Sunday, August 28, 2011

தூக்கு தண்டனை தேவையா?

"தண்டனைகள் கடுமை ஆனா தான் தப்புகள் குறையும்" எதோ ஒரு விஜயகாந்த் படத்தை பார்த்து நண்பர் சொன்ன வரிகள் தான் இவை.

ஆனால் பெரும்பாலும் சின்ன வயதிலிருந்தே நமக்கு யாராவது தண்டனை கொடுக்கும் போது மட்டும் "சார் இந்த ஒரே ஒரு தடவை மன்னிச்சிடுங்க சார்.இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேன்" என்ற பதில்களே தொடந்து சொல்லி வந்திருக்கிறோம்.

அது என்ன அடுத்தவனுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்டினி,நமக்கு வந்தா மட்டும் ரத்தம்? என்ற கூக்குரல்கள் தொடர்ந்து கேட்ட வண்ணமே உள்ளன.

அன்னா ஹசரேவின் போராட்டத்துக்கு இடையில் தமிழகத்தில் நடந்த ஒரு போராட்டம் தான் "மூன்று பேருக்கு தூக்கை ரத்து செய்".

முதலில் இந்த பிரச்சினை பற்றி பார்ப்போம்.பேரறிவாளன் திராவிட கழகத்தில் உதவியாளர்,மற்றும் எழுத்தாளர்,ஒரு இஞ்சினியர் கூட.ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ஒன்பது ரூபாய் எவரரேடி பட்டரி வாங்கி கொடுத்தாராம்.அது பெட்டி  கடைலயே விக்குது.

இதுக்கெல்லாமா தூக்கு தண்டனை தருவாங்க.பேரறிவாளன் பிரச்சினையை பொருத்த வரை தமிழ் சினிமாவில் காட்டபடுவது போல போலீஸ் அடித்து சித்தரவதை படுத்தி தான் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியது என்கிறார்கள்.

சாந்தன் பொருத்தவரை, சாந்தன் என்ற திருச்சியை சேர்ந்த நபர் இறந்து போய் விட்டார்,அதே பெயரை கொண்ட இவர் வழக்கில் ஜோடிக்கப்பட்டு சிக்க வைக்க பட்டார்.

முருகன் நளினியின் கணவன்,அதனால் வசமாக மாட்டி கொண்டார்.
ஈழ பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை சிக்க வைக்க சிதம்பரம் நகர்த்திய காய் தான் இந்த மூன்று பேருக்கு தூக்கு விவகாரம் என்கின்றார்கள்  அரசியல் நோக்கர்கள்.

"தூக்கு தண்டனை வேண்டாம்" என எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்கள் சொல்வதெல்லாம் "உலகின் நூற்று முப்பத்து நான்கு நாடுகளில் மரண தண்டனை என்ற ஒன்றே ரத்து செய்யப்பட்டுவிட்டது.மரண தண்டனை வழங்க கடவுள் தவிர யாருக்கும் உரிமை இல்லை" என்பது தான்.

ஆனால் இதற்கு எதிராக இருப்பவர்களின் தீர்மானம்."குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் முன்னாள் பிரதமர் கொலை தொடர்புடையவர்கள்.அவர்கள் விடுதலை ஒரு மோசமான முன்னுதாரனமாகிவிடும்" என்பதே.

என்னுடைய நிலைப்பாடை கடைசியில் பதிவு செய்து விடுகிறேன்.

"இந்த மூன்று நபர்களுக்கு தூக்கு வேண்டாம் என்று சொல்பவர்கள், நாளை அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் போது போராடுவார்களா? உயிர் ஒன்று தானே!"

இந்தியாவில் மரண தண்டனைகள் பல்வேறு வடிவத்தில் காணப்படுகிறது.
சில சமயம் போலீஸ்கள் என்கௌன்ட்டர் என்ற பெயரில் நிகழ்த்துகிறார்கள்.பெரும்பாலான என்கவுன்ட்டர்கள் போலியானவை என்கின்றன சர்வேக்கள்.என்கவுன்ட்டர் மீதான விசாரணை முடிவுகளும் அதையே தான் சொல்கின்றன.

