Tuesday, December 31, 2013

பாடங்களுக்கான ஆண்டு 2013

2013 தொடங்கியபோதே திக்குத்தெரியாமல் தான் துவங்கியது! புதுயுகம் தொலைக்காட்சியிலிருந்து வெளிவந்துவிட்டிருந்தேன்.. யாரிடமும் அது பற்றி பெரிய அளவில் விவாதிக்கவோ, பேசவோ, பகிரவோ எதுவுமே செய்யவில்லை. காரணம் தொலைக்காட்சியில் பணியாற்றுவது என் கனவு.அது வெகு சாதாரணமாக சிதைந்திருந்தது. யாரிடம் அதைப்பற்றி பேசினாலும் நிச்சயமாகவே நெகட்டிவான எண்ணங்கள் ஏற்படவே சாத்தியம் அதிகம் இருந்தது.

அதனால் ரொம்பவே அடக்கி வாசித்தேன்.ஆனால் ஃபேஸ்புக்கில் அதிக ஆட்டம் போட்டேன்.சகட்டுமேனிக்கு ஸ்டேட்டஸுகள் பறந்தன.சில ஸ்டேட்டஸுகள், போட்டோக்கள் நூறு லைக்குகள் தாண்டின என்பதைத்தவிர பெரிய திருப்திகள் ஏதுமில்லை.ஆனால் லைக் சோறு போடுமா?

 நிறைய செய்ய வேண்டுமென தெரிந்தது.ஆனால் எங்கே துவங்குவது. எப்படி துவங்குவது என சரியாக தெரியாமல் முழித்தேன்.குறிப்பாக எனக்கு வழி காட்ட சரியான ஆட்களை உருவாக்கி வைத்திருக்கவில்லை என்பது மட்டும் அப்பட்டமாக தெரிந்தது.ஆலோசனை கேட்ட அத்தனை பேரும் அவர்கள் தோல்வியின் போது பெற்ற அத்தனை பயத்தையும் என் மீது இறக்கி வைத்தார்கள்.

சேர்த்து வைத்த காசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரையத்துவங்கியிருந்தது. நல்லவேளையாக சிகரெட் தண்ணி போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாததால் சிக்கனமாக காலத்தை தள்ளிக்கொண்டிருந்தேன்.கைவசம் என்னிடம் இருந்தது லேப்டாப் மட்டுமே. கொஞ்சம் பணம் போட்டு tamilanclassifieds.com என்றொரு தளத்தை துவங்கினேன். அதில் எனக்கு தெரிந்த SEO உத்திகளையெல்லாம் பயன்படுத்தி நிறைய நேரம் செலவிட்டு அதை கூகிளின் முதல் பக்கத்தில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினேன்.

சைடில் சிலருக்கு Google adsense கணக்கு துவங்கித்தந்து கொஞ்சம் காசு பார்த்தேன். இப்படியே சில மாதங்கள் ஓடியது. சிலருக்கு வெப்சைட் துவங்கித்தந்தேன்.எதிர்பார்த்தமாதிரியே tamilanclassifieds.com கூகிளின் முதல்பக்கத்துக்கு வந்திருந்தது.அதைக்காட்டி சில நிறுவனங்களிடம் SEO ப்ராஜக்ட்கள் எடுத்தேன்.அதன் பிறகு எல்லாமே ஏற்றம் தான். நார்வேவில் ஒரு நிறுவனத்தை அணுகி ப்ராஜக்ட் எடுத்தேன். இப்போது ஆஸ்திரேலியாவை மையமாக கொண்ட நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

swara infotech என நிறுவனத்திற்கு பெயர் வைத்து 2014ன் இறுதிக்குள் 4 பேருக்காவது வேலை தரும் எண்ணம் உள்ளது. இந்த வளர்ச்சி நானே யோசிக்காதது.என் மார்கெட்டிங்க் ஸ்கில் வளர்ந்திருக்கிறது. மிகச்சிறப்பாக பேசி க்ளையண்டுகளை வசப்படுத்தி வருகிறேன். மேனேஜ்மண்டுக்கான சில உத்திகளை கற்றிருக்கிறேன்.உண்மையில் MBA படித்தால் கூட இப்படி ஒரு அனுபவம் கிடைக்குமா தெரியவில்லை. 2013ல் ஒரு "take one short one action” என்ற ஒரு குறும்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தேன். அதற்கு நண்பர்கள் சாது விவேக்கிற்கு நன்றி. சிறப்பான அனுபவம்.பின் டெல்லி சென்று வந்தேன். ஒருவாரம் அருமையான பயணம்.சுப்ரீம் கோர்ட் சென்றேன். தாஜ்மஹால் சென்றேன். அப்றம் குதுப்மினார்.அங்கே ஒரு மாலில் ”மெட்ராஸ் கஃபே” படம் பார்த்தேன்.

நண்பர் மனோஜ் பிரபாகர் நன்றாக கவனித்தார்.அவருக்கு என் நன்றி.அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அருமையான பயணம்.குமுதம் தீபாவளி ஸ்பெசலில் என் கவிதை இரண்டு பக்கத்திற்கு வெளியானது. குமுதம் ஆசிரியருக்கு என் நன்றி.பாரதி கண்ணன், நிரஞ்சன் என மிகச்சிறந்த நண்பர்கள் இந்த ஆண்டு கிடைத்தார்கள்.கடைசியில் நானும் காதலில் விழுந்தேன்.  நல்ல அனுபவம். ஓராண்டு காதல் வாழ்க்கை சில பல சண்டை சச்சரவுகளோடு சிறப்பாகவே சென்றது.

இன்னும் பத்து வருடத்திற்கு தேவையான எல்லாவற்றையும் 2013 வழங்கியிருக்கிறது. எல்லாமே பாடங்கள். அனுபவங்கள்.கனவுகளை நோக்கி அசுரவேகத்தில் சென்று கொண்டிருக்கிறேன். நன்றி 2013. 

Wednesday, November 20, 2013

SEO என்றால் என்ன?

நேற்று ஃபேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவது எப்படி என ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்!! அதைப்படித்துவிட்டு நண்பர் ஒருவர் நிறைய கேள்விகளைக்கேட்டார்.. அது அப்படியே social media marketing என்ற தளம் நோக்கி நகர்ந்தது!! 

அது ரொம்ப சுவாரசியமாகவும், புதுமையானதாகவும் இருந்ததாகவும் சொல்லி “பேசாம இதைப்பத்தி தொடர்ச்சியா எழுதுனீங்கன்னா நிறைய பேர் தெரிஞ்சிக்குவாங்கள்ல.. நாமளும் உருப்படியா எதோ பண்ண் மாதிரி இருக்கும்” என்றார்! 

முன்பு ஒருமுறை என் வலைத்தளத்தில் (swaravaithee.blogspot.in ) வலைதளங்கள் உருவாக்கம், Search engine optimization (SEO) பற்றிய அடிப்படைகள், அப்படியே social media marketing என தொடர்ச்சியாக எழுதும் எண்ணம் இருந்தது!! இரண்டு மூன்று பதிவுகள் எழுதிவிட்டு பின் சோம்பேறித்தனத்தின் காரணமாக விட்டுவிட்டேன்!! 

SEO என்பது ஒரு இணையதளத்தை கூகிளின் முதல்பக்கத்தில் கொண்டு வருவதற்கு செய்யப்படும் சில உத்திகள்! இன்று எதுவாக இருந்தாலும் இணையத்தில் தான் தேடுகிறார்கள்!! உதாரணமாக நான் ஒரு இன்வர்டர் பிசினஸ் செய்வதாக வைத்துக்கொள்வோம்! அதிகபட்சம் என் பிசினஸ் பற்றி என் ஏரியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்! 

விளம்பரத்திற்காக பேப்பரில் வரி விளம்பரமோ, யெல்லோ பேஜஸிலோ என்னைப்பற்றி கொடுப்பேன்!! இது பொதுவான அட்வர்டைஸிங்க்.. காரணம் நான் கொடுக்கும் விளம்பரத்தை இன்வர்டர் தேவையானவர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் பார்க்கும் வகையில் தான் இது உதவும்!! 

ஆனால் கூகிளில் “inverters in chennai" என்று தேடுபவர்கள்.. தங்களுக்கு inverter தேவை என்பதாலேயே தேடுகிறார்கள்! அப்போது நம் இணையதளம் search resultல் முதல் பக்கத்தில் இருக்கும்போது நம் பக்கத்திற்கு அவர்கள் வர வாய்ப்பிருக்கிறது! 10 பேர் வருகிறார்களென்றால் அவர்களில் 8 பேர் நிச்சயமாக நமக்கு கால் செய்வார்கள்!! இது டைரக்ட் மார்கெட்டிங்க்! 

ஒரு தகவல்! உலகெங்கும் 7 லட்சம் வெப்சைட்டுகள் இருக்கின்றன! அவர்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்கள் தளத்திற்கு SEO செய்கிறார்கள்!! அப்படியென்றால் மார்கெட் எவ்வளவு பெரியதென யோசித்துக்கொள்ளுங்கள்!!

ஃபேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவது எப்படி  

ஃபேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவது எப்படி!

நண்பர் ஒருவருக்கு சொன்ன சில டிப்ஸை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!! எனக்கு தெரிந்து நிறைய லைக் வாங்கியவர்கள் இப்படி தான் வாங்கியிருக்க வேண்டும்!! நான் இப்போது பெரிய ஃபேஸ்புக் பிரபலமாக இருக்கும் ஒருவரை அனலைஸ் செய்ததை வைத்து சொல்கிறேன்!! 

(இதெல்லாம் ஒரு டாபிக்னு ஸ்டேட்டஸா போடறீங்க.. என்று நல்லவர் போல நடிக்கும் நண்பர்கள் இந்த பதிவை தவிர்க்கவும்.. உங்களால முடியாதுன்னு தெரியும்) 

அதிக லைக் வாங்குவது ரொம்ப சிம்பிள்.. அதற்கு பெரிய அறிவு ஜீவித்தனமோ, அதி புத்திசாலித்தனமோ தேவையேயில்லை.. ஆண் பெண்ணாகி ஃபேக் ஐடியாக வேண்டிய அவசியமும் இல்லை!! 

