Wednesday, September 26, 2012

புரட்சியாளர்

பாரதி என்ற நண்பர் சமீபத்தில் தான் பழக்கம். ஒரே அலுவலகம்.நறுக்கு தறித்தது போல பேசுவார்.சாதாரணமாக நாம் எதாவது பேசினாலும் அதில் எதையாவது புதிதாக கண்டுபிடித்து அவர் நம்மை தாக்குவார்.அது நமக்கே ஒரு மாதிரி இருக்கும்.

அந்த நண்பருக்கும் வீடு தாம்பரம் மெப்ஸ் பகுதியில் தானாம். இன்று தான் எனக்கே தெரியும்.இரண்டு பேரும் பணி சார்ந்து தான் இது வரை பேசிக்கொண்டிருந்திருக்கிறோமே தவிர, இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விசாரணைகள் ஏதும் இருந்ததில்லை. இன்று ஒரே பேருந்தில் ஈகாட்டுத்தாங்கலில் இருந்து தாம்பரம் வரை பயணப்பட்டோம்.

“ உங்க சொந்த ஊர் என்ன? எப்படி இந்த வேலை கிடைச்சிது.இதுல தான் ஆர்வமா?” என்பதாகவெல்லாம் கேள்வி கேட்டார். நானும் ஆர்வமாக பதில் சொன்னவாறு வந்து கொண்டிருந்தேன்.பேச்சு பயங்கர சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது.பேருந்தில் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் “கொஞ்சம் இந்த பக்கம் வர்றீங்களா” என்பதாக தனக்கு முன்னால் இருந்த இடத்தை காட்ட நண்பரும் காரணம் என்னவென யோசித்தவாறே அந்த பெண்ணுக்கு கொஞ்சம் முன்னால் தள்ளி நின்றார்.

நண்பருக்கு என்ன காரணமென்றே தெரியவில்லை.அந்த பெண் ஏன் அப்படி சொன்னார்? நாம என்ன பண்ணோம்.என்பதாகவே யோசித்துக்கொண்டு அவ்வப்போது “சாரி பை பட்டுடுச்சி அதான்” என்று அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்தில் நண்பருக்கு சீட்டு கிடைத்துவிடவே உட்கார்ந்துவிட்டார்.அப்போதும் அந்த பழைய யோசனையிலேயே இருந்தார்.

நான் நைசாக அந்த நண்பரின் காதுக்கருகில் சென்று “பாஸ். அந்த பொண்ணு ஏன் அப்படி சொன்னதுன்னு யோசிக்கறீங்களா?” என்றேன். “ஆமாம்” என்பது போல தலையசைத்தார்.

“அது ஒண்ணுமில்லை.அந்த பொண்ணுக்கு பக்கத்தில் இருந்தவன் அவங்க மேல இடிச்சிகிட்டே இருந்தான்.அது தான் காரணம்” என்றேன்.”அப்படியா? அப்பவே சொல்லக்கூடாதா?” என்றவாரே “இருங்க, அவங்ககிட்ட என்னன்னு கேக்கறேன்” என்றார். “இவர் யார்ரா..என்ன கேக்கப்போறார்..இதை போய் எப்படி கேக்கப்போறார்..கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க” என்பதாக அதிர்ச்சிகலந்த யோசனையில் “அய்யோ வேண்டாம் பாஸ்” என்றேன்.

”அட இருங்க” என்றவாரே.. நான் சொல்ல சொல்ல கேட்காமல் “அவர் என்ன உங்க மேல இடிச்சிட்டிருந்தாரா” என்றார் அந்த பெண்ணிடம். அந்த பெண்ணும் “ஆமாம்.அதனால தான்” என்றார் தர்ம சங்கடமாக “தெரிஞ்சி இவர் என்ன பண்ண போறார்”என்ற ஆர்வம் அவர் கண்களில்.

”ஏங்க அவங்க மேல இடிக்கறீங்க..பஸ்ல வந்தா ஒழுங்கா இருக்கமுடியாதா?” என்று இடித்த ஆசாமியை பார்த்து நண்பர் ஓங்கி குரல் கொடுக்க.எனக்கோ தர்மசங்கடமாகிவிட்டது. “இவர் என்ன புரட்சியாளரா? இல்ல.. பொண்ணுங்களுக்கு எதாவது ஒண்ணுன்னா பொங்குவாரோ” என்பதாக இருந்தது என் எண்ணம்.

இடித்த ஆசாமியும் அசராமல் “யோவ் உனக்கு என்ன? பஸ்ல வந்தோமா நின்னோமான்னு இல்லாம” என்று நண்பரைவிட ஒருமடங்கு அதிகமாக குரல்கொடுத்தார்.

“குடிச்சிருக்கியா? சொல்லுயா..குடிச்சிருக்கியா.போலீஸ்ல சொல்லட்டுமா?” என்றார் நண்பர்.

