Friday, May 18, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 4


போலி அசலையும் விஞ்சிவிடும்” – வைரமுத்து.

ஃபேஸ்புக்கில் உலா வருபவர்களில் யார் போலி,யார் உண்மை என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.

சொந்த பெயரில் உலா வராதவர்கள் போலிகள் என்றொரு பொது அபிப்ராயம் உள்ளது. அது தவறு. பெயரை வைத்து போலி என அடையாளம் காண்பது எளிது என்பதால் இந்த நம்பிக்கை.

ஒரு போலியை உதாரணமாக எடுத்துகொள்வோம்.. என் நண்பன்.. பெயர் மட்டும் தான் உண்மை. பிறந்த நாளை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டாம். சொந்த ஊர் சென்னையாம்.(அவன் சொந்த ஊர் பக்கா கிராமம்). படித்தது எஸ்.எஸ்.என் கல்லூரியாம். போட்டோ போலி. ஏண்டா இப்படின்னு கேட்டா.. “நாம நிறையா பேருக்கு(பொண்ணுங்களுக்கு) தினமும் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் குடுக்கறோம். அவங்க நம்ம ஃப்ரொஃபைலை பார்த்தா கேவலமா இருக்க கூடாது பாருஎன்கிறான்.

போலிகள் மூன்று விதமாக உருவாகிறார்கள்.

தங்கள் சொந்த தகவல் கொடுத்தால் மற்றவர்களால் எதாவது பிரச்சினை வந்து விடலாம், தொல்லை கொடுக்கக்கூடும். தங்கள் கருத்து சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாக எண்ணுபவர்கள் இந்த வரிசையில் வருவார்கள்.(பெண்கள் இந்த வரிசையில் அதிகமாக வருகிறார்கள்). பாதுகாப்பு காரணமாக போலியானவர்கள் தான் அதிகம்.

இரண்டாவது வகையினர் ரெகக்னைசன் எனப்படும் பாராட்டுதலுக்காக அரிதாரம் பூசுபவர்கள்.  நடிகர் நடிகை போட்டோவை வைத்துக்கொண்டு “ கருப்பு எம்.ஜி.ஆர்” என்பது போன்ற வித்தியாசமான பெயரை வைத்துக்கொண்டால் அதிக லைக் கமெண்ட் வாங்கி இணையத்தில் பாப்புலராக உலாவலாம் என்ற பொது அபிப்ராயம் இத்தகையவர்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

மூன்றாவது ஆசாமிகள் ஜகஜ்ஜால கில்லாடிகள். நம்மை கில்மாவான போட்டோவில் டேக் செய்வது தொடங்கி, பெண்கள் லாகின் செய்ததுமே ”ஹாய் ஸ்வீட்டி” என திரையில் தோன்றுவது,பெண் வேடமிட்டு நம்மை வசியப்படுத்தி நம்பர் வாங்கி ஜில்பான்ஸேவாக பேசி பணம் கரந்துவிடுவது வரை பக்கா அயோக்கியத்தனங்களின் கூடாரம், சாட்சாத் இவர்களே.

முதலாவது வகையினர் நமக்கு எந்த தொந்திரவும் செய்யப்போவதில்லை என நம்புவோம். 

இரண்டாவது வகையினர் ரொம்ப காலம் மார்கெட்டில் இருக்க முடியாது. ரஜினி போலவே மெமிக்ரி செய்பவரை யாரும் எந்திரன் படத்திற்கு நடிக்க கூப்பிடமாட்டார்கள்.


மூன்றாவது ஆசாமிகளை நாம் அடையாளம் காண்பதே கடினம். தெரியாத்தனமாக இவர்களை நம் நண்பர்களாக இணைத்துக்கொண்ட பின்னரே இவர்களின் பசுந்தோல் விலகும். இந்த ரிஸ்க்கை விரும்பாதவர்கள் இவர்களை வாசலிலேயே விசாரித்து வழியனுப்புவது நல்லது. 

