிக்கை, நாளாக நாளாக பல்லாயிரமாக பெருகிறது.இப்போதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்போது ரிசல்ட் வருமென அண்ணா பல்கலைக்கழகத்தின் தளத்திற்கு சென்று பார்ப்பதற்கு முன்பே இவரின் தளத்திற்கு சென்று தான் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு பாப்புலராகிவிட்டது.இது தான் அவரின் இணையதளம் : http://www.rejinpaul.com/) ஃபேஸ்புக்கில் மட்டுமே இவர் தளத்தை ஒன்றரை லட்சம் பேர் தொடர்கிறார்கள்.

ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க விளம்பரத்தின் மூலம் மட்டுமே ஆயிரக்கணக்கில் காசு வருகிறதாம். வெளிநாட்டில் எல்லாம் இந்த முறை ரொம்ப பிரசித்தம். இவர்களை பதிவர்(blogger) என்பார்கள். பயணப்பதிவர்கள் (travel blogger) என்று ஒரு குரூப் இருக்கிறார்கள். வாரம் ஒருமுறை எங்காவது சென்று பயணத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் அங்கே கிடைத்த வித்தியாசமான உணவுகள், மனம் கவர்ந்த மனிதர்கள் என எழுதுவார்கள். கூடவே பயணத்தின் போது எடுத்துக்கொண்ட போட்டோவும் போடுவார்கள்.

இப்படி வாரம் ஒருமுறையோ மாதம் இருமுறையோ, அவரவர் வசதிக்கு தகுந்தவாறு எழுதுவார்கள்.இப்படி எழுதுவதையே முழு நேர வேலையாக வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்துகிறவதெல்லாம் வெளிநாடுகளில் சர்வசாதாரணம். அங்க ஓகே.. நம்மூர்ல இதெல்லாம் நடக்குமா? என்கிறீர்களா?

இங்கேயும் சிலர் சம்பாதிக்கிறார்கள்.சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் சில கல்லூரி மாணவர்கள் டெக் பதிவர்கள் (techi bloggers) என்ற பெயரில் அவ்வப்போது வரும் தொழில்நுட்பம் பற்றி எழுதி மாதமானால் ஐநூறு டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.

என்னை கேட்டால் வெப்சைட் என்பது நிலம் வாங்குவது போல தான்.. வருடம் ஆக ஆக அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும். மதிப்பு உயர நாம் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். அவ்வளவே.. கடைசியாக ஒன்று.. olx.com வெப்சைட் தெரியுமா? 2006லேயே இந்த தளத்தை துவங்கிவிட்டார்கள். இப்போது டிவியில் விளம்பரம் செய்யுமளவுக்கு இந்த வெப்சைட் வளர்ந்திருக்கிறதென்றால் தினம் தோறும் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று யோசித்துக்கொள்ளுங்கள்..விபரம் அடுத்த வாரம்

Tuesday, April 22, 2014

காதலிக்கத்துவங்கினேன்!!

நான் காதலிக்கத்துவங்கினேன்
எனக்குள்ளிருந்த குழந்தை விழித்துக்கொண்டது
எது எதற்கோ ஆசைப்பட்டு
அது வேணும் என கைகாட்டியது
கிடைத்த போது துள்ளி குதித்தது
கிடைக்காதபோது பிடிவாதம் பிடித்தது
எல்லாமே கைவிட்டு போனபோது
கையிலிருந்ததையும் தூக்கி போட்டு உடைத்தது
கடைசியில் உடைந்ததெல்லாம் வேண்டுமென்று அழுகிறது
உடைந்தது வராது என குழந்தைக்கு தெரியாதே!