“நான் என்ன பண்ணேன் போலீஸ்ல சொல்றதுக்கு” - இது அந்த ஆசாமி.
“எதுவுமே பண்ணாம தான் அவங்க சொல்றாங்களா?” என்பதாக அந்த பெண்ணை கைகாட்டினார்.

அந்த பெண்ணும் தனக்கு எதிரே என்ன நடக்கிறது என்று புரியாதவராக “ஆமாம்” என்பது போல அரைதலை அசைத்தார்.

அந்த ஆசாமி சுதாரித்தார்.  ”ஒழுங்கா இருந்துக்கோங்க” என்பதாக நண்பர் குரலெழுப்பினார்.

அதற்குள் அடுத்த ஸ்டாப் வந்துவிடவே, இடித்த ஆசாமிக்கு பக்கத்திலிருந்த சீட்டு காலியாகவே.அந்த ஆசாமியும் இது தான் சாக்கென்று அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.

“பாத்திங்களா.அவன் தப்பு பண்ணலன்னா..எதுக்கு தப்பிக்க பார்த்து இடம் கிடைச்ச உடனே உட்காரணும்” என்றார் நண்பர், என் காதருகே.
நான் இன்னும் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி கலையாதவனாகவே நின்று அவரையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தேன். “ஏங்க,இப்படி பண்றாங்கன்னு எங்ககிட்டயாவது சொல்லக்கூடாதா” என்றார் அந்த பெண்ணிடம். அந்த பெண் ஏதோ சொல்லதயங்க “பஸ்ல இத்தனை ஜென்ஸ் இருக்கோம். நாங்க பாத்துக்க மாட்டோமா” என்றார்.

நாங்கள் இறங்கும் நிறுத்தம் நெருங்கவே படிக்கட்டை நெருங்கியபோது படிக்கெட்டு பக்கத்து சீட்டிலிருந்த பெண் “இவனுங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது” என்றார் “ஆமாங்க.ஒரு வழி பண்ணனும்.இனிமே யார்கிட்டயாவது இப்படி பண்ணுவான்” என்றவாரே இறங்கினார். நானும் அவரை தொடர்ந்து இறங்கினேன்.

அவரிடம் பேசவேண்டி இருந்தது. “என்னங்க? அந்த பொண்ணுகிட்ட போய் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க” என்றேன்.

“பின்ன கேக்காம.இது மாதிரி பிரச்சினையலாம் சும்மா விடக்கூடாது” என்றார்.
“ நீங்க என்ன பாஸ் புரட்சி பேசறீங்க. அந்த பொண்ணு எப்படி ஃபீல் பண்ணிருக்கும்? நீங்க சத்தம் போட்டதுக்கு காரணம் அந்த பொண்ணுதான்னு நினைச்சி, பஸ்ல எல்லாரும் அவங்களையே பாக்க மாட்டாங்களா? அது மட்டுமில்லாம. எனக்கு சம்திங் ராங்க்னு முன்னாடியே தெரியும். நான் பஸ்ல ஏறி கொஞ்ச நேரத்துலயே, உள்ள போகலாம்னு போகப்போனா வழில இந்த ஆளு நின்னுட்டு இருக்கான்.படிக்கெட்டு பக்கத்து சீட்டுல உக்காந்துருந்தாங்கள்ல.அந்த அம்மாவ இடிச்சமாதிரி நின்னுட்டு இருந்தான்”

“இடிச்சிட்டு இருந்தானா.அப்பவே சொல்லக்கூடாதுங்களா” என்றார் நண்பர்.
“இல்ல எனக்கு கன்ஃபார்மா தெரியல.இடிச்சிட்டிருந்த மாதிரி தான் இருந்தது. அந்தம்மாவுக்கு பிறகு குண்டா வெள்ளையா உங்க பக்கத்துல நின்ன பொண்ணுக்கு முன்னாடி ஒரு பொண்ணு இருந்துதே.அது கூட அப்புறம் உட்கார்ந்திருந்தது.அவங்க மேல இடிச்சான். பிறகு தான் இந்த பொண்ணு” என்றேன்.

” நீங்க தான் பேச்சு சுவாரசியத்துல இதெல்லாம் கவனிக்கல” என்றேன் மேலும்.

“ஏங்க அப்பவே சொல்லக்கூடாதா?” என்றார் நண்பர் ஆதங்கமாக. “என்னன்னு சொல்லுவேன்.அந்த பொண்ணே எதுக்கு உங்கள இந்த பக்கம் வர சொன்னாங்க. அவங்க நினைச்சிருந்தா சத்தம் போட்டுருக்கலாம்.ஆனா சத்தம் போட்டா எல்லாரும் நம்மள பார்ப்பாங்க.அசிங்கமா இருக்கும்னு ஃபீல் பண்ணி தான் உங்கள முன்னால வர சொன்னாங்க.ஆனா நீங்க என்னன்னா..சத்தம் போட்டு இப்டி பண்ணிட்டிங்களே” என்றேன்.