தவறி வீட்டுக்குள் அனுமதிக்கிறவர்கள் தகுந்த இழப்பீடுகளை சந்திக்க நேரிடும். ஃப்ரிரெண்ட் ரெக்வஸ்ட் வரும்போதே சம்பத்தபட்ட நபரின் முகப்பை சிப்பி.பிப்பி.ஐ கண் கொண்டு அலசுங்கள்.
என்னைப் பொறுத்தவரை நம் முழு தகவலையும் பதியும் முன் நம் தைரியத்தை சிடி ஸ்கேனில் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை போலிகளால் நமக்கு ஆபத்து வரும் போது அதை தாங்கும் மன தைரியம் இருந்தால் தைரியமாக நம் போன் நம்பர் என்ன.. வீட்டு அட்ரஸே கொடுக்கலாம்.
ஆனால் போலிகளுக்கு தான் இங்கே முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

“எல்லா மேனேஜரும் நல்லவர்களல்ல” என நான் ஸ்டேட்டஸ் போடுகிறேன் என வைத்துக்கொள்வோம். “அப்ப உங்க மேனேஜர் அயோக்கியனா பாஸ்” என்பதாக எவனாவது கமெண்ட்டிவிட்டு அதை என் மேனேஜர் பார்த்தால் வாழ் நாளுக்கும் எனக்கு ப்ரொமோசனே கிடைக்காது. அப்ரைசல் மனசாட்சியே இல்லாமல் 300 ரூபாய் போடப்படும்.

இது போன்ற தலைவலிகள் போலிகளுக்கு இல்லை. போலிகளால் மற்றவர்களுக்குத்தான் தொல்லையே தவிர அவர்களுக்கல்ல. அவர்கள் யாரையாவது பூடகமாக தாக்கி எழுதினால் ”யாரை மச்சி சொல்லற” என யாரும் போன் போட்டு கேட்கமாட்டார்கள். “என்ன பாஸ் நீங்க போய் இது மாதிரி எழுதிருக்கீங்க” என எவனும் விசாரிக்க மாட்டான்.

அவர்கள் பாட்டுக்கு பத்தவைத்துவிட்டு பதுசாக போய்க்கொண்டே இருப்பார்கள். மூன்றாம் உலகப்போரே நடந்தாலும் மூக்கை பிடிக்க சாப்பிட்டுவிட்டு ஸப்பாடா என இருப்பார்கள்.
போலிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அவர்களின் பதில்  ”உங்களை பாதுகாத்துகொள்ள அஸ்திரமும் கேடயமும் கொடுக்கபட்டிருக்கும்போது அதை கையாள தகுந்த பயிற்சியோடு உலாவ வேண்டியது உங்கள் கடமை.

காரணம்..

ஃபேஸ்புக்கில் உண்மையான தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.
(அடுத்த பதிவில் அல்டாப்பு ஆறுமுகங்கள்)
(முகத்திரை விலகும்)

Wednesday, May 16, 2012

ஏன் பிறந்தாய் மகனே!!


மே 16, இன்று.. என் பிறந்த நாள். நிறைய நண்பர்களின் வாழ்த்து. என்னுடைய ஃபேஸ்புக் முகப்பு நிரம்பி வழிகிறது. குறிப்பாக இத்தனை வாழ்த்துக்களை சென்னவர்களில் பலரை எனக்கு  தெரியவே தெரியாது.. 

எல்லாம் டெக்னாலஜி சங்கதிகள்.ஆனாலும் இது பிடித்திருக்கிறது. 

ஒவ்வொருவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் ஒவ்வொரு வகை. 

