Monday, March 31, 2014

Final solution - குஜராத் கலவரத்தின் பாதிப்பு பற்றிய ஆவணப்படம்!

இன்று மதியம் final solution என்ற ஆவணப்படம் பார்த்தேன்!! குஜராத் கலவரத்தின் பாதிப்புகளையும் இந்துத்துவாவின் முகமூடியையும் கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது!! 

மோடியை ஆதரிக்கும் ஒவ்வொருவருக்கும் படத்தை போட்டு காட்ட வேண்டும்! இந்தியா இந்துக்களுக்கானது என்ற கருத்தை எப்படி திட்டமிட்டு பரப்பினார்கள்! எப்படி எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்!! முஸ்லீம்களை என்னவெல்லாம் செய்தார்கள் என பாதிக்கப்பட்டவர்களின் வாயிலிருந்தே உருக்கமான வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார்கள்!!

ஒரு காட்சி.. பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குட்டிப்பையனிடம் ஒரு கேள்வி கேட்கிறார் பதிவு செய்தவர்!

“வளர்ந்து பெரியாளா ஆனாதும் என்னவா ஆக விரும்பறீங்க?”

“போராளி ஆகணும்”

“ஏன்”

“அப்ப தான் இந்துக்களை எரிக்க முடியும்”

“ நான் கூட இந்து தான்! அப்ப என்னையும் கொன்றுவியா?”

“மாட்டேன்”

“ஏன்”

“ நீங்க இந்துவா இருக்க முடியாது”

Saturday, March 29, 2014

முதல் முதல் வாங்கிய சைக்கிள்!!

இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு எல்லாமே கேட்காமலே கிடைக்கிறது!! பொம்மையில் துவங்கி, சைக்கிள், பைக் செல்போன் வரை!
அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்! என் வகுப்பில் இலக்கியா என்று ”அழகி”! (அந்த அழகி பற்றிய ஒரு கதை இருக்கிறது!! வேறொரு பதிவில்)
இலக்கியா தான் முதல் ரேங்க் எடுப்பாள்! அவளுக்கும் என் நண்பன் குகனுக்கும் போட்டி! யார் இந்த முறை முதல் ரேங்க் எடுப்பது என்று! குகனின் அப்பா தான் போட்டியை தூண்டினார்! “முதல் ரேங்க் எடுத்தா.. சைக்கிள் வாங்கிதருவேன்” என்பதாக!!
நான் மூணாப்பு படித்த காலத்தில் இந்த முதல் ரேங்க் சைக்கிள் உத்தி ரொம்ப பாப்புலர்! அவனும் வெறித்தனமாக படித்தான்! முதலாண்டு தேர்வு வந்தது!! இலக்கியாவின் அப்பா வீஏஓ! அவருக்கு அவசரமாக பணி மாற்றம் வரவே.. அவள் தேர்வு மட்டும் எழுதிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் பள்ளி விட்டு நீங்கினாள்!!
எப்படியோ இந்த குகன் முதல் ரேங்கை எடுத்து விட்டான்! அவங்கப்பா சொன்னது மாதிரியே சைக்கிள் வாங்கி கொடுத்துவிட்டார்! இப்போது எனக்கு சைக்கிள் வாங்கும் ஆசை வந்தது!! நானும் என் அப்பாவிடம் போய் “அப்பா நான் இந்த முறை ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கறேன்! குகன் அப்பா மாறி சைக்கிள் வாங்கி தர்றியா” என்றேன்!!
“மொதல்ல நீ வாங்கு..பாக்கலாம்” என்றார்!
நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன்! 2வது ரேங்கை தாண்ட முடியவில்லை! 4வது 5வது தாண்டி பத்தாவதெல்லாம் கூட முடித்துவிட்டேன்! நோ ஃபர்ஸ்ட் ரேங்க்! நோ சைக்கிள்!
கடைசியில் 11வது படித்த போது மாண்பு மிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்! வருங்கால பாரத பிரதமர் (  ) 11வது 12வது படிக்கும் எல்லா அரசு பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்! அப்போது தான் வாங்க முடிந்தது!!
அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாக பொண்டாட்டி மாதிரி பாதுகாத்தேன்!!  என்னிடம் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் போராடி வாங்கியது தான்! அதனாலேயே சிறப்பாக பாதுகாத்து வந்திருக்கிறேன்! இலவசமாகவோ கஷ்டபடாமலோ கிடைத்த எல்லாவற்றின் மீதும் ஏனோ தானோ அக்கறைகள் தான் இருந்திருக்கின்றன!
இப்போதிருக்கும் பிள்ளைகளுக்கு எதுவுமே கஷ்டபடாமல் கிடைத்துவிடுகிறது!! சைக்கிளில் இருந்து.. கேம்பஸ் வேலை கொடுக்கும் இஞ்சினியரிங்க் காலேஜ் சீட்டு வரை! வேலை கூட அப்படியே!

