Tuesday, October 30, 2012

பிக்பஜாரில் பை தொலைந்த அனுபவம்

கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி.அலுவலக வேலை விஷயமாக வெளியூர் போகவேண்டி ஏற்பாடானது.கைவசம் இருந்த ட்ராவல் பேக் எல்லாம் வீணாகிவிட்டதால் “புதுசா வாங்கத்தான் போறோம். ஃபாஸ்ட்ராக்ல வாங்குவோம்” என்பதாக பாண்டிபஜாரில் fastrackல் bag ஒன்றும், வாட்ச் ஒன்றும் சேர்த்து சுமார் 3000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டு வெளியேறினேன்.மணி மாலை 7மணி இருக்கும்.

அப்படியே டிசர்ட் எதாவது வாங்கலாம் என பாண்டிபிக்பஜாரில் உள்ள பிக்பஜாருக்குள் நுழைந்த போது வெளியே ஒரு கை தடுத்தது.”bagஅ இங்கே குடுத்துட்டு போங்க” என்பதாக. அப்போது தான் புத்தம் புதிதாக வாங்கிய fastrack பேக், பேப்பர் கவர் போட்டு அழகாக பேக் செய்யப்பட்டிருந்தது.அதை செக்யூரிட்டி வாங்கி வைத்துக்கொண்டார். கடைக்குள் நுழையும் கஸ்டமர்கள் எல்லோரும் தங்கள் கைகளில் இருக்கும் பையை வெளியே இருக்கும் பாதுகாவலரிடம் கொடுத்துவிட்டு போய்விட வேண்டும் என்பது பிக்பஜார் மட்டுமல்ல, பல்வேறு பெரிய கடைகள் கடைபிடிக்கும் சமகால நடவடிக்கை தான். “கஸ்டமர் bagல எதையாவது அள்ளிபோட்டுகிட்டு வீட்டுக்கு போயிட்டா” என்ற உயரிய எண்ணம் காரணமாக இருக்கலாம்.

 நான் மட்டும் என்ன? பெரிய இவனா? என் புது bagஐ அவர் கையில் ஒப்படைத்து, டோக்கன் வாங்கிக்கொண்டேன்.கடையின் ஒவ்வொரு தளமாக சுற்றி சில ஜாமான்களை வாங்கிவிட்டு, வெளியே வந்து டோக்கன் கொடுத்து பேக் கேட்டால் “bagஅஇங்கயா குடுத்தீங்க” என்கிறார் செக்யூரிட்டி.எனக்கு தூக்கிவாரி போட்டது. ”பின்ன எங்க கைல எப்படி டோக்கன் வரும்?” என்றபோது, அவர் திருதிருவென விழிக்கிறார்.

”கொஞ்சம் இருங்க.. கொஞ்ச நேரம் முன்னாடி வேற ஒருத்தர மாத்தி விட்டுருந்தேன்.அவர் எங்கயாவது மாத்தி வெச்சிருப்பார்” என்றார். ”இருக்கும்” என நினைத்து அவருக்காக வெயிட் செய்தேன்.அவர் வந்துவிட்டு “அப்படியா?இல்லையே.. நான் பாக்கலையே.. இங்க தான் குடுத்தீங்களா? நல்ல தெரியுமா? மாத்தி கீத்தி குடுத்துருக்கபோறீங்க” என எங்களை கேணயனாக பார்த்தார்.

சிறிது நேரத்தில் செக்யூரிட்டிகளுக்கெல்லாம் தலைவர் பெரிய செக்யூரிட்டி வந்தார்.அவர் திரும்பவும் மொதல்லேர்ந்து விசாரணைகளை ஆரம்பித்தார்.இறுதியில் நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு ஒரு உயர்ரக தீர்ப்பை சொன்னார், அது என்னன்னா “ நீங்க போயிட்டு காலைல ஒரு பத்து மணி வாக்குல இந்த டோக்கன எடுத்துட்டு வாங்க. நாங்க அதுக்குள்ள தேடி வைக்கறோம்”.