ஃபேஸ்புக்கின் கான்சப்ட் தெரிந்திருந்தால் போதும்.. இது ஒரு சோசியல் நெட்வோர்க்.. எனவே கொஞ்சம் சோசியலாக மூவ் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.. அவ்வளவு தான் சிம்பிள்!! 

அதென்ன சோசியலாக.. எல்லோருகிட்டயும் நம்பர் வாங்கி பேசணுமா? தேவையேயில்லை! எல்லோரோடும் கொஞ்சி குலாவ வேண்டிய அவசியமில்லை.. ஆனால் எல்லோர் பதிவிலும் ஒரு பார்வை இருக்க வேண்டும்!! 

300 லைக் வாங்குகிறவர்களை விட்டுவிடுங்கள் பாவம்.. அவர்களுக்கு யார் லைக் போடுகிறார்களென்பது அவர்களுக்கே தெரியாது!! ஆனால் 3 லைக் மட்டுமே வாங்குகிறவர்கள் முக்கியமானவர்கள்!! “பார்றா நம்மளையும் மதிச்சி ஒருத்தன் லைக் போடறான்” என அவர்களை உங்கள் பக்கம் திரும்ப வைக்க இது உதவும்!! பெரும்பாலும் நாம் போடும் லைக்கை விட கமெண்ட் போடுவது நிறைய உதவும்! நிறைய பேரால் பார்க்கப்படும்! 

சோசியல் நெட்வொர்க்கின் பலமே interaction எனப்படுகிற உரையாடல் தான்!! தொடர்ந்து ஒரு பிரபலத்தின் பக்கத்தில் நாம் கமெண்ட் போடுவதன் மூலம் அவர் பக்கத்திற்கு வருபவர் “இவர் கமெண்டெல்லாம் நல்லாயிருக்கே..” என நம் பக்கத்துக்கு வந்து பார்ப்பார்..பின்னர் நாம் எழுதுவதை தொடருவார்! அவ்வளவு தான்! 

எழுதும்போது நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றை பற்றி எழுதலாம்.. அரசியல் தெரியுமென்றால் அரசியல், கதையென்றால் கதை..!! கவிதை, ஜோக் என எதை வேண்டுமானாலும் பகிரலாம்! காமெடியாக எழுதுபவர்கள் நிறைய பேரை எளிதில் அடைய முடியும்!! 

பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட அணியில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வாசிக்கப்படுவார்கள்..உதாரணமாக தி.மு.க அணி, ஆதிமுக அணி, மதிமுக அணி என்றெல்லாம் தனித்தனியாக இருக்கிறார்கள்.. ஆனால் அடி விழும்போது நமக்கும் விழும்! 

நிறைய லைக் வாங்குவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும்.. நேரம் செலவிட வேண்டி வரும்.. அது முடியாதவர்கள் என்னை மாதிரி ஸ்டேட்டஸ் போட்டமா போனோமான்னு இருப்பாங்க அவ்ளோ தான்!!

SEO மற்றும் ஆன்லைன் மார்கெட்டிங்க் பற்றி தமிழில் தெரிந்துகொள்ள

Thursday, November 14, 2013

வேலையால் இழந்தது அதிகம்!!

நேற்று கம்யூனிச நண்பர் ஒருவரோடு போனில் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் இருவருக்கும் தெரியாமலே ஒரு முக்கியமான தலைப்புக்குள் நுழைந்துவிட்டிருந்தோம்.. இந்தியாவில் வேலை எப்படி மாறியிருக்கிறது என்பது பற்றிய நீண்ட விவாதம் அது!!

சொல்லப்போனால் இந்தியர்களுக்கு வாழ்க்கை வேறு வேலை வேறு இல்லை.. வேலைக்காக நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.. “ நான் பேப்பர் படிச்சே 3 வருசம் ஆச்சி” என என் நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது.. நண்பர்களை இழந்திருக்கிறோம்.. புதிய நண்பர்கள் கிடைத்திருப்பது போல தெரியும்.. ஆனால் அவர்கள் வேலை சார்ந்த நண்பர்கள்.. அலுவலகம் மாறும் போது நண்பர்களும் மாறுவர்.. 

கார்பரேட்டில் வேறு டீமுக்கு மாறும்போது வேறு நண்பர்களுக்கு மாறுவோம்.. வேலைக்காக சரியான சாப்பாட்டை இழந்திருக்கிறோம்.. குடும்பம்.. குழந்தைகளின் படிப்பு.. ஏன் மனைவியைகூட வெறும் சமைத்து போடும் மெசினாகவும், செக்ஸ் மெசினாகவும் பார்க்க வைத்தது கூட வேலை தான்!! 

இப்படியாக 58 வயது வரை வேலை பார்த்துவிட்டு, திடீரென ரிட்டெயரான ஒருவரை கவனித்திருக்கிறீர்களா? 20 நாள் ஹாஸ்பிட்டலில் பெட் ரெஸ்டில் இருந்துவிட்டு திடீரென ஒரு நாள் டிஸ்சார்ஜ் ஆகும் ஒருவர், ரோட்டில் நடக்கும் போது குழந்தை போல புதிதாக நடக்க முயற்சிப்பாரே... அது போல இருக்கும்!

சொல்லப்போனால் மனிதனிடம் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்ட வாழ்க்கை என்பது இருந்ததில்லை.. விலங்குகள் போல தினம் தினம் உணவு தேடி அலைந்தான்.. அதனால் வாழ்க்கை சுவாரசியமாக போய்க்கொண்டேயிருந்தது.. ஒரே இடத்தில் வாழ திட்டம் போட்டு, அவன் இருக்கும் இடத்திலேயே உணவு உற்பத்தியை துவங்கினான்..ஆரம்பத்தில் உணவு மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது.. இப்போது அதைத்தாண்டிய கவலைகளே நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.. 

இப்படியாக ஒரு மணி நேரம் பேசியும் முடியாமல் நீண்டுகொண்டே போன பேச்சு நிறைய கேள்விகளை கிளறிவிட்டிருக்கிறது!! முடிவிலா யோசனையில் முழுதாக நுழைந்திருக்கிறேன்!!

nhm writer வைரஸ் காட்டுகிறதா?

இரண்டு நாட்களுக்கு முன்பு nhm writer மக்கர் செய்தது.. என்ன முயன்றும் ஏதும் செய்யமுடியாத நிலை... காரணம் avg ஆண்டிவைரஸ் nhm writerல் இருக்கும் "nhmy.dll" ஃபைல் ஒரு ட்ரோஜன் வைரஸ் என தீர்மானித்திருந்தது.. இது avgயின் லேட்டஸ்ட் அப்டேட் காரணமாக இருக்கலாம்!! 

ஒரு கட்டத்தில் avgஐ uninstall செய்யலாமா? nhm writerஐ uninstall செய்யலாமா என்ற நிலை வந்தபோது.. உயிர் முக்கியமா.. விரல் முக்கியமா என்ற நிலை வந்தால் என்ன முடிவெடுப்போமோ அந்த முடிவை தான் எடுத்தேன்!! ஆம்.. nhm writerஐ தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு.. Anbalagan Veerappan அண்ணனின் ஸ்டேட்டஸ் பார்த்து google transilierationக்கு தாவினேன்! அது டவுன்லோட் செய்யவே தாவு தீர்ந்தது!! 

திரும்ப மொதல்லேர்ந்து தமிழ் டைப்பிங்க் கற்று கொள்ளும் மனநிலையை அது வழங்கியது.. முன்பு மாதிரி எழுதவோ கமெண்ட் போடவோ முடியவில்லை.. பழைய படி எழுத ரொம்ப நாள் ஆகும் என தெளிவாக தெரிந்தது.. nhm writer நிறுவனரான பத்ரியை அனுகலாமா என்று யோசித்தேன்.. அவர் ஒரு முறை தெரியாத்தனமாக “எந்த பிரச்சினைன்னாலும் என்னை அணுகுங்க” என்று சொல்லியிருந்தது தான் காரணம்!! 

ஆனாலும் அவர் டிவியில் எல்லாம் வந்து பயங்கர பாப்புலராகி விட்டதால், நமக்கெல்லாம் பதிலளிப்பாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது!! எதுக்கு வம்பு.. என கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டேன்.. 

நேற்று திடீரென nhm writer உருவாக்கியவர்களில் ஒருவரே சேட் பாக்ஸுக்கு வந்து, nhm writerன் அப்டேட்டட் வர்சனான nhm2.0 வை பரிந்துரைத்தார்!! ( நம்ம ஸ்டேட்டஸ் பாத்து தான் வந்துருக்காரு.. ஏழுகிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன் ஸ்டேட்டஸ் போட்டால் என்ற காமெடி தான் நினைவுக்கு வந்தது.. கண்டுகாதீங்க.. coincidenceஆக இருக்கலாம்) 

வெற்றிகரமாக nhm writer 2.0 மிக கச்சிதமாக வேலை செய்கிறது!! சேட் பாக்ஸுக்கு வந்து உதவிய நண்பருக்கு நன்றிகள் (அவரை டேக் செய்தால் அடி விழுமான்னு தெரியல) இனி நம் ஸ்டேட்டஸ் புரட்சி வழக்கம் போலவே தொடரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்!! 

http://software.nhm.in/products/writer லிங்கிற்கு சென்று nhm writerஐ தரவிறக்கம் செய்து வழக்கம் போலாவே ஸ்டேட்டஸ் புரட்சி வாழ்க்கைக்கு திரும்புமாறு நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!!

Saturday, November 9, 2013

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தரலாமா?

நேற்று அவசர அவசரமாக ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காட்சி பார்த்தேன்.. ஒரு சின்ன குழந்தை (7 வயதுக்குள் இருக்கும்) கடையில் எதையோ காட்டி “அது வேணும்” என்பதாக அடம் பிடித்துக்கொண்டிருந்தது!! 

அந்தப்பா அந்த குழந்தைக்கு எதேதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தை எதையுமே கேட்கத்தயாராகயில்லை.. அந்தப்பாவுக்கு அந்த பொருளை வாங்கித்தருவதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. 