“போங்க நீங்க வேற..அவங்களே அவங்களுக்கு சாதகமா பேச ஆள் இல்லைங்கறதுனால தான் அமைதியா இருந்தாங்க.அவங்க நான் பண்ணத நினைச்சி ஃபீல் எல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க. சந்தோசம் தான் பட்டுருப்பாங்க. நமக்காக ஒருத்தன் கேட்டான் பாரு.அப்டின்னு சேட்டிஸ்ஃபை ஆகிருப்பாங்க.என்னால பஸ்ல இருந்த மத்தவங்க மாதிரி பொட்டையா இருக்க முடியாது” என்றார்.

அந்த பொட்டை என்பது எனக்கும் சேர்த்து பொருந்தியதாகவே பட்டது.

அவரிடம் அதை சொன்னபோது “சீச்சி.. இல்ல.. சாரி” என்றார்.
 நீங்கள் விரும்பும் மாற்றம் முதலில் உங்களிலிருந்தே துவங்க வேண்டும் என்ற காந்தியின் வரிகள் எனக்கு முன்னால் சம்பவங்களாக நடந்ததாக தோன்றியது.

Sunday, September 23, 2012

சாட்டை – சேட்டை!!



ஒரு அரசுப்பள்ளி.. ”நம்ம ஸ்கூல்ல எதாவது மாற்றம் கொண்டு வரணும்” என்று உணர்ச்சிவசப்பட்டு நரம்பு புடைக்க பேசுகிற தலைமை ஆசிரியர்.அந்த மீட்டிங்கில் அவ்வப்போது அவரை மதிக்காமல் கமெண்ட் கொடுக்கிற உதவித்தலைமை ஆசிரியர்.

அந்த பள்ளிக்கு புதிதாக பிசிக்ஸ் வாத்தியாராக வேலைக்கு சேரும் சமுத்திரக்கனி முதல் முதலில் அந்த மீட்டிங்கேடு தன் எண்ட்ரியை துவங்குகிறார். எல்லா வாத்தியார்களும் “இந்த பசங்கள வச்சி மேய்க்க முடியாது” என அந்த மீட்டிங்கில் புலம்ப.. சமுத்திரக்கனியோ ஃபேஸ்புக் புரட்சியாளர்களைப்போல பிரச்சினையின் பரிமாணம் எதுவும் தெரியாமல் புரட்சிபேசுகிறார்.

எல்லோரும் அவரை எகத்தாளமாக பார்க்க..அவர் தான் விரும்பு மாற்றத்தை அந்த பள்ளியில் எப்படி செயல்படுத்துகிறார் என்பது தான் கதை. நடுநடுவே பசங்களின் காமெடியோடு உதவித்தலைமை ஆசிரியரின் காமெடியும் சேர்ந்துகொள்ள படம் இடைவேளை வரை களைகட்டுகிறது.கசப்பு மருந்தோடு இனிப்பை சேர்ந்து பறிமாறும் இயக்குனரின் இந்த முயற்சி இடைவேளை வரை நன்றாக வேளை செய்திருக்கிறது.சமுத்திரகனியின் புரட்சிவசனங்கள், மற்ற ஆசிரியர்களின் பாலிடிக்ஸை அவர் எதிர்கொள்ளும் விதம் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என படம் முழுக்கவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.

“நீங்கள் விரும்பும் மாற்றம் முதலில் உங்களிலிருந்தே துவங்க வேண்டும்” என்ற காந்தியின் வசனம் தான் படத்தின் ஒன்லைன்.
நேற்று தேவி தேட்டரில் ஆள் குறைவாக இருக்கும் போது “தெரியாத்தனமா வந்துட்டோமோ” என்ற எண்ணமே ஆரம்பத்தில் ஏற்பட்டது.படம் இடைவேளை வரும்போது நம்ம ஜட்ஜ்மெண்டு ரொம்ப வீக்கு. படத்த என்ன அருமையா எடுத்துருக்காய்ங்க என்று தோன்றியது.

இண்ட்ரவல் வரை கதை தான் ஹீரோவாக இருந்தது.ஆனால் இடைவேளை முடிந்த சில நிமிடங்களில் ஹீரோதன் புரட்சிகரமான கருத்துக்களால் ஹீரோயிசம் பண்ணுகிறார்.உதாரணமாக கலை விளையாட்டு போட்டிகளில் 22 வருடமாக எந்த சாதனையும் செய்திராத இந்த அரசுப்பள்ளி திடீரென தனியார் பள்ளிகளோடு போட்டி போட்டு முதல் இடம் பெறுகிறது.

