Tuesday, January 22, 2013

கடலோரக் கவிதைகள் ரீமேக் - கல்லூரி ஆண்டுவிழா அனுபவம்


ஒரு வழியாக நெட் ஸ்பீட் நன்றாக அமைந்துவிட்டதால் இந்த வீடியோவை பதிவேற்ற முடிந்திருக்கிறது. கல்லூரி மூன்றாமாண்டு கல்ச்சுரல்ஸில் கடலோர கவிதைகள் திரைப்படத்தை ரீமேக்கினோம். வேறு ஒரு படத்தை ரீமேக் செய்யலாம் என்பது தான் ஆசை.நண்பர்  டோனி க்ரேக் தான் வற்புறுத்தி ”டேய் இதுல இருக்கற பாட்ட வச்சே நாம ஜெயிச்சிடலாம்” என்றார்.

நான் அரைமனதாக தான் ஓகே சொன்னேன். காரணம் இருந்தது. டீச்சர் கெட்டப் நான் போட வேண்டும் என்பதே. ”ஏற்கனவே நம்ம பசனுங்க தெணறத்தெணற கலாய்ப்பயங்களே. பத்தாததுக்கு இது வேறயா. என்ற பயம் தான் காரணம்” ஒரு வழியாக சமாதானமாகி மேடைஏற பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் நன்றாக அமையவே நிறைய நம்பிக்கையை கொடுத்தது.

குறிப்பாக வகுப்பில் உடன் படிக்கும் பெண்களுக்கு ஒரே குஷி. புடவை மேக்கப், நகை விசயங்களுக்கு உதவுவதாக ரொம்ப ஆர்வமாக முன்வந்தார்கள். (அப்பக்கூட எனக்கு தெரியல).

கணினித்துறை லேப்பில் ஆடை மாற்றும்போது தான் தெரிந்தது. ஜாக்கெட் பத்தவில்லை. இனி என்ன செய்வது. என்று தலையை சொறிந்து கொண்டு நின்றபோது ஒரு தோழி முன்வந்து லேடீஸ் ஹாஸ்டல்ல வாங்கியாறேன் என போனார். அங்கே யாரும் துவைக்காமல் வைத்திருந்திருப்பார்கள் போல!!.. “யார்கிட்டயும் இல்லடா. அட்ஜஸ்ட் பண்ணிக்கே” என தோழி கைவிரிக்கவே. மேடை ஏறுவோமா என்பதே டவுட்டானது. ”அதனால என்ன பனியன்ல ஊக்கை குத்தி சமாளிக்க வேண்டியது தான். தூரத்துலேர்ந்து பாக்கற மடையனுக்கு தெரியவா போகுது” என ஒரு ஐடியா கொடுத்தார். அந்த ஐடியா அப்போதைக்கு தேவையாயிருந்தது.

மேக்கப்பெல்லாம் போட்டு ஒருவழியாக தயாரானோம். எல்லா பயலும் என்னை கொண்டுபோய் மறைவிடத்தில் நிறுத்திவிட்டு “ இந்த லேடி கெட்டப்பை சீக்ரெட்டா வச்சிக்கறோம். சரியா” என்று அதிரடி முடிவெடுத்தார்கள்.(பெரிய சங்கரு). அப்படி மறைவாக நின்று கொண்டு இருக்கும் போது தூரத்திலிருந்து எவனோ குறுகுறுவென பார்த்துகொண்டிருந்தது ஒரு மாதிரியாக இருந்தது. “டேய் பொறம்போக்கு. நான் பையண்டா” என சொல்லி பார்த்தேன். எங்களுக்கிடையில் இருந்த கண்ணாடி ஜன்னல் அந்த வார்த்தையை தடுத்துவிட்டது. ”தம்பி இங்கல்லாம் நிக்க கூடாது” என ஒரு பேராசிரியர் கிருஷ்ணன் போல வந்து அந்த பையனை வழியனுப்பி என் மானத்தை காத்தார். எதிர்பார்த்தது போலவே பாடல்களுக்கு செம்ம அப்லாஸ்!!