ந்த பொருள் அவரது வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவே இருந்தது.. ஆனால் அவர் அந்த குழந்தைக்கு சொன்ன சமாதானம் “அது நமக்கு வேணாம்டா செல்லம்.. நீ ரெண்டு நாள் அத வெச்சி வெளாடிட்டு அப்பறம் தூக்கி போட்டுடுவ.. போன தடவை இப்டி தான் ஒண்ணு வாங்கி தந்தேன்.. அத இப்போ என்ன பண்ண?”


“அது ஒடஞ்சி போச்சிப்பா” இப்படியாக நீண்ட உரையாடல் போய்க்கொண்டிருந்தது.. நான் பேருந்து வந்துவிடவே ஏறிக்கொண்டுவிட்டேன்.. பேருந்தில் எனக்கு இந்த சம்பவம் பற்றி நீண்ட சிந்தனை போய்க்கொண்டே இருந்தது!!

அந்த குழந்தை ஆசையாக கேட்கிறது.. (டெக்னிகலாக want என்பார்கள்) அவர் அது அவசியமா தேவையா என தர்க்கம் செய்கிறார் (டெக்னிகலாக need என்பார்கள்).. குழந்தைகளுக்கு need பற்றி யோசிக்கிற அளவுக்கு அனுபவ அறிவு போதாது.. அவர்களுக்கு அப்போதைக்கு எது தோன்றுகிறதோ, எதன்மீது உடனடி ஆசையோ அது வேண்டும்.

அந்த குழந்தையை தப்பு சொல்ல முடியாது.காரணம் நமக்கு ஒவ்வொரு வயதிலும் ஒரு ஆசை வரும்.. குழந்தையாக இருக்கும்போது சாக்லேட் நிறைய சாப்பிடலாம் போல தோன்றும். ஆனால் அதுவே பெரியவனாக ஆனபிறகு நமக்கு யாராவது சாக்லேட் கொடுத்தாலும், அதை அலட்சியமாக வாங்கி பேக்கெட்டில் போட்டுவிட்டு பிறகு யாருக்காவது தூக்கிக்கொடுத்துவிடுவோம்..

ஆனால் குழந்தைக்கு அந்த வயதில் பூர்த்தியாகாத அந்த ஆசை பின் எப்போது கிடைத்தாலும் அதில் பெரிய ஆர்வம் இருக்கப்போவதில்லை!! ஆனால் அந்த அப்பா அதே பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்!! அதற்காக குழந்தை செல்போன் கேட்கிறது என்றால் வாங்கித்தர முடியாது!! அது need வரிசையில் வந்து விடும்!!

குழந்தை வளர்ப்பு புத்தகம் இந்த பிரச்சினையை இப்படி ஹேண்டில் செய்யச்சொல்கிறது!! தினம்தோறும் அந்த குழந்தைகென குறிப்பிட்ட தொகை ஒதுக்கி அதன் கையில் கொடுத்து விடுங்கள்!! 5ரூ என வைத்துக்கொள்வோம்!! அது அந்த காசை எதற்கு வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளட்டும்.. end of the day அதை என்ன செய்தாய் என்று மட்டும் அந்த குழந்தையிடம் கேட்டுவிட்டு விட்டுவிடுங்கள்..

ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த 5 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட அனுமதியில்லை என்பதில் தீர்மானமாக இருங்கள்.. உதாரணமாக குழந்தை ஆசைப்படும் பொருள் விலை ரூ50 என்றால், தனக்கு கிடைக்கும் 5ரூபாயை பத்து நாள் சேர்த்து வைத்து அந்த பொருளை வாங்க பழக்குங்கள்..

இதன் மூலம் அந்த குழந்தைக்கு சேமிக்கும் பழக்கம் வரும்.. பணம் கையாளும் திறன் வரும்.. எந்த பொருளையும் சேமிப்பதன் மூலம் வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கை வரும். ஒரு வேளை வாங்கிய பொருள் வேஸ்ட் என்றால் அடுத்த பொருள் வாங்க இதே போல காத்திருந்து வாங்க வேண்டி வரும் என்பது புரியும்!! அதனால் அனாவசியமான பொருள்களை காலப்போக்கில் குழந்தைகளே தவிர்க்க ஆரம்பிப்பார்கள்!!

Saturday, April 20, 2013

ப்ளாக்கர் கணக்கு துவங்குவது எப்படி?


கடந்த பதிவில் இணையதளம் பற்றிய ஒரு அறிமுகத்தை எழுதியிருந்தேன். அதை படிக்காதவர்கள்(இங்கே க்ளிக்கவும்).


ப்ளாக்கர் கணக்கு துவங்குவது எப்படி?

இந்த தலைப்பை பார்த்ததுமே சில பேர் தெறித்து ஓடுவார்கள்.காரணம் அந்த அளவு பழமையான டாபிக் இது. எல்லா பதிவர்களுமே எழுதிய பத்திரிக்கைகளில் எல்லாம் கூட வெளியான தலைப்பு தான்.ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கு துவங்கி ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருப்பவர்கள் இந்த பதிவை தவிர்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு தெரியாத ஒரு பாயிண்ட் கூட இந்த பதிவில் இருக்கலாம். விருப்பமிருந்தால் தொடரவும். தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம்.

1999ல் பைரா லேப்ஸ்(Pyra Labs) என்ற சிறு நிறுவனம் துவங்கியது தான் ப்ளாக்கர் சேவை. இலவசமாக யார்வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு வலை மனை(Blog) உருவாக்கிக்கொள்ளும் சேவையை அது அளித்தது. பின்னர் 2003ல் கூகிள் பல்க்காக ஒரு விலைக்கு வாங்கி இப்போது வரை வெச்சு மெயிண்டெயின் செய்கிறது.

வலைமனைக்கும்(Blogger) இணையதளத்திற்கும்(Website) என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றா?

இரண்டும் ஒன்று போலவே தோன்றினாலும் ஒன்றல்ல. கான்சப்ட் அடிப்படையில் கூட வேறானதே. இணையதளம் என்பது ஒரு நிறுவனம், பிஸினஸ் அல்லது தனிநபர் சார்ந்தது. அது .com என்ற பெயரில் ஒரு டொமைனாக (Domain) பதியப்பெற்று இயங்வது.

ஆனால் ப்ளாகில் முழுக்க முழுக்க சுயவிவரங்கள் (Personal) பற்றியானது. நான் யார், என் கருத்து என்ன? என்னுடைய அனுபவங்கள் என்ன? அல்லது ஒரு நிறுவனம் யார்? அவர்கள் வழங்கும் சேவைகள் எத்தகையது, புதிதாக எதாவது சேவை துவக்கியிருக்கிறார்களா என்பதை எல்லாம் நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு ப்ளாக்கை உருவாக்கி அதில் இந்த தகவல்களை போட்டு வைத்திருப்பார்கள்.

ஆனால் இலவசமாக கிடைக்கிற ஒரே காரணத்தால் நம்மாட்கள், வலைமனை  ஒன்றைதுவங்கி பின்னர் கெத்துக்காகவோ தேவைக்காகவோ அதை வெப்சைட்டாக பதிந்தார்கள் (customized domain).

பெயர் தேர்வு

சரி எனக்கு ப்ளாக்கர் கணக்கு இல்லை. எப்படி துவங்குவது என்பவர்கள் முதலில் எதற்காக இந்த ப்ளாக் என்பதை யோசித்துக்கொள்ளவும், காரணம் அதற்கு தகுந்தார் போல பெயரை தேர்வு செய்யவேண்டும். உதாரணமாக ரமேஷ் தன்னுடைய சொந்த உபயோகத்துக்காக ஒரு வலை மனை துவங்குகிறார் என்றால் salemramesh.blogspot.com என்பது போல அவர் பெயர் சார்ந்து ப்ளாக் துவங்கினால் எதிர்காலத்தில் கூகிளின் மூலம் சுலபமாக சென்று சேர முடியும்.(ramesh.blogspot.com என்ற பெயரில் ஏற்கனவே ப்ளாக் இருக்கலாம் என்பதற்காகவும் ஒரு உதாரணத்திற்காகவும் தான் ரமேஷுக்கு முன்னால் சேலத்தை ஒரு அடையாளமாக போட்டேன்.மற்றபடி பெயர் வைப்பதில் எந்த விதிமுறையும் இல்லை)

சேவை தேர்வு


இணையத்தில் நிறைய நிறுவனங்கள் இலவசமாக வலைமனை (Blog) துவங்கும் வாய்ப்பை வழங்குகின்றன.ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் பிரபலமானது.வெளிநாடுகளில் ஜூம்லா வளர்ந்துவருகிறது.


 நான் ப்ளாக்கரை பரிந்துரைக்கிறேன்.மிகவும் எளிமையானது. கொஞ்சம் பெரிய அளவு ப்ளாக்கை நிறுவ நினைப்பவர்கள் வேர்ட்பிரஸை தேர்ந்தெடுக்கவும். இன்னும் பெரிய என்பவர்கள் ஜூம்லாவை முயற்சிக்கலாம். Olx.in போன்ற பெரிய தளத்தைகூட ஜூம்லாவை வைத்து ஒருவரே நிர்வகிக்க முடியும். அந்த அளவு சக்திவாய்ந்த, கோடிங்க் (Coding) அறிவு எதுவுமேயில்லாத வர்கள் கூட பயன்படுத்தும் அளவுக்கு எளிமையானது ஜூம்லா.

இந்த பதிவில் ப்ளாக்கர் கணக்கு எப்படி துவங்குவது என்று மட்டும் பார்ப்போம்.அடுத்தடுத்த பதிவுகளில் வேர்ட்பிரஸ், ஜூம்லா பற்றி பார்க்கலாம்.

ப்ளாக்கர் கணக்கு துவங்க


முதலில்Blogger.com தளத்திற்கு செல்லவும்.



ஏற்கனவே உங்களுக்கு கூகிளில் கணக்கு இருந்தால் மேலே இருப்பது போன்ற படம் ஒன்று தோன்றும்,(Continue to Blogger) என்ற பொத்தானை அழுத்தினால் வேலை முடிந்தது.


மேலே படத்தில் இருப்பது போன்ற பக்கம் தோன்றுவதை பார்த்திருப்பீர்கள்.அதன் இடதுபுறம் ”New Blog" என்ற பட்டனை அழுத்தவும்.

அந்த பட்டனை அழுத்தி உடனேயே மேலேயிருப்பது போன்ற பாப் அப் (Pop Up) ஒன்று ஸ்கிரீனில் தோன்றி Title,Address,Template என்பதாக இருக்கும்.