சில மாதங்களுக்கு முன் கோவையில் குழந்தையை ஒருவன் கடத்தி கொலை செய்த போது,அவனை பிடித்த போலீஸ் அவனை என்கவுன்ட்டர்இல் போட்டு தள்ளியதை கோவையே கொண்டாடியது நினைவிருக்கலாம்.
ஊழலுக்கு எதிராக அன்னாவுக்கு பின்னால் திரண்டவர்கள் அளவு கூட மரணதண்டனைக்கு எதிராக மக்கள் கூடாதது வேதனை அளிக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்கிறேன்.

தன்னை சுட்ட கோட்சேவை மக்களே அடித்து கொள்ளவேண்டும் என காந்தி நினைக்கவில்லை.

"இவர்கள் என்ன செய்கிறார்கள் என அறியாமல் செய்கிறார்கள்.இவர்களை மன்னியும்" என்று இறைவனை பார்த்து இயேசு சொன்னார்.

"கண்ணுக்கு கண் தான் மாற்று என்றால் உலகமே குருடாகிவிடும்" என்ற காந்தியின் நிலைப்பாடு தான் என்னுடையது.

மரண மேடையில் கோட்சே நின்றாலும் கசாப் நின்றாலும்,பேரறிவாளன் நின்றாலும்,

"மரண தண்டனை தவறு" என்றே என் குரல் ஓங்கி ஒலிக்கும்.

ஒருவனுக்கு மரண தண்டனை தர கடவுளை தவிர எந்த ஊழல் அரசுக்கும் அருகதை இல்லை.

அமெரிக்காவிலும்,அரபு நாடுகளிலும் கடுமையான தண்டனைகள் இருக்கிறது,ஆனால் தவறுகள் குறைந்த பாடில்லை.

தண்டனைகள் தவறு செய்தவரை திருத்த உதவ வேண்டுமே தவிர.உயிர் பறிப்பதாக இருக்க கூடாது.  

"பகைவனையும் அருள்வாய் நன்னெஞ்சே"

Saturday, August 13, 2011

உலககோப்பை கால்பந்து கனவு நிறைவேறுமா?

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் கூட தேர்வாகாமல் ஒவ்வொரு முறையும் நம் இந்திய அணி திரும்பி விடுவது ஏன்?பதில் சொல்கிறார் ஒரு தமிழக கால்பந்து வீரர்.

ஒவ்வொரு முறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான அறிவிப்பு வெளியாகும் போதும் தேர்வாகும் அணியில் நம்ம அணி இருக்கிறதா என ஆர்வத்துடன் தேடாத இந்தியன் இருக்கவே முடியாது.இரண்டு முறை கிரிக்கெட்டில் உலககோப்பையை வென்றுவிட்டோம்  ஒலிம்பிக் பதக்கமும் பார்த்து விட்டோம்.உலககோப்பைகால்பந்தில் மட்டும் தகுதிச் சுற்றிலேயே திரும்பி விடுகிறோம..

ஏன் ஏன் ஏன்?


இதற்கு  பதில் சொல்கிறார் கால்பந்து வீரர் மோகன்ராஜ்.பல்வேறு வெளிநாடுகளில் சென்று விளையாடிய அனுபவமுள்ள இவர்,
இன்று இந்திய கால்பந்து அணியில் விளையாடி வருபவர்.முதலில் இவர் பற்றி ஒரு சிறு அறிமுகம்.நாமக்கல் பக்கத்தில் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன் ராஜ் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.அம்மாவும் விவசாயம் தான்.இரண்டு அக்கா.மாமா தான் இவருடைய கால்பந்து ஆர்வத்துக்கு தோள் கொடுத்தவர்.

முதலில் தெருவோரத்தில் தான் துவங்கியது இவர் விளையாட்டு.பிறகு மதுரையில் இருக்கும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான உடற்தேர்வில் தேர்வானார்.