Friday, March 28, 2014

இணையத்தின் மூலம் பணம் - உண்மையா?

”வீட்டில் தினமும் 2 மணி நேரம் செலவிட்டு மாதம் பத்தாயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு!” பத்திரிக்கைகளில், அங்கங்கே சுவரொட்டிகளில் இது போன்ற விளம்பரத்தை பார்த்து யாராவது அதற்கு கால் செய்திருக்கிறீர்களா? நான் செய்திருக்கிறேன்! சுமார் பத்து வருடம் முன்பு.”தினமும் 2 மணி நேரம் ப்ரவுசிங்க் செண்டரில் இருந்து மாதம் 6 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாம்” என்ற ஒரு விளம்பரம் திருச்சி தினமலரில் வந்திருந்தது!

நான் அப்போது தான் 12வது முடித்திருந்தேன்.கல்லூரி சேருவதற்கு இடைப்பட்ட மூன்று மாதம் இருந்தது. ”சும்மா இருக்கறதுக்கு உருப்படியா எதாவது செய்யலாம்” என்று யோசித்து தான் அந்த விளம்பரத்திற்கு கால் செய்தேன். “நேர்ல வாங்க சார். உக்காந்து பேசுவோம்” என்றார். நான் போனபோது எனக்கு முன்பே பத்து பேர் காத்திருந்தார்கள்.”தினமலர் வெளம்பரமா?” என்றார்கள்! எனக்கு கொஞ்சம் பயம் தான். “ஏமாத்திடுவாய்ங்களோ”

ஆனாலும் எனக்கு கம்பெனிக்கு பத்து பேர் இருந்தது கொஞ்சம் தெம்பாக இருந்தது.உள்ளே கூப்பிட்டார்கள்.”கம்ப்யூட்டர் யூஸ் பண்ண தெரியுமா?” என்றார்கள். “மெயில் ஐடி வச்சிருகீங்களா” என்றார் ஒருவர். “அப்றம் என்ன சார். நான்லாம் மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கறேன். சந்தேகம்னா பாருங்க” என்று எதோ ஒரு தளத்துக்குள் லாகின் செய்து காட்டினார்.528டாலர் காட்டியது. ”இது 20 தேதிக்குள்ள சம்பாதிச்சது.” என்றார்!

அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே கேட்கவில்லை. என் காதுக்குள் “வெற்றிகொடிகட்டு” பாட்டு கேட்டது. சூர்யவம்சம் சரத்குமார் போல நான் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தபோது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்! (கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கோமோ)
”950ரூபாய் கட்டினீங்கன்னா உங்களுக்கு ட்ரெயினிங்க் குடுப்போம்.” என்றார்! நானும் சேர்த்துவைத்திருந்த அஞ்சு பத்தையெல்லாம் எடுத்துகொண்டு போய் அடுத்த வாரமே அவர்களிடம் கட்டி உறுப்பினராய் சேர்ந்துகொண்டேன்.


அவர்கள் சொல்லித்தந்தது இது தான்.கூகிள்  நிறுவனம் ஆட்சன்ஸ் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.கூகிள் தளத்திற்கு வரும் விளம்பரத்தை உங்களுக்கு தருவார்கள். நீங்கள் அதை உங்கள் வெப்சைட்டில் வைத்துக்கொண்டால், அந்த விளம்பரத்தை யாராவது க்ளிக்கினால் அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை உங்களுக்கு தருவார்கள்.
உதாரணமாக அவர்கள் ஒரு டாலர் சம்பாதித்தால் உங்களுக்கு 0.10 டாலர் கிடைக்கும். பத்து க்ளிக் விழுந்தால் ஒரு டாலர். நூறுவிழுந்தால்.. ஆயிரம் விழுந்தால்.. வெப்சைட் மற்றும் கூகிள் ஆட்சன்ஸ் கணக்கு துவங்க தான் என்னிடமிருந்து 950ரூபாய் வாங்கினார்கள்.ஆனால் இதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.