இது எப்படி இருக்கு. இவங்க அஜாக்கிரதையா இருப்பாங்களாம். நாம பொருளையும் இழந்துட்டு, பரிதவிப்போட விதியை நொந்துகிட்டே வீட்டுக்குபோய் காலைல வேலையலாம் விட்டுட்டு வந்து இவங்க முன்னாடி நிக்கணுமாம். நான் விடுவதாக இல்லை. "i wish to meet bigbazaar manager"என்றேன். “சார் உங்க பொருள் எங்கயும் போயிடாது. இங்க இருக்கு பாருங்க டோக்கன். இத கைல வெச்சிருந்தீங்கன்னா.எத்தன நாள் கழிச்சி வேண்ணா வந்து உங்க பொருள கேக்கலாம். நாங்க தந்து தான் ஆகணும்” என்றார். “அதெல்லாம் இருக்கற பொருளுக்கு. இது தொலைஞ்சி போயிடுச்சி. அது மட்டுமில்லாம. நா வீட்டுல போயி “அட்சுவலி ஐ லாஸ்ட் த பேக் இன் பிக்பஜார். பட் ஐ ஹேவ் டோக்கன்”னு வீட்டுல சொன்னா “ நீ பேக்அ தொலைச்சிட்டு எங்ககிட்ட வந்து கதை கட்டறியா?”னு வீட்டுல கேக்க மாட்டாங்களா? நீங்க அசால்டா தொலைச்சிட்டு நிப்பீங்க. கஸ்டமர் அவஸ்தைபடணும். இது தான் உங்க கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்சனா? நான் ஒண்ணும் உங்கள நம்பி bag குடுக்கல. பிக்பஜார நம்பி தான் குடுத்தேன். அதனால அடுத்து என்ன பண்றது என மேனேஜர் சொல்லட்டும்” என்றேன்.

இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. bag தொலைந்த கதையை இவர்களோடு முடித்து விடத்தான் ”காலைல டோக்கன் எடுத்துட்டு வாங்க.. பாத்துக்கலாம்” என நம்மிடம் கதை கட்டினர். பெரும்பாலும் செக்யூரிட்டி பணிகளை வேறு ஒரு நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.பிக்பஜாருக்கும் செக்யூரிட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை.எனவே தான் மேனேஜரிடம் பேசவேண்டும் என சொன்னேன்.
சில நிமிடங்களில் மேனேஜர் வந்தார்.அவரும் வழக்கம் போல விசாரணையை முதலிலிருந்து ஆரம்பித்தார். “கேமரால பார்த்தா எங்க இருக்குன்னு தெரிஞ்சிடும்ல” என்றார். “ஆனா சார். கேமரா இந்த ஏரியாவ கவர் பண்ணாது” என அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
அதாவது சம்பவம் நடந்த இடம் பாண்டிபஜார் பிக்பஜாரில் நுழையும் போதே இடதுபக்கம் படியேறி மேலே செல்லும் பகுதி.அங்கே பழம்,காய்கறி விற்பார்கள். கஸ்டமரின் உடமைகளை சேகரிக்கவென அங்கே தனியாக ரேக் வசதி கிடையாது. அது மட்டுமல்லாமல் அந்த பகுதியை எந்த கண்காணிப்பு கேமராவும் கண்காணிக்காது. அதாவது கடையிலிருந்து எவரும் எதையும் திருடிட்டு போகக்கூடாது.ஆனால் கஸ்டமரோடது எக்கேடு கெட்டு போனா என்ன? அதான் செக்யூரிட்டி பாதுகாப்புக்கு இருக்காரே. என்ற எண்ணம் தான் காரணம்.