கிளைமேக்ஸில் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதனை புரிவதெல்லாம் ரொம்ப ஓவர்.க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க தியேட்டரில் எல்லோரும் சமுத்திரக்கனியின் பஞ்ச் பொறுக்க முடியாமல் உச் கொட்டுவதை வைத்தே நம்மாட்களின் பொறுமை ரொம்ப சோதிக்கப்படுவது உறுதி செய்யமுடிகிறது.

ஹீரோ போல வரும் பையன் நல்லா நடிச்சிருக்கான். ஒவ்வொருத்தர் ஸ்கூல்லயும் இதுபோல தடியன் யாராவது இருந்திருப்பார்கள்.ஹீரோயின் குடும்பப்பாங்கான ஃபிகராக இருப்பதால் நாமும் அவ்வப்போது ஜொல்லுகிறோம்.ஆனால் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான காதல் சிரிப்பை வரவழைக்கிறது. அந்த காதல் மெச்சூர்டான தளத்தை நோக்கி நகர்வது ஆர்ட்டிட்ஃபீசியலாக இருக்கிறதே தவிர கதையோடு ஒட்டவில்லை.அரதப்பழசான இது போன்ற விக்ரமன் பாணியிலான காதல்கள் தியேட்டரில் எல்லோரையும் கடுப்பேற்றுகின்றன.

எல்லோரும் அளவான நடிப்பை கொடுத்திருப்பது படத்தின் பிளஸ்.சமுத்திரக்கனி மட்டும் சீரியஸாக ஃபேஸை வைத்துக்கொண்டு காமெடி பண்ணுகிறார்.

படம் சொல்லவிரும்பும் சேதி “ மாணவர்களை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆசிரியர்களை தான் மாற்ற வேண்டும்” என்று படம் போதிப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இது அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்தே பொருந்தும். அரசுப்பள்ளி ஆசிரியர்களில் சிலர் ஒருவகை சைக்கோக்களென்றால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேறு நவீன சைக்கோ வகையை சேர்ந்தவர்கள் என்பதை சொல்ல வேறு வகை கதையம்சமுள்ள ஸ்க்ரிப்ட் தேவைப்படுகிறது. அதற்கான ப்ளாட்ஃபார்ம் தற்போது அதிகரித்துள்ளதை இயக்குனர்கள் உணர வேண்டும்.

படத்தின் கேமராவும், இசையும் வலு சேர்த்திருக்கின்றன என்றாலும், படத்தின் பின்னணி இசை, சீரியல்களில் வரும் இசையை போல வழவழ கொழகொழவாக கடுப்பேற்றுகிறது. மற்றபடி படத்தை ஒருமுறை பார்க்கலாம். காமெடி அம்சங்களுக்காக வேண்டுமானால் படம் கிராமங்களில் ஓடலாமே தவிர படத்தின் உட்கரு எல்லோரையும் சேருமா என்பது சந்தேகமே.

Sunday, September 9, 2012

தன்னம்பிக்கை கூட்டங்கள் - mindfresh


”இந்த ஐநூறு ரூபாய் யாருக்கு வேணும்”

ஒரு பெரிய ஹோட்டலில் கோட்டு சூட்டு போட்ட ஆசாமி ஒருவர், வயர்லெஸ் மைக்கை கழுத்தில் சட்டை பட்டனுக்கிடையே மாட்டிக்கொண்டு தன் போச்சிணூடே இரண்டாவது வரிசையில் இருந்த நபர் ஒருவருக்கு அருகில் சென்று கேட்ட கேள்வி தான் “இந்த ஐநூறு ரூபாய் யாருக்கு வேணும்”.. அந்த நபரின் முகத்திற்கருகே சென்று “டூ யூ வாண்ட் திஸ் ஃபைவ் ஹண்ட்ரட்”..

அந்த ஆசாமி ஒரு நிமிடம் அந்த ஐனூறை பார்க்கிறார்.. “தருவானா.. மாட்டானா...” என்பதாக அந்த ஐனூறை பார்த்தவாறே யோசிக்கிறார்.எதுக்கு வம்பு அமைதியாவே இருப்போம்.. நாம கேக்க போய் அந்தாளு எதாவது மொக்க போடப்போகிறார்.. என்ற யோசனையில் அமைதியாகவே இருக்கிறார்.


ஒட்டு மொத்த கூட்டத்தின் நடுவே சென்று “யாருக்கு வேணும் இந்த ஐனூறு”
“கைதூக்குங்க பாஸ்” என்கிறார்.. யோசித்து யோசித்து ஒவ்வொருவராக  கைதூக்குகிறார்கள்.