"முதல்ல இலவசமா சாப்பாடு கிடைக்குது,தங்க இடமும் தர்றாங்க.படிக்க அப்பப்ப ஆயிரம் ஐநூறு மட்டும் செலவு செய்தால் போதும் என எண்ணி தான் இங்க சேர்ந்தேன்.காரணம் வீட்ல வறுமை.மாமா தான் உன்னால முடியும்..நல்லா பண்ணுவன்னு சொல்லிகிட்டே இருப்பார்.இங்க சேர்ந்ததும் எல்லாமே மாறிடுச்சி" என்கிறார்.

 2007 ஆம் ஆண்டு ஜூனியர் இந்தியா டீம் காப்டனாக இருந்தவர்.. "நான் மாநில, மாவட்ட அளவில் நடந்த எந்த போட்டியிலும் ஜெயிச்சிலாம் மேல வரல பாஸ்.நேராவே இந்தியா டீமுக்கு தேர்வாகிட்டேன்.முதல் முதல்ல இந்தியா லீக் போட்டில தான் விளையாடினேன்" என்கிறார்..  



காரணம் ஆரம்பத்துல இவரை எந்த உள்ளூர் விளையாட்டு போட்டியிலும் தேர்ந்தெடுக்கவில்லை.மாநில மாவட்ட அளவிலும் தேர்ந்தெடுக்க படவில்லை.இன்று கூட தமிழ்நாடு கால்பந்து ஆணையத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவர் எப்படி இருப்பார் என்பதே தெரியாது..

சில கிளப்களில் விளையாடிய  பிறகு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

"நாம இன்னும் உலக கோப்பைக்கு போகாததுக்கு காரணம் இங்க புட்பால் விளையாடினா வேலை கிடைக்காது.பத்து வருடத்துக்கு முன்னாடியே அரசு வேலையில் இட ஒதுக்கீட்டை நிறுத்திட்டாங்க.ஏதாவது கிளப்ல விளையாடி சம்பாதிச்சா தான் உண்டு..மத்தபடி நிறைய  சம்பாதிக்க இந்த விளையாட்டுலாம் ஒத்து வராது" என்கிறார்.

"கொஞ்சநாள் முன்னாடி போர்ச்சுகல்லில் இருக்கும் ஸ்போர்டிங் லிஸ்பெர்க் என்னும் விளையாட்டு பயிற்சி மையத்துக்கு சென்றிருந்தேன்.அங்க தான் ரொனால்டோ,நானி இவங்கல்லாம் சின்ன வயதில் விளையாட்டு பயிற்சி எடுத்து கிட்டாங்க.அங்கல்லாம் மூணு நாலு வயசுலேயே இந்த பயிற்சி மையத்துக்கு கொண்டு வந்து விட்டுடுவாங்க.



அந்த பசங்களுக்கு முதல்ல கால்பந்து மேல ஆர்வத்த உண்டாக்குவாங்க.பத்து பன்னிரண்டு வயசுக்குள்ள அவங்களுக்கு கால்பந்த்தின் அத்தனை நுணுக்கங்களும் அத்துபடி ஆகிடும்.எனக்கு இருபத்து மூன்று வயதில் கிடைத்த வாய்ப்பு அவங்களுக்கு அங்கே வெறும் மூணு வயசுலேயே கிடைக்குது."என்றவர்.

"இங்க நம்ம ஊர்ல தொண்ணூறு சதவீத பள்ளிகளில் கிரவுண்ட்டே இல்லை.அந்த விளையாட்டு பயிற்சி மையத்துல ஏழு க்ராவுண்டுகள் இருக்கு.அங்க நான் ஒரு மாதம் பயிற்சி பெற்றேன்.உள்ளே நீச்சல் குளம்,உடற்பயிற்சி மையம்.நமக்கு அடிபட்டா பாத்துக்க மருத்துவர்கள்,பயிற்சியாளர்கள் என சகல வசதியும் இருக்கு"

"நாம புட்பால்ல மிகவும் பின்தங்கிய நிலைல தான் இருக்கோம்.அவங்க பயிற்சியாளர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு.நிறைய தொழில்நுட்பம் பயன்படுத்தறாங்க.ஒரே மாசத்துல பயிற்சி மூலமா நமக்கு கால்பந்துக்கு தேவையான பிட்னெஸ் கொண்டு வருவது எப்படி என்பது பற்றி எல்லாம் கற்று கொடுக்கிறார்கள்."