”நீங்க என்ன பண்ணுங்க டோக்கனை எடுத்துட்டு காலைல வாங்க,   பிகாஸ் கண்காணிப்புகேமரா டேட்டாபேஸ் ரூமை பூட்டிட்டு போயிட்டாங்க.காலைல வந்தா பார்த்து சொல்லிடுவோம்.உங்களோடது எங்கயும் போயிருக்காது” என்றார் அவர்.இவர் எதோ பெரிய மனுசன் என்று இவரிடம் பேசினால், இவரும் அவர்கள் சொன்னதைத்தான் சொல்கிறார்.இதுல நடு நடுல ஐயோ வேற, அம்மா வேற..
கஸ்டமர்கள் எல்லோரும் கேணயன் என்ற நினைப்புதான் இதற்கு காரணம்.இவர்கள் தொலைத்ததற்கு நாம் அலைய வேண்டும். “எனக்கு எதாவது லெட்டர் மாதிரி குடுங்க.வெறும் டோக்கனை எல்லாம் ஆதாரமாக வச்சிக்க முடியாது” என்று கறாராக சொல்லிவிட்டேன்."அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ப்ராப்ளமாகிடும்.வேணும்னா எங்க மேனேஜர்ட்ட பேசிட்டு சொல்றேன்” என்றார்.

மேனேஜருக்கு போன் பேசப்போனார். எனக்கு ”குப்”பென்று வேர்த்துவிட்டது. என்னை தனியே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் போன சம்பாசனைகள், வாக்குவாதங்கள். தொண்டைதண்ணி எல்லாம் வற்றி போயிருந்தது. அவர்களாகவே பார்த்து பாவமே என தண்ணி கொடுப்பார்கள் என எதிர்பார்த்தேன்.ஆனால் நடக்கவில்லை.”என்னங்க ஒரு தண்ணி கூட குடுக்காம” என பேச்சுவாக்கில் வெக்கத்தைவிட்டு கேட்டுவிட்டேன்.”இதோ சொல்லிருக்குங்க” என்றார், எதோ கல்யாணவீட்டில் சொல்வதைப்போல.

நான் தலையில் கையைவைத்து கழுத்தை கீழே தொங்கபோட்டவாறு உட்கார்ந்துவிட்டேன்.ஆசை ஆசையாக கையிலிருந்த பணத்தைக்கொண்டு fastrack bag வாங்கினேன். என் தகுதிக்கு fastrack bagஎல்லாம் கொஞ்சம் ஓவர் என்று அப்போதே மனசாட்சி சொன்னது. கூடவே 600ரூபாய்க்கு வாட்ச் வேறு.எல்லாம் பணத்திமிர்.”ஏன் 400ரூ 500ரூ வாய்கெல்லாம் bagஏ இல்லையா. இல்ல அது வாங்குனா இமேஜ் போயிடுமா. கெட்ட கேட்டுக்கு வாட்ச் வேற. மொபைல்ல தானே எப்பவும் டைம் பார்ப்ப.இப்ப என்ன புதுசா?. போச்சா? எல்லாம் போச்சா? அதுஅது தானா அமையணும்” என்பதாக எண்ண ஓட்டங்கள்.

”மேனேஜர் உங்ககிட்ட பேசணுமாம்” என என்னிடம் போனைகொடுத்தார்கள். நான் என் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தேன். நடு நடுல ”மானே, தேனே, பொன்மானே”வெல்லாம் சேர்த்து நாலஞ்சி பிட்டு நச்சுனு போட்டு வைத்தேன். “ஓகே சார். நாங்க லெட்டர் தர்றோம். நாளைக்கு காலைல வந்ததும் வீடியோல பார்க்கறோம். பார்த்துட்டு ஒருவேள முடியலன்னா அக்டோபர் 4ஆம் தேதி 3000ரூ கேஷா குடுத்துடறோம்” என்றார் பெரியமனிதத்தனமாக(?!).