பேச்சாளர் கூட்டத்தை உற்று பார்த்தவாறே ” நம்மளோட நோக்கம் ஐனூறு ரூபாயில்லை.. ஐனூறு கோடி”
கூட்டத்திலிருக்கும் எல்லோரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள்.
“டூ யூ பிலீவ் இட்..ஆர் நாட்.. வீ கேன்.. ஐ ஹேவ் மோர் எக்சாம்புல்ஸ் ஹியர்..” என தன் பேச்சை காரசாரமாக தன்னம்பிக்கை தெறிக்க நரம்பு புடைக்க பேசுகிறார்.

இது ஒரு பிசினஸ் மீட்டிங். நான் கல்லூரியில் படிக்கும்போது சும்மா போய் பாப்போமே என நுழைந்த மீட்டிங் தான் இது. பள்ளி பருவத்திலிருந்து கார்பரேட் வேலையில் சேர்ந்த பிறகு கூட நிறைய தன்னம்பிக்கை தொடர்பான சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.

ஆரம்பத்தில் கலந்து கொண்ட மீட்டிங்குகளில் முடிந்து வெளியே வரும்போது ரத்தம் தெறிக்க நம்பிக்கை பொங்கி.. வெளியே வரும்போது வெறியாக வருவேன். நான் மட்டுமல்ல. என்னோடு நிறைய பேர் இதே மாதிரிதான்.விக்ரமன் படத்தில் வருவது போல ஒரே ராத்திரியில் ரத்தன் டாட்டா ஆகிவிட வேண்டுமென்ற வேகம் வரும். கூட்டத்தில் பேசுபவர்கள் கை நிறைய வடிவேலு காமெடிகளை அள்ளி வீசியவாறே அம்பானி கதைகளையும், அமெரிக்க ஆசாமிகளை பற்றியும்  அள்ளி விடுவார்கள். நடு நடுவே டி.ஆர் போல ரெண்டு மூணு நச் பஞ்ச்கள் இடம் பெறும். வெளியே போகிறவரை நல்லா பொழுது போகும்.வீட்டுக்கு போய் டிவியை ஆன்செய்கிறவரை தான் தன்னம்பிக்கையும் டைம் மேனேஜ்மெண்டும்.அதன்பிறகு சேப்டர் கொளோஸ்.அடுத்த வேலையை பார்க்க போய்விட வேண்டியது தான்.

தன்னம்பிக்கை மீட்டிங்குகளில் பங்கு பெறும் பலரின் நிலையும் இதே தான்.ஒவ்வொரு வருடமும் புத்தகத்திருவிழாக்களில் தன்னம்பிக்கை புத்தகங்கள் சக்கைபோடு போடுகின்றன.அதன் கதை வேறு.பத்து பக்கம் தாண்டியதும் மட்டையாகிடுவோம்.தன்னம்பிக்கை என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு போதை.இங்கே கார்பரேட் டிரெயினிங் என்பதும், ஸாஃப்ட் ஸ்கில் ட்ரெயினிங் என்பதும் குடிசைதொழிலாகி ரொம்ப நாளாகிறது.டாஸ்மாக் செய்யும் அதே வேலையை காசைவாங்கிக்கொண்டு இவர்கள் செய்கிறார்கள்.



உண்மையிலேயே இது போன்ற ட்ரெயினிங் எடுக்கிறவர்கள் நம் வாழ்க்கையை மாற்றுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்களா. இது போன்ற நிகழ்ச்சி எடுப்பதற்கு என்னதான் கல்வித்தகுதி? வெறுமனே பேச்சுத்திறமை மட்டும் போதுமா. இணையத்திலிருந்து சில தகவல்களை பவர்பாயிண்டில் புகுத்தி இரண்டு மூன்று வடிவேலு காமெடியை சேர்த்து அடித்து விட்டால் வேலை முடிந்ததா? என்ற கேள்விகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும்.

சென்னை ஐஐடிஎம் ரிசர்ச் சென்டர்.. இன்று காலை ஒரு சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்.இந்த முறை நிறைய எதிர்பார்ப்பு.காரணம் நண்பர் ஒருவர் சொன்னது.”எடுப்பவர் மற்றவர் போலல்ல.சைக்காலஜிஸ்ட்.மைண்ட் ட்ரெயினர்”.பெயர் கீர்த்தன்யா.பதினைந்து ஆண்டுகளாக மைண்ட் ட்ரெயினராக பணியாற்றிவருகிறார் என்ற தகவல்.குழந்தைவளர்ப்பு பற்றிய சைக்காலஜிக்கல் தொடர் ஒன்றை திருச்சி தினமலர் பெண்கள் மலர் பதிப்பில் எழுதியபோது நான் படித்திருக்கிறேன்.