பள்ளி பருவத்தில் புத்தாடை அணிந்து கேக் வெட்டி கொண்டாடுதல், கல்லூரி வயதில் நண்பர்களோடு படத்திற்கு செல்லுதல் (இப்பலாம் இஸ்கோலு பசங்களே போகிறார்கள்), காதலர்கள் வெளியே எங்காவது தனியே இருக்க விரும்பி பீச்,பார்க், சினிமா  என உலா வருவார்கள். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பு பரிமாறுவார்கள்..அதே பீச், பார்க், சினிமா வகையறா.. சிலர் கோர்ட் வாசலில்.

ஆனால் அம்மா,அப்பாவான பிறகு அவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதே இல்லை. தங்கள் பிள்ளைகளை கொண்டாட வேடிக்கைப்பார்ப்பதில் தனிச்சுகம் காண்பார்கள். சமீபகால நடைமுறைகள் இதை மாற்றி இருக்கிறது.

கடந்த கால நிகழ்வுகள் என் மனதில் சிரிப்பாய் சிரிக்கின்றது. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே பிறந்த நாள்கள் மிக முக்கியமானவை. நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதை விட மற்றவர்களின் பிறந்த நாளை கொண்டாடியது தான் அதிகம்.

என் பிறந்த நாள் மே மாத இடைப்பட்ட நாள். பள்ளி கல்லூரிகள் விடுமுறையாக இருக்கும். எனக்கு சின்ன வயதிலிருந்தே அந்த ஏக்கம் இருக்கும். என் சக வகுப்பு தோழர்கள் எல்லாரும் அவர்களின் பிறந்த நாள் அன்று மட்டும் பள்ளி சீருடையை தவிர்த்து புதிய உடை அணிந்து கேக் கட் செய்து, சாக்லேட் வழங்கி… ஆனால் இன்று வரை நான் அப்படி கொண்டாட முடிந்ததில்லை. இனியும் கொண்டாட முடியாது.
பள்ளி நாட்களில் கொண்டாடிய பிறந்த நாள்கள் சிம்பிளானவை. நானும் நான்கு நண்பர்களும் சேர்ந்து கொண்டாடுவோம். மிட்டாய் செலவுகள்,பத்து ரூபாய்க்குள் முடிந்துவிடும். 

காலப்போக்கில் படிப்புக்காக வெளியூர் விடுதிகளில் தங்கிய பிறகு நண்பர்கள் யாரும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அதே பத்துரூபாய்க்குள்ளான சாக்லேட்டுகள் படியளக்கப்படும். இந்த விசயத்தில் விலைவாசி உயர்வு என்னை பாதித்ததே இல்லை.யாருன்னாலும் பத்து ரூவாய் தான்.

அப்போதெல்லாம் தகவல் தொடர்புகள் இந்த அளவு இல்லை. அது மட்டுமல்லாமல் நான் என்ன அரசியல் கட்சித்தலைவரா.. ஊர் முழுக்க என் சொந்த செலவில் போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்த. “எனக்கு இன்று பிறந்த நாள்” என்று குரூப் லிஸ்டில் எல்லோருக்கும் மெஸ்ஸேஜ் அனுப்பினால்…அல்லது ஒவ்வொரு நண்பருக்கும் போன் செய்து “எனக்கு பிறந்த நாள், எனக்கு பிறந்த நாள்” என்று கேட்டாலோ ( நினைக்கவே படுகாமெடியாக இருக்கும்).

பள்ளி, கல்லூரி காலங்கள் இப்படி இருக்க, பணி இடங்களில் சம்பிரதாயமாக கேக் வெட்டி எல்லோரும் ஹேப்பி பர்த்டே பாடி பத்து நிமிடத்தில் கொண்டாடி பிழைப்பை பார்க்க சென்று விடுவோம்.

 நம்ம பிறந்த நாளுக்கு எவனாவது வாழ்த்து சொல்ல மாட்டானா என ஏங்கிய காலத்தில் google,way2sms,indyarocks.com போன்ற தளங்களில் இருந்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” குறுந்தகவல் வந்து பயங்கர சந்தோசம் கொடுக்கும்.(நம்ம மேல இவனுங்களுக்கு எவ்வளவு பாசம் என்பதாக எனக்கு புல்லரிக்கும்).