Title - உங்களுக்கு பிடித்த எதாவது தலைப்பு. குமாரின் பக்கங்கள், ரமேஷின் பக்கங்கள். அல்லது நிறுவனம் சார்ந்த ப்ளாக் என்றால் நிறுவனத்தின் பெயர்.

Address - தேர்ந்தெடுக்கும் போது பக்கம் சம்பந்தமாக தேர்ந்தெடுங்கள். அதுவே சிலவற்றை பரிந்துரைத்தாலும் தளத்திற்கு பொருந்தாத மொக்கையானதை தேந்தெடுக்க வேண்டாம்.

Template - உங்களுக்கு பிடித்தமான டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டாம். குறிப்பாக ராமராஜன் போன்ற கலர்களை தவிர்க்கவும். நல்ல கலர் தான் நம்மை Professionalஆக அடையாளம் காட்டும்.

(மற்றது அடுத்த பதிவில். ப்ளாக்கர் இன்னும் முடியவில்லை)

Wednesday, April 17, 2013

இணையதளம் உருவாக்கம் முதல்!!


”இணையதளம் உருவாக்குவது எப்படி?” என்பதாக கூகிளில் தேடி பார்த்தேன். உருப்படியாக தமிழில் எந்த தகவலையும் காணோம். சில தளங்களில் எழுதியிருந்தார்கள். அவர்களும் எப்படி உருவாக்குவது என்பதோடு நிறுத்திவிட்டார்கள்! உருவாக்கறதோட நம்ம கடமை முடிஞ்சிபோச்சு என்பதாக நினைத்திருக்கலாம்!


இணையத்தில் உலாவும் பெரும்பாலானவர்கள் ஒரு தளத்தை துவங்கி அதில் Home, about us,contact போன்ற சில பகுதிகளை (pages) சேர்த்து, விசிட்டிங் கார்டில் போட்டுக்கொண்டால் வேலை முடிந்துவிட்டது என்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இணையதளம் துவங்குவதென்பது ஒரு துவக்கம், அதன் முடிவு எல்லா வாடிக்கையாளர்களையும் சென்று சேர்வது.

இணையதளம் என்பது பல முக்கிய அங்கங்களைக்கொண்டது. இணையதள உருவாக்கம் (website creation), தளவிரிவாக்கம் (web development), தேடுஇயந்திரங்களில் தளத்தை புகுத்துதல் (Search engine optimization).

முதலில் எதற்காக இணையதளத்தை துவங்குகிறோம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். " நமக்குன்னு ஒரு வெப்சைட் இருந்தா தான் நாலு பயலுக மதிப்பாய்ங்க” என்பதற்காக துவங்குகிறீர்களென்றால், அதற்கு ப்ளாக் துவங்கலாம். அந்த இலவசமாகவே ப்ளாக்கர் வழங்குகிறது.(ப்ளாக்கரில் கணக்கு துவங்க click here .

(Note : ப்ளாக்கரில் படிப்படியாக தளத்தை உருவாக்குவது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்).

இல்லை பிசினஸுக்காக தான் தளத்தை துவங்கப்போகிறேன் என்றால் அதில் இரண்டு வகை இருக்கிறது. என்னுடைய பிசினஸ் சின்னது, சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் பெருசா இல்ல. ஏரியா ரொம்ப வீக்கு ஆடிக்கு ஒருக்க அம்மாவாசைக்கு ஒருக்க தான் எதாவது பண்ணுவோம், அது மட்டுமில்லாம எங்க தளத்தை எவன் பாக்க போறான். என்னோட பிசினஸுக்கும் இணையத்துக்கும் சம்பந்தமேயில்ல. என்கிறவர்களுக்கு  நிலையான தளமே (static page) போதுமானது.


இல்லை என்னோட இணையதளம் ரொம்ப பெருசு, உதாரணமாக கேபிஎன் (http://www.kpntravels.in/ou/frmuserhome.aspx) மாதிரியான ஒரு பேருந்து சேவை வழங்கும் தளத்தை எடுத்துக்கொள்வோம்.இந்தியா முழுவதும் சேவை வழங்கும் ஒரு நிறுவனம். நிறைய பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள். ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு முன்பதிவு செய்ய இருக்கை தேடுவார்கள். அல்லது இந்த நேரத்திற்கு பேருந்து இருக்கிறதா என பார்வையிட வருவார்கள்.வாடிக்கையாளர்களுக்கு எதாவது ஆஃபர் கொடுக்க வேண்டி வரலாம். இந்த தகவல்களையெல்லாம் அவ்வப்போது இணையத்தில் ஏற்ற வேண்டும். இதுபோன்ற தளங்களை dynamic pages என்கிறார்கள்.

ப்ளாக்கர் கணக்கு துவங்குவது எப்படி என்பது அடுத்த பதிவில்! click here

Thursday, February 14, 2013

நூல்களுக்கிடையே ஒரு காதல்



எனக்கு அதிசயமாக இருக்கிறது. நான் இவ்வளவு மாறி இருக்கிறேன். நான் அதிகம் படிப்பவனில்லை. தலையணை அளவுள்ள புத்தங்களின் வாசனையை கூட முகர்ந்ததில்லை. நூலகத்திற்கும் எனக்கும் தொடர்பே இருந்ததில்லை. கல்லூரியில் கட்டாயமாக லைப்ரரி வகுப்புவேளை இருந்த சமயத்தில் கூட விருப்பமில்லாமல் கட்டடித்து வெளியே சுற்றுபவன், இன்று அதிசயமாக நூலகம் வந்திருக்கிறேன். அண்ணா நூலகம். சென்னையின் மிகப்பெரிய. மன்னிக்கவும், ஆசியாவின் இரண்டாவது பெரிய. இருக்கட்டும். நான் நூலகத்திற்கு வந்ததைப்பற்றி சிலாகிக்க என்ன இருக்கிறதென யோசிக்கலாம். இன்று காதலர்தினம்.


இதுவரை என்னுடைய எந்த காதலர்தினத்தன்றும் எனக்கு காதல் வாய்த்ததில்லை. காதலை சொன்னதில்லை. சின்னதாக ஒரு முத்தமில்லை. யார் கையையும் பிடித்து தோளில் சாய்ந்து ரோட்டில் நடந்ததில்லை. கிஃப்ட் கொடுத்ததில்லை. கடற்கரையில் குதித்துவிளையாடியதில்லை. எனக்கு வாய்த்த எல்லாக்காதலும், காதலர்தினம் வருவதற்கு முன்பே சொல்லப்படாமலே சொர்க்கம் சேர்ந்திருக்கின்றன. அந்த அலுப்புகூட இன்று நூலகம் வருவதற்கு காரணமாக இருக்கலாம்.

இது எதோ திட்டமிட்டு நடந்ததாக நினைக்க வேண்டாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  நூலகத்தில் நுழைந்து சில மணி நேரம் கழித்து தான் இன்று காதலர்தினமென்பதே தெரியும். எப்படி மறந்தேன் என்பதே தெரியவில்லை. சினிமா தொடர்பான ஒரு புத்தகத்தை தேடிதான் அண்ணா நூலகம் வந்திருந்தேன். ஆறாவது தளம் செல்ல வேண்டுமாம். படிக்கட்டில் தான் ஏறி சென்றேன். ஆறாவது தளத்தை அடைந்ததுமே  நுழைவுவாயில் அருகே ஒரு அம்மணி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. எனக்கு அவர் பற்றி பெரிய அக்கறை ஏதுமில்லை.

கண்டதும் காதல் வரும் என்றெல்லாம் சொல்லப்படும் சேதிகள் கட்டுக்கதை.பீலா. புருடா இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் அதுவே. நேரே உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு புத்தகமாக தேடி மேய்ந்தேன். எடிட்டிங், கேமரா ஆங்கிள், சினிமா வரலாறு என நிறைய புத்தகங்கள் இருந்தன. எல்லாம் ஆங்கில புத்தகங்கள். best 100 films என்ற புத்தகம் எடுத்தேன். அதில் பவர்ஸ்டார் படம் இருக்கலாம் என்ற என்னுடைய கணிப்பே காரணமாக இருக்கலாம். புத்தகத்தின் அட்டையால் கவரப்பட்டு அதை பார்த்துக்கொண்டே வந்து ஒரு  நல்ல சீட்டாக தேர்வு செய்து உட்கார்ந்தேன்.

5 பக்கங்களைத் தாண்டியிருப்பேன். சரியாக அந்த  படம் என் கண்ணில்பட்டது. the kiss என்ற திரைப்படத்தில் இருந்த முத்தக்காட்சி போட்டோ ஒன்றை பதிப்பித்திருந்தார்கள்.எனக்கு வெக்க வெக்கமாக வந்து தலையை உயர்த்தினேன். எனக்கு எதிரே அழகே உருவான ஒரு தேவதை.ஆம் தேவதையே தான். வட்டவடிவ முகம். பூசினாற்போன்ற முகம்.மஞ்சள்  கலந்த வெளிர் நிறம்.5.8 அடி உயரம் இருக்கலாம். கோவா பட நாயகி பியா போல இருந்தார். ஆமாம் exactly. இதற்குமேல் எந்த வர்ணனையும் தேவையில்லை.

அவளுக்கு முன் நிறைய புத்தகங்கள் பரப்பிவைக்கப்பட்டிருந்தன. எல்லாம் தலையணை உயரப்புத்தங்கள். குண்டு குண்டாக இருந்தது.தலைப்பை பார்த்தேன். எல்லாம் cryptology தொடர்பான புத்தகங்கள். எனக்கு க்ரிப்டாலஜி ரொம்ப விருப்பம். எப்போதிருந்தென்றால், உன்னைப்போலொருவனில் என்னென்னவோ காட்டுவார்களே. கமல் கூட callஐ ரூட்டிங் செய்து சூப்பர் மேன் வேகத்தில் செல்வதாக சொன்ன போது ஏற்பட்டது தான் அது. அதன்பின் கல்லூரியில் அது தொடர்பான பாடம் வந்தபோது படித்தது. ஆனால் பாடத்தில் வந்தது மொக்கை. மனப்பாடத்திற்கானது. அதன்பிறகு எத்திகல் ஹேக்கிங் பற்றி நிறைய தேடினேன். அது படிக்க ஒன்றரை லட்சமாகுமாம்.