பெரும்பாலும் சைக்காலஜிஸ்டுகளெல்லாம் லெக்சரர்களை போல மணிக்கணக்காக பாடம் நடத்தி நம்மை தாலாட்டி தூங்க வைப்பார்கள் என்ற என் நம்பிக்கையை கீர்த்தன்யா தவிடுபொடியாக்கிவிட்டார்.இத்தனைக்கும் ஒரு வடிவேலு காமெடிகூட இல்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி பீட்டர் விடாமல் நமக்கு தெரிந்த பரிச்சயமான வார்த்தைகளையும் உதாரணங்களையும் பயன்படுத்தி அழகாக, நேர்த்தியாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளை போட்டு மெல்லிய குரலில், அட்வைஸ் பண்ணுகிற தொணி ஏதுமில்லாமல் அவர் பேசும் பேச்சை நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

”நம் மனதுக்கு அதீத சக்தி இருக்கிறது. அது தான் நினைப்பதை கண்முன்னே நடத்திக்காட்டவல்லது” என்ற சைக்காலஜிக்கல் கலந்த அறிவியல் தான் தலைப்பு.தலைப்பும், சொல்ல வந்த கருத்தும் அறிவியல்பூர்வமானதாக இருந்தாலும், யாராலும் நம்ப முடியாத கருத்துக்களை உள்ளடக்கியது என்பதால் விளக்குவது சிரமம்.காரணம் கொஞ்சம் ஏமாந்தால் கேட்பவர்கள் கடவுளை உள்ளே இழுத்துக்குழப்பிக்கொள்வார்கள்.இல்லையென்றால் பீலா என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஜக்கியும்,கார்பரேட் சாமியாரான சுகபோதானந்தாவும் போலல்லாமல்ஆன்மீக உதாரணங்கள் ஏதுமில்லாமல் சில அறிவியல் ரீதியான விளக்கங்கள் தான் கீர்த்தன்யாவை தனித்துகாட்டுகிறது.


மூளை எப்படி தகவல்களை உள்வாங்குகிறது,அது எப்படி தான் நினைப்பதை கண்முன்னே நிகழ்த்திக்காட்டுகிறது, அது ஏற்படுத்தும் தாக்கம் நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி குழப்பாமல்,முக்கியமாக தூக்கத்தில் தள்ளாமல் ,தலைப்புக்குள்ளேயே நம்மை சிக்கவைத்து மிகத்திறமையாக யோசிக்க வைக்கிறார் கீர்த்தன்யா.கூடவே சில பயிற்சிகளும் நம்முள் எதோ ஒரு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

சொல்லப்போனால் சுகிசிவமும்,கோபிநாத்தும் கொடுத்துவிடமுடியாத சில அசாத்திய நம்பிக்கைகளை இவரின் அறிவியல் பூர்வமான பேச்சு  நமக்கு கொடுக்கிறது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது ரொம்ப நாள் முன்னால் படித்த ஒரு சைக்காலஜிகல் கதை நினைவுக்கு வந்தது.அது கீர்த்தன்யாவின் மைண்ட் ப்ரோக்ராமோடு நேரடி தொடர்புடையது.

ஒரு கோழிக்குஞ்சுகூட்டத்துக்குள் துரதிருஷ்டவசமாக ஒரு கழுகுக்குஞ்சு சிக்கிக்கொள்கிறது. கோழிக்குஞ்சு வளர வளர கழுகுக்குஞ்சும் வளர்கிறது.எல்லாமே வளர்ந்து பெரிதானதும் கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் வளரும் கழுகு தன்னை கோழியாகவே நினைத்து, கோழியின் மேனரிசத்தோடே வளர்கிறது.வளர்ந்த அந்த கோழிகளோடு இந்த கழுகு விளையாடுவதை தூரத்திலிருந்து ஒரு வேடன் பார்க்கிறான்.
அவனுக்கு ஆச்சரியம்.கழுகு கோழிக்குஞ்சை அடித்து சாப்பிடும் குணம் கொண்டது.”இது எப்படி இந்த கூட்டத்தில்? அதுவும் பறக்க முடியாமல் தடுமாறியவாறு” என்ற கேள்வி அவனுக்குள்.

 கார்மேகங்கள் சூழ்ந்து மழை வரும் அறிகுறி தோன்றும் வேளையில் எல்லா ஜீவராசிகளும் தங்களுடைய கூடுகளில் அடைபட்டுக்கொள்ளும்.ஆனால் கழுகு தான் அந்த மேகத்தையும் தாண்டி வானத்தில் பறக்கும்.அதன் கனவு அவ்வளவு பெரிது.

ஆனால் அந்த கழுகு கோழிக்கூட்டத்துக்கு மத்தியில். அந்த கழுகுக்கு அதன் பலத்தை உணர்த்துகிறான் வேடன்.அனுமானுக்கு ஜாம்பவான் உணர்த்தியதை போல.பின்அது வானில் சிறகடித்து பறக்கிறது. நாமும் கூட கோழிகளுக்கிடையில் வளர்ந்த கழுகுதான். கீர்த்தன்யா போல யாரோ ஒருவர் தெளிவான விளக்கத்தோடு தேவைப்படுகிறார்.அவ்வளவே!!