குறிப்பாக அந்த ஜாக்கெட் மேட்டர் தான் பலரின் கண்களை உறுத்தியது. ப்ரோக்ராம் முடிவை நெருங்கும் போது புடவை பாதி அவுந்துவிட்டது. ஒரு கையால் அதை பிடித்துக்கொண்டே சமாளிக்க முயற்சித்தேன் முடியவில்லை. நடக்கும்போது புடவையில் கால்தடுக்கி மேலும் அது கழன்றுகொண்டது. நானும் வேட்டி சொருகுவது போல சொருகி சமாளித்தேன். மேடையின் முன்வரிசையிலிருந்து என்னுடைய இந்த சங்கடத்தை VP பார்த்துக்கொண்டே இருந்தார்.

“அவுந்துடுச்சின்னா அவமானமா போய்டும். கீழ இறக்கிவிடுங்க” என்பதாக அவர் லைப்ரரியனிடம் பேசிக்கொண்டிருந்தார். மேடையிலிருந்துகொண்டே இதை பார்த்த எனக்கு ஒருவித பயம்.பாதியில் இறங்கினால் எங்களுக்கு அவமானமாக போய்விடும். அதனால் நான் இன்னும் மும்முரமாக கடைசி காட்சிகளை நடித்துக்கொண்டிருந்தேன். முன்வரிசையில் இருந்த எல்லோருடைய கண்ணும் புடவை மீதே இருந்தது. பாவிகளா. என்னை திரவுபதி ஆக்காமல் விட மாட்டார்கள் போல என எனக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். இது பத்தாதென்று என்னோடு நடித்த நண்பர் புடவையை உருவுவதே குறியாக இருந்தார். (துச்சாதனா). எல்லோரையும் சமாளித்து மேடை இறங்கி உடை மாற்றும் அறைக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழியில், எங்கள் நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

குறிப்பு : நிகழ்ச்சி வீடியோ வடிவில் வந்திருந்தது பொழுது அந்த புடவை காட்சிகள் வெட்டப்பட்டே சிடியாக்கி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் என் மானம் காப்பாற்றப்பட்டது..அவ்வ்வ்!!

Friday, January 18, 2013

செக் மேட்!!

செஸ்ஸூக்கும் நம் வாழ்க்கைக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. செஸ்ஸின் துவக்கமும், முடிவும் எப்போதும் ஒரே மாதிரியே அமையும். துவக்கம் என்பது சிப்பாயை நகர்த்துவது என்பதாகவோ, குதிரையை நகர்த்துவது என்பதாகவோ தான் அமையும். முடிவு என்பது ராஜாவை மடக்கிபிடித்து செக் மேட் சொல்ல வேண்டும். வாழ்க்கையும் இதைப்போலவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட துவக்கத்தையும், முடிவையும் கொண்டது. ஆனால் இடைப்பட்ட ஆட்டத்தில் தான் இருக்கிறது சுவாரஸியமே.அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். எனக்கு கிடைத்த அனுபவம் அப்படியே உங்களுக்கு கிடைக்க வேண்டிய அவசியமில்லை. என் அனுபவத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கும் பாடம் என்பது வேறு வடிவத்தில் உங்களுக்கு பயன்படலாம். அவ்வளவே. அதனால் எனக்கு கிடைத்த அனுபவம் தான் சரி, உங்களுக்கு கிடைத்தது மோசம் என நான் சொல்லிவிட முடியாது.
செஸ்ஸில் சில அடிப்படைகள் மட்டும் தெரிந்தால் போதும். யார் வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்கென தனியே திறன்கள் ஏதும் தேவையில்லை.வாழ்க்கையும் அப்படியே, எல்லோரும் ஒருவித ப்ரின்சிபல் எனப்படும் கொள்கைகளை வகுத்துக்கொண்டு ஆட்டத்தை துவங்குகிறோம். ”எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ” என இதை தான் சொன்னார்கள் போல.