எக்காரணம் முன்னிட்டும் உங்கள் தளத்தில் இருக்கும் விளம்பரத்தை நீங்கள் க்ளிக் செய்யக்கூடாது!உங்கள் நண்பர்கள் யாரிடமும் சொல்லி க்ளிக் செய்யச்சொல்லக்கூடாது. இப்படி நிறைய இருக்கிறது.  நானும் என்னென்னவோ செய்து இரண்டு மாதம் கஷ்டபட்டு 10டாலர் சம்பாதித்தேன். கொடுமை என்னவென்றால் இணையத்திற்காக ப்ரவுசிங்க் செண்டரில் நான் செலவு செய்ததே 2ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். திடீரென ஒரு நாள் கூகிள் என் கணக்கை முடக்கிவிட்டார்கள். பத்து டாலரும் போச்சு.

அந்த நிறுவனத்திடம் கேட்டால் “ நாங்க சொன்ன மாதிரி பண்ணீருக்க மாட்டீங்க. தப்பா பண்ணீருப்பீங்க” என என் மேலேயே பழி போட்டு கொஞ்சம் மொக்கை போட்டு, வேணும்னா புதுசா அகவுண்ட் ஓபன் பண்ணி தரவா.இந்த தடவை ஆறு நூறு ரூபாய் கட்டினா போதும்” என்றார்கள். போங்கடா நீங்களும் உங்க பணமும் என திட்டிவிட்டு வந்துட்டேன்! இது போல  நாம் கேள்விப்படாத நிறைய கதைகள் இருக்கின்றன. உண்மையிலேயே இண்டர்நெட் பணம் என்பது மோசடியா? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்!

இணையம் மூலம் பணம் உண்மையா - இரண்டாம் பாகம்

இணையம் மூலம் பணம் உண்மையா - மூன்றாம் பாகம்

Thursday, March 27, 2014

முதல் தேர்தல் அனுபவம்!

எனக்கு முதல் முதலில் வாக்களிக்கும் உரிமை கிடைத்த போது மிகச்சரியாக 18வயது ஆகியிருந்தது!! அப்போது 49 ஓ பற்றி தெரிந்திருந்ததால்.. ஓட்டுசாவடியில் வரிசையில் நின்று என் கையில் மைவைத்த உடன்.. மை வைத்த அதிகாரியிடம் சார் 49 ஓ ஃபாரம் வேண்டும் என்றேன்!!
“அப்டின்னா?” என்றார்!
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!! ஒரு தேர்தல் அதிகாரியே “அப்டின்னா” என்கிறார்! “ நீங்க தானே சார்! தேர்தல் அதிகாரி?” என்றேன்!! “ஆமாம் தம்பி..” என்றார் சிரித்துக்கொண்டே!!
49 ஓ என்பது யாருக்குமே வக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லும் ஒரு வாய்ப்பு.. தேர்தல் ஆணையம் வழங்குகிறது!! கையில் மை வைத்த உடன் அதிகாரியிடம் சொன்னால் ஃபார்ம் ஒன்று தருவார்கள்!! என்று அவருக்கு பாடம் எடுத்தேன்!!
“அப்டியா? எங்களுக்கு எதுவும் அப்டி சொல்லவில்லை! வேற எதாவது பூத்துல இருக்கும்! அதான் மை வச்சிட்டீங்கல்ல.. யாராவது ஒருத்தருக்கு ஓட்டு போட்டுட்டு போங்க தம்பி” என்றார்!
எனக்கு அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை! 49 ஓ.. இல்லையென்றால் எனக்கு பிடித்த வாக்காளர் ஒருவர் என்று தான் மனதில் முடிவெடுத்திருந்தேன்!! அதன் படி போட்டுவிட்டு வந்த போது “ உங்க காலம் வரும்போது செய்யுங்க தம்பி” என்றார்!! எனக்கு நிச்சயமாக தெரியும் அந்த அதிகாரிக்கு 49 ஓ பற்றி பயிற்சி அளித்திருப்பார்கள்!! அவர் வேண்டுமென்றே தான் என்னை ஏமாற்றியிருக்கிறார்!
எனக்கு இப்போது கூட கலைஞர் மீது கொஞ்சம் கூட கோவமே இல்லை!! அவர் ஒட்டுமொத்த அரசு கஜானாவையும் தன் பேங்க் அக்கவுண்டில் ட்ரான்ஸ்ஃபர் செய்துகொண்டால் கூட எனக்கு எந்த கோவமும் வராது!! ஜெயலலிதாவும் அப்படியே! ஆனால் இது போன்ற அதிகாரிகள் மீதான கோபம் ஒவ்வோரு தேர்தலின் போதும் வந்து வந்து போகிறது!!

