Sunday, November 23, 2014

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கக்கோரி சைக்கிள் பயணம்!

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கக்கோரிய போராட்டமும் பரப்புரையும் இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒரு பயணமாக நடத்துகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கும் இந்த போராட்டம் நவம்பர் 3 ஆம் தேதி போபாலில் நிறைவடைகிறது. போபால் விஷவாயுக்கசிவு நடந்து இந்த டிசம்பரோடு 30 வருடம் ஆகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி போபால் மக்களோடு அவர்களின் நினைவுகூடலில் கலந்துகொள்கிறோம்.
சைக்கிள் பயணம் குறித்த திட்டமிடல்
 கல்வியில் தனியார் மயம் மக்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து போபால் செல்வதற்கு முன் அவர்களுடன் ஒரு நாள் உரையாட திட்டமிட்டிருந்தோம்.

அந்த ஒரு நாளாக நேற்று அமைந்தது. காலை 7 மணிக்கு இளந்தமிழகம் அமைப்பை சேர்ந்த தோழர் நாசர் வாழ்த்தி பேசிய பின் சைக்கிள் பயணம் துவங்கியது.சுமார் 18 பேர் கொண்ட குழுவாக கிளம்பி தாம்பரம் ரயில்வே மைதானத்திற்கு சென்றோம். ஞாயிற்றுகிழமை என்பதால் நிறைய பேர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களிடம் நோட்டீஸ் விநியோகித்தோம்.
சைக்கிள் பயணம் துவங்கிகுறது
சைக்கிள் பயணத்தை ஒட்டி

அங்கே கிறிஸ்துராஜா நடுநிலைப்பள்ளி இருக்கிறது. அது தான் தாம்பரத்தின் முதல் பள்ளிக்கூடம். இங்கே படித்த பலரும் இன்று மிக முக்கியமான பதவியில் இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ரயில்வே நிர்வாகம் இந்த பள்ளியை இடிக்க திட்டமிட்டிருக்கிறது. தண்டவாளம் போடப்போகிறார்களாம். மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பின் அது அப்போதைக்கு கைவிடப்பட்டிருக்கிறது. அப்போது போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் இப்போது அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். (அவர் வெள்ளை சட்டை போட்டிருந்தார். சட்டை பேக்கட்டினுள் வைக்கப்பட்டிருந்த அட்டையில் அம்மா படம் பொறிக்கப்பட்டிருந்தது வெளியில் தெரிந்தது) அவர் எங்கள் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். 


தாம்பரம் ரயில்வே மைதானத்தில்
கிறிஸ்துராஜா பள்ளி
பிறகு பூண்டிபஜார் டீக்கடையில் அங்கிருந்தவர்களிடம் பேசினோம், முழக்கமிட்டோம், டீ, வடை சாப்பிட்டோம். பிறகு ஏரிக்கரை தெரு டீக்கடையில் பேசினோம். அதன்பின் வழக்கறிஞர் இந்திராவின் வீடு வழியே சென்றபோது அவர் எங்களுக்கு வாழ்த்து வழங்கி பேசினார். அரண் அமைப்பில் இருக்கும் தோழர் மதுவின் வீடு வழியே சென்ற போது, வலுக்கட்டாயமாக உட்காரவைத்து நெல்லிக்கனி சாறு கொடுத்தார். அந்த பாணம் வாய்க்குள் சென்ற போது உடம்பெல்லாம் சிலுப்பிக்கொண்டு புதிய உற்சாகம் கிளம்பியது.
தோழர் வெஸ்ட்லிக்கு நினைவுப்பரிசு வழங்கியபோது

வழியில் தோழர் வெஸ்ட்லி எங்களை வாழ்த்தினார்.அவருக்கு நினைவுபரிசு வழங்கினோம்.நினைவுப்பரிசை வழங்கியவர் பள்ளி முழுவதும் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபகாலமாக தமிழ்வழியில் படித்ததாலேயே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பாரதி சொன்னார். எங்கள் கூட்டத்திலேயே நானும் அந்த பையனும் மட்டும் தான் தமிழ்வழியில் படித்தவர்கள். எனக்கு அவர் போல் எந்த வித மன உளைச்சலும் இல்லை. நான் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். காரணம் நான் படித்து முடித்த உடனேயே வேலைக்கு சென்றுவிட்டதாக இருக்கலாம். தமிழ்வழிக்கல்வியில் படித்த ஒருவருக்கு தன்னம்பிக்கை வரவேண்டுமென்றால் அவருக்கு வேலை கிடைக்க வேண்டி இருக்கிறது
தோழர் பிரேமா வாழ்த்திய பின்

அடுத்து தோழர் பிரேமா  வீடு வழியே சென்ற போது அவர் எலுமிச்சை சாறு கொடுத்து உபசரித்தார். வழியெல்லாம் சந்திக்கும் எல்லோரும் எதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பின்னர் தோழர் பிரேமாவோடு கண்ணகி தெரு குடிசை மாற்றுவாரியத்திற்கு சென்றோம். அங்கிருந்தவர்களிடம் பேசினோம். 