Saturday, April 19, 2014

இணையத்தில் பணம் உண்மையா? - 3

படிப்பதற்கு முன்னால்

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - முதல் பாகம்
இணையத்தின் மூலம் பணம் உண்மையா - இரண்டாம் பாகத்தை படித்துவிடுங்கள்


youmint.com என்றொரு தளம். நம் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்துகொண்டு உள்ளே சென்று பார்த்தால்  நிறைய சின்ன சின்ன ஆஃபர்கள் கொடுக்கிறார்கள்.. அவர்கள் கொடுக்கும் தளங்களில் நம்மை பதிவு செய்துகொண்டால் 5ரூபாய் பத்து ரூபாய் என தருகிறார்கள்.எல்லாவற்றையும் சேர்த்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாமாம்.

இப்படி நிறைய தளங்கள் இருக்கின்றன. rupeemail.com என்றொரு தளம் இதே போல தான். இதில் சென்று பதிவு செய்துகொண்டால் நமக்கு அவ்வப்போது விளம்பர மெயில் அனுப்புவார்கள். அதை க்ளிக்கினால் 0.50 பைசா தருவார்கள். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ ஐம்பது பைசா விளம்பரம் வரும்.

ஆள் சேர்த்துவிட்டால் காசு என்ற ஒரு வகை இருக்கிறது. affliate தளம் என்பார்கள். வெளிநாடுகளில் இது ரொம்ப பாப்புலர்.ஒருவரை சேர்த்துவிட்டால் ஒரு டாலர் தருவார்கள்.  நூறு பேரை சேர்த்துவிட்டால் நூறு டாலர். 50 டாலர் சம்பாதித்தால் போதும். வீட்டுக்கு செக் வந்துவிடும். நம்மூர்காரர்கள் நிறைய பேர் இவற்றை முயற்சி செய்திருக்கிறார்கள். நான் கூட முயற்சி செய்தேன். ஆனால் 50 பேரை சேர்த்து 50 டாலர் வாங்குவதற்குள் வாயில் நுரை வந்துவிடும்.

நம்ம நண்பன்.. நண்பனோட நண்பன்.. அவனோட காதலி..பக்கத்துவீட்டுகாரன் இப்படி நிறைய பேரை சேர்த்துவிட்டேன். ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பார்கள். “அப்றம் சம்பாதிச்சி பெரிய ஆளா ஆயிட்டன்னா என்ன மதிக்கவே மாட்ட தானே” என்பார்கள். ஒருத்தன் அவனால் நான் ஒரு டாலர் சம்பாதித்ததுக்கு ரோட்டு கடைக்கு கூட்டி போய் ட்ரீட் என்ற பெயரில் நூத்தம்பது ரூபாய்க்கு மொய் வைத்துவிட்டான்.

தெரிந்தவர்களை சேர்த்துவிடுவதெல்லாம் சரிபட்டு வராது. குறிப்பாக நாம் இது போல் சம்பாதிக்கிறோம் என்றால் தூக்கம் வராமல் தவிப்பவனே உண்மையான நண்பன். ebay, amazon மாதிரியான தளங்களில் இருக்கும் பொருட்களை நாம் விற்றுக்கொடுத்தால் நமக்கு சில சதவீதம் பணம் தருகிறார்கள்.
உதாரணமாக 200 டாலர் புத்தகத்தை விற்றால் பத்து சதவீதம் தருவார்கள். இருபது டாலர். சட்டை, பேண்ட், மொபைல் என எதுவேண்டும்னாலும் விற்கலாம். எப்படி விற்கபோகிறீர்கள்?  என்பதை பொருத்தே எல்லாம்.

பெரிய துணிகடையில் கொஞ்சம் துணி வாங்கி ரோட்டு கடையில் போட்டு விற்பார்களே. அது போல தான் இதுவும்.. ஆனால் இது இணையத்தில். விற்பனை உத்தி தெரிந்திருக்க வேண்டும். சிலர் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு விற்பார்கள். ட்விட்டரில் ட்வீட்டி விற்பார்கள். மானாட மயிலாடவில் வருவாரே.. நம்ம நமீதா.. அவர் கூட இது போல் பொருள் வாங்கி விற்று காசு பார்த்திருக்கிறாராம். அது பொழுது போக்காம். ஒரு வார இதழில் படித்தேன். நமக்கு இதெல்லாம் சரி பட்டு வருமா? இன்னும் நிறையா இருக்கு! அடுத்த வாரம்!