”இந்தாங்க சார், உங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் எழுதி லெட்டரா எழுதிடுங்க” என என் கையில் பேப்பர் ஒன்றை கொடுத்தார். நான் லெட்டர் எழுதிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து “சார் நீங்க தொலைச்ச பொருளுக்கு பில் இருக்கா” என்றார். ”இது என்னடா புது கதையா இருக்கு.திரும்ப மொதல்லேர்ந்தா?” என்பதாக நினைத்துக்கொண்டு “பில்லெல்லாம் அந்த பேக் லயே வச்சிருந்தோம்”என்றேன் யோசனை கலந்த தயக்கத்தோடு. ”தொலைஞ்ச பொருள் எல்லாம் 3000 ரூ வரும் நு நாங்க எப்படி நம்பறது” என திரும்ப ஆரம்பித்தார். “ நீங்க தொலைக்க மாட்டீங்கன்னு நம்பி என் பொருளை புதுசா உங்க கைல எப்படி கொடுத்தேனோ அது மாதிரி நீங்களும் நம்பி தான் ஆகணும்” என்றேன் பொட்டிலறைந்தவாறு. “இல்ல சார்” என தயங்கி “ஸம் ப்ரொசிஜர்லாம் இருக்கு. அதான்” என்றார்.

”எனக்கும் ப்ரொசிஜர்லாம் இருக்கு. பொருளை இழந்தது நான். என்னமோ நான் தப்பு பண்ணமாதிரி என்கிட்ட இத்தன குருக்குவிசாரணை பண்ணிகிட்டு இருக்கீங்க” என்றேன் கடுப்பாகி. “சாரி சார்.சாரி சார்” என்பதாக லெட்டர் கொடுத்தார்.

“சார் நான் அக்டோபர் 3ஆம் தேதி ஊருக்கு போறேன்.அதுக்கு முன்னாடி அமவுண்ட் தரமுடியுமா. பிகாஸ் நான் திரும்ப வர்றதுக்கு ஒன் மன்த் ஆகும்” என்றேன்.

”இல்ல சார்.எங்களுக்கு 4 நாளாவது டைம் வேணும்” என்றார்.
 கண்காணிப்பு கேமராவில் பார்த்தும் யார் எடுத்தார் என கண்டுபிடிக்க முடியவில்லையாம்.அப்ப அது எந்த லட்சணத்துல கண்காணித்ததென பார்த்துக்கொள்ளுங்கள்.

”அதனால நாளு நாள்ல பணமா கொடுத்துடறோம்” என்றார். நான் அப்போது வெளியூரில் இருந்தேன். “சார் அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ண முடியுமா?” என்றேன்.”இல்ல சார். நீங்க அந்த லெட்டர எடுத்துட்டு வந்து.. some formalitiesலாம் இருக்கு” என்றார். அந்த லெட்டரை ரூம்மேட் எடுத்துக்கொண்டு போனபோது “அவர் தான் வரணும்” என்று சொல்லிவிட்டார்கள் (பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா?)

 நாள் 10/30/2012

 நாள் முழுதும் பயங்கர மழை. சென்னை திரும்பி ஒரு நாள் ஆகியிருந்தது. கையில் சுத்தமாக காசு இல்லை. கடைசி நூறு ரூபாய்.அதிலும் 30 ரூபாய் காலை சாப்பாட்டில் அவுட்.(சிக்கனமாக சாப்டேனாக்கும். மாசக்கடைசில வேற வழி) பிக்பஜாருக்கு போனால் 3000 தருவார்கள்.மதியானம் சிக்கன் பிரியாணியாக சாப்பிடலாம் என ப்ளான் செய்து, பஸ் ஏறி பிக்பஜார் அடைந்தேன்.

“நிதின் இருக்காரா?” என ஒவ்வொருவரிடமாக விசாரித்துக்கொண்டே floor ஃப்ளோராக ஏறி இறங்கிக்கொண்டிருந்தபோது, வாட்டசாட்டமான அந்த செக்யூரிட்டி நின்று கொண்டிருந்தார்.(டோக்கனை எடுத்துட்டு போய் நாளைக்கு கொண்டுவாங்கன்னு சொன்னாரே!! அவரேதான்) .”சார். நிதின் பார்க்கணும்” என்றேன். நிதின் தான் பாண்டிபஜாரிலிருக்கும் பிக்பஜாரின் கண்காணிப்பாளர்.

