Thursday, February 13, 2014

சேகர் செத்தான்

காதலர் தினம் நெருங்க நெருங்க சேகருக்கு கையும் காலும் துரு துரு என்றாகிவிட்டது!! கடந்த காதலர் தினம் போலவே இந்த காதலர் தினமும் கழிந்துவிடுமோ என்ற பயம் அடி வயிற்றை எதோ செய்தது!!

பேசாமல் ரோட்டில் போற எதாவது பொண்ணுக்கு லெட்டர் கொடுத்து சரண்டர் ஆகிவிடலாமா என்று கேவலமாக கூட யோசிப்பான்.. ஆனால் கெடச்சத லவ் பண்றத விட.. புடிச்சத லவ் பண்ணாதான் லவ்ல ஒரு கிக்கிருக்கும் என்ற அவனது எண்ணம் அவனை தடுத்தது!!

மற்றவர்களைப் பொறுத்த வரை எப்படியோ தெரியாது. சேகரைப்பொறுத்த வரை அவன் அழகு! கண்ணாடியில் பார்க்கும் போது அவன் முகம் அவனுக்கே அழகாக தெரியும்.அதனால் அவனுக்கு ஃபேர் அண்ட் ஹேன்ஸம் தேவைப்படவில்லை.சைட் அடிப்பதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையேயில்லை. ”அதெல்லாம் டைம் வேஸ்ட் மச்சி” என்பான்.

“போனோமா.. பூ குடுத்தோமா.. பைக்ல இட்டுன்னு போய்.. எங்கயாவது கூட்டின்னு சுத்னோமா.முடிஞ்சிது! வேலை பொழப்பு இல்லாதவன் தான் பாத்துன்னே சுத்தின்னு இருப்பான்” என்பான்! ஆனாலும் சேகருக்கு காதல் ”தேவைப்பட்டது”! “எனக்கே எனக்கா ஒரு காதலி இருந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்” என அவ்வப்போது யோசித்துக்கொள்வான்!

காலம் உருண்டோடியது..

காதல் யாரைத்தான் விட்டது? சேகருக்கு இது முதல் காதல்!! இதற்கு முன்பே இரண்டு மூன்று இருந்திருந்தாலும் இப்போதைக்கு இது முதல் காதல்! கண்டுக்காதீங்க!

ஆம் அது காதல் தான்! கன்ஃபார்மே செய்துவிட்டான்! காரணம் இது தான்!! புது நம்பர் ஒன்றிலிருந்து “Hi sweety" என்று ஒரு மெசேஜ் வந்திருந்தது!!

இவனையும் ஒருவர் ஸ்வீட்டி என்று அழைக்கிறாரென்றால் அது காதலாக தான் இருந்தாக வேண்டும்!! சேகருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை!! மாடியிலிருந்து குதிக்க வேண்டும் போல இருந்தது!

அந்த நம்பருக்கு போன் செய்து உடனடியாக “ஐ லவ் யூ” சொல்லிவிடலாமா என்று யோசித்தான்!! சேகர் சரியான அவசரக்குடுக்கை..
(சேகர் சாவான்)

Monday, February 10, 2014

ஜாப் டைப்பிங்க்

அப்போது கல்லூரி மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டலில் என் ரூமுக்கு பக்கத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் ரூம் இருந்தது! எனக்கு பொழுது போகலைன்னா அவர்களிடமும் போய் சில நிமிடம் மொக்கை போட்டுவிட்டு வருவேன் 

அதற்கு காரணம் இருந்தது.. மற்றவர்களோடு பேசினால் தமிழில் பேச வேண்டி வரும்.அவர்களோடு பேசினால் ஆங்கிலத்திலே தான் பேசியாக வேண்டும். ஆங்கிலத்திறன் வளர்க்க அது ஒரு உத்தியாக இருந்தது! 

ஒரு ஞாயிற்றுக்கிழமை.. பக்கத்து அறை அண்ணன் என் அறைக்கு வந்து..

”உங்க ரூம்ல யாருக்காவது டைப்பிங்க் தெரியுமா?” என்றார்

“எனக்கே தெரியும்.எதுக்கு கேக்கறீங்க?”