"நான் நிறைய நாடுகளுக்கு சென்று விளையாடி இருக்கிறேன்.ஒரு முறை துபாய் சென்ற பொழுது நம்ம இந்திய அணி அங்கே இருக்கும் இரண்டாம் தர அணியோடு விளையாடும் நிலை தான் இங்கே இருக்கு.காரணம் அங்கே இரண்டாம் தர அணியே அவ்வளவு சிறப்பா விளையாடறாங்க.

முதலில் நம்ம ஊர் பசங்களுக்கு பத்தாவது படிப்பு முடியும் பொழுது அது வரை விளையாடிய விளையாட்டை விட்டுட்டு தான் பதினோராம் வகுப்பே வர்றாங்க.கிராமத்துல இருந்து வர்ற மாணவர்களுக்கு அடுத்ததா யார போய் பாக்கணும் என்ன பண்ணனும் என்பதே தெரியாது.

"எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் எல்லாம் என்னை விட ரொம்ப நல்லா  விளையாடியவர்கள் எல்லாம் ஒரு கட்டத்துல கிடைச்ச வேலைல போய் ஒட்டிகிட்டாங்க.புட்பால் ஏழைகளுக்கான விளையாட்டு.ஒரு பந்தும் ஷு வும் இருந்தா யார் வேணும்னாலும் விளையாடலாம்.இந்திய புட்பால் அணி கேப்டன் பைச்சூன் பூட்டே கூட ஊறுகாய் விற்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர் தான்."என்றவர்.



இங்கே கிரிக்கெட் டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் கால்பங்கு கொடுத்தால் கூட கால்பந்து எங்கேயோ போய்விடும்.இதை நினைக்கும் பொழுதெல்லாம் இந்திய மீடியாக்கள் மீது கோபம் தான் வருகிறது. பதினேழு வருடமாக கால்பந்தில் இருக்கும் என் நண்பர்கள் சம்பாதிக்க முடியாததை மூன்று மாத ஐபிஎல் இல் சம்பாதிக்கிறார்கள்.

"அவ்வளவு வறுமையிலும் சமாளித்து வந்திருக்கிறீர்களே.. நீங்களும் உங்கள் நண்பர்கள் போல எதாவது வேலை தேடி இருக்கலாமே" என்றால் "கனவுக்காக வாழணும் பாஸ்.எனக்கு உலககோப்பை கால்பந்தில் ஆடணும் அது தான் கனவு" என்கிறார் நம்பிக்கையுடன்..

(நன்றி : புதியதலைமுறை )

Sunday, August 7, 2011

சமச்சீர் சந்தோசம்..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ? எந்திரி டா" அம்மா இப்படி சொல்வது இதோடு எட்டாவது முறை.பாதி தூக்கத்தில் இருந்த பரிதி பத்தாவது படிக்கிறான்.

"ரம்யா..இவனுக்கு அன்னிக்கி மாதிரி மூஞ்சில தண்ணி ஊத்துனா தான் சரிபட்டு வரும்" - இது அப்பா.

அப்பாவின் ஸ்டைலே வேற.மாற்று சிந்தனையாளர்.பணம் பண்ணுவதிலிருந்து பாயாசம்  பண்ணுவது  வரை...

எங்க வீட்டுல எல்லாமே எங்க அப்பா தான்."கூட்டறது,பெருக்கறது,பத்திரம் தேய்க்கறது லேர்ந்து."ஆனால் இதெல்லாம் ஞாயிறு மட்டுமே.

மண்டே ஆனால் வேலைக்கி போயிடுவாரு.அம்மாவும் தான்.நான் போய் பல்லு தேய்க்கலன்னா ஒரு பெரிய சண்டையே வீட்டுல நடக்கும்.

வேற என்ன."புள்ளைய சரியா வளர்க்கல" என்பார் அப்பா.

"எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்" என்பார் அம்மா.கடைசியில் கரண்டிகள் பறக்கும்.