“ நீங்க யாரு? எதுக்காக அவரை பார்க்க வந்திருக்கீங்க?” என்றார். அதாவது என்னை அடையாளமே தெரியவில்லையாம். “ நாந்தாங்க அன்னிக்கி fastrack bag தொலைச்சது” என்ற போது, அவர் தலைக்கு மேலாக வளையம் வளையமாக சுருண்டது என் கண்ணுக்கு தெரியுமுன்னமே “ஓ நீங்களா? இருங்க அவர்ட்ட பேசறேன்” என அவருக்கு கால் செய்தார். அவர் என்னருகே வந்து “என்ன மேட்டர்” என்றார்.

அவர் விளக்கவே, “அன்னிக்கி வந்தது நீங்களா?” என்றார்.”எங்க.. என் நம்பர் உங்க கிட்ட இருக்கா? சொல்லுங்க பார்ப்போம்” என்றார் ”சொன்னேன்”. அப்போதும் நம்பவில்லை. “இருங்க என் நம்பர்லேருந்து உங்களுக்கு கால் அடிக்கறேன்” என்றேன். கால் போனது.அவர் என்னை பார்த்து சந்தேகமாகவே தலையாட்டினார். அன்னிக்கி ஒருவேள அழகா இருந்திருப்பனோ? என்றவாரு யோசித்தபோது.. அன்னிக்கி குருந்தாடி வச்சிருந்தேன். இன்னிக்கி க்ளீன் ஷேவ் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. (எம்ஜிஆர் திரைப்படங்களில் மருவும், ஒட்டுமீசையும் மாறுவேடத்திற்கு பயன்படுத்தியதற்கு இவர்களும் காரணமாக இருக்கக்கூடும்)

“அந்த லெட்டர் இருக்கா?” என்றார். காட்டினேன்.”இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு அமவுண்ட் வாங்கிடுங்க” என்றார்.

இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, அன்று என்னிடம் bag வாங்கிய செக்யூரிட்டி என் பக்கத்தில் நின்றார். “இவர் யாருன்னு தெரியுதா?” என்றார் பெரிய செக்யூரிட்டி. அவர் புருவம் சுருக்கி, நினைவடுக்குகளில் என்னை தேடி, நீண்ட நொடிகளுக்குப்பின் “அன்னிக்கி பேக் தொலைச்சவர்” என்றார்.(உண்மையில் bagஐ தொலைச்சது அவர் தான்.. “ நான் மிஸ் பண்ணிட்டேன்ல” என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் நம் தவறுகளை ஒப்புக்கொண்டதேயில்லையே)

எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிந்தது.பெரிய செக்யூரிட்டி தன் சட்டைபேக்கட்டிலிருந்து அமவுண்டை எடுக்க கைவிட்டுக்கொண்டே ரிலாக்ஸாக சொன்னார் “எங்க ஆபீஸ்லேர்ந்தும் இவரை காப்பாத்தமாட்டேனுட்டாங்க. பிக்பஜாரும் பொறுப்பேத்துக்க மாட்டேனுட்டாங்க. இவரோட சம்பளத்துளேர்ந்து தான் இந்த அமவுண்ட்ட தர்றோம். நீங்களா மனசு வச்சி அவருக்கு எதாவது பண்ணலாம்” என்றார். “ நான் என்ன பன்ணனும்” என்றேன். எனக்கு பாதி புரிந்தது.அதாவது பெருந்தன்மையாக மொத்த  பணத்தையும் அவரிடம் கொடுக்கவேண்டும் என்பதாகவும் இருக்கலாம்.  நிறைய சினிமாவில் அப்படித்தானே காட்டினார்கள்.” இல்ல சார். நீங்க அவருக்கு எதாவது பண்ணியே ஆகணும்னு கட்டாயமா சொல்லல. மனசு இருந்தா பண்ணுங்கன்னு தான் சொன்னேன். பிகாஸ், எங்க ப்ரொசீஜர் படி பில்லு இருந்தா தா அமவுண்ட் தருவோம். உங்ககிட்ட பில் எதுவுமே வாங்காம நீங்க கேட்ட அமவுண்ட்ட அப்படியே குடுத்திருக்கோம். அது மட்டுமில்லாம, அவர் மாச சம்பளமே 6000 தான். அதுலேர்ந்து கொடுக்கறோம்” என நீட்டி முழக்கினார்.