“இல்ல.. அர்ஜண்டா 20 பக்கம் டைப் பண்ணனும்.. நாளைக்குள்ள சம்மிட் பண்ணனும்.. நாமக்கல் போய் கேட்டாலும் நாளைக்குள்ள தருவாங்களான்னு தெரில.. நான் வேணா ஒரு பக்கத்துக்கு 5ரூ தரேன்” என்றார்! நல்ல ஆஃபராக படவே.. மூன்று மணி நேரத்தில் 20 பக்கம் அடித்துகொடுத்தேன்!! செலவுக்கு ஆச்சு!

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ப்ராஜக்ட் டைப்பிங்கை எதற்காக வெளியே கொடுக்கணும்? டைப்பிங்க் தெரிஞ்ச பசங்களுக்கே கொடுத்த என்ன? அவங்களுக்கும் செலவுக்கு ஆச்சுல்ல!

Sunday, February 9, 2014

இணைய மார்கெட்டிங்க் -3

இணையதளம் துவங்குமுன் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியன என்ன? ஏமாறாமல் இருப்பது எப்படி என சொல்லியிருந்தேன். (இணைய மார்கெட்டிங்க் -2 ல்

உங்கள் நிறுவனத்தின் முகவரி, தொலைபேசி எண், நம் வெப்தளத்தின் முகவரி எல்லாவற்றையும் கூகிள் மேப்பில் பதிந்துகொள்ள வேண்டும்.இலவசம் தான். இதன்மூலம் கூகிளில் நாளை உங்களின் வெப்சைட் தோன்றும்போது அப்படியே உங்கள் முகவரி, மொபைல் எண்ணெல்லாம் தோன்றும். கூகிளில் முதல்பக்கத்திலே பார்த்ததுமே உங்கள் நம்பர் வந்தால் போன் செய்ய வசதியாக இருக்கும்!
பதிவு செய்ய முதலில் https://www.google.com/business/placesforbusiness/ லிங்கிற்கு செல்லவும்! "sign in" என்ற பட்டனை அழுத்தி உங்கள் ஜிமெயில் ஐடி பாஸ்வர்ட் கொடுத்து லாகின் செய்யவும்.



உள்ளே சென்றதும் “add listing"ஐ அழுத்தினால் தோன்றும் பக்கத்தில் “search for your business" என்ற இடத்தில் உங்கள் பிசினஸ் பெயர் அழுத்துங்கள் உதாரணமாக “kumar bakers" என்று டைப் செய்து பாருங்கள். ஏற்கனவே பதிவு செய்திருந்தால் வரும். இல்லையென்றால் "No these are not my business" என்ற பட்டனை அழுத்தவும்.





அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் அலுவலகத்தின் பெயர்,முகவரி,பின்கோடு,மொபைல் அல்லது லேண்ட்லைன் எண் எல்லாம் கொடுத்து பின் category என்ற இடத்தில் உங்கள் அலுவலகம் தொடர்பான தலைப்பில் கொடுக்கவும். உதாரணமாக மொபைல் சர்வீஸிங்க் என்றால் மொபைல் சர்வீஸிங்க் என டைப் செய்யுங்கள்.



கூகுளே உங்களுக்கு இதில் உதவும்.கொடுத்து submit செய்துவிட்டால் முடிந்தது வேலை.சில நாட்களில் உங்கள் அலுவலகத்திற்கு ஒரு லெட்டர் வரும்.அதில் நான்கு இலக்க பின் எண் இருக்கும்.அதில் கொடுத்திருக்கும் வெப்சைட் லிங்கிற்கு சென்று பின் எண்ணை அடித்தால் வேலை முடிந்தது. சில நாட்களில் உங்கள் அலுவலகத்தின் பெயரை கூகிளில் அடித்தால் உங்கள் அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் வந்துவிடும்.அப்றம் ஜாலி தானே!

 நன்றி (அரக்கோணம் டைம்ஸ்) பிப்ரவரி 9 2014

தொடர்புடைய பதிவுகள்:

இணைய மார்கெட்டிங்க் - 1




Wednesday, February 5, 2014

ஐசிஐசிஐ வங்கியில் ஏடிஎம்மிலேயே பணம் செலுத்தும் வசதி

இன்று வேளச்சேரி ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றிருந்தேன்.பணம் கட்ட வரிசை எங்கே என தேடிய போது ஏ.டி.எம் போல இருக்கும் ஒரு மெசினை காட்டினார்கள்! 

“ப்ரோ இது எப்போ வந்துச்சு? சொல்லவேயில்ல” என்றேன் அங்கே நின்ற பணியாளர் ஒருவரிடம்! 