ஒருவழியாக பெட்டை விட்டு எழுந்து பல்லு வெலக்கி விட்டு வழக்கம் போல தினசரிகளை புரட்டினான்.

தலைப்பு செய்தி படித்ததில் இருந்து நிம்மதியே போச்சு.கடந்த இரண்டு மாதங்களை மட்டும் பரிதியால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.
ஒன்பது மணிக்கு துவங்கும் பள்ளிக்கு, எட்டரைக்கே சென்று விடுவான்.காரணம் பத்மா.

பத்மாவின் வீடு பள்ளியை விட்டு ரொம்ப தூரம்.காலை ஏழே கால் பஸ்ஸை விட்டால் வேறு எந்த பஸ்சிலும் ஏற முடியாதவாறு கூட்டம் இருக்கும்.எனவே ரொம்ப சீக்கிரமாக அவள் வந்து விடுவாள்.ஹோம்வொர்க்கை எல்லாம் அவள் பள்ளிக்கு வந்து தான் முடிப்பாள்.காரணம் ராத்திரி வீடு சேர பத்து மணி ஆகி விடும் அவளுக்கு.

கடந்த இரண்டு மாதமாக எங்கள் பள்ளியில் பாடமே நடத்தவில்லை.சமச்சீர் கல்வி பிரச்சினை என் வயிற்றில் பாலை வார்த்தது.பள்ளிக்கு ஒரே ஒரு நோட்டை மட்டும் தான் எடுத்து வருவேன்.சீக்கிரமே பள்ளிக்கு வந்து பத்மாவோடு அரட்டை அடிப்பேன்.

பலவிசயம் பற்றி பேசுவோம் நாங்கள்.அவளுக்கு அம்மா என்றால் உயிர்.ரோஸ் கலர்னா ரொம்ப பிடிக்குமாம்.பானிபூரியும் நூடுல்சும் அவளது விருப்ப உணவுகள்.இப்பொழுது என்னையும் அவளுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

போன வாரம் தான் நைசாக அவள் நம்பரை வாங்கி விட்டிருந்தேன்.அந்த நிகழ்வு ரொம்ப சுவாரஸ்யமானது.

"பத்மா உங்க வீட்ல செல் இருக்கா?"

"ஏன் கேக்கர?"

"சும்மாதான்.ஏதாவது முக்கியமான விஷயம்னா உன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்ல அதான் " என்றேன்.

"அது முக்கியமான விஷயம் வரும் போது பாத்துக்கலாம்" என்றாள்.அவள் என்னுடைய பந்தை மிக லாவகமாக சிக்ஸ் ஆக்கி விட்டிருந்தாள்.மதியம் வரை நான் அவளை கண்டுக்கவே இல்லை.

பிறகு அவளாகவே என்னிடம் வந்து "கணக்கு பாக்கணும்னு நோட் கேட்டல்ல.இந்தா" என்று அவள் நோட்டை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

"நாம எப்ப நோட்டு கேட்டோம்??.." என்று குழம்பியவாறே நோட்டை திறந்தேன்."கடைசி பக்கத்துக்கு முன்னாடி பக்கத்தை திறந்து பார்க்கவும்" என்றிருந்தது..வேக வேகமாக திறந்தேன்.

"Bulb AH"என்று எழுதி இருந்தது.இந்த முறை வாலண்டியராக அவளாகவே வந்து என்னை கேவலப்படுத்தி இருந்தாள்.

"ஐய்ய.யாருக்கு வேணும் உன் நம்பரு.மனசுல பெரிய திரிசான்னு நெனப்பு.இதெல்லாம் வேற யார் கிட்டயாவது வெச்சிக்கோ.உங்க அப்பா தசில்தாருன்னா என்ன வேணாலும் பண்ணுவையோ.ஊர் பணத்த உலைல போடறவைங்க தானே நீங்க!!"என்று ஒரு ஏத்து ஏத்துனேன்.

அவள் அழுதாள்..நல்லா வேணும்.."பல்பாம்ல!!" இப்ப எப்புடி..