காதல் பற்றி ஃபேஸ்புக் கமெண்டில் அடியேன்

மொதல்ல காதலுக்கும் அன்புக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்!! காதல் என்பது உணர்வு!! இன விருத்திக்காக ஆண் பெண் இடையே தோற்றுவிக்கப்படும் ஒரு ரசவாதம்!! (விக்ரமன் பட பாணி ஆசாமிகள் இந்த கமெண்டை தவிர்க்கவும்)
காதலின் வெற்றி தோல்வி என்பது திருமணத்தால் அளக்கப்படுகிறது!! காதல் தோல்வி என்பது இரண்டு வகையில் அணுகப்படுகிறது!! ஒன்று காதலை சொல்லவே பயந்து தொடை நடுங்கி விட்டுவிடுதல் (அல்லது) சொல்லி அந்த பெண்/பையன் ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல்!
அந்த தோல்வியை இரண்டு விதமாக நம்மாட்கள் கடக்கிறார்கள்!! Just like that திரிஷா இல்லன்னா திவ்யா மெதேட்! இல்லை பூவே உனக்காக டைப் ஒரு செடில ஒரு பூ தான் மொளைக்கும் பாணி!!
இன்னொரு வகையான காதல் தோல்வி என்பது கொஞ்ச நாள் காதலித்து பின் போரடித்ததும் சண்டை போட்டு ஒருத்தரை ஒருத்தர் கேவலப்படுத்தி பிரிந்துவிடுதல்!! அல்லது பெட்டரா ஒரு ஆள் கிடைத்ததும் கழட்டிவிடுதல்!! அல்லது நல்ல மாப்பிள்ளையா பார்த்ததும் கண்ல ஜலத்த வச்சுண்டு நல்லவன் மாறியே ஆக்டு குடுத்து நம்பவைத்து ரெண்டு பேரும் சோகத்தை வைத்துக்கொண்டு பிரிதல்!!
சினிமாவில் காட்டப்படும் காதல் முழுக்க முழுக்க ஆணால் உருவாக்கப்படுவது( exception இருக்கலாம்) ஆம்!! உண்மையில் காதல் ஒரு முதலீடு!! பச்சையாக சொல்வதென்றால் அவசர அவசரமாக பேருந்தில் ஓடி போய் எல்லோருக்கும் முன்னாடி சீட்டு போட்டு வைப்போமே! அதே!!
அன்பு, பாசம்,புரிந்துகொள்ளல் விட்டுக்கொடுத்தல் தான் காதலை சங்கர் சிமெண்ட் மாதிரி க்ரிப்பாக வைத்திருக்க உதவுகிறது!! அவ்வளவே!! மற்றபடி காதல் என்பது கடவுள்... அன்பு,, அடிவயித்தில் பந்து உருளுதல் போன்ற வார்த்தைகளால் வர்ணித்தால் ரெண்டு லைக் எக்ஸ்ட்ராவாக விழலாம் அவ்வளவே!!

நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்

 நமோ
நண்பர் ஒருவர் குஜராத்தில் இருக்கிறார்! நேற்று மாலை தான் பேசினேன்!! அவர் சொன்ன விசயங்களெல்லாம் ஆச்சரியமாக இருந்தது!! இப்படியும் ஒரு மாநிலம் இருக்க முடியுமா? இப்படியும் ஒரு முதல்வர் இருக்க முடியுமா என்று ஒரு நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்!! 

நண்பர் முதல் முதலாக சென்னையிலிருந்து குஜராத் சென்ற போது ரயில்வே ஸ்டேசனில் இறங்கி திரு திருவென விழித்திருக்கிறார்! மொழியும் தெரியவில்லை.. வழியும் தெரியவில்லை! குறிப்பாக அங்கே நிறைய பேருக்கு ஆங்கிலம் தெரியவில்லை!

குஜராத்தில் நண்பருக்கு தெரிந்தவர்,, ஆங்கிலம் அறிந்தவர் மோடி ஒருவரே! நண்பர் மோடியை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார்! தன் பிரச்சினையை 140 வார்த்தைகுள் எழுதி மோடிக்கு ட்வீட் செய்கிறார்!! பதில் என்ன வருகிறதென்று தெரிந்துகொள்ள ஆசை! சில நிமிடங்கள் காத்திருக்கிறார்! அரை மணி நேரம் ஆகியும் ஏதும் நடக்கவில்லை!