இவர்களின் அலட்சியத்தால், என்னை அலைகழித்து, மனம் நோகச்செய்து, ஒரு மாதம் காத்திருந்து, அதுவரை எனக்கு பணம் உறுதியாக வருமா என திரியாத நிலையில் “ஒரு வேள ஏமாத்திருவானோ?” என்பதாக குழம்பி நின்ற என்னிடம் பெரியமனது பற்றி சொல்கிறார்கள். உண்மையில் பெரியமனதை அவர்கள் தான் செய்யமுடியும். பிக்பஜாரிடம் இல்லாத பணமா? இல்ல அந்த செக்யூரிட்டி கம்பெனிகளிடம் இல்லாத பணமா? ”இவர் எல்லா நாளும் நல்லா வேலைபார்ப்பாரு.இப்பதான் இந்த பிரச்சினை. இதை கம்பெனி ஏற்றுக்கொள்கிறது” என அவர்கள் முடிவெடுக்க முடியாதா? அவர்களுக்கே மூவாயிரம் பெரிய பணமாக இருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம்.
இரண்டு வருடம் முன்பு கல்லூரியில் கட்ட அந்த மூவாயிரம் ரூபாய் இல்லாமல் பிரின்சிபல் முன்னால் கைகட்டி தலைகுனிந்து நின்றது இன்னும் நினைவிருக்கிறது. ஒருவருடம் முன்பு டேட்டா எண்டரி கம்பெனியில் மூவாயிரம் மாத சம்பளத்திற்காக முக்கி முக்கி கம்ப்யூட்டர் தட்டியது நினைவிருக்கிறது. இப்போதும் கூட எதுவும் மாறிவிடவில்லை. ஆனால் என்னைபார்த்து “பெரிய மனசு பண்ணுங்க” என்கிறார்கள்.

அலைச்சல், பரிதவிப்பு,வருத்தம் எல்லாமே பொருளின் சொந்தகாரர்களாகிய நமக்கு தான். தொலைத்த அவர்களுக்கு எந்த கவலையும் இல்லாததை அவர்களுடனான என்னுடைய ஒவ்வொரு கணமும் “எனக்கும் இதற்கும் எந்த கவலையுமில்லை” என்பது போல அவர்கள் நடந்துகொண்டதை பார்க்கமுடிந்தது. இந்த லட்சணத்தில் தான் நாம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்.
 ”பணம் மரத்தில் காய்க்கவில்லை!!” என மன்மோகன் சொன்னது இவர்களுக்காகத்தானிருக்கும்.

Friday, October 26, 2012

ஃபேஸ்புக் ட்விட்டரில் உளறுபவர்கள் உஷார்



ஒருத்தர் பிரபலமாகிட்டார் என்பதாலேயே அவருக்கு ”எல்லாம் தெரியும்” என்ற அடிப்படையில் கேள்வி கேட்பதும்.. அவர் அந்த கேள்விக்கு ஞானசூன்யமாக பதில் சொல்வதும்.. அப்படி அவர் சொல்லும்போது “இது என்னய்யா முட்டாத்தனமா இருக்கு” என்று நாம் புலம்புவதும் கால
ம் காலமாக நடக்கிற ஒன்று தான்!!