ஆனால் டெக்னாலஜிகள் வளர்ந்த பிறகு ஃபேஸ்புக்கே இன்று யார் யாருக்கு பிறந்த நாள் என காட்டிவிடுவதால் எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்வது எளிதாகிவிட்டது. சில நண்பர்கள் எனக்கு போனெல்லாம் செய்து பாச மழை பொழிந்து திக்குமுக்காட செய்துவிட்டார்கள்.

தீபாவளி,பொங்கல் என நாம் கொண்டாடும் எல்லா நாட்களுமே நமக்கானவை அல்ல. அவை எல்லாருக்கும் பொதுவானவை. ஆனால் பிறந்த நாள் நமக்கே நமக்கானவை.
எல்லோரும் வருட துவக்கத்தில் புதிதாக சபதம் எடுப்பார்கள், கடந்த ஆண்டு என்ன சாதித்தோம் என அசை போடுவார்கள்.  நம் பிறந்த நாள்கள் தான் என்னை பொருத்தவரை புத்தாண்டுகள். இத்தனை வருடம் என்ன கிழித்தோம் என்பதை இன்றாவது யோசித்தாக வேண்டும்.

நான் யோசித்தேன் பட் எதுவும் தெரியல..

(என்னையும் மதித்து வாழ்த்து தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்)

Thursday, May 10, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 3


ஃபேஸ்புக்கில் பொண்ணு பிடிக்கும் ஆசாமிகளின் கதை படு சுவாரசியமானது. ஆரம்பத்தில் பயங்கர டெடிக்கேட்டடாக பெண் தேடுவார்கள்.

எப்படி தேடுகிறார்கள்?

முதலில் ரம்யா, நித்யா என்பன போன்ற பெயராக ஃபேஸ்புக் சேர்ச் பாக்சில் தேடி தேடி ரெக்வஸ்ட் கொடுப்பார்கள்.தேடப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ப்ரொஃபைல் போட்டோவே இருக்காது.

(தங்கள் முகத்தை வெளிக்காட்டிக்கொள்ளுகிற துணிச்சல் இல்லையோ என்னவோ..ஒருவேளை அவர்கள் காட்டிவிடும் பட்சத்தில் அதை பார்க்க நமக்கு துணிச்சல் தேவைப்படலாம்).

சில பெண்கள் நடிகைகளின் முகமும் பொம்மை முகமும் வைத்து ஏமாற்றுவார்கள். நம்மவர்கள் அந்த முகத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். அந்த ஆராய்ச்சிகளில் பின்வருவன இடம் பெறும்(வயது,கல்லூரி, நிறுவனம், பெயர்,எந்த ஊர்,இத்யாதி,இத்யாதி).

வயது ரொம்ப முக்கியம்..(காரணம் தெரியாதவர்கள் சுட்டி டிவி பார்க்கவும்)


பெரிய கல்லூரியை சேர்ந்தவர்கள் செம ஃபிகர் என்ற அணுமானம் அடிப்படையிலேயே உண்டு.(பொதுவாக கிராமத்து ஆசாமிகள் இதில் அதிகம் பாதிக்கபட்டிருக்கிறார்கள்)

ஊரில் - - சென்னை,கோவை,கேரளாவுக்கு முன்னுரிமை அளிக்கபடும்.(லிஸ்டில் மதுரை,திருநெல்வேலியை விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளவும்,ஆனால் அங்கே ஃபேஸ்புக் அவ்வளவு பிரபலமா என்பது சந்தேகமே)

ஐடி நிறுவனம் என்றால் ராஜ உபசாரம் உண்டு (காரணம் பல ஐடி நிறுவன நண்பர்கள் ஏற்கனவே கதை கதையாக விட்டு கடுப்பேற்றிய வரலாற்று பாதிப்புகள்)

இப்படியான முயற்சிக்களை பட்டி டிங்கரிங் செய்து பிறகு, நண்பர்களின் நண்பர்களாக தேடத்துவங்குவார்கள். அப்படி சிக்கும் பெண்கள் இவர்களை பாராமுகமாக நடத்துவார்கள். அப்படியே செட்டாகும் முகங்கள் கூட பார்க்கவியலா முகமாக நேரில் நடந்த கொடுமைகள் எல்லாம் உண்டு.