அன்று முழுவதும் அவளிடம் பேசவே இல்லை.எனக்கு மனசுக்கு கஷ்டமாக தான் இருந்தது.வேற என்ன பண்ண சொல்றீங்க.யாருக்கா இருந்தாலும் கடுப்பு வரத்தானே செய்யும்.

அன்று மாலை என் செல்லுக்கு "சாரி.சும்மா வெலாட்டுக்கு தான் அப்படி பண்ணேன்" என்று ஒரு மெசேஜ் வந்திருந்தது.அவ தான்.இதை கூட கண்டு பிடிக்க மாட்டோமா..

"It's ok" என்று மட்டும் மெசேஜ் அனுப்பி விட்டு facebook கில் அரட்டை அடிக்க துவங்கி விட்டேன்.அதற்கு பிறகு அவளிடமிருந்தும் மெசேஜ் இல்லை.நானும் அனுப்ப வில்லை.

மறுநாள் காலை நான் லேட்டாக தான் வந்தேன்.வேண்டுமென்றே தான்.இண்டர்வெல் அப்ப அவளே வந்து பேசினாள்."கோவமா பா?"

"இல்ல இல்ல.எனக்கு உடம்பு சரி இல்லை.அதான் ".என்றேன்.அவளை பார்த்தால் பாவமாக இருந்தது.எதற்காக மேலும் அவளை காயப்படுத்த வேண்டும் என்று தான் அப்படி சொன்னேன்.

"நான் வெலாட்டுக்கு தானே டா அப்படி பண்ணேன்.நீ திட்டினது மட்டும் சரியா?.......சொல்லு" என்றாள்..

எனக்கு அவள் முகத்தை பார்த்தால் சிரிப்பு தான் வந்தது.இன்று அவள் எப்பொழுதும் இருப்பதை விட அழகாக தான் இருந்தாள்.

ஒருவழியாக ரெண்டு பேரும் சமாதானமாகி பேச துவங்கி விட்டோம்.இப்படி தான் அவ நம்பர வாங்குனேன்.அப்புறம் இரவு பனிரெண்டு மணி வரை முரட்டுத்தனமாக மெசேஜ் அனுப்புவோம்.சில சமயம் ஒரு மணி ரெண்டு மணி கூட ஆகிடும்.

இன்று பேப்பர் பார்த்ததிலிருந்து இதெல்லாம் இனி நடக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

காரணம் சமச்சீர் கல்வி பற்றிய தீர்ப்பு வந்து விட்டது.இன்னும் ஓரிரு வாரத்தில் எல்லாருக்கும் புக்கு தந்துடுவாங்க.வீட்டுல கேபிள் கட் பண்ணிடுவாங்க.காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சி அரக்க பறக்க டியூஷன்க்கு போகணும்.

அவகிட்ட இருந்து செல்ல புடுங்கி வெச்சிடுவாங்கலாம்.அவங்க வீட்டுல..எங்க வீட்டுலயும் தான்.

இனி அவளிடம் முன்ன மாதிரிலாம் பேச நேரம் இருக்காது.அவளுக்கும் தான் நேரம் இருக்காது.

உச்ச நீதி மன்ற தீர்ப்பு தள்ளி போக வேண்டுமென்று இப்பொழுதே இறைவனிடம் வேண்ட ஆரம்பித்து விட்டேன்.

Monday, August 1, 2011

என் ஹாஸ்டல் வாழ்க்கை - 3(உப்பில்லாத உப்புமா)

எங்க ஹாஸ்டல்ல பெரும்பாலும் பணக்கார பசங்க தான் சேருவார்கள் என்று நான் சொன்னது நினைவு இருக்கலாம்.காரணம் இங்கு சேர்க்கப்படும் பணக்கார பிள்ளைகளின் அப்பாக்கள் பலரும் தங்கள் மகன் பணக்கார பிள்ளையாக வளர வேண்டும் என்று எண்ணுவதை விட பண்பான பிள்ளையாக வளர வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.

ஒரு முறை என் பணக்கார நண்பன் ஒருவனின் அப்பாவிடம் பேசும் பொழுது அவர் சொன்னது இதைத்தான் "நம்முடைய பணத்தை அனுபவமாக மாற்றுவதற்கு தான் நாம் சம்பாதிக்க வேண்டும்" என்றார்..
நான் அப்பொழுது எட்டாவது படித்து கொண்டு இருந்தேன்."சார் புரியலை" என்றேன்.