ஆனால் எனக்கு முன்னே ஒரு ஹேக்கிங் எக்ஸ்பர்ட் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுகொடுத்தால் எனக்கு வேண்டிய தகவல் கிடைக்கலாம். எதிரே புத்தகங்களுக்கு மேலாக ஆப்பிள் லேப்டாப் ஒன்றும் இருந்தது. அவள் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். கிசுகிசுப்பாய்.. காதலனோ.. என்ன பேசுகிறார்களென கவனிக்க அவளை உற்று பார்த்தேன்.ஐயோ அவள் என்னை பார்த்துவிட்டாள். நான் புத்தகத்தை பார்ப்பது போல நடித்தேன்.  திரும்பவும் அவள் உதடு என்ன பேசுகிறதென உற்று பார்த்தேன். அழகாக இருந்தது. அவள் பேச்சு.  நீண்ட நேரமாக அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரம் ஆகி இருக்கும்.  நான் விடாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேச்சை எப்படித்துவங்கலாம் என தயார் செய்துகொண்டிருந்தேன்.

எப்படியோ அவள் மொபைலை கீழே வைத்துவிட்டாள். அது ஐபோன். சமீபத்திய மாடல். அவள் மீதிருந்து புதுவகையான செண்ட் வாசனை வந்து கொண்டிருந்தது. அது என்னை எதோ ஒரு லோகத்துக்கு தறதறவென இழுத்து சென்று கொண்டிருந்தது.

அவள் என்னை பார்த்தாள். அதில் கொஞ்சம் முறைப்பு இருந்தது. “என்ன சைட்டா” என்ற கேள்வி பொதிந்திருந்தது. “ நீங்க க்ரிப்டாலஜி படிக்கறீங்களா” முதல் பாலே மூக்கை நோக்கி வீசினேன். கண நேரம் தாமதித்தாலும் அவளுக்கு போன் வரக்கூடும் என்ற இக்கட்டான நிலை. ”ஆமாம்” என ஆச்சரியமாக சிரிக்க முயற்சித்து கையை அகலவிரித்து, எப்படி என என் கண்ணை உற்றுப்பார்த்தாள்.அவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “இந்த புக்ஸ் பார்த்தேன். எனக்கு ஹேக்கிங் மேல ரொம்ப ஆர்வம்” என நேரடியாக பேச்சுக்குள் நுழைந்தேன். அவள் ஐஐடியில் படிக்கிறாளாம்.கிரிப்டாலஜி 3ஆம் ஆண்டாம். இங்கே அமைதியாக இருப்பதால் படிக்க வருகிறாளாம்.

”நீங்க என்ன பண்றீங்க” அவள் கேட்டாள். என்ன சொல்வேன். உண்மையை சொல்வதா? பொய் சொல்வதா? தீர்மானித்துக்கொண்டேன். உண்மையை சொல்லிவிடுவதென முடிவெடுத்துவிட்டேன். ”நான் உங்க அளவுக்குலாம் படிக்கல. நீங்க பெரிய ஆளு. ஐஐடியில படிக்கறீங்க. நான் வெறும் BCA" என்றேன்.

"look எந்த படிப்பும் சின்னது இல்ல. படிப்புல சின்னது பெரிசுன்னுலாம் எதுவும் இல்ல. சரியா” என டாபிக்குக்கு உள்ளே சென்றார்.

யெஸ். இதற்காகத்தான் காத்திருந்தேன். சேகர் சிக்கிட்டான்.

“ நீங்க லவ்வர்ஸ்டே செலப்ரேட் பண்ணலையா?”

“எனக்கு அதுலலாம் இண்ட்ரஸ்ட் இல்ல. நீங்க”

“எனக்கும்”

”என்னங்க. இவ்ளோ அழகா இருக்கீங்க. பொய் பேசறீங்க”

“என்ன பொய் பேசுனேன்”

“லவ் இல்லன்னு சொன்னீங்கல்ல”

“ரியலாவே இல்ல. ஆமா எனக்கு லவ் இருந்தா உங்களுக்கு என்ன? இல்லாட்டி உங்களுக்கு என்ன” கோவம் காட்டினாள்.

“ஹே டோண்ட் பீ சீரியஸ். சும்மா டெம்போ ஏத்த தான் அப்டி கேட்டேன். பட். நீங்க கோவப்பட்டா கூட அழகா இருக்கு”

அவள் வெட்கப்பட்டாள்.

“அழகா? உங்க கண்ல எதோ ப்ராப்லம்”

“ஆமாம். அதான் நீங்க கூட அழகா தெரியறீங்க”

அவள் கடுப்பில் லைபரரி புத்தகத்தைத்துக்கி என்மேல் அடித்தாள்.

“ஏங்க இது லைப்ரரி புக்குங்க” என்றேன்.

 “அப்டி தான் போடுவேன். என்ன பண்ணுவீங்க” என்றாள்

அவள் பெயர் அனுரக்‌ஷாவாம். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் போய் செட்டிலான குடும்பமாம்.சென்னை வெயில் தான் பிடிக்கவில்லையாம். இங்கே இருக்கும் பசங்க மாதிரி வேறு எந்த ஊர் பசங்களும் முதல் சந்திப்பிலேயே பச்சக் என ஒட்டிக்கொள்வதில்லையாம். இது எனக்காகவே அவள் சொல்லியிருக்க வேண்டும்.அவங்க அப்பா ஷாப்பிங் மால் வைத்திருக்கிறாராம். சமீபத்தில் பார்த்த திரைப்படம் கடலாம்.அதன் மொக்கை தன்மை குறித்து பேசினோம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பற்றி. பேச்சு பிறகு எங்கெங்கோ சென்று ஸ்லம்டாக் மில்லியனர். அதன் இயக்குனர் வெளிநாட்டுக்காரர் என்பதாலேயே ஆஸ்கர் கொடுக்கப்பட்டதாக நான் சொன்ன கணிப்புகள். அவள் ரோஜா படத்திலிருந்து அவர் போட்ட இசையை ஒப்பிட்டு மறுத்தது என எல்லாமே சுவாரசியம்.

லைப்ரரியில் பேசவேகூடாது என்ற கட்டுப்பாடெல்லாம் அவளிடம் பேசியபோது காணாமல் போனது. நடுநடுவே என் குரல் உயர்ந்த போது  நூலக கண்காணிப்பாளர் ஒருவர் வந்து “சார். பேசறதுன்னா வெளில போய் பேசுங்க” என்றார்.அவளைப்பிரிந்து வெளியே போக பயந்து “சாரி சார்” என்பதாக சொல்லிவிட்டு அமைதியானேன். அவள் புன்னகைத்தாள்.முதல் சந்திப்பே இவ்வளவு சுவாரசியமாக இருக்குமென யோசிக்கவேயில்லை. திடீரென அவளுக்கு கால் வந்தது. “சாரி. ஹேவ் டு கோ” என்றாள்  நான் கூச்சமே படாமல் “யோர் நம்பர்” என்றேன். சிரித்தாள். கொடுத்தாள். காதலர் தினம் காதலை சொல்வதற்காக மட்டுமல்ல. உருவாக்கிக்கொள்ளவும் தான்!!

இப்படி எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன்.அந்த க்ரிப்டாலஜி புத்தகம் அவள் எடுத்ததில்லையாம். நான் அசடு வழிந்துகொண்டே. “சாரி.இல்ல புக் மேல இருந்துது. அதான் கேட்டேன்” என்றபோது அவளுக்கு கால் வந்தது. அவள் ஃபோனை காதில் வைத்து மும்முரமானாள். நான் அந்த இடத்தைவிட்டு விலகினேன். இதுக்குன்னே வந்துடறானுங்க என அவள் நினைத்திருக்கக்கூடும்.

கண்ணா காதல் செய்ய ஆசையா!!


கல்லூரியில் படிக்கும் போது வந்த காதலர் தினங்கள் மறக்கமுடியாதது!!

ஒருவாரத்திற்கு முன்பே “எந்த கலருக்கு என்ன அர்த்தம்” என்பதாக மெசேஜ் அனுப்பத்துவங்குவார்கள்! “போடா.. அந்த கலருக்கு அது அர்த்தம் இல்ல. நான் நெட்ல பார்த்தேன்” என ரோட்டில் கட்டி உருளுவார்கள்.

"போடா நான் அன்னிக்கி கருப்பு கலர் சட்டை போட போறேன்"
“ எனக்கு காதலே பிடிக்காது” என்ற ஆசாமிகள் இப்போதைய ராமதாஸை நினைவுபடுத்துகிறார்கள்.

“டேய் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு காதலே பிடிக்காதுன்னு சொல்ற பசங்களதான் ரொம்ப பிடிக்கும்” என கருப்பு சட்டை காரர்கள் காதோரம் கிசுகிசுப்பார்கள்!!

”சட்டையே போடாம போயிட்டா”என குசும்பாய் யோசித்தவர்களும் உண்டு. “அப்பறம் என்ன ப்ளான்?” என ஆளாளுக்கு விசாரித்துக்கொள்வார்கள். காதல் வாய்க்கப்பெற்றவர்களைத்தவிர எல்லோரிடமும் இந்த கேள்வி உலாவரும்.

சிலருக்கு காதலே வாய்த்திருக்காது ஆனாலும் “என் ஆளு செம்ம அழகா இருப்பா மச்சான். விடிய விடிய போன்ல உருகறா” என அள்ளிவிடுவார்கள். “நம்ம கூட தானே இருந்தான்? இவனுக்கு மட்டும் எப்படி?” என சிலர் ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள்.

“அந்த மூஞ்சை காதலிக்கறதுக்கு தூக்குல தொங்கலாம்” என சில விசமிகள் இருக்கிற காதலுக்கும் வெடி வைப்பார்கள். "மச்சான் இந்த காலத்து பொண்ணுங்கள நம்பவே கூடாதுடா. நம்மட்ட நல்லா கரந்துட்டு. அத்த பையன கல்யாணம் பண்ணிக்குவாளுக” என சிலர் கோர்த்துவிடுவார்கள்.