இவர்களின் தேடுதல் வேட்டை இப்படி இருக்க.. நிலைமை வேறு என்பது தான் கூத்தே..

பசங்களை விட பெண்கள் படு விவரமானவர்கள் என்ற உண்மையை நம் பச்சை மண்ணுங்கலால் ஜீரணித்து கொள்ளவே முடிவதில்லை.

நான் என்னுடன் நேரில் பழகாத பசங்க ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தால் அக்சப்ட் பண்ணுவதே இல்லைஎன்பதே அவர்களின் பதில்.

பெண்களை பற்றி பசங்க சில மதிப்பீடுகளை கொண்டிருப்பதைப்போலவே பெண்களும் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக பசங்க ஓவர் ஜொல்லு பார்ட்டியாக இருக்கிறார்கள்.ஆன்லைனுக்கு வந்ததுமேஹாய்என்று ஒரே நேரத்தில் பத்து பேர் திரையில் பயமுறுத்துகிறார்கள். நாங்கள் ஃபேஸ்புக் காதலை என்கரேஜ் செய்வதே இல்லை என்பதே அவர்கள் தரப்பு வாதம்

சரி யாருக்கு தான் ஃபிகர்கள் உஷாராகிறார்கள்?

காரணம் ரொம்ப சிம்பிள். நாம் படிக்கும் கல்லூரியின் நண்பர்களின் தோழிகள்,அவர்களின் தோழிகள், நிறுவனத்தில் பணி புரியும் நண்பர்களின் நண்பர்கள் என வட்டம் நீழும். இந்த சர்க்கிலில் யாராவது சிக்கினால் உண்டு. மற்றபடி கஷ்டம் தான்.

(குறிப்பு : சில கில்லாடிகள் பெண்களை மிகத்திறமையாக கவர்ந்துப்பின் பணம் பறிப்பதும் தொடர்கிறது.பெண்களிலும் சிலர் இப்படி உண்டு.அவர்கள் பற்றி அப்புறமா…)

(உபதகவல் : தமிழில் எழுதும் ஆசாமிகளுக்கு ஃபிகர்கள் சிக்க வாய்ப்புகள் குறைவு)

ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, மொபைலில் நீண்டுடுடுடு.. நட்பாகி, காதலாகி பின் கடற்கரையில் சங்கமித்து நாசமாய் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் இத்தகைய காதல்கள் ஸ்திரத்தன்மை அற்றவை என்பவை பலரது அனுமானம்.ஆனால் அது காதலிக்கும் ஆசாமிகளை பொறுத்தது.இரண்டு முழு யோக்கியர்கள் காதலிக்கும் போது காதலில் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல. தரம்,மணம் சுவை,திடம் என சன்ரைஸ் விளம்பரத்தில் வரும் எல்லாமே சரியாக அமையும் என்பதை நினைவு படுத்திவிடுகிறேன்.

அவை இல்லாத பட்சத்தில் கல்யாண் புரட்சி போராட்டம் தான்.

ஃபிகரை பிக்கப் பண்ணும் நோக்கத்தோடு ஃபேஸ்புக்கில் வலம் வந்த ஆரம்பகால முகப்புத்தக வாசிகள் பின் தடுமாறி, தடம் மாறி, பல புதிய முயற்சிகள் செய்து தங்களை வேறு வகைகளில் வெளிப்படுத்தி பாப்புலராகிப்பின் செட்டாகும் ஃபிகர்களையும் தோழர் ஆக்கிக்கொண்டு ஆரோக்கியமான நட்பாக பல போராட்டங்களில் வெற்றிகரமாக பங்கு பெற்ற வரலாற்று சுவாரசியங்கள் உண்டு.