Friday, April 18, 2014

தெனாலிராமன் திரைப்படம் விமர்சனம்

தெனாலிராமன் கதைகள் புத்தகத்திலிருந்து நான்கைந்து கதைகளை எடுத்து, இடையிடையே ரெண்டு மூணு காதல் காட்சிகள் பாடல் எல்லாம் வைத்தால் தெனாலிராமன் படம் வந்துவிடும். இது 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகமாக எடுத்திருக்கிறார்கள்.. புலிகேசியாக கிருஷ்ணதேவராயர். புரட்சியாளனாக தெனாலிராமன்! ஆங்கிலேயர் இருந்த இடத்தில் சீன வியாபாரிகள்! கிருஷ்ண தேவராயர் அவையில் இருக்கும் மற்ற அமைச்சர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள்!
முழுக்க முழுக்க தெனாலிராமன் கதைகள் புத்தகத்தை மட்டுமே வைத்து எழுதபட்ட கதையாக இருக்கலாம்! கிருஷ்ண தேவராயர் என்ன புலிகேசி மன்னனைபோல் டம்மி பீசா? வட இந்தியாவில் அக்பர் எப்படியோ.. அதே அளவு புகழோடும் வீரத்தோடும் திகழ்ந்தவர் கிருஷ்ணதேவராயர் என்பது வரலாறு. அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.
தெனாலிராமனை உயர்வாக கூறுகிறேன் பேர்வழி என கிருஷ்ணதேவராயரை டம்மியாக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் போகட்டும். “டும்”. ஐந்து பாட்டும் மொக்கை! ஒரு பாட்டு எதோ சுமார். ரெண்டு மூணு தடவை கேட்டால் பிடிக்கலாம்.அரண்மனையை கிராபிக்ஸில் செய்துகாட்டி படச்செலவை குறைத்திருக்கிறார்கள்!
உண்மையில் தெனாலிராமன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.இதெல்லாம் ஒரு படம்னு போனபாரு என என்னைபார்த்தே கண்ணாடியில் சிரிக்கவும்.. 120 ரூபாய் போச்சோ! என சிந்திக்கவும் வைக்கிறார். தேர்தல் நேரம் என்பதால் வடிவேலுவின் காமெடி எடுபடவில்லை.

Thursday, April 17, 2014

என் ஓட்டு ஏன் நோட்டாவுக்கு

”அப்றம் மச்சி.. யாருக்கு ஓட்டு” என்றார் நண்பர்!

”நோட்டாவுக்கு தான் என் ஓட்டு” என்றேன்!!

“மச்சி அது வேஸ்ட்டுடா.. அதுக்கு போட்றதுக்கு நீ சும்மா இருக்கலாம்” என்றார்!

அவருக்கு சொன்ன விளக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!

நம்மை ஒருவர் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துவிடுகிறான்.. எல்லோர் முன்னிலையும்.. “ஓத்தா.. உன்னால எனக்கு எதிரா ஒரு மசுரும் புடுங்க முடியாதுடா.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என சவால் விடுகிறான்! எல்லோருமே அவனுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள்!!

நமக்கு தெளிவாகவே தெரியும் அவனை எதுவுமே செய்யமுடியாதென்று! அவன் பலம் பொருந்தியவன்..அவனுக்கு பின் எல்லோரும் இருக்கிறார்கள்.. நான் ஒருவன் கை உயர்த்துவதால் எதுவுமே மாறிவிடப்போவதில்லை என தெரியும்!!