கொஞ்சம் பிரபலமாகும் போதே நமக்கு கருத்து சொல்லும் ஆசை வந்துவிடுவது இயல்பு தான்..ஆரம்ப காலத்தில் சில நல்லகருத்துக்கள் சிலவற்றுக்கு அமோக ஆதரவு பெருகும்..(அதாவது அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருப்பது மட்டும் தான் இங்கே நல்லது.அவனுக்கு பிடிக்காத ஒன்று நல்லதாக இருக்கவே முடியாது.. உதாரணம் ரோஸ் ப்யூட்டிஃபுல்னு எல்லாரும் சொல்றாய்ங்க..அதுல அப்புடி என்ன இருக்குன்னு கேட்டுபாருங்களேன்..தெரியும்

பேஸ்புக் ட்விட்டரில் எதோ பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதும் எழுதுவதும் அப்படிபட்டது தான்.. ஆரம்பத்தில் நமக்கு தெரிந்த எதையாவது சொல்லி வைப்போம் “பாஸு செமயா எழுதறீங்க” என எவனாவது சொல்லிவிட “பாரேன்.. நமக்குள்ளயும் எதோ இருக்கு”ன்னு அடுத்தடுத்து சொல்ல ஆரம்பிப்போம்..

ஒரு கட்டத்தில் எதாவது சொல்வது மட்டுமே நம் வேலையாக மாறிவிடும்.. அது நல்லதோ கெட்டதோ.. நல்லதுக்கு நல்லவிதமான ரெஸ்பான்ஸ் வருகிறதென்றால்.. கெட்டதற்கு அதற்கேற்ற கூலி கிடைக்கும்..அவ்வளவே..

உதாரணமாக நல்லவிதமாக எழுதும்போது போன் செய்து “எப்புடி பாஸ் உங்களால மட்டும் இப்படி முடியுது” என்பவர்கள்.. மோசமாக எதையாவது சொல்லும்போது சானியை கரைத்து வாயில் ஊற்றுவார்கள்.. சாதாரண சாணிகள் சில சமயம் மனித சாணியை மிக்ஸ்பண்ணிக்கொண்டு வரும்.. கருத்து சொல்லும் போது இதையெல்லாம் சகித்து தான் ஆகவேண்டும்..

ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது ரோட்டில் நின்று கத்துவது போல.. சில சமயம் ஊரேகூடி நம்மை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும்.. சில சமயம் ரோட்டில் சட்டை கிழிய கட்டிஉருள வேண்டி வரும்!!

சரி கருத்து சொல்வதென்று முடிவாகிவிட்டது.. அதற்கு லைக்கு கமெண்டு வாங்கியே ஆகவேண்டுமென்ற வெறியும் வந்தாகிவிட்டது.. நாம் ஒன்று தான் செய்யவேண்டும்.. கேணத்தனமாக எதையாவது எழுதிவிட்டோமா..உடனடியாக அங்கேயே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்., அதைவிட்டுவிட்டு அம்மாகிட்ட போய் கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பதெல்லாம் கேணத்தனம்..

சின்மயி விவகாரத்தில் நடந்திருப்பதும் இது தான்.. ரோட்டில் நின்று கத்தும் போதே மாலைக்கும், செருப்புக்கும் தயாராகிவிட வேண்டும்..தண்ணியை போட்டுவிட்டு எதையாவது உளருபவன் ரோட்டில் போகிற வருகிறவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிலை தான் நடந்தது.. ரோட்டில் திட்டுகிற எல்லோரையும் பழிக்கு பழி வாங்கத்துடித்தால் கடைசியில் “உன்னை யாரு தண்ணிய போட்டுகிட்டு கத்த சொன்னது என்ற கேள்வி தான் முதலில் வரும்”..வர வேண்டும்!!

#ஆனால் யார் தண்ணி போட்டுகிட்டு கத்துகிறார் என்பதை பொறுத்தே இங்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தான் இங்கே நிதர்சனம்

நாம் செய்யவேண்டிய வேலை இரண்டு

1) ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ பிரபலங்களை பார்த்தவுடன் நாய் கரண்டு கம்பத்தை பார்த்ததும் காலைதுக்குவதை போல ரெக்வஸ்ட் கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

2)அவர்கள் எதாவது உளறினால் ”யார் பெத்த புள்ளையோ..தானா பொலம்புது” என விட்டுவிடவேண்டும்..

பிரபலங்கள் செய்யவேண்டியது

ஆவுன்னா எதையாவது உளறிக்கொட்டியாக வேண்டிய அவசியத்தை தவிர்ப்பது!!