"இப்ப புரியாதுபா..நீ சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது புரியணும்கரதுக்காக தான் இதை சொன்னேன்" என்றார்.

"போங்க அங்கிள்.நீங்க வேற..அதுக்கு இன்னும் பத்து வருசமாவது இருக்கும்.அதுக்குள்ள நீங்க சொன்னதே மறந்து போயிடும்" என்றேன்.
"சரி சிம்பிள்ஆ சொல்றேன்.நாம சம்பாதிக்கறத அனுபவிச்சிட்டு சாகணும்.போதுமா" என்றார்.

அப்பொழுதும் அவர் சொன்னதன் அர்த்தம் முழுமையாக புரியவில்லை.நான் அவரிடம் மேலும் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன்.
ஆனால் இன்று கார்பரேட் உலகுக்குள் வந்த பின் அவர் சொன்னதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்திருக்கிறது.

முதலில் எனக்கு தெரிந்தவர்  பத்தி இங்க சொல்லணும்.பதினேழு வயதிலேயே தன் தந்தையை இழந்தவர்.சேலத்தில் ஏதோ சின்ன சின்ன வேலைகள் பார்த்து வந்தவர்.பிறகு தன் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி சென்னை வந்தார்.

அப்படி இப்படி கஷ்டப்பட்டு பேங்க் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த அவர்.இன்று ஒரு கோடி ருபாய் மதிப்புள்ள வீட்டை தன் சொத்தாக விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் அவர் சம்பாதித்ததை ஒரு நாளும் அனுபவித்ததே இல்லை.வெயில்ல வெளில போனா ஒரு ஜூஸ் குடிக்க மாட்டார்.இளநீர் குடிக்க மாட்டார்.ஏன் ஆட்டோ ல கூட போக மாட்டார்.அவர் போன வெளியூர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் தமிழ்நாட்டில் மட்டும்.

அறை எண் 305 ல் கடவுள் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியரை பார்த்து கேட்பார் "சார் என்னிக்காவது எதாவது ஒரு ஊருக்கு தனியா பஸ் எடுத்துட்டு போய் அந்த ஊர்ல இருக்கற கண்ணுக்கு தெரியாத நாலு ஏழைங்களுக்கு சாப்பாடு போட்டுருகீங்களா?" என்று கேட்பார்.

இவை எல்லாமே ஒரு சுவாரஸ்யமான அனுபவங்கள்.
ஒருமுறை திருச்சியில் நான் மேன்சன்னில் தங்கி இருந்த போது நானும் ரூம்நண்பரும் சேர்ந்து உப்புமா பண்ணலாம் னு பிளான் பண்ணோம்.அரைகிலோ ரவை வாங்கி தண்ணி ஊத்தி, தக்காளி,வெங்காயம்,மிளகாலாம் போட்டு,காரபொடி லாம்  போட்டு பண்ணோம்.கமகம னு வாசனைலாம் வந்துது.

ஆனா பாருங்க எல்லாரும் பண்ற அதே தப்ப தான் நாங்களும் பண்ணோம்.உப்புமால உப்பு இல்லை.

நண்பர் சொன்னார் "போடா வெண்ண..முப்பத்தஞ்சி ரூபா வேஸ்ட் டா".
நான் இதைத்தான் சொன்னேன் "இப்பொழுது கிடைத்த இந்த அனுபவத்தை வேறு எந்த முத்தஞ்சி ரூபாயும் நிறைவு செய்ய முடியாது" என்று நிச்சயமாக.


ஆனால் பண்பாக வளர வேண்டும் என்று எண்ணியே சேர்க்கபட்ட அந்த பணக்கார நண்பர்களை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

எல்லோருக்கும் ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருத்தது.ஒவ்வொருவரும் தண்ணி,சிகரெட் என்று மாறி இருந்தார்கள்.ரொம்ப வேதனையாக இருந்தது.