ஆனாலும் குறைந்த பட்ச வெட்கம் இருப்பதால் அவனுக்கு ஆதரவாக என்னால் இருக்கவியலாது!! உண்மையில் எதிர்க்க வாய்ப்பிருந்தும் வெட்கம் கெட்டுபோய் கேவலப்படுத்தியவனையே ஆதரிப்பவர்கள் தான் வேஸ்ட்டு!!

Monday, April 14, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 2

இணையத்தின் மூலம் பணம் - உண்மையா? (முதல் பகுதியை படித்துவிட்டு மேற்கொண்டு தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக புரியும்!! )

இணையத்தின் மூலம் பணம் என்பது எனக்கு தெரிந்த அளவில் உண்மை! ஆனால் எல்லோரும் சம்பாதிக்க முடியாது. கொஞ்சம் விவரம் தெரிஞ்சாகணும். எடுத்த உடனே கோடிகளில் சம்பாதிக்க முடியாது.பயிற்சி வேண்டும். குறிப்பாக எங்கெல்லாம் ஏமாறக்கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

”டேட்டா எண்டரி வேலை.இத்தனை பக்கம் அடிக்கணும். ஒரு பக்கத்துக்கு ஆறு ரூபாய் கொடுப்போம்” என்று சொல்லி வேலை கொடுத்தார்கள். நண்பர் ஒருவருக்கு. இணையம் தேவையில்லை.வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் போதுமானது என்றார்கள். எவ்வளவோ செலவு பண்றோம் இத பண்ண மாட்டோமா? என நண்பர் கம்ப்யூட்டர் வாங்கினார்.

கம்ப்யூட்டர் வாங்கிய கதை சுவாரசியமானது. ரெண்டு மூணு பேரிடம் விசாரித்திருக்கிறார்.”10ஆயிரத்துக்கு வாங்கினால் கம்ப்யூட்டர் சீக்கிரமே போய்டும். கான்ஃபிகரேசன் சரியா இருக்காது. ஸ்லோவா இருக்கும்.55 ஆயிரத்துல ஒண்ணு வந்துருக்கு. அட்டகாசமா இருக்கும்” என அவர் தலையில் கட்டினார்கள்!

அதான் மாசம் ஆனா முப்பது ஆயிரம் ரூபா சம்பாதிக்க போறோமே.. போட்டதெல்லாம் ஆறு மாசத்துல எடுத்துட மாட்டோம்.என சகட்டுமேனிக்கு செலவு செய்தார்.ஒரு பக்கம் அடித்தால் ஆறு ரூபாய்.ஆயிரம் பக்கம் அடித்தால் ஆறாயிரம் என்று கணக்கு போட்டு தான் ப்ராஜக்ட் எடுத்தார். நண்பருக்கு டைப்பிங்க் தெரியாது. “அதெல்லாம் ஈஸி. நாளு நாள் அடிச்சா நமக்கே வந்துடும்.” என்று யாரோ உசுப்பேத்தி இருக்கிறார்கள்!

நண்பர் ஒரே ஒரு பக்கத்தை அடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டார். ஒரு நாள் முழுவதும் செலவிட்டு 6 பக்கம் அடித்து முடித்திருந்தார். இப்படி ஒரு வாரம் கஷ்டபட்டு 50 பக்கம் முடித்து கொடுத்தார்.. எல்லாமே தப்பு தப்பாக அடித்திருந்தார்.தப்புக்கெல்லாம் பணம் கழித்துவிட்டு 150ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாசம் கழிச்சி உங்க அக்கவுண்ட்ல கிரடிட் ஆகும். என்று வங்கி கணக்கு கேட்டிருக்கிறார்கள்.இவர் இதுக்குண்ணே தனியா அக்கவுண்ட் ஒண்ணு துவங்கினார்.