கீர்த்தன்யாவின் நிகழ்ச்சி பற்றிய அறிய mindfresh.in

Monday, September 3, 2012

இனி நான் பத்திரிக்கையாளனாகவே போவதில்லை


இனி நான் பத்திரிக்கையாளனாகவே போவதில்லை

கல்லூரி மூன்றாவதாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது விகடன் மாணவர்பத்திரிக்கையாளர் திட்டத்தில் தோல்வியுற்றபோது இப்படி தான் நினைத்திருந்தேன்.சென்னையில் காக்னிசண்ட் மென்பொருள் நிறுவனத்தில் பிபிஓ பிரிவில் சேர்ந்த போது அதை மீண்டுமொருமுறை உறுதி செய்திருந்தேன்.

அப்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புதிது.மாமா வீட்டில் தான் தங்கி இருந்தேன்.ஒரு ஞாயிற்றுக்கிழமை மெயில் செக் செய்துகொண்டிருந்தேன். “புதியதலைமுறை பத்திரிக்கையாளர் திட்டத்தில் முதல்கட்டத்தேர்வில் தேர்வாகியுள்ளீர்கள்.அடுத்தக்கட்ட எழுத்துத்தேர்வு திருச்சியில் நடக்கிறது.இது தொடர்பான கடிதம் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதை எடுத்து வந்து பங்கு பெறவும் என்பதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்மாவுக்கு உடனடியாக போன்செய்தேன்.

லெட்டர் எதாவது வந்துருக்கா
ஆமா,புதியதலைமுறையிலிருந்து வந்திருக்கு
எதுக்கு சொல்லலை
உனக்குதான் வேலை கிடைச்சிடுச்சே.அதான்.எப்புடியும் போகப்போறதில்லை
யார் சொன்னா
அப்ப போகப்போறியா
ஆமா
ஏற்கனவே வேலையில இருந்துகிட்டே இதுல எழுதறது எல்லாம் நடக்கற காரியமா. நாய் வாயை வெச்ச மாதிரி எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கறதே உனக்கு வேலையா போச்சி
யம்மா..அப்படி சொல்லாத உனக்கு தான் என்னைப்பத்தி எதுவும் தெரியல.காலேஜ் படிச்ச அப்பதான் எதுவும் கிடைக்கல. இப்பவாவது வாய்ப்பு கிடைச்சிருக்கு போகலாம்னு பாத்தா நீ மொக்க போட்டுகிட்டு இருக்க
அப்ப நீ திருச்சி வரப்போறியா
தெரியல.இன்னும் முடிவு பண்ணல
சரி எதுவா இருந்தாலும் யோசிச்சிக்கோபரஸ்பரம் இருவரும் போனை அணைத்தோம்.

நீண்ட யோசனைக்கு பிறகு புதியதலைமுறை அலுவலகத்திற்கு போன் செய்தேன்.சென்னையிலிருப்பவர்கள் சென்னையில் கலந்து கொள்ளலாம் நோ ப்ராப்ளம்என்ற பதில் எனக்கு சந்தோசத்தை கொடுத்திருந்தது.

எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் எப்படியோ தேர்வாகி இருந்தேன்.இந்த முறை இரண்டு நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடப்பதாக லெட்டர் வந்திருந்தது. வீட்டில் கடுமையான எதிர்ப்பு. பத்திரிக்கை வேலை சோறு போடாது.உருப்படாம போய்டுவ.இப்ப இருக்கற வேலையையும் கெடுத்துக்காத... உனக்கு என்ன எழுத வரும்.. எழுதறதுன்னா சும்மாவா...என பயங்கறமாக என்னை மோட்டிவேட் செய்தார்கள்.

காதலில் ஜெயிக்க விரும்புபவர்களும், மீடியாவில் ஜெயிக்க விரும்புபவர்களும் அம்மா அப்பாவை பகைத்தே ஆக வேண்டும் என்பது சமூக நியதி. இரண்டுமே வாழ்க்கை தொடர்பானது. என்பதை அப்போதுதான் உணர்ந்திருந்தேன். வெற்றி கரமாக அவர்களிடம் சண்டை போட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் சுமாராக தான் எழுதினேன். அப்புறம் நிறைய முயற்சி செய்தேன்.கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். குழந்தை நடை பயில்வதை போல. நான் நடை பழுகுவதை அவர்கள் பார்க்க பார்க்க அவர்களுக்குள்ளும் மெல்ல மெல்ல மாற்றம் நடந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

பத்திரிக்கையில் வாரம் வாரம் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்திருந்தேன். காக்னிசண்டில் இரவு நேரப்பணி.பகலில் பத்திரிக்கை பணி.எல்லா நாட்களிலும் அல்ல. வாரம் இரண்டு நாட்கள் மட்டும்.