“வந்து ஆறு மாசம் ஆச்சு” என்றார்!! (வங்கிக்கு போய் ஆறுமாசம் ஆச்சா  ரைட்டு)

அந்த மெசினில் 12 இலக்க அக்கவுண்ட் எண்ணை அழுத்திய உடன் கீழே ஒரு ட்ரே திறக்கிறது! அதில் பணத்தை வைத்தால் அதுவே எண்ணி, “3000” தானே? என கேட்கிறது.. ஆமாம் என அழுத்தினால் “வைத்தீஸ்வரன்” தானே? என்கிறது.. ஆமாம் என்றால் ரெசிப்டு ஒன்று வெளியே வந்துவிடுகிறது!! இனி 24 மணி நேரமும் பணம் போட்டு எடுக்கலாம்! அருமை!!

இன்னும் எங்கூர் ஐஓபியில் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டியிருப்பதை நினைத்துக்கொண்டேன்.. அம்மா பாவம் 

மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஐசிஐசிஐ வங்கியில் ஒரு செல்லான் பூர்த்தி செய்து கவர் ஒன்றில் பணம் போட்டு ஏடிஎம்மில் இருக்கும் பாக்ஸில் பணம் போட்டுவிட்டால் மறுநாள் காலை 11 மணிக்கு பணம் அக்கவுண்டில் ஏறிவிடும் ஒரு சர்வீஸ் வைத்திருந்தார்கள்! அப்போது 12வது படித்துக்கொண்டிருந்தேன்! அந்த சேவையை எப்போது மூடினார்கள் தெரியவில்லை!!

Tuesday, February 4, 2014

இணைய மார்கெட்டிங்க் - 2

கடந்த வாரம் வெப்சைட்டின் முக்கியத்துவம்,வெப்சைட் எதற்காக பயன்படுகிறது போன்றவற்றை எழுதியிருந்தேன்.இணைய மார்கெட்டிங்க் -1 பொதுவாக நிறுவனத்திற்கென வெப்சைட் தேற்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.யார் நமக்கு வெப்சைட் செய்து தரப்போகிறார்கள்? தனி நபரா? நிறுவனமா?

தனி நபர் என்றால் அவர்கள் இதே துறையில் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள். இன்னும் எத்தனை வருடங்களுக்கு இருப்பார்கள் என்பதெல்லாம் அலச வேண்டும்.சில பேர் வேற வேலை கிடைக்கும் வரை வெப்சைட் பிசினஸ் பாப்போம் என்ற மனநிலையில் இருப்பார்கள்.அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நண்பர் ஒருவர் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்டுவிட்டார். யாரோ தெரிந்த பையனாம்.வெப்சைட் செய்து கொடுத்திருக்கிறான்.

சில மாதம் கழித்து வெப்சைட் பற்றி இவர் மறந்து போய்விட்டார்.அது பாட்டுக்கு இருக்கும் எங்க போய்ட போவுது என அசால்டாக இருந்திருக்கிறார். திடீரென ஒரு நாள் எதுக்கும் பாப்போம் என இணையத்தை ஓபன் செய்து பார்த்தவருக்கு அதிர்ச்சி.அவர் தளம் முடங்கி இருந்தது.சரி அந்த பையனுக்கு போன் அடிப்போம் என அடித்தவருக்கு அதிர்ச்சி. அந்த பையன் எங்கே இருக்கிறான் என எந்த தகவலும் இல்லை.

சரி வேறு யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால், சில அடிப்படை தகவல்களுக்கு அந்த பையன் உதவி இல்லாமல் எதுவுமே முடியாது என்று விட்டார்கள். வேண்டுமானால் புதுசா ஒண்ணு ஓபன் பண்ணி தரவா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.மனிதர் வெப்சைட் விசயத்தை அப்படியே விட்டுவிட்டார். வேறு யாராவது வெப்சைட் செய்து தரவா என்று கேட்டாலும் எதோ திருடனை பார்ப்பது போல பார்க்கிறார்.

தனிநபர்களிடம் மட்டும் தான் இதே பிரச்சினை என்றில்லை. நிறுவனங்களும் இப்படித்தான் இயங்குகின்றன.3 வருடம் நிறுவனத்தை நன்றாக நடத்திவிட்டு, பிசினஸ் சரியாக நடக்கவில்லை என்று இழுத்து மூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.யார் எப்போது கம்பெனியை இழுத்து மூடிட்டு போவார்கள் என யாராலுமே கணிக்க முடிவதில்லை.