செஸ்ஸில் ராணி என்பதை அதிர்ஷ்டம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். ராணி முக்கியம் தான். ஆனால் ராணி மட்டுமே முக்கியமல்ல. ராணியை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டாலும், கடைசி நேரத்தில் சாதாரண சிப்பாயை நகர்த்தியே ராணியை மீட்டெடுக்க முடியும். சிலர் ராணியை இழந்ததுமே விரக்தியாகி எல்லா காயினையும் தட்டிவிட்டு தற்கொலையில் ஈடுபடுவார்கள். ஆனால் ஆட்டம் நன்றாக பிடிபட்டவர்கள் அது போல ஒரு போதும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு தெரியும். அபிமன்யூவைப்போல கடைசி வரை காய்களை நகர்த்தி என்ன தான் நடக்கிறது என பார்த்துவிடும் ஆர்வம் அவர்களுக்கு. வெற்றி நோக்கோடு மட்டுமே ஆடுகிற போது கிடைக்கிற அனுபவத்தை விட, வெறும் சுவாரசியத்திற்காக ஆடும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அடுத்த இரண்டு மூன்று நகர்த்தல்களை வேண்டுமானால் ஜோசியம் போல கணித்துவிடலாம். ஆனால் மொத்த ஆட்டத்தையும் முன்கூட்டியே நம்மால் கணித்துவிடமுடியாது.

எப்போதுமே முதல் நகர்த்தல் என்பது மிக மிக முக்கியமானது. அது தான் அடுத்தடுத்த நகர்த்தல்களை தீர்மானிக்கும். முதல் நகர்த்தல்களை ஏனோதானோவென்று நகர்த்திவிட்டால் அடுத்தடுத்த ஆட்டங்கள் கைமீறி போய்விடும்.அதனால் தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என சொல்லி வைத்தார்கள் போல.

சில சமயம் எதாவது பெரிதாக இழக்க வேண்டிவரும். அது ராணியாகவும் இருக்கலாம், யானையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேர இழப்பு தான் பெரிய திருப்புமுனையாகி வெற்றியைதரும். பெரிதாக இழக்கத்தயாரானால் தான் பெரிதாக எதையாவது அடையமுடியும் என்ற பெரிய தத்துவத்தை அது நமக்கு அந்த கணத்தில் கற்றுக்கொடுக்கும். காரணம் இழப்பைபற்றி கவலைப்படாதவனால் தான் இறுதியில் வெற்றியை ருசிக்கமுடியும்.

Friday, January 4, 2013

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம் படப்பிரச்சினை

திருட்டு விசிடி பிரச்சினை, தியேட்டர்களின் ஏகபோக உரிமை, நல்ல படங்களின் இருட்டடிப்பு, போட்ட பணத்தை எடுக்க முடியாமல் ப்ரொடியூசர்கள் தலையில் துண்டு போட்டு ஓரமாக உட்கார்வது என தமிழ் சினிமா உலகத்தில் இருக்கிற சங்கடங்கள், சச்சரவுகளை ஒரு தனி புத்தகமாக வெளியிடும் அளவுக்கு நீளும். அந்த சர்ச்சையின் சமீபத்திய வரவு தன்னுடைய படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்தது.
 



  ”நீங்க டிடிஎச்சில் படத்தை வெளியிட்டால் நாங்க தலையில் துண்டை போட்டுக்க வேண்டியது தான்” என தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் ஒரு புறம் களம் இறங்க, திருட்டு விசிடியால் விழி பிதுங்கி இருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற இது போல புதுசா எதாவது செய்து தான் ஆகணும் என கமலுக்கு பக்கபலமாக திரையுலக ஜாம்பவான்கள் சிலர் குரல் கொடுக்க, சிலரோ எதுக்கு வம்பு என அமுக்கி வாசிக்கிறார்கள்.

இதற்கிடையே படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சில சர்ச்சைகுரிய காட்சிகள் இருப்பதாக தகவல் கசிய, இஸ்லாமிய அமைப்புகள் சில ஆர்பாட்டத்தில் குதித்தன. இது போதாதென்று ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட்  நிறுவனம் மர்மயோகி படம் தயாரிக்க வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும், என ஹைகோர்டு படிகளில் ஏறி இருக்கிறது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை 8ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.

விஸ்வரூபம் படத்தின் ஏகபோக உரிமை ஏர்டெல் டிடிஎச்சுக்கு 50 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி, ரிலயன்ஸ் டிடிஎச் முதலான நிறுவனங்களும் பேரம் பேசி வருவதாக தகவல். படம் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே டிடிஎச்சில் வெளியாகும் படத்தை காண 1000 வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் உலா வருகிறது. 30லட்சம் பேர் திரைப்படத்தை காண புக் செய்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி இருக்கிறது.