மாதம் முழுக்க கஷ்டபட்டு ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். இந்த அமவுண்டுக்கு தான் 55 ஆயிரம் செலவு பண்ணி கம்ப்யூட்டர் வாங்கினார் நண்பர். நாள் முழுக்க மாங்கு மாங்கென்று கம்ப்யூட்டரை பிண்ணி பெடல் எடுத்து கஷ்டபட்டு அடித்ததில் சம்பாதித்த பணம் அது. இந்த டேட்டா எண்ட்ரி யாருக்கு பொருந்தும்? வீட்டில் கம்ப்யூட்டரை சும்மா வைத்துக்கொண்டு  நல்லா டைப்படிக்க தெரிந்த ஆசாமிக்கு தான் இந்த வேலை சரிபட்டு வரும்.

என்னென்ன பிரச்சினை வரும் என நாமாக யோசித்து கேட்க மாட்டோம். அவர்களாகவும் சொல்ல மாட்டார்கள். இன்னொரு வகை டேட்டா எண்ட்ரி கம்பெனிகள் இருக்கின்றன. நாம் என்ன தான் திறமையாக டைப்படித்துக்கொடுத்திருந்தாலும் காசு இப்போ தர்றேன் அப்பறம் தர்றேன் என்று ஆளை அலைய விடுவார்கள்! ஆனால் சரியாக செய்து சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

 நமக்கு விவரமும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் நன்றாக விசாரித்து தான் வேலை எடுத்து செய்ய வேண்டும். கொஞ்சம் அசந்தால் காசும் உழைப்பும் வீணாகிவிடும். அதே சமயத்தில் ஒருத்தரிடம் ஏமாந்தால் அடுத்து வரும் அத்தனை பேரையுமே அயோக்கியனாக பார்க்கத்தோன்றும்!

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 3ம் பாகம்

Thursday, April 3, 2014

தேர்தல் உலா - சென்னை தேர்தல் நிலவரம்

தேர்தல் களையிழந்து இருப்பதாக தோன்றுகிறது! முன்பெல்லாம் எந்த தொகுதிக்கு சென்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்.. பார்க்கிற பக்கமெல்லாம் கரை வேட்டிகள்!! அங்கங்கே “அன்பார்ந்த வாக்காள பெருமக்களே” என்று கூவிக்கொண்டே செல்லும் ஆட்டோக்கள் என்றெல்லாம் பார்த்து பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு இந்த இரண்டு நாள் கள நிலவரம் அவ்வளவு திருப்தியாக இல்லை!!

அரசியல்வாதிகளால் முன்பு அளவுக்கு பெரும் பணத்தை உள்ளே இறக்க முடியவில்லை போல தெரிகிறது!! இன்னும் 20 நாள் தான் இருக்கிறது!! சென்னையில் எல்லாரும் பொழப்ப பாக்க போயிட்டாங்க போல.. மற்ற ஊரில் வெறித்தனமாக இருப்பார்கள் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!!

-----------------------

இந்த இரண்டு நாள் சுற்றியதிலிருந்து ஒன்று தெரிகிறது!! திமுகவை சென்னை மக்கள் புறக்கணிக்க தயாராக இல்லை!! கணிசமான வாக்குகள் அப்படியே தான் இருக்கிறது!! 

ஸ்பெக்ட்ரம் ஊழல், தமிழிழீம் போன்றவை பற்றி கவலைப்பட யாரும் தயாராக இல்லை!! ”என்ன தான் கலைஞர் கொள்ளையடிச்சாலும் எங்களுக்கு செய்ய வேண்டியத செஞ்சுட்டாரு” என்று தான் சொல்கிறார்கள்!!

எதோ ஃபேஸ்புக்கில் எல்லோரும் எதிர்க்கிறார்கள்..அதனால் திமுக மண்ணை கவ்வும் என்பதெல்லாம் மாயை! ஊடகங்கள் திட்டமிட்டு பொய் செய்தி பரப்புவது போல தான் தெரிகிறது!! சென்னை இன்னும் திமுக கோட்டையாக தான் இருக்கிறது!! சென்னையில் கணிசமான எம்.பிக்கள் திமுகவுக்கு கிடைக்கலாம்!!!