டேய் உடம்ப கெடுத்துக்காதடா. நல்லா நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு.பத்திரிக்கை எல்லாம் எதுக்குஎன்பதாக பாசம் பொங்கினார்கள்.

 என்னுடைய ஒரே நோக்கம் ஜெயிப்பதல்ல. அம்மா அப்பா பேச்சை கேட்கக்கூடாது என்பதாக மாறியிருந்த காலம் அது. அதே நேரம் வேறு வகையான நெருக்கடி பிறந்திருந்தது.காக்னிசண்டில் என் டீமில் நெருக்கடியான காலக்கட்டம் அது. வேலை எங்காவது தேங்கினால் எல்லா கேமராவையும் என் மேல் ஃபோகஸ் செய்வார்கள்.

“உன்னோட எய்ம் என்ன?என் சீனியர் ஒருவர் பாசமாக என் தோளில் கைக்கொண்டே இவ்வாறு கேட்டார்.

“சமஸ் மாதிரி ஒரு பெரிய பத்திரிக்கையாளரா ஆகணும்என்றேன்.

அப்ப என்ன பண்ணனும். எதாவது ஒண்ணுல கான்சண்ட்ரேட் பண்ணனும்.இதுல பாதி அதுல பாதின்னு இருக்க கூடாது

இத்தனைக்கும் காக்னிசண்டில் நான் ஒழுங்கா வேலை பார்க்காமலெல்லாம் இல்லை. இரண்டு முறை சிறந்த பணியாளர் விருது வாங்கி இருந்தேன்.(Wah award). அதுமட்டுமல்லாமல் ஒரு வருடம் முழுவதும் லீவே எடுக்காததுக்கு ஒரு விருது வழங்கி இருந்தார்கள்.

அங்கே வேறு யாருக்கும் இது போல வேறு உருப்ப்படியான வேலை கிடையாது.அதனால் வேலை எங்காவது தேங்கினால் நம்மை அட்டாக் பண்ணுவார்கள்.

எப்படியோ எல்லோரையும் சமாளிக்க பழகி இருந்தேன். சமீபமாக அதீத பணியின் காரணமாக பத்திரிக்கையில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருந்தேன்.

“என்னடா பத்திரிக்கையில உன்னோடது எதையுமே காணோம்என் அப்பா விசாரிக்கிறார்.

ஆபீஸ் பிளாக்கில் எழுதுவதை பார்த்துவிட்டு “பையனை சாதாரணமா நினைக்காதீங்க..பத்திரிக்கையிலலாம் எழுதறான்என்றார் அலுவலகத்தில் அன்று அட்வைஸ் செய்த அந்த அண்ணன்.

புதியதலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்த பிறகு வாழ்க்கை பற்றிய என் பார்வை மாறி இருக்கிறது உண்மை. பத்திரிக்கை பற்றிய பார்வையும் மாறி இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.சொல்லப்போனால் முழு நேர பத்திரிக்கையாளருக்கு கிடைத்த அதே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது.

கல்லூரியில் விஸ்காம் அல்லது ஜெர்னலிஸம் பாடம் எடுக்க வேண்டும் என்பது என் பள்ளி ஆசை.அந்த வருத்தத்தையெல்லாம் புதியதலைமுறை நிறைவு செய்தது.

நேற்று மாலை ஆசிரியர் திரு மாலன் அவர்களின் கையால் “2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பயிற்சி பத்திரிக்கையாளர்என்ற அங்கீகாரத்தை வாங்கிய அந்த கணம் மறக்க முடியாததாக ஆனதற்கு காரணம்.
நான் இது வரை எந்த பத்திரிக்கையிலும் கதை கட்டுரை ஏன் வாசகர் கடிதம் கூட எழுதியிருந்ததில்லை. பத்திரிக்கையில் சேரும் வரை எப்படி எழுதவேண்டும் என சுத்தமாக தெரியாது.

சிறந்த பயிற்சிபத்திரிக்கையாளர் விருது வாங்கிய போது எனக்கு காந்தியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

ஆரம்பத்தில் யாருமே கண்டுக்கொள்ளமாட்டார்கள்..
அப்புறம் எல்லோரும் பார்த்து சிரிப்பார்கள்..
பிறகு எல்லோரும் சண்டைக்கு வருவார்கள்.,
கடைசியில் நீங்கள் ஜெயித்திருப்பீர்கள்..

இப்பொழுது வரை என்மேல் பெரிய நம்பிக்கை வைத்திராத என் அம்மா அப்பாவிற்கு இதை சமர்ப்பிக்கிறேன்.