“வீட்டுக்கு போய் போன் பண்ணு” என தூரத்து காதலிக்கு காற்றிலேயே படம் வரைந்து சிலர் கமுக்கமாக வேலை பார்ப்பார்கள்..

காதலர்தினம் நெருங்க நெருங்க ஒவ்வொருவர் நரம்பும் பின்னிப்புடைத்துக்கொள்ளும்.

 “மச்சான் அவ பாத்துகிட்டே இருக்கால்ல. அன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துடணும்”.

 “டேய் காதல்ங்கறது” என சுவாரஸ்யமாக பாத்ரூம் சந்துகளில் சிலர் பாடமெடுப்பார்கள். கவிதைகளுக்காக கல்லூரி கவிஞர்களிடம் முட்டி மோதுவார்கள். “டேய் இந்த கவிதைக்கு மட்டும் அவ செட்டாகட்டும். வொக்காலி உனக்கு ட்ரீட்டு தாண்டா” என்பார்கள்.

“மொதல்ல அம்மா அப்பாவ காதலிங்கடா” என சசிகுமார் பாணி வசனங்களும் வவுத்தொச்சல் வார்த்தைகளும் சத்தமாக உலாவரும்.

” நாளைக்கி லீவ் போடறவங்களுக்கு 1000 ரூபாய் ஃபைன்” என பிரின்சிபால் ப்ரஸ்மீட் நடத்துவார். “அந்தாளை பத்தி தெரியும்டா. வாய் மட்டும் தான்” என  நம்மாட்கள் சட்டையை மடித்து ரவுடியாவார்கள் (ரவுடிப்பசங்கள தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்)

”டேய் என்கிட்ட பச்சை கலர் சட்டை இல்லடா. மச்சி உன்கிட்ட இருக்கா. டேய் ஒரு நாள் மட்டும்டா” என சிலர் கெஞ்சி கொஞ்சுவார்கள்.

கடைசி கடைசியாக அந்த நாளும் வந்தது. ஒவ்வொருவரும் “ நம்மாளு வந்துடுச்சா” என அவள் பெஞ்சை நோக்க, அவளும் அர்த்தத்தோடு சிரித்து அட்டண்டன்ஸ் போடுவாள். “மச்சி உன் ஆள் இல்லாத அப்பவே தெரியும்றா. வேற எவனோடயாவது படத்துக்கு போயிருக்கும்” என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவார்கள்.

”டேய் கோபால கிருஷ்ணனும், ப்ரியாவும் ஆளக்காணம்றா. நாங்கதான் சொன்னமுல்ல”  என திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலமாகும்.

“எல்லாரும் வந்துட்டாங்களா?” என பிரின்சிபால் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உலாவருவார்.

“டேய் பெருசா பேசுன. என்ன காலேஜூக்கு வந்துட்ட”

“எனக்கு ஆளு இருந்தா நான் ஏன் வரப்போறேன். போங்க தம்பி.போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க”

”டேய் சொன்னியாறா”

“இல்லடா.. ஆனா அவ என்னைய பாத்து சிரிச்சாறா. அதுக்கு என்ன அர்த்தம்”

“டேய் சிரிப்பு கூட காதலின் அறிகுறி தாண்டா”

சிலர் உடம்பு சரியில்லை என்றாலுமே கூட விழுந்து பிறண்டு கல்லூரிக்கு வந்திருப்பார்கள். அதற்கு காதல் காரணமல்ல.. எல்லாம் 1000 ரூபாய் சேதி.

பொண்ணுங்களும் பயங்கர விவரமாக தங்களின் கண்ணனைத்தேடி கலர்கலராக வலம்வருவார்கள். ”உனக்கு எத்தன டீ” என ஆளாளுக்கு குசலம் விசாரிப்பார்கள்.

“நான் எங்க அம்மா அப்பாக்கு துரோகம் பண்ண மாட்டேன்” என பசங்களிடம் நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்.சிலரோ உஷாராக “ நான் எங்க அத்தைபையன தான் கட்டிப்பேன்” என எல்லா பசங்களையும் அலசியபிறகு கடைசி கடைசியாக சபதமேற்பார்கள்.

காதலை சொல்லப்போன ஆசாமியை ராத்திரி மடக்கி கேட்டால்..

”சொல்லலடா” என்பார்கள்

“டேய் ஏண்டா சொல்லல”

“பயமாயிருக்குறா”

காதலர்தினம் என்பது பழையகாதல்களை அசைபோட்டு பார்ப்பதற்கும், நமக்கும் யாராவது சிக்குவாங்களா என பரீட்சித்து பார்ப்பதற்கும், கடைகாரர்களுக்கு ஆஃபர் கொடுத்து பொருட்களை விற்பதற்கும், கடற்கரையில் காதலர்களுக்கு தொல்லைகொடுத்து சுண்டல் விற்கும் பையன் கல்லாகட்டுவதற்குமானது. நிறைய காதல் வெளிப்படுத்தத்தெரியாமலே இறந்திருக்கின்றன என்பது தான் உண்மை.

Friday, February 1, 2013

கடல் திரைவிமர்சனம் (ஏமாத்திட்டீங்களே மணி)


ராவணன் ஃபிளாப்புக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்போடு மணிரத்னம் படம் பார்க்கப்போனேன். போதாக்குறைக்கு கார்த்திக் மகன் கௌதம் ஹீரோ, ராதா மகள் துளசி ஹீரோயின், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி, அர்ஜூன் நடிப்பு, ஏ.ஆர் ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் உச்சமாக பின் நவீனத்துவ புகழ் ஜெயமோகனின் கதை,திரைக்கதை(மணிரத்னமும் கூட இருக்கார்) என எதிர்பார்ப்பின் உச்சத்தோடு திரையரங்குக்குள் நுழைந்தேன்.

படத்தின் துவக்கமே இரண்டு பாதிரியார்களைப்பற்றியது. ஒருவர் நல்லவர்(அரவிந்த்சாமி). இன்னொருவர் கெட்டவர்(அர்ஜூன்).இருவரின் நோக்கமே ஃபாதர் ஆவது. அரவிந்தசாமி ஆர்தோடெக்ஸ் வகையை சேர்ந்தவர். அர்ஜூன் அதில் பெரிய ஆர்வமில்லாமல், எதோ வயிற்றுப்பாட்டுக்காக இந்த பக்கம் கரை ஒதுங்கியவர். இந்த வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டுமென நினைத்து எனோதானோவென வாழ்பவர்.

ராத்திரி நேரத்தில் மெஸ்ஸில் வேலைபார்க்கும் அம்மணி ஒருவரோடு அரசல்புரசலாக இருந்து அரவிந்தசாமியிடம் கையும் களவுமாக சிக்கி மடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வழக்கமான தமிழ்சினிமா வில்லன் போல “உன்னை பழிவாங்குனா தான் என் ஆத்மா சாந்தி அடையும்” என சொல்லிவிட்டு கதையிலிருந்து தலைமறைவாகிவிடுகிறார்.

ஹீரோவை காட்டுகிறார்கள், அவர் அம்மாவை இழப்பது, அயோக்கிய அப்பன் வேறு ஒரு பெண்ணோடு வாழ, வீட்டைவிட்டு துரத்தப்பட்டு தெருப்பொறுக்கியாகி, அரவிந்தசாமி ஃபாதரோடு ஐக்கியமாகி மீன்பிடி வாழ்க்கைக்குள் தஞ்சம்புகுகிறார். திடீரென ஒரே பாடலில் வளர்ந்து, ஹீரோயினை ஒரு பக்கம் எதேச்சையாக பார்த்து, பரவசமாகி, லவ்வாகி எல்லோரையும் போல நாசமாக போகிறார். அப்புறம் அர்ஜூன் எண்ட்ரியாகிறார். யாராலோ சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவரை அரவிந்த்சாமி காப்பாற்றி சோறு போட்டால், உடல் குணமாகியதும் தலைமறைவாகி, அர்ஜூனின் கீப்போடு அரவிந்தசாமி கிசுகிசுக்கப்பட்டு, நடுவில் கசமுசாவாகி means அதிரடி திருப்பமாகி கொலைகேசில் நான்கு ஆண்டுகள் உள்ளே தள்ளப்படுகிறார்.

அர்ஜூன் நம்ம ஹீரோவை மைண்ட்வாஷ் பண்ணி, தப்புதண்டாவுக்குள் தள்ளி அராஜக ஆசாமியாக்கி என கதையானது, சென்னைக்குள் புதிதாக நுழைந்து வழிதெரியாமல் அட்ரஸ் தேடி அலையும் ஆசாமி போல பயணித்து புதுப்புது தடங்களில் அதிரடியாக நுழைந்து திடீரென “ச்சீ.. இந்த வீடுதானா” என நம்மை செல்ல வைத்துவிடுகிறது. படத்தின் முதல் 30 நிமிடங்கள் உலக சினிமா ரேஞ்சுக்கு நம்மை மிரட்டுகின்றன. போகப்போக உள்ளூர் சினிமாவிடமே தோற்று தலை தொங்கி “மிடில” என சரண்டர் ஆனது வேறு கதை. ஏஆர் ரஹ்மான் பின்னி எடுத்திருக்கிறார். மனிதர் கையில் நாலைந்து ஆஸ்காரைத்திணித்தால் தான் அமைதியாவார் போல. ராஜீவ் மேனனின் கேமரா நம் கண்களுக்கு இதமளிக்கிறது. வழக்கமாக ஹீரோயின் தான் ஊறுகாயாக பயன்படுத்தப்படுவார், இந்த படத்தில் ஹீரோவும். ஹீரோயின் மனவளர்ச்சி குன்றியவர் என்று சொல்லி நம்மை பைத்தியமாக்குகிறார்கள். படம் முடியும் போது உண்மையான ஹீரோவே அரவிந்தசாமி தான் என்பது போல தோன்றுகிறது.

படம் கன்யாக்குமரி பகுதிகளிலுள்ள மீனவ கிருத்துவ மக்கள் பற்றியது என்பதால், பாடல்களில் சர்ச் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. ஏமாத்திட்டீங்களே மணி.