”i am waiting outside the station" என்று மோடியிடமிருந்து ட்வீட் ரிப்ளே வருகிறது.. நண்பர் அரண்டு விட்டார்! எதோ ஃபேக் ஐடி தான் தன்னிடம் விளையாடுகிறது என்று நினைத்து ஸ்டேசன் வெளியே வந்தவருக்கு.. ஆச்சரியம்.. இன்னோவா காருக்கு வெளியே கை கட்டி நின்றவாறு மோடி!! ஒரு போலீஸ் கூட அவருக்கு பாதுகாப்பாக இல்லை!!

அக்கம் பக்கம் விசாரித்த போது.. மோடி அடிக்கடி சாதாரணமாகவே இது போல் வருவாராம்!! சமயங்களில் ரயில்வே ஸ்டேசனில் மக்களோடு மக்களாகவே படுத்துக்கொள்வாராம்!! நண்பருக்கு வீடு பார்த்துகொடுத்ததிலிருந்து,, பேப்பர்காரனுக்கு சொன்னது வரை எல்லாமே மோடி தான்!!

இப்போது சொல்லுங்கள்!! யார் இந்தியப்பிரதமர் ஆக வேண்டுமென்று!!

(குறிப்பு : இது உண்மையா பொய்யா என உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்)

Saturday, March 1, 2014

200 ரூபாயில் வெப்சைட் துவங்குவது எப்படி?


”மச்சி எனக்கொரு வெப்சைட் ஓபன் பண்ணனும்.. யாரை போய் கேட்டாலும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரேட் சொல்றான்.. ஒருத்தர் 1000ரூபாய்க்கி சொன்னா இன்னொருத்தர் 5000 சொல்றான், வேற ஒருத்தர்கிட்ட கேட்டா பத்தாயிரமாம்.யார்கிட்ட வாங்கறதுன்னே தெரியல” என்றார்.

துணி வாங்க கடைக்கு போகிறோம்.ரோட்டுக்கடையில் வாங்கினால் ஒரு ரேட்.ஷோரூமில் வாங்கினால் ஒரு ரேட், அதுவே ஷாப்பிங்க் மாலில் ஒருரேட்.தரத்துக்கேற்ப தான் விலை இருக்கும்.எல்லாமே வியாபாரம், லாப நஷ்ட அடிப்படையிலானது.டிசைனுக்கேற்ப விலை மாறும்.அவங்களும் ஆபீஸ் வாடகை குடுக்கணும்.கரண்ட் பில் கட்டணும், நாலு பேர்க்கு சம்பளம் போக அவங்களுக்குன்னு ஒரு லாபம் வைப்பதால் விலை அதற்கேற்ப தான் இருக்கும்.

ரொம்ப செலவு செய்யாமலே  நாமே வெப்சைட் துவங்க முடியும்.அதற்கு முன் சில அடிப்படை தகவல்களை பார்ப்போம்.
டொமைன் (domain) என ஒன்றிருக்கிறது. .com,.in என முடியும். பல வகைகளில் இருக்கிறது! இது தான் அட்ரஸ். இதற்கு ஆண்டுக்கு 500ரூபாய் கட்ட வேண்டும். godaddy.com போன்ற நிறுவனங்கள் 200ரூபாய்க்கு கூட தருகிறார்கள்.டொமைன் வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. 

ஹாஸ்டிங்க்(hosting) என ஒன்று இருக்கிறது.அதற்கு வருடத்திற்கு 1000ரூபாய் வரை கட்ட வேண்டும். வீடு வாங்கினால் மாதம் மாதம் கரண்ட் பில் கட்டுகிறோமே. அது போல வெப்சைட் வாங்கினாலும் சில அடிப்படை விசயங்களுக்காக செலவு செய்ய வேண்டும்.
ஆனால் blogger.comல் உங்களுக்கான வலைப்பதிவு ஒன்றை துவங்கி, இலவசம் தான்.பின் godaddyல் 200ரூபாய் கட்டி .com ஆக்கினால் முடிந்தது வேலை.வெறும் 200ரூபாயில் வெப்சைட்.

blogger கணக்கு துவங்குவது எப்படி?

ப்ளாக்கர் கணக்கு துவங்குவது எப்படி என தெரிந்துகொள்ள மேலே உள்ள லிங்கிற்கு செல்லவும்! அதன் பிறகு ப்ளாக்கரை டொமைனாக்கினால் வேலை முடிந்தது. அது பற்றி அடுத்த பதிவில்! (காத்திருங்கள்)