சென்னையில் ஆதிமுகவினர் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது!!

- -- ---------------------------

தேர்தல் உலா - 2 ஆலந்தூர் இடைத்தேர்தல் நிலவரம்

எல்லா இடைத்தேர்தலிலும் ஆளும்கட்சி தான் ஜெயிக்கும்.. ஆனால் இந்தமுறை நாடாளுமன்றத்தோடு சேர்ந்து ஆலந்தூர் இடைத்தேர்தல் வருவதால் ஆளும்கட்சியினர் இந்த இடைத்தேர்தலை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை போல தெரிகிறது!!
ஆலந்தூரில் இடைத்தேர்தல் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை!! ரொம்ப டல்! ஆதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனோடு ஒப்பிடும்போது திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது!


நேற்று தான் இந்த தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார்! ஆதிமுகவில் “இடைத்தேர்தல் தானே.. எப்டியும் ஜெயிச்சிடலாம் என்ற எண்ணத்தோடு” அசால்டாக இருப்பதாக தெரிகிறது!!
இந்த இரண்டு பேருக்கு மத்தியில் ஆம்ஆத்மி சார்பாக பிரபல (?!) அரசியல் விமர்சகர் ஞாநி களமிறக்கப்பட்டிருக்கிறார்! “இவங்க வேற நடு நடுல காமெடி பண்ணிகிட்டு” என்ற காமெடி தான் நினைவுக்கு வந்து தொலைகிறது!! தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் ஞாநியின் வேகம் போதாது!
3 மாதங்கள் திட்டமிட்டு உழைத்தால் கூட ஜெயிக்க முடியாத ஒரு தொகுதியில் 20 நாள் பிரச்சாரம் செய்தால் மூன்றாவது இடத்தை கூட பிடிக்க முடியுமா தெரியவில்லை! மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது ஆம்ஆத்மிக்கு பிரச்சார படை பெரிய அளவில் இல்லை! எல்லோரும் டீம் கேப்டன் ஞாநியையே நம்பி கொண்டிருக்கிறார்கள்!!
கம்யூனிஸ்டுகள் ஞாநியை ஆதரிக்கிறார்கள்!! ஆனால் அவர்கள் ஞாநிக்காக இறங்கி வேலை செய்வார்களா என்பதை பொறுத்தே மூன்றாவது இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும்! திமுக வேட்பாளர் ஆர்.எஸ் பாரதி முந்துகிறார்! ஒரு வேளை ஆதிமுக ஜெயித்தால் கூட மிகச்சில வாக்குகள் வித்தியாசமே இருக்கும்!

Wednesday, April 2, 2014

தேர்தல் உலா - 1! வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நிலவரம்

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய மக்கள் மனநிலையை அறிய தமிழகம் முழுக்க பயணம் செய்வதாக நானும் தோழர் பாரதி கண்ணனும் திட்டமிட்டிருந்தோம்! இன்று மதியம் வடசென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை செல்வதாக திட்டம். பத்து நாள் ஒதுக்குகிறோம். அதிகபட்சம் பத்து தொகுதிகள் செல்ல முடியும். 40ம் வாய்ப்பேயில்லை.
யார் ஜெயிப்பார் யார் தோற்பார் என்பது தாண்டி மக்கள் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள். எந்த அடிப்படையில் ஓட்டு போடுகிறார்கள். கருத்து கணிப்புகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்.என்பதையெல்லாம் பரிசோதிக்க ஆசை. பெரும்பாலான கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகளாகவே இருக்கின்றன. மக்களை யாரும் விமர்சனப்பார்வையோடு விசாரிப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