ஆனால் ஃபிகர்களைமட்டுமே உசார் பண்ண வருகிறவர்களுக்கான நீதி ஒன்று தான்.

கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பி தீர விசாரிக்க களம் இறங்க வேண்டாம் என்பதே

(போலிமுகத்திருடர்கள் பற்றி அடுத்த பதிவில்)

(முகத்திரை விலகும்)




Tuesday, May 8, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 2


நீங்கள் தின்நதோறும் எவ்வளவு  நேரம் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள் என்பதை பொருத்தே ஃபேஸ்புக்கில் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.

என் புருசனும் கச்சேரியும் :
தினமும் ஃபேஸ்புக்கில் லாகின் செய்கிறீர்கள், யாராவது ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்களா என செக் செய்து,அதை அக்சப்டோ ரிஜெக்டோ செய்கிறீர்கள்.பின் நோட்டிஃபிகேசன் பாத்துவிட்டு துக்கடாவென வெளியேறிவிடுகிறீர்கள்.இவர்கள் என் புருசனும் கச்சேரிக்கு போறான் என்ற ரகம்.பாத்துக்கோ நானும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்கேன்என போகிற வருகிறவர்களிடமெல்லாம் சவுண்டு விடுவார்கள்.இவர்களை நாம் பெரிதாக சட்டை செய்ய வேண்டியதில்லை.


ஆக்டிவ் யூசர்கள்
ஃபேஸ்புக்கில் இவர்கள் வைத்தது தான் சட்டம்.இவர்கள் ஆதரிப்பவர்கள் தான் ஃபேஸ்புக்கில் ஆட்சிஅமைக்கமுடியும்.(வருங்காலத்தில் இவர்களைக்கொண்டே அரசியல் நகர்வுகள் இருக்கலாம்..சோ அரசியல்வாதிகள் கவனிக்க)

எதுக்கு இவ்வளவு பில்டப் என சொல்லிவிடுகிறேன்.அதற்கு முன்.யார் இவர்கள்?

பெறும்பாலும் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருப்பார்கள்.அந்த நிறுவனத்தில் ஃபேஸ்புக்கிற்கு தடை இல்லாமல் இருக்கும்.காலை அன்றாட பணியோடு சேர்த்தே ஃபேஸ்புக்கையும் துவங்குவார்கள்.மாலை வேலைக்கு முழுக்கு போடுவதோடு ஃபேஸ்புக்குக்கும் சேர்த்தே கும்பிடு.சனிக்கிழமையும் அலுவலகம் உண்டு.ஞாயிறு தடா..

அவ்வப்போது வேலைக்கு நடுவே லைக்கு கமெண்டு போடுவது.இவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் எவன் தலையாவது உருளப்போகிறது என்று அர்த்தம்.இவர்கள் ஆதரவு இல்லாத சண்டை தோற்று போகும்.

பொழுதுபோக்கு ஆசாமி:
இவர்கள் தினமும் காலையும் மாலையும் சும்மா தலையை மட்டும் காட்டிவிட்டு போவார்கள். நண்பர்கள் போடும் ஸ்டேட்டஸ்,படங்களுக்கு விழும் லைக்குகள் இவர்கள் உபயம்.கம்மெண்ட் உட்பட.
இவர்களுக்கு பூச்செண்டு கொடுத்தே ஆக வேண்டும்.தான் உண்டு தன் வேலை உண்டுஎன்றே இருப்பார்கள்(பெரும்பாலும்).
ஆனால் இவர்கள் காலப்போக்கில் முன்னிரண்டு வகையில் சேராவிடில் ஃபேஸ்புக்கிற்கு தலைமுழுக்கு போட நேரிடும்.


