Tuesday, December 31, 2013

பாடங்களுக்கான ஆண்டு 2013

2013 தொடங்கியபோதே திக்குத்தெரியாமல் தான் துவங்கியது! புதுயுகம் தொலைக்காட்சியிலிருந்து வெளிவந்துவிட்டிருந்தேன்.. யாரிடமும் அது பற்றி பெரிய அளவில் விவாதிக்கவோ, பேசவோ, பகிரவோ எதுவுமே செய்யவில்லை. காரணம் தொலைக்காட்சியில் பணியாற்றுவது என் கனவு.அது வெகு சாதாரணமாக சிதைந்திருந்தது. யாரிடம் அதைப்பற்றி பேசினாலும் நிச்சயமாகவே நெகட்டிவான எண்ணங்கள் ஏற்படவே சாத்தியம் அதிகம் இருந்தது.

அதனால் ரொம்பவே அடக்கி வாசித்தேன்.ஆனால் ஃபேஸ்புக்கில் அதிக ஆட்டம் போட்டேன்.சகட்டுமேனிக்கு ஸ்டேட்டஸுகள் பறந்தன.சில ஸ்டேட்டஸுகள், போட்டோக்கள் நூறு லைக்குகள் தாண்டின என்பதைத்தவிர பெரிய திருப்திகள் ஏதுமில்லை.ஆனால் லைக் சோறு போடுமா?

 நிறைய செய்ய வேண்டுமென தெரிந்தது.ஆனால் எங்கே துவங்குவது. எப்படி துவங்குவது என சரியாக தெரியாமல் முழித்தேன்.குறிப்பாக எனக்கு வழி காட்ட சரியான ஆட்களை உருவாக்கி வைத்திருக்கவில்லை என்பது மட்டும் அப்பட்டமாக தெரிந்தது.ஆலோசனை கேட்ட அத்தனை பேரும் அவர்கள் தோல்வியின் போது பெற்ற அத்தனை பயத்தையும் என் மீது இறக்கி வைத்தார்கள்.

சேர்த்து வைத்த காசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரையத்துவங்கியிருந்தது. நல்லவேளையாக சிகரெட் தண்ணி போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாததால் சிக்கனமாக காலத்தை தள்ளிக்கொண்டிருந்தேன்.கைவசம் என்னிடம் இருந்தது லேப்டாப் மட்டுமே. கொஞ்சம் பணம் போட்டு tamilanclassifieds.com என்றொரு தளத்தை துவங்கினேன். அதில் எனக்கு தெரிந்த SEO உத்திகளையெல்லாம் பயன்படுத்தி நிறைய நேரம் செலவிட்டு அதை கூகிளின் முதல் பக்கத்தில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினேன்.

சைடில் சிலருக்கு Google adsense கணக்கு துவங்கித்தந்து கொஞ்சம் காசு பார்த்தேன். இப்படியே சில மாதங்கள் ஓடியது. சிலருக்கு வெப்சைட் துவங்கித்தந்தேன்.எதிர்பார்த்தமாதிரியே tamilanclassifieds.com கூகிளின் முதல்பக்கத்துக்கு வந்திருந்தது.அதைக்காட்டி சில நிறுவனங்களிடம் SEO ப்ராஜக்ட்கள் எடுத்தேன்.அதன் பிறகு எல்லாமே ஏற்றம் தான். நார்வேவில் ஒரு நிறுவனத்தை அணுகி ப்ராஜக்ட் எடுத்தேன். இப்போது ஆஸ்திரேலியாவை மையமாக கொண்ட நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

swara infotech என நிறுவனத்திற்கு பெயர் வைத்து 2014ன் இறுதிக்குள் 4 பேருக்காவது வேலை தரும் எண்ணம் உள்ளது. இந்த வளர்ச்சி நானே யோசிக்காதது.என் மார்கெட்டிங்க் ஸ்கில் வளர்ந்திருக்கிறது. மிகச்சிறப்பாக பேசி க்ளையண்டுகளை வசப்படுத்தி வருகிறேன். மேனேஜ்மண்டுக்கான சில உத்திகளை கற்றிருக்கிறேன்.உண்மையில் MBA படித்தால் கூட இப்படி ஒரு அனுபவம் கிடைக்குமா தெரியவில்லை. 2013ல் ஒரு "take one short one action” என்ற ஒரு குறும்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தேன். அதற்கு நண்பர்கள் சாது விவேக்கிற்கு நன்றி. சிறப்பான அனுபவம்.பின் டெல்லி சென்று வந்தேன். ஒருவாரம் அருமையான பயணம்.சுப்ரீம் கோர்ட் சென்றேன். தாஜ்மஹால் சென்றேன். அப்றம் குதுப்மினார்.அங்கே ஒரு மாலில் ”மெட்ராஸ் கஃபே” படம் பார்த்தேன்.

நண்பர் மனோஜ் பிரபாகர் நன்றாக கவனித்தார்.அவருக்கு என் நன்றி.அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அருமையான பயணம்.குமுதம் தீபாவளி ஸ்பெசலில் என் கவிதை இரண்டு பக்கத்திற்கு வெளியானது. குமுதம் ஆசிரியருக்கு என் நன்றி.பாரதி கண்ணன், நிரஞ்சன் என மிகச்சிறந்த நண்பர்கள் இந்த ஆண்டு கிடைத்தார்கள்.கடைசியில் நானும் காதலில் விழுந்தேன்.  நல்ல அனுபவம். ஓராண்டு காதல் வாழ்க்கை சில பல சண்டை சச்சரவுகளோடு சிறப்பாகவே சென்றது.

இன்னும் பத்து வருடத்திற்கு தேவையான எல்லாவற்றையும் 2013 வழங்கியிருக்கிறது. எல்லாமே பாடங்கள். அனுபவங்கள்.கனவுகளை நோக்கி அசுரவேகத்தில் சென்று கொண்டிருக்கிறேன். நன்றி 2013.