இந்த நாடாளுமன்றத்தேர்தலை இதற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தோம். நிறைய கேள்விகள். குறிப்பாக விவாதித்தோம்.என்ன தோணுதோ எல்லாம் கேட்போம். முன் கூட்டியே தீர்மானித்த கேள்விகள் ஏதுமில்லை.எல்லாமே ஆட்களைப்பொறுத்தது.உதாரணமாக திமுகவுக்கு வாக்களிப்பேன் என்று ஒருவர் சொன்னால், ஏன் என்று கேட்போம். ஸ்பெக்ட்ரமும் இலங்கை பிரச்சினையும் உங்களை பாதிக்கவில்லையா? என்று கேட்போம்!


இன்று மதியம் வடசென்னை வியாசர்பாடியில் இருக்கும் மெகஜிம்புரத்தில் மக்களை சந்தித்தோம். சுமார் 50 பேரை சந்தித்திருப்போம். முதலில் டீகடையில் கேட்டேன். அவர் அடிப்படையில் திமுக ஆசாமி. தேர்தல் அன்னிக்கி பாப்போம்” என்றார். சில குடும்ப பெண்களின் மத்தியில் ஆதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறது. வேட்பாளர் யாரென்ற கவலையில்லை. “அம்மாவுக்காக தான் ஓட்டு போடறோம். தமிழ்நாட்டுலேர்ந்து ஒருத்தவங்க பிரதமரானா நமக்கு தானே பெருமை” என்கிறார்கள்.
“எங்கம்மா அப்பா எல்லாம் திமுக தான்.. அதனால நானும் திமுகவுக்கு தான் போடுவேன்” என்கிறார்கள் 30 வயது தாண்டிய ஒரு குரூப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரித்தால் “யார் தான் ஊழல் பண்ணல.. கொடநாடு மொத்தத்தையும் அந்தம்மா வளைச்சி போட்டுச்சே” என்கிறார் பதிலுக்கு. மக்களிடம் பேச்சு கொடுத்ததிலிருந்து ஒன்று தெரிகிறது. தேர்தலை எதோ கிரிக்கெட் மேட்ச் போல பார்க்கிறார்கள். இந்திய அணியில் எவ்வளவு மோசமான ஆட்டக்காரர்கள் இருந்தாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என வாதாடுவார்களே அது போலவே திமுக ஆதிமுகவுக்கு தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்.அதனால் இந்த ஏரியாவில் இரண்டு கட்சிக்கிடையே தான் கடுமையான போட்டி இருக்கும் என அறிய முடிகிறது.
எந்த ஊழல் பற்றியும் கவலையில்லை என்கிறார்கள்.”யார் வந்தா என்ன? எதும் மாறப்போறதில்ல”என்கிறார்கள். மோடி பற்றி ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேஜ்ரிவால் யாரென்றே தெரியவில்லை. கொஞ்சம் டீடெயில் கொடுத்து டெல்லில ஒருத்தர் ஜெயிச்சாரே என்றெல்லாம் சொன்னால் தான் “ஓ அவரா..” என்கிறார்கள்.ஒரு அம்மா கணவர் கம்யூனிஸ்ட் என்பதால் அவரும் கம்யூனிஸ்டுக்கே போடுவேன் என்கிறார். அதுவன்றோ காதல்! இளைஞர்களும் அம்மா அப்பாக்களை போலவே திமுக ஆதிமுக என்றே சொல்கிறார்கள்.
ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் சவுந்திரராஜன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். ஆதிமுக கூட்டணியில் ஜெயித்தவர். இந்த முறை கம்யூனிஸ்ட் தனியாக நிற்கிறார்கள். நிற்பவர் உ.வாசுகி. அகில இந்திய மாதர் சங்க தலைவி. நிறைய போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஏற்கனவே இந்த தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயித்தவர் டி.கே.எஸ் இளங்கோவன். தி.மு.கவை சேர்ந்தவர்.இப்போது தென் சென்னையில் நிற்கிறார். இதே தொகுதியில் தேர்தலை சந்திக்க பயமா? என்ற கேள்வி வருகிறது.
திமுக மற்றும் ஆதிமுகவிற்கு இருக்கும் பழைய ஓட்டு வங்கியை தவிர்த்துவிட்டு பார்த்தால் இளைஞர்கள் மற்றும் நடுநிலை ஆட்களின் ஓட்டு தான் தீர்மானிக்கும். இளைஞர்களை கவர கம்யூனிஸ்டுகள் ஏதும் செய்யவில்லை.உ.வாசுகி வந்தபோது கூடிய ஆட்களில் ஒரு தலை கூட இளசாக இல்லை.எல்லாமே பெரிய ஆட்கள். இந்த முறை கம்யூனிஸ்டுகள் டெபாசிட் வாங்குவது கூட கஷ்டம் என்ற பேச்சு இருக்கிறது! பார்ப்போம்!