இப்படியாக  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவைப்பொறுத்த வரை துணிச்சலான பல முடிவுகளை இப்போதுள்ள நிலைமையில் கமலைத்தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தயாரிப்பாளராக தன்னுடைய படத்தை சந்தைப்படுத்த புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய நெருக்கடியில் அவர் இருக்கிறார்.அவருடைய பொருளை அவர் எப்படி வேண்டுமானாலும் விற்கலாம், வீணடிக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்காக அவரிடம் யாரும் சண்டைக்கு போக முடியாது. வேண்டுமானால் அவர் கேட்கிற பணத்தை கொடுத்துவிட்டு யார் வேண்டுமானாலும் அந்த படத்தை வாங்கி ஆண்டு அனுபவித்துக்கொள்ளலாம்.பிரச்சினையில்லை.

அதே சமயம்,சில நியாயமான சந்தேகங்களும், பயங்களும் திரையுலகில் ஏற்பட்டிருப்பது கவலைக்குறியதே. காரணம் டிடிஎச்சில் வெளியிடும் இந்த யுக்தி வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து நிறைய படங்கள் இதே போல வெளியாகி தியேட்டர்களுக்கான தேவையில்லாமல் போய்விடலாம் என்ற பயம் நியாயமானதே. இப்போதே அலெக்ஸ் பாண்டியன், கடல் முதலான படங்களின் டிடிஎச் வெளீயீடு பற்றிய அண்டர்வேர்ல்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 நம்மூரில் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மாற்றிவிடமுடியாது. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே வேறு பரிமாணத்தை எட்டி இருப்பதை சமீபகாலமாக நாம் உணர முடியும். உதாரணமாக படையப்பா படம் வெளியாகும் காலம் வரை குடும்பம் குடும்பமாக படம் பார்ப்பது என்றிருந்த கலாச்சாரம் மாறி.தனித்தனியாகவோ, இளைஞர் சாரார் மட்டுமாகவோ, காதலன்,காதலி என ஜோடியாகவோ படம் பார்ப்பது என மாறி இருக்கிறது.இப்போது டார்கெட் ஆடியன்ஸ் என்பது ரொம்ப சுருங்கிவிட்டது. உதாரணமாக துப்பாக்கி போன்று சமீபகாலமாக வருகின்ற படங்கள் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன.

இதனால் பெருசுகளும், இரண்டாம் தர பெருசுகளான 40 வயதினரும் வீட்டில் உட்கார்ந்து பழைய பாடல்களை பார்த்துக்கொண்டு “அந்த காலம் போல வருமா” என வெட்டி நியாயம் பேசுவதுமாகவும், பெண்கள் சீரியல் உலகப்போரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தில்லாமல் கண்ணைக்கசக்கி வருவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடியும்.இந்த ஆடியன்ஸ் இப்போது டிவி அடிமையாகிவிட்டனர். இவர்கள் காலங்களில் இருந்தது போலான தியேட்டர்கள் இப்போது இல்லை. வரிசையில் முட்டி மோதி சண்டை போட்டு சட்டை கிழிய டிக்கெட் வாங்கிய காலமெல்லாம் மாறிவிட்டது.


முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்துவிட்டு, படம் துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பு ஹாயாக தியேட்டருக்குள் நுழைந்தால் போதுமானது.இன்னும் சில இடங்களில் கரண்ட் பிரச்சினையால் பல தியேட்டர்கள் ஜெனரேட்டர் கொண்டு இயங்கி கட்டுபடியாகாமல் கடையை சாத்திக்கொண்டு இருக்கின்றன. இதை எல்லாம் ஒப்பிடும் போது டிடிஎச்சில் வெளியிட்டு டிவி ஆடியன்ஸை கவர் செய்வது தவிர்க்க முடியாததாகிறது.

அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பல நல்ல படங்கள் தியேட்டரில் வெளியிட முடியாமல் திணறி வருவதும், கம்மியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டு கல்லாகட்ட முடியாமல் திண்டாடி வருவதுமாக இருக்கின்றன. உதாரணமாக ”நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படம் செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டியது. தியேட்டர் பிரச்சினை, உட்பட்ட காரணங்களால் இரண்டு மாதம் தள்ளி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயம் மற்றவர்களின் படங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதை சம காலத்தில் கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது.

ஒரு படத்தை பிரிண்ட் போட 60 ஆயிரம் ரூபாய் ஆகிறது.1000 தியேட்டர்களில் வெளியிட வேண்டுமானால்? தயாரிப்பு செலவை இதுவே குடித்துவிடும். குறைந்த பட்ஜெட்டுகளில் படம் எடுக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.ஆனால் Qube வந்த பிறகு சாட்டிலைட் வழியே படம் ஒளிபரப்பட்டு விரயமாகும் பணம் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல தான் டிடிஎச்சும்.

எப்படியும் தியேட்டருக்கு வருகிறவர்கள் வர தான் செய்வார்கள். காரணம் தியேட்டர் தரும் அனுபவத்தை ஒரு போதும் டிவியோ மற்ற தொழில் நுட்பமோ குடுத்துவிட முடியாது.ஆனால் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம்.விஸ்வரூபம் படத்தை 1000 ரூபாயில் வெளிடுவதால் அது எப்படியும் போட்டதை எடுத்துவிடும்.



ஒரு குடும்பத்தில் 10 பேர் கூட்டாக உட்கார்ந்து பார்த்தாலும் தலைக்கு 100 ரூபாயாக கணக்கு ஆகிறது.அதனால் பெரிய பாதிப்பில்லை. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை தான் டிடிஎச்சில் வெளியிடப்படும் என்பதால் பெரிய அளவில் கவலைப்படத்தேவையில்லை. டிடிஎச்சை கணினியோடு இணைத்து ரெக்கார்டு செய்துவிட்டால் என்ன செய்வது, கேபிளில் இலவசமாக எல்லோருக்கும் ஒளிபரப்பிவிட்டால்? ஒரு வேளை கரண்டு போச்சின்னா? போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். டிடிஎச்சில் வெளியான பின் தான் அது வெற்றியா தோல்வியா என தீர்மானிக்க முடியும்.

தோல்விஅடைந்தால் - அடுத்து எந்த படமும் இது போன்ற முயற்சிகளில் இறங்காது.
வெற்றி அடைந்தால் - அடுத்து வருகிற படங்கள் எல்லாம் மெல்ல மெல்ல டிடிஎச்சில் தலை காட்டும்.

தியேட்டருக்கு போகறதுக்கு பதில் டிவிலயே பார்த்துடலாம் என்ற சோம்பேறித்தனம் மெல்ல பரவ ஆரம்பிக்கும். ஹோம்தியேட்டர் விற்பனை சக்க போடு போடும். மெல்ல மெல்ல தியேட்டர்கள் குறைய ஆரம்பிக்கும். படத்தின் தயாரிப்பு செலவு குறைகிற அதே நேரத்தில் லோ பட்ஜெட் படங்கள் நிறைய வரும். இப்போதே 5டி வருகையால் படம் எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஒருவேளை படம் எடுப்பது சுய தொழில் ஆரம்பிப்பது போலவோ, குடிசைத்தொழில் போலவோ ஆகலாம். வெள்ளிக்கிழமை மட்டும்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை மாறும். ஆண்டுக்கு  நூறிலிருந்து 200 படங்கள் வெளியாவதென்பது பல மடங்காகலாம்.
ஒரு கட்டத்தில் எந்த மாதிரியான படங்கள் வெளியாக வேண்டும், எவை கூடாது, இவ்வளவு எடுத்து வச்சாதான் படத்தை வெளியிடுவோம் என டிடிஎச் நிறுவனங்கள் ஏகபோக ஆட்சி செய்யும் நிலையை கூட இது வித்திடலாம்.

ஆனால் எல்லாமே விஸ்வரூபம் வெளியான பின் தான் தெரியும்.ஆனால் படம் எப்படியும் வெளியாகியே தீரும். காரணம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கிறது.