மாப்பிள்ளைகள்:
இவர்கள் பெரும்பாலும் பொண்ணு பார்க்க வருவார்கள்.பச்சையாக சொல்வதென்றால் ஃபிகர் உசார் பண்ணுதல்இவர்கள் தொழில்.பெண்களுக்கு மட்டுமே ரெக்வஸ்ட் கொடுத்தல் இவர்களின் உபதொழில்.
இவ்வகை ஆசாமிகள் ஃபிகர்கள் யாரும் செட் ஆகாமல் தோற்று போவார்கள்.
  
(காரணம் அடுத்த பதிவில் –  நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கட்சி அடிதடி பற்றியும்)
(முகத்திரை விலகும்)

Friday, May 4, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை


ஏனோ தெரியலை. முகநூலில் ஆர்வம் குறைந்து வருகிறது. ஸ்டேடஸ் போடுவது, கமெண்ட் போடுவது போன்றவற்றில் ஆர்வம் குறைந்து வருகிறது. 
உருப்பட்டு விடுவேனோ?
--- பெருமாள் கருணாகரன்

சார் ஒரு உதாரணம் தான்!!


பேஸ்புக்கின் பிரபல பதிவர்கள் பலரின் சமீபகால ஸ்டேட்டஸ் இது தான். காரணம் என்ன?

ஏன் ஃபேஸ்புக்கை சிலர் வெறுக்கத்துவங்கி விட்டார்கள்.
இதன் காரணங்கள் தெரிய வேண்டுமென்றால் நாம் ஃபேஸ்புக்கின் பாலபாடம் பற்றி தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.

அதற்கு முன்..

பின்வரும் கேள்விக்கான பதிலை ஆழமாக யோசிக்கத்துவங்குங்கள்.

1)    தினமும் எவ்வளவு மணி நேரங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள்
2)    ஏன் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள்
3)    ஃபேஸ்புக்கில் உங்கள் ஸ்டேட்டஸில் முக்கியப்பங்காற்றும் செய்தி என்ன?(உதாரணம் – அரசியல்,கவிதை,அனுபவம்..எக்ஸட்ரா)

இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன.அவற்றை பின்னால் பார்ப்போம்.

ஆரம்பக்காலங்களில் ஆர்வமாக ஃபேஸ்புக் வந்தவர்கள் பலரும் சமீப காலங்களில் ஃபேஸ்புக்கை தலையை சுற்றி தூக்கி எறியக்காரணங்கள் பல..

ஆனால் ஃபேஸ்புக்கினுள் தலை நுழைப்பதற்கான காரணங்களாக சிலர் சொல்லவதெல்லாம் மூன்று தான்.

1)    பொழுதுபோக்கு
2)    புதிய நண்பர்கள் தேட (அதாவது ஒத்த கருத்துடைய நண்பர்களை பிடிக்க)
3)    புதிய செய்திகள் கிடைக்கும்.

இந்த மூன்றும் அல்லாத நான்காவது ஒன்று இருக்கிறது.அது ப்ராண்டிங்.(Branding) பெரிய ஆசாமிகள் இந்த கேட்டகிரியில் வருவார்கள். இவர்களின் நோக்கம் தங்கள் தொழிலை மேம்படுத்துவது.

(உதாரணம் வக்கீல் ஒருவரை எடுத்துக்கொள்வோம்..யாராவது ஒருவர் தன் ஸ்டேட்டஸில் “இதை எல்லாம் கேட்க ஆளே இல்லையா என்பது போல போட்டிருந்தால் “ஏன் இல்லை.ஈபிகோ 235இல் மூன்றாம் பத்தியில் குறிப்பிட்டது போல சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்என எதையாவது அவ்வப்போது கூறிக்கொண்டே இருப்பார்.