2500 பேர் கொண்ட தலித் மக்கள் ரோட்டில் வசிக்கிறார்கள். தங்களுக்கு பட்டா கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நோட்டா போடும் திட்டத்தில் இருக்கிறார்கள்.இதற்காக ”நோட்டா கொண்டு வந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”என்றெல்லாம் போர்டு வைத்திருக்கிறார்கள். எப்படியும் எங்கல்ல 1500 பேராவது நோட்டா போடுவாங்க என்றார் ஒருவர்!
பா.ஜ.ககூட்டணியில் தே.மு.திக நிற்கிறது.காங்கிரஸும் தனித்து நிற்கிறது. “நான் காங்கிரஸ் தான். ஆனா இந்த தடவ காங்கிரஸ்கு போட மாட்டேன்” என்றார் ஒருவர்.ஆனாலும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் பேசிய போது “ நீங்க வேண்ணா பாருங்க.நாங்க தான் ஜெயிப்போம்” என்றார் கொஞ்சம் கூட சிரிக்காமல்.
இந்த முறை ஓட்டு கணிசமாக பிரியும். சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவோ ஆதிமுகவோ தான் ஜெயிக்கும்.திமுக கையே ஓங்கி இருக்கிறது.தேர்தலில் எல்லாமே கடைசி நேர மாறுதலுகுட்பட்டது! பார்ப்போம்!


Tuesday, April 1, 2014

தேர்தலை முன்னிட்டு ஒரு பயணம்!

கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் தான் சொல்கின்றன! யாரும் உண்மை சொல்லவில்லை! ”பொட்டி வாங்கிட்டாங்க”! ”நீங்க வேண்ணா பாருங்க மோடி தான் ஜெயிப்பாரு”
அம்மா பிரதமராவாரா? திமுக எத்தனை தொகுதி ஜெயிக்கும்? ஈழ பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? காங்கிரஸ் நிக்கற ஒரு தொகுதில கூட ஜெயிக்காதாம்மே?
ஆம் ஆத்மி பத்தி எல்லோருமா தெரிஞ்சி வச்சிருக்காங்க? இப்படி எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன! உங்களுக்கும் இருக்கும்!
எத்தனை நாள் தான் கேள்விகளோடே வாழ்வது! பதில்களை எப்போது தான் தெரிந்துகொள்வதாம்? பதிலை தேடி நானும் நண்பர் Bharathi Kannanனும் தமிழகம் முழுக்க சொல்கிறோம்!
40 தொகுதிகளும் செல்ல முடியுமா தெரியவில்லை! ஆனால் முடிந்த வரை எல்லா தொகுதிக்கும் செல்வோம்! இன்று வடசென்னை தொகுதியில் உ.வாசுகி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்! அங்கிருந்து தான் எங்கள் பயணம் துவங்குகிறது!! கன்னியாகுமரி வரை செல்வோம்!
அவ்வப்போது பதிவுகள் வரும்! இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்!