முடிந்த வரை வெப்சைட்டை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாருங்கள். வெப்சைட் செய்து தருபவரிடம் கொஞ்சம் முன்கூட்டியே சில தகவல்களை விசாரித்துக்கொள்வது நல்லது.சர்வர் யாருடையது என கேளுங்கள். “எல்லாம் நம்மளோடது தான்” என்பார்கள். அவர்களிடம் அலர்ட்டாக இருக்க வேண்டும். சர்வருக்கு 78 ஆயிரம் கட்டும் என் நண்பர் ஒருவர் இந்த மாசத்தோடு இழுத்து மூடிட்டு போய்ட்டார். அவரிடம் வெப்சைட் வாங்கிய 60 பேர் இன்று விவரம் தெரியாமல் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் சர்வர் யாருது? ftp பற்றிய தகவல் வேணும் என்றெல்லாம் கேட்டு விடுங்கள். ஆனால் தர மாட்டார்கள். நாம் தான் அடித்து பிடுங்க வேண்டும்.இன்னொரு குரூப் இருக்கிறார்கள்.1000 ரூபாய் கட்டினால் போதும் வெப்சைட் உங்களுக்கு என்கிறார்கள். அடுத்த வருடம் 2000 கட்டுங்க.. எல்லாம் விலை ஏறிடுச்சி என்பார்கள்.வெப்சைட் login, பாஸ்வர்டை வாங்கி வைத்துக்கொள்வது நலம். இல்லையென்றால் godaddy.com சில பெரிய நிறுவனங்கள் domain விற்கிறார்கள்.அவர்களிடம் நீங்களே காசு கொடுத்து .com அல்லது .in தளங்களை உங்கள் பெயரில் வாங்கி டிசைன் மட்டும் ”நீங்க போட்டு குடுங்கப்பா” என நிறுவனங்களை அணுகுதல் நலம்.நம் வெப்சைட் விளையாட்டு பொருளல்ல.

 நன்றி - அரக்கோணம் டைம்ஸ் (ஜனவரி 26 2014)

Monday, February 3, 2014

ஃபேஸ்புக் பத்தாண்டு நிறைவு!

ஃபேஸ்புக் பத்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது இன்றோடு! மகிழ்ச்சி! நான் எப்போது ஃபேஸ்புக் வந்தேன் என மிகச்சரியாக நினைவில்லை.ஆனால் கல்லூரி மூன்றாமாண்டு படிக்கும் போது இண்டர்னெட் மார்கெட்டிங்க் தொடர்பாக ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது தான் சோசியல்மீடியாவின் அசுர வேக வளர்ச்சி பற்றிய விவாதம் மெல்லியதாக வலம்வந்துகொண்டிருந்தது. ஆர்குட்டும் மைஸ்பேசும் தான் முன்னணியில் இருந்தன!

மைஸ்பேஸ் ப்ரமோசன் பற்றி தெரியவில்லை.ஆனால் ஆர்குட் மூலமாக பிசினஸ் 30 சதவீத வளர்ச்சியடைந்ததாக சர்வேக்கள் சொல்லிக்கொண்டிருந்தன. top growing social media என்றொரு ஆர்டிக்கள் படித்த போது ஃபேஸ்புக் அசுரவேகத்தில் வளர்வதாக கேள்விபட்டு எனக்கும் ஒரு அக்கவுண்ட் துவங்கிக்கொண்டேன்.அதோடு சரி. ஹ்ரித்திக் போட்டோவை ப்ரொஃபைலில் வைத்ததாக நினைவு.

அதன் பிறகு ஆறு ஏழு மாதங்கள் கழித்து ஒரு வெப்டிசைனிங்க் வேலையில் சேர்ந்தபோது என் இண்டர்னெட் மார்கெட்டிங்க் ஆர்வத்தை பார்த்து அதை என் தலையில் கட்டினார்கள்.அப்போது தான் மீண்டும் ஃபேஸ்புக்கை தூசு தட்டி எடுத்தேன்.ஆரம்பத்தில் மரண மொக்கையாக இருக்கும்.என் நண்பர்கள் யாரும் ஃபேஸ்புக்கில் இல்லை.அவர்களுக்கு அப்படி ஒன்று இருப்பது தெரியுமா என்பதே சந்தேகம் தான். நான் கிராமத்தில் இருந்து வந்தவன்.அதனால் என் ஏரியா காரர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்திருந்தாலும் என்னைப்போலவோ அக்கவுண்ட் மட்டும் துவங்கி ப்ரொஃபைல் போட்டோ போட்டு வைத்தவர்களாக இருப்பார்கள்!