நாளா வட்டத்தில் அவருடைய நண்பர் வட்டத்தில் இருப்பவருக்கு இவரது பதில்களை பார்க்கும் போது “ஒருவேள மிகச்சிறந்த வக்கீலா இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு அவர் சட்டத்திறமை மீதும் வாதத்திறமை மீதும் அசாத்திய நம்பிக்கை வந்துவிடும்.பிறகென்ன நண்பருக்கு சட்ட ரீதியாக ஏதாவது உதவி தேவைப்படும் போது நம்ம வக்கீல் நினைவே வந்து தொலைக்கும்.இது தான் ப்ரண்டிங்.அந்த வக்கீல் தன்னை தொடர்ந்து ஃபேஸ்புக் மூலமாக மார்க்கெட் செய்து வந்ததன் வெற்றி தான் இது.அவர் மட்டுமல்ல சமீபத்தில் நிறைய பேர் இவ்வாறு முயற்சி செய்து வருவதை தொடர்ந்து கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும்.குறிப்பாக பெரு நிறுவனங்கள் இதை Social Marketing என தொடர்ந்து செய்கிறார்கள்)

ஃபேஸ்புக் தெளிவர்கள்:
ஃபேஸ்புக்கை சிலர் மிகத்தெளிவாக கையாண்டுவருவதை நான் பார்த்திருக்கிறேன்.அவர்கள் பற்றி முதலில் விரிவாக பார்த்து விடலாம்.
இவர்களின் தெளிவு நம்மை புல்லரிக்கவைக்கும்.இவர்கள் பொழுதன்னிக்கும் ஃபேஸ்புக்கில் இருப்பது போல தான் தோன்றும் ஆனால் உண்மை அப்படியல்ல.

தினமும் காலை பத்து மணிக்கு வருவார்கள்.ஒரு ஸ்டேட்டஸை போடுவார்கள்.முக்கியமானவர்களின் பக்கத்தை பார்வையிடுவார்கள்.லைக்கையோ கமெண்டையோ தட்டுவர்கள்.அடுத்தவேளையை பார்க்க போய் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் போட்ட ஸ்டேட்டஸுக்கு கீழ் இரண்டு பேர் சட்டை கிழித்து சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.அது பற்றி டோண்ட் வொர்ரி பி ஹேப்பியாக இருப்பார்கள்.இவர்களுடைய தலை எங்காவது உருண்டால் மட்டும், உடனே அங்கே சென்று பக்காவான மறுப்பை தெரிவித்துவிட்டு பதுசாக நகர்ந்துவிடுவார்கள்.

குறிப்பாக இந்த வகை ஆசாமிகள் எப்பொழுதும் ஆஃப்லைனில் தான் இருப்பார்கள்.தீவிரவாதிபோல எப்பொழுது வருகிறார்கள்,எப்பொழுது போகிறார்கள், எப்பொழுது வெடி வைப்பார்கள் என எவனும் கணித்துவிட முடியாது.அதே சமயத்தில் இவர்கள் பணி செய்யும் இடத்திலும் வேலையில் தீயாக இருப்பார்கள்.மேனேஜரே அசந்துவிடுவார்.(பொழுதுபோக்குகாக தான் ஃபேஸ்புக் என்பவர்கள் இதை கவனிக்க)

சரி நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில்கள், நாம் நாசுக்காக கையாள் வேண்டியவர்கள்,பொழுதுபோக்குக்காக தான் ஃபேஸ்புக் என்றால் நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யகூடாதது என்ன? மற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன? என அடுத்து விலாவரியாக பார்ப்போம்.

துவக்கத்தில் கருணா சாரின் ஸ்டேட்டஸுக்கான காரணம் recognizationனோடு தொடர்புடையது.குறிப்பாக சமீபகாலங்களில் பத்திரிக்கைகாக ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு அது பத்திரிக்கையில் வெளியானவுடன் அதை விளம்பரப்படுத்தி சீன் போட்டதன் தொடர் விளைவின் பாதிப்பே இது.இதை பற்றியும் விரிவாக அலசுவோம்
(முகத்திரை விலகும்)