Tuesday, January 22, 2013

கடலோரக் கவிதைகள் ரீமேக் - கல்லூரி ஆண்டுவிழா அனுபவம்


ஒரு வழியாக நெட் ஸ்பீட் நன்றாக அமைந்துவிட்டதால் இந்த வீடியோவை பதிவேற்ற முடிந்திருக்கிறது. கல்லூரி மூன்றாமாண்டு கல்ச்சுரல்ஸில் கடலோர கவிதைகள் திரைப்படத்தை ரீமேக்கினோம். வேறு ஒரு படத்தை ரீமேக் செய்யலாம் என்பது தான் ஆசை.நண்பர்  டோனி க்ரேக் தான் வற்புறுத்தி ”டேய் இதுல இருக்கற பாட்ட வச்சே நாம ஜெயிச்சிடலாம்” என்றார்.

நான் அரைமனதாக தான் ஓகே சொன்னேன். காரணம் இருந்தது. டீச்சர் கெட்டப் நான் போட வேண்டும் என்பதே. ”ஏற்கனவே நம்ம பசனுங்க தெணறத்தெணற கலாய்ப்பயங்களே. பத்தாததுக்கு இது வேறயா. என்ற பயம் தான் காரணம்” ஒரு வழியாக சமாதானமாகி மேடைஏற பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் நன்றாக அமையவே நிறைய நம்பிக்கையை கொடுத்தது.

குறிப்பாக வகுப்பில் உடன் படிக்கும் பெண்களுக்கு ஒரே குஷி. புடவை மேக்கப், நகை விசயங்களுக்கு உதவுவதாக ரொம்ப ஆர்வமாக முன்வந்தார்கள். (அப்பக்கூட எனக்கு தெரியல).

கணினித்துறை லேப்பில் ஆடை மாற்றும்போது தான் தெரிந்தது. ஜாக்கெட் பத்தவில்லை. இனி என்ன செய்வது. என்று தலையை சொறிந்து கொண்டு நின்றபோது ஒரு தோழி முன்வந்து லேடீஸ் ஹாஸ்டல்ல வாங்கியாறேன் என போனார். அங்கே யாரும் துவைக்காமல் வைத்திருந்திருப்பார்கள் போல!!.. “யார்கிட்டயும் இல்லடா. அட்ஜஸ்ட் பண்ணிக்கே” என தோழி கைவிரிக்கவே. மேடை ஏறுவோமா என்பதே டவுட்டானது. ”அதனால என்ன பனியன்ல ஊக்கை குத்தி சமாளிக்க வேண்டியது தான். தூரத்துலேர்ந்து பாக்கற மடையனுக்கு தெரியவா போகுது” என ஒரு ஐடியா கொடுத்தார். அந்த ஐடியா அப்போதைக்கு தேவையாயிருந்தது.

மேக்கப்பெல்லாம் போட்டு ஒருவழியாக தயாரானோம். எல்லா பயலும் என்னை கொண்டுபோய் மறைவிடத்தில் நிறுத்திவிட்டு “ இந்த லேடி கெட்டப்பை சீக்ரெட்டா வச்சிக்கறோம். சரியா” என்று அதிரடி முடிவெடுத்தார்கள்.(பெரிய சங்கரு). அப்படி மறைவாக நின்று கொண்டு இருக்கும் போது தூரத்திலிருந்து எவனோ குறுகுறுவென பார்த்துகொண்டிருந்தது ஒரு மாதிரியாக இருந்தது. “டேய் பொறம்போக்கு. நான் பையண்டா” என சொல்லி பார்த்தேன். எங்களுக்கிடையில் இருந்த கண்ணாடி ஜன்னல் அந்த வார்த்தையை தடுத்துவிட்டது. ”தம்பி இங்கல்லாம் நிக்க கூடாது” என ஒரு பேராசிரியர் கிருஷ்ணன் போல வந்து அந்த பையனை வழியனுப்பி என் மானத்தை காத்தார். எதிர்பார்த்தது போலவே பாடல்களுக்கு செம்ம அப்லாஸ்!!

குறிப்பாக அந்த ஜாக்கெட் மேட்டர் தான் பலரின் கண்களை உறுத்தியது. ப்ரோக்ராம் முடிவை நெருங்கும் போது புடவை பாதி அவுந்துவிட்டது. ஒரு கையால் அதை பிடித்துக்கொண்டே சமாளிக்க முயற்சித்தேன் முடியவில்லை. நடக்கும்போது புடவையில் கால்தடுக்கி மேலும் அது கழன்றுகொண்டது. நானும் வேட்டி சொருகுவது போல சொருகி சமாளித்தேன். மேடையின் முன்வரிசையிலிருந்து என்னுடைய இந்த சங்கடத்தை VP பார்த்துக்கொண்டே இருந்தார்.

“அவுந்துடுச்சின்னா அவமானமா போய்டும். கீழ இறக்கிவிடுங்க” என்பதாக அவர் லைப்ரரியனிடம் பேசிக்கொண்டிருந்தார். மேடையிலிருந்துகொண்டே இதை பார்த்த எனக்கு ஒருவித பயம்.பாதியில் இறங்கினால் எங்களுக்கு அவமானமாக போய்விடும். அதனால் நான் இன்னும் மும்முரமாக கடைசி காட்சிகளை நடித்துக்கொண்டிருந்தேன். முன்வரிசையில் இருந்த எல்லோருடைய கண்ணும் புடவை மீதே இருந்தது. பாவிகளா. என்னை திரவுபதி ஆக்காமல் விட மாட்டார்கள் போல என எனக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். இது பத்தாதென்று என்னோடு நடித்த நண்பர் புடவையை உருவுவதே குறியாக இருந்தார். (துச்சாதனா). எல்லோரையும் சமாளித்து மேடை இறங்கி உடை மாற்றும் அறைக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழியில், எங்கள் நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

குறிப்பு : நிகழ்ச்சி வீடியோ வடிவில் வந்திருந்தது பொழுது அந்த புடவை காட்சிகள் வெட்டப்பட்டே சிடியாக்கி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் என் மானம் காப்பாற்றப்பட்டது..அவ்வ்வ்!!

Friday, January 18, 2013

செக் மேட்!!

செஸ்ஸூக்கும் நம் வாழ்க்கைக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. செஸ்ஸின் துவக்கமும், முடிவும் எப்போதும் ஒரே மாதிரியே அமையும். துவக்கம் என்பது சிப்பாயை நகர்த்துவது என்பதாகவோ, குதிரையை நகர்த்துவது என்பதாகவோ தான் அமையும். முடிவு என்பது ராஜாவை மடக்கிபிடித்து செக் மேட் சொல்ல வேண்டும். வாழ்க்கையும் இதைப்போலவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட துவக்கத்தையும், முடிவையும் கொண்டது. ஆனால் இடைப்பட்ட ஆட்டத்தில் தான் இருக்கிறது சுவாரஸியமே.அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். எனக்கு கிடைத்த அனுபவம் அப்படியே உங்களுக்கு கிடைக்க வேண்டிய அவசியமில்லை. என் அனுபவத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கும் பாடம் என்பது வேறு வடிவத்தில் உங்களுக்கு பயன்படலாம். அவ்வளவே. அதனால் எனக்கு கிடைத்த அனுபவம் தான் சரி, உங்களுக்கு கிடைத்தது மோசம் என நான் சொல்லிவிட முடியாது.
செஸ்ஸில் சில அடிப்படைகள் மட்டும் தெரிந்தால் போதும். யார் வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்கென தனியே திறன்கள் ஏதும் தேவையில்லை.வாழ்க்கையும் அப்படியே, எல்லோரும் ஒருவித ப்ரின்சிபல் எனப்படும் கொள்கைகளை வகுத்துக்கொண்டு ஆட்டத்தை துவங்குகிறோம். ”எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ” என இதை தான் சொன்னார்கள் போல.

செஸ்ஸில் ராணி என்பதை அதிர்ஷ்டம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். ராணி முக்கியம் தான். ஆனால் ராணி மட்டுமே முக்கியமல்ல. ராணியை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டாலும், கடைசி நேரத்தில் சாதாரண சிப்பாயை நகர்த்தியே ராணியை மீட்டெடுக்க முடியும். சிலர் ராணியை இழந்ததுமே விரக்தியாகி எல்லா காயினையும் தட்டிவிட்டு தற்கொலையில் ஈடுபடுவார்கள். ஆனால் ஆட்டம் நன்றாக பிடிபட்டவர்கள் அது போல ஒரு போதும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு தெரியும். அபிமன்யூவைப்போல கடைசி வரை காய்களை நகர்த்தி என்ன தான் நடக்கிறது என பார்த்துவிடும் ஆர்வம் அவர்களுக்கு. வெற்றி நோக்கோடு மட்டுமே ஆடுகிற போது கிடைக்கிற அனுபவத்தை விட, வெறும் சுவாரசியத்திற்காக ஆடும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அடுத்த இரண்டு மூன்று நகர்த்தல்களை வேண்டுமானால் ஜோசியம் போல கணித்துவிடலாம். ஆனால் மொத்த ஆட்டத்தையும் முன்கூட்டியே நம்மால் கணித்துவிடமுடியாது.

எப்போதுமே முதல் நகர்த்தல் என்பது மிக மிக முக்கியமானது. அது தான் அடுத்தடுத்த நகர்த்தல்களை தீர்மானிக்கும். முதல் நகர்த்தல்களை ஏனோதானோவென்று நகர்த்திவிட்டால் அடுத்தடுத்த ஆட்டங்கள் கைமீறி போய்விடும்.அதனால் தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என சொல்லி வைத்தார்கள் போல.

சில சமயம் எதாவது பெரிதாக இழக்க வேண்டிவரும். அது ராணியாகவும் இருக்கலாம், யானையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேர இழப்பு தான் பெரிய திருப்புமுனையாகி வெற்றியைதரும். பெரிதாக இழக்கத்தயாரானால் தான் பெரிதாக எதையாவது அடையமுடியும் என்ற பெரிய தத்துவத்தை அது நமக்கு அந்த கணத்தில் கற்றுக்கொடுக்கும். காரணம் இழப்பைபற்றி கவலைப்படாதவனால் தான் இறுதியில் வெற்றியை ருசிக்கமுடியும்.