2011ல் வேலை தேடி சென்னை வந்தபிறகு மாமா வீட்டில் தங்கினேன்.அங்கே அத்தை பசங்க பயன்படுத்துவதை பார்த்தேன். வெறும் போட்டோஷேரிங்கும் சாட் செய்வதற்குமான ஒரு தளம் போல என நினைத்துக்கொண்டேன்.அண்ணனோடு வீடெடுத்து தங்கிய போது அவன் லேப்டாப் வைத்திருந்தான்.அப்போது பொழுது போகாமல் சில வலைதளங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.யுவகிருஷ்ணா,அதிஷா,சாரு தளங்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஃபேஸ்புக்கிலும் அவர்களை தொடர்ந்துக்கொண்டிருந்தேன்.

சில மாதத்தில் புதியதலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்தபோது நிறைய எழுத்து பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.குறிப்பாக சுவாரசியமாக எழுதவேண்டும்.எனக்கு நன்றாக பேச வரும்.எழுதி பயிற்சியில்லை.எந்த கட்டுரைப்போட்டியிலும் பங்குபெற்ற அனுபவம் கிடையாது.எழுத முயற்சித்ததும் இல்லை.காரணம் சோம்பேறித்தனம்.அடுத்து யார் படிக்க போறா என்ற நினைப்பு.

அப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் சாரு க்ரூப்பினர் வலுவான நிலையில் இருந்தார்கள்.தினமும் அவர் எதையாவது எழுதுவார் இவர்கள் அது பற்றி விவாதித்து, சாருவை துதிபாடி,சிலர் சாருவை கெட்டவார்த்தையில் திட்டி, திட்டுவாங்கி.ஒரே காமெடியாக இருக்கும்.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுதமுடியும்போல என்று நினைத்து நானும் நெட்டில் சில ஆங்கில வசனங்களை எடுத்து போட்டு பார்த்தேன்.பத்திரிக்கையில் தமிழில் எழுதுவது போல ஃபேஸ்புக்கிலும் எழுதினேன்.பத்திரிக்கையில் வெறித்தனமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஃபேஸ்புக்கிலும் எழுதி தள்ளினேன்.ஆரம்பத்தில் 4லைக் விழுந்தாலே பெரிய விசயம்.இப்போது இருப்பது போல லைக் போட்டி அப்போது இல்லை.காலம் போக போக டிமிட்ரிகள் உள்ளே வந்தார்கள்.கிஷோர் வந்த பிறகு தினமும் அடிதடி தான்.

ஜாதி ஆசாமிகளும் கட்சிக்காரர்களும் எப்போது உள்ளே வந்தார்கள் என நினைவில்லை.ஆரம்பத்தில் திமுககாரர்கள் வலுவாக இருந்தார்கள்.வைகோ ஆசாமிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கினர்.ஈழப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது வெளிநாடுவாழ் தமிழர்கள் மொத்தமாக சேர்ந்து கலைஞரை டார்கெட் செய்தார்கள்! பிறகு கலைஞரை கலாய்த்தால் அதிக லைக் விழும் என்ற ஃபார்முலா வந்தது.தர்மபுரி கலவரம் நடந்த போது தான் பா.ம.கவினர் மொத்தமாக உள்ளே வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் மனுஷை டார்கெட் செய்தார்கள். தினம் தினம் சண்டை என ஒரே குஷியாக போய்க்கொண்டிருந்தது.உண்மையில் ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன கிடைக்கிறது? அது ஒரு மாதிரி போதை. தண்ணி அடிப்பதால் என்ன கிடைக்குமோ அது கிடைக்கும்.ஆனால் அது வாழ்க்கையை சுவாரசியப்படுத்துகிறது. முன்பெல்லாம் என்ன எழுதலாம் என யோசித்தால் எதுவுமே தோன்றாது.இப்போது குப்பையாகவோ சிந்தனையாகவோ எதோ தோன்றிக்கொண்டேயிருக்கிறது! இப்போதைக்கு இது போதும்!