Friday, August 10, 2012

பஞ்சு பரோட்டா

பெரும்பாலும் சாதாரண பரோட்டா கடையிலிருந்து,ஸ்டார் ஓட்டலின் பரோட்டா வரை நான் பார்த்தது பரோட்டா கல்லு மாதிரி இருக்கும்.குருமாவில் உருட்டுவதற்காக பிய்த்து போடவே கைக்கு அசாத்திய பலம் தேவைப்படும்.

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் சிங்காரத்தோப்பு பகுதியில் எதேச்சையாக சுற்றிக்கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது தான் “மருதமலை ஹோட்டல்”.

வழக்கம் போல சிங்காரத்தோப்பு பகுதியையே ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பசியோட
ு ஹோட்டலுக்குள் நுழைந்து.. பின் கைகழுவி அங்கிருந்த ஆசாமியிடம் “ரெண்டு பரோட்டா வைங்க” என்றேன்.

பரோட்டா கொண்டுவந்த ஆசாமி என் ப்ளேட்டில் பரோட்டாவை வைத்துவிட்டு பிய்த்து போட மீண்டும் எடுக்க முயன்ற போது தான் கவனித்தேன், இந்த பரோட்டா பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

தொட்டு பார்த்த போது, பிறந்த குழந்தையின் கையை தொட்டு பார்ப்பது போன்ற ஸாஃப்ட்னஸ் உணர்வு. “பிய்க்க வேணாம்ணே’ என்றவாறே அவரை அனுப்பிவிட்டு, பரோட்டாவை அலுங்காமல் பிய்த்து வாயில் வைத்தேன்... கரைந்தது. மூன்று வாய் கூட வைத்திருக்க மாட்டேன். ஒரு பரோட்டா காலி..அடுத்த பரோட்டாவும் அப்படியே..சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்றது அதன் மென்மை.

“இன்னிக்கு சரியான வேட்டை இருக்குடா ஏகா..” என எண்ணியவாரே அடுத்தடுத்த பரோட்டாக்களை ஆடர் செய்து அலுங்காமல் வாயில் லபக்கினேன்.

காதலிக்கு கொடுக்கும் முத்தம் போல இன்னும் இன்னும் என்றது மனம்.பர்ஸில் பார்த்தேன் புது நூறு ரூபாய் இருந்தது.பரோட்டா தான் பத்தவில்லை.

”வெண்ணிலா கபடி குழு படத்தில் வருவது போல இங்கே எதுவும் போட்டி வைக்க மாட்டிங்களா” என்று கேட்க நினைத்தேன்.கேவலமா நினைச்சிடுவானுங்க என்று நினைத்து கூச்சப்பட்டு விட்டுவிட்டேன்.

எட்டு பரோட்டாவை உள்ளே தள்ளிவிட்டு விலை என்ன என்று கேட்டேன் ஒன்றின் விலை 12 ரூபாயாம். நல்ல வேளை 96 ரூபாய் தான் ஆனது. நமக்கு பணம் பெரிதாக தெரியவில்லை. மெட்ராஸில் எவனும் இப்படி போட மாட்றானே என்ற வருத்தமே மிஞ்சியது.அடுத்த முறை திருச்சி வரும் போது ரவுண்டா பத்துன்னு சாப்பிட்டுடனும் என எண்ணினேன்.

கடைக்கு வழி : சிங்காரத்தோப்பில் இறங்கி அகமது பிரதர்ஸ் துணி கடைக்கு வழி கேட்டு வாருங்கள். துணிகடைக்கும் முன்னர் உள்ள இடதுபக்க சந்தில் திரும்பி கடைசிவரை நடந்தால் இடது புறமாக வரும் ஒரே ஹோட்டல் இது தான்.

யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்