Friday, January 4, 2013

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம் படப்பிரச்சினை

திருட்டு விசிடி பிரச்சினை, தியேட்டர்களின் ஏகபோக உரிமை, நல்ல படங்களின் இருட்டடிப்பு, போட்ட பணத்தை எடுக்க முடியாமல் ப்ரொடியூசர்கள் தலையில் துண்டு போட்டு ஓரமாக உட்கார்வது என தமிழ் சினிமா உலகத்தில் இருக்கிற சங்கடங்கள், சச்சரவுகளை ஒரு தனி புத்தகமாக வெளியிடும் அளவுக்கு நீளும். அந்த சர்ச்சையின் சமீபத்திய வரவு தன்னுடைய படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்தது.
 



  ”நீங்க டிடிஎச்சில் படத்தை வெளியிட்டால் நாங்க தலையில் துண்டை போட்டுக்க வேண்டியது தான்” என தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் ஒரு புறம் களம் இறங்க, திருட்டு விசிடியால் விழி பிதுங்கி இருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற இது போல புதுசா எதாவது செய்து தான் ஆகணும் என கமலுக்கு பக்கபலமாக திரையுலக ஜாம்பவான்கள் சிலர் குரல் கொடுக்க, சிலரோ எதுக்கு வம்பு என அமுக்கி வாசிக்கிறார்கள்.

இதற்கிடையே படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சில சர்ச்சைகுரிய காட்சிகள் இருப்பதாக தகவல் கசிய, இஸ்லாமிய அமைப்புகள் சில ஆர்பாட்டத்தில் குதித்தன. இது போதாதென்று ரீஜெண்ட் சாய்மிரா எண்டர்டைன்மெண்ட்  நிறுவனம் மர்மயோகி படம் தயாரிக்க வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும், என ஹைகோர்டு படிகளில் ஏறி இருக்கிறது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை 8ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.

விஸ்வரூபம் படத்தின் ஏகபோக உரிமை ஏர்டெல் டிடிஎச்சுக்கு 50 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி, ரிலயன்ஸ் டிடிஎச் முதலான நிறுவனங்களும் பேரம் பேசி வருவதாக தகவல். படம் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே டிடிஎச்சில் வெளியாகும் படத்தை காண 1000 வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் உலா வருகிறது. 30லட்சம் பேர் திரைப்படத்தை காண புக் செய்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி இருக்கிறது.

இப்படியாக  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவைப்பொறுத்த வரை துணிச்சலான பல முடிவுகளை இப்போதுள்ள நிலைமையில் கமலைத்தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தயாரிப்பாளராக தன்னுடைய படத்தை சந்தைப்படுத்த புதிய யுக்திகளை கடைபிடிக்க வேண்டிய நெருக்கடியில் அவர் இருக்கிறார்.அவருடைய பொருளை அவர் எப்படி வேண்டுமானாலும் விற்கலாம், வீணடிக்கலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்காக அவரிடம் யாரும் சண்டைக்கு போக முடியாது. வேண்டுமானால் அவர் கேட்கிற பணத்தை கொடுத்துவிட்டு யார் வேண்டுமானாலும் அந்த படத்தை வாங்கி ஆண்டு அனுபவித்துக்கொள்ளலாம்.பிரச்சினையில்லை.

அதே சமயம்,சில நியாயமான சந்தேகங்களும், பயங்களும் திரையுலகில் ஏற்பட்டிருப்பது கவலைக்குறியதே. காரணம் டிடிஎச்சில் வெளியிடும் இந்த யுக்தி வெற்றி பெற்றுவிட்டால், அடுத்து நிறைய படங்கள் இதே போல வெளியாகி தியேட்டர்களுக்கான தேவையில்லாமல் போய்விடலாம் என்ற பயம் நியாயமானதே. இப்போதே அலெக்ஸ் பாண்டியன், கடல் முதலான படங்களின் டிடிஎச் வெளீயீடு பற்றிய அண்டர்வேர்ல்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 நம்மூரில் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது. அதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மாற்றிவிடமுடியாது. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவமே வேறு பரிமாணத்தை எட்டி இருப்பதை சமீபகாலமாக நாம் உணர முடியும். உதாரணமாக படையப்பா படம் வெளியாகும் காலம் வரை குடும்பம் குடும்பமாக படம் பார்ப்பது என்றிருந்த கலாச்சாரம் மாறி.தனித்தனியாகவோ, இளைஞர் சாரார் மட்டுமாகவோ, காதலன்,காதலி என ஜோடியாகவோ படம் பார்ப்பது என மாறி இருக்கிறது.இப்போது டார்கெட் ஆடியன்ஸ் என்பது ரொம்ப சுருங்கிவிட்டது. உதாரணமாக துப்பாக்கி போன்று சமீபகாலமாக வருகின்ற படங்கள் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன.

இதனால் பெருசுகளும், இரண்டாம் தர பெருசுகளான 40 வயதினரும் வீட்டில் உட்கார்ந்து பழைய பாடல்களை பார்த்துக்கொண்டு “அந்த காலம் போல வருமா” என வெட்டி நியாயம் பேசுவதுமாகவும், பெண்கள் சீரியல் உலகப்போரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தில்லாமல் கண்ணைக்கசக்கி வருவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடியும்.இந்த ஆடியன்ஸ் இப்போது டிவி அடிமையாகிவிட்டனர். இவர்கள் காலங்களில் இருந்தது போலான தியேட்டர்கள் இப்போது இல்லை. வரிசையில் முட்டி மோதி சண்டை போட்டு சட்டை கிழிய டிக்கெட் வாங்கிய காலமெல்லாம் மாறிவிட்டது.


முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்துவிட்டு, படம் துவங்குவதற்கு பத்து நிமிடம் முன்பு ஹாயாக தியேட்டருக்குள் நுழைந்தால் போதுமானது.இன்னும் சில இடங்களில் கரண்ட் பிரச்சினையால் பல தியேட்டர்கள் ஜெனரேட்டர் கொண்டு இயங்கி கட்டுபடியாகாமல் கடையை சாத்திக்கொண்டு இருக்கின்றன. இதை எல்லாம் ஒப்பிடும் போது டிடிஎச்சில் வெளியிட்டு டிவி ஆடியன்ஸை கவர் செய்வது தவிர்க்க முடியாததாகிறது.

அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பல நல்ல படங்கள் தியேட்டரில் வெளியிட முடியாமல் திணறி வருவதும், கம்மியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டு கல்லாகட்ட முடியாமல் திண்டாடி வருவதுமாக இருக்கின்றன. உதாரணமாக ”நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படம் செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டியது. தியேட்டர் பிரச்சினை, உட்பட்ட காரணங்களால் இரண்டு மாதம் தள்ளி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயம் மற்றவர்களின் படங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதை சம காலத்தில் கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது.

ஒரு படத்தை பிரிண்ட் போட 60 ஆயிரம் ரூபாய் ஆகிறது.1000 தியேட்டர்களில் வெளியிட வேண்டுமானால்? தயாரிப்பு செலவை இதுவே குடித்துவிடும். குறைந்த பட்ஜெட்டுகளில் படம் எடுக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.ஆனால் Qube வந்த பிறகு சாட்டிலைட் வழியே படம் ஒளிபரப்பட்டு விரயமாகும் பணம் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல தான் டிடிஎச்சும்.

எப்படியும் தியேட்டருக்கு வருகிறவர்கள் வர தான் செய்வார்கள். காரணம் தியேட்டர் தரும் அனுபவத்தை ஒரு போதும் டிவியோ மற்ற தொழில் நுட்பமோ குடுத்துவிட முடியாது.ஆனால் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் அதிகம்.விஸ்வரூபம் படத்தை 1000 ரூபாயில் வெளிடுவதால் அது எப்படியும் போட்டதை எடுத்துவிடும்.



ஒரு குடும்பத்தில் 10 பேர் கூட்டாக உட்கார்ந்து பார்த்தாலும் தலைக்கு 100 ரூபாயாக கணக்கு ஆகிறது.அதனால் பெரிய பாதிப்பில்லை. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை தான் டிடிஎச்சில் வெளியிடப்படும் என்பதால் பெரிய அளவில் கவலைப்படத்தேவையில்லை. டிடிஎச்சை கணினியோடு இணைத்து ரெக்கார்டு செய்துவிட்டால் என்ன செய்வது, கேபிளில் இலவசமாக எல்லோருக்கும் ஒளிபரப்பிவிட்டால்? ஒரு வேளை கரண்டு போச்சின்னா? போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். டிடிஎச்சில் வெளியான பின் தான் அது வெற்றியா தோல்வியா என தீர்மானிக்க முடியும்.

தோல்விஅடைந்தால் - அடுத்து எந்த படமும் இது போன்ற முயற்சிகளில் இறங்காது.
வெற்றி அடைந்தால் - அடுத்து வருகிற படங்கள் எல்லாம் மெல்ல மெல்ல டிடிஎச்சில் தலை காட்டும்.

தியேட்டருக்கு போகறதுக்கு பதில் டிவிலயே பார்த்துடலாம் என்ற சோம்பேறித்தனம் மெல்ல பரவ ஆரம்பிக்கும். ஹோம்தியேட்டர் விற்பனை சக்க போடு போடும். மெல்ல மெல்ல தியேட்டர்கள் குறைய ஆரம்பிக்கும். படத்தின் தயாரிப்பு செலவு குறைகிற அதே நேரத்தில் லோ பட்ஜெட் படங்கள் நிறைய வரும். இப்போதே 5டி வருகையால் படம் எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஒருவேளை படம் எடுப்பது சுய தொழில் ஆரம்பிப்பது போலவோ, குடிசைத்தொழில் போலவோ ஆகலாம். வெள்ளிக்கிழமை மட்டும்தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை மாறும். ஆண்டுக்கு  நூறிலிருந்து 200 படங்கள் வெளியாவதென்பது பல மடங்காகலாம்.
ஒரு கட்டத்தில் எந்த மாதிரியான படங்கள் வெளியாக வேண்டும், எவை கூடாது, இவ்வளவு எடுத்து வச்சாதான் படத்தை வெளியிடுவோம் என டிடிஎச் நிறுவனங்கள் ஏகபோக ஆட்சி செய்யும் நிலையை கூட இது வித்திடலாம்.

ஆனால் எல்லாமே விஸ்வரூபம் வெளியான பின் தான் தெரியும்.ஆனால் படம் எப்படியும் வெளியாகியே தீரும். காரணம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கிறது.