"நீங்க தமிழ்வழிக்கல்வியில் படிக்க சொல்றீங்க.. ஆனா எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இங்கிலிஷ் மீடியத்துல படிக்கறாங்க.. நாங்க எங்க பசங்கள தமிழ்மீடியத்துல படிக்க வெச்சா அவங்க மதிக்க மாட்றாங்க.. இதுக்காகவே கடன உடன வாங்கியாவது அவங்கள இங்கிலிஷ்ல படிக்க வைக்க வேண்டி இருக்கு.. என்னப்பா பண்றது" என்று ஒரு குடும்பத்தலைவி தன் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார். 

இன்று இஸ்ரோவில் மங்கள்யான் அனுப்பிய விஞ்ஞானிகள் எல்லோரும் தாய்வழிக்கல்வியில் படித்தவர்கள். இதையெல்லாம் சொன்னால் "என்னப்பா பண்றது. எங்க பசங்க முன்னேறனும்ல.. தமிழ்ல படிச்சா முன்னேறாது" என்று சொன்னார்கள். சொல்லப்போனால் பிரிட்டிஷ்காரன் இருந்தபோதுகூட நாம் தாய்வழிக்கல்வியில் தான் படித்தோம். இப்போது தான் இவ்வளவு கொடுமையாகி இருக்கிறது.

நம்மிடம் அவர்கள் ஏன் தாய்வழிக்கல்வியில் படிக்க வேண்டும் என்பதற்கான போதுமான தரவுகள் இல்லை. இன்னும் இதில் உழைக்க வேண்டி இருக்கிறது. இன்னொன்று அவர்கள் பார்த்த அரசுப்பள்ளிக்கூடங்களின் தரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வழக்கறிஞர் சங்கர் வாழ்த்தியபோது

பிறகு தாம்பரம் சேனட்டோரியம் ஆட்டோஸ்டாண்ட் பகுதிக்கு சென்றோம். அதன்பிறகு வழக்கறிஞர் சங்கர் எங்களை வாழ்த்தி பேசினார். "இன்னைக்கி ரெண்டு கிலோ மீட்டர் பைக்ல போறதுக்கே ஒரு மாதிரி இருக்கு, நீங்கள்லாம் போபால் வரைக்கும் சைக்கிள்ல போகப்போறீங்க என்பதை நினைக்கும் போது பெருமையா இருக்கு" என்றபோது நாங்கள் திருதிருவென விழித்தோம். அவர் தவறாக புரிந்துகொண்டுவிட்டார் போல. 

பிறகு மேற்கு தாம்பரத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேசினோம். எங்கள் போராட்டங்களில் பங்கெடுக்கும் ஆல்வின் என்பவரின் வீடு அந்த பகுதிக்கு பக்கத்தில் தான் இருந்தது. அவர் தன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அவரின் அம்மா எங்களை பார்த்து மிகுந்த உற்சாகம் அடைந்தார். "நல்ல வேள நம்ம பையன் நல்ல குரூப்ல தான் சேர்ந்திருக்கான்" என்பது போன்ற பெருமிதம் அவரின் முகத்தில் காணப்பட்டது.

தோழர் ஜீவா மணிக்குமாருக்கு நினைவுப்பரிசு வழங்கல்
மதிய உணவை தோழர் தயாளன் கவனித்துக்கொண்டார். பின் மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தோழர் ஜீவாவின் வீட்டிற்கு சென்றோம். ஜீவா துவங்கி வைத்த அவ்வை பள்ளிக்கூடத்தை இப்போது அவரின் மகன் மணிக்குமார் தான் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினோம். அவர் தன் அப்பாவுக்கும் இப்போது இருப்பர்வர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பொருத்திபார்த்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தோழர் காளீஸ்வரனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்

பின் மாற்று ஊடகத்தை சேர்ந்த தோழர் காளீஸ்வரன் எங்களை வாழ்த்தி பேசினார். பின் காந்தி நகர் சென்றோம். அங்கிருந்த ஆப்ரஹாம் தோழர் எங்களை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த பகுதி மக்களோடு சுமார் ஒன்றரை மணி நேரம் செலவிட்டோம். பின் தாம்பரம் கடைவீதிக்கு சென்றோம். அங்கே மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த சலீம் தோழர் எங்களை வாழ்த்தி பேசினார். அங்கிருந்த நூலகம், கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகித்தோம். பின் தி.க தோழர்கள் எங்களை வாழ்த்தினர். 

இறுதியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சானட்டோரியம் பகுதி ரயில்வே நிலையத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த தாத்தா ஒருவர் எங்கள் நோட்டீஸை பார்த்துவிட்டு ஆர்வமாகி எங்களுக்கு டாட்டா குளுக்கோஸ் நீர் வாங்கித்தந்தார். (நாங்கள் அந்த டாடா நீருக்கு எதிரானவர்கள் என்ற போதும் அவரின் அன்பால் ஏற்றுக்கொண்டோம்). அவர் இது போன்ற போராட்டங்களின் தேவை குறித்து பேசினார்.


வீடு வரும் போது மணி மாலை 7.20 ஆகியிருந்தது. அரங்கக்கூட்டத்திற்கும் மக்கள் சந்திப்பிற்கும் உண்டான வித்தியாசத்தையும் இதன் மூலம் புரிந்துகொண்டோம். அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதித்து கலைந்தோம்.

மதிய உணவு இடைவெளியின் போது ஆடு ஒன்றிடம் போராட்டம் பற்றி விவாதித்துகொண்டிருந்தேன்.. அந்த ஒளிப்பதிவு



1 comment: