Friday, June 29, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை (காதலில் விழுந்தேன்)


பல சந்தர்ப்பங்களில் ஆறுதலளிக்கும் ஃபேஸ்புக், சில சமயம் அதிர்ச்சியளிக்கவும் தயங்குவதில்லை.

ஃபேஸ்புக்கில் பெண்ணாசையால் வலையில் சிக்கிய ஆசாமி பற்றிய கதை..
சென்னையில் வீடெடுத்து தங்கி இருக்கும் ஒருவர்.பெயர் குமார் என வைத்துக்கொள்வோம்.அவர் ஏற்கனவே திருமணமானவர்.ஒரு குழந்தை வேறு இருக்கிறது.தினந்தோறும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட அவருக்கு ஒரு நாள் ஒரு பெண்ணிடமிருந்து ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் வந்திருக்கிறது.இவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார்.

அந்த பெண்மணியின் ப்ரொபைலை மேய்ந்த போது அந்த பெண்ணின் சில ஃபேட்டோக்கள் இருந்திருக்கின்றன.அந்த ஃபோட்டோவால் கவரப்பட்டதால் அந்த பெண்ணின் ரெக்வஸ்டை அக்செப்ட் செய்ததாக கூறுகிறார்.

அக்ஸெப்ட் செய்த சில நிமிடங்களில் அந்த பெண் சேட் செய்கிறார்.சாதாரணமாக துவங்கும் பேச்சு பின் சுவாரசியமாக நகர்கிறது.இவ்வாறு நாள் முழுதும் சேட்டுகிறார்கள்.
மறுநாளும் தொடர்கிறது.குமார் ஆபீஸில் இருக்கும் பொழுதெல்லாம் சேட்டுகிறார்.தன் நம்பரை பகிர்கிறார். இதுவரை ஃபேஸ்புக்கில் மட்டுமே நடந்த சேட் பின் கால் ஆகிறது. இருவரும் காதலர்கள் போலவே பேசிக்கொள்கிறார்கள்.குமார் தனக்கு திருமணமானதையும்,குழந்தை இருப்பதையும் மறந்து தன் அந்தரங்க விஷயங்களையும் கூட அந்த பெண்ணோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு நாள் குமாரின் வீட்டுக்கு வங்கியிலிருந்து கிரெடிட் கார்ட் ஆசாமிகள் வருகிறார்கள்.ஒரு வருடத்திற்கு முன் குமார் பிரதான வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கிறார்.கணக்குவழக்கில்லாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்த குமார், வங்கியிலிருந்து வந்த ஸ்டேட்மெண்ட் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.75ஆயிரம் ரூபாய் பில் வந்திருக்கிறது.எப்படி கட்ட போகிறோம் என்று கையை பிசைந்துகொண்டிருந்தவரின் கழுத்தை வங்கிக்கார தடியர்கள் நெருக்குகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கட்டுவதாக ஒப்புக்கொள்கிறார் குமார்.ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக குமார் வேலை செய்யும் நிறுவனத்தை இழுத்து மூடவே, வேறு வழியில்லாமல் பெட்டி படுக்கையோடு ஊருக்கு சென்று விடுகிறார். பழைய நம்பரை மாற்றிவிட்டு செட்டிலாகிவிட்ட குமார், கிரெடிட் கார்டு தொடர்பாக வங்கியிலிருந்து யாரும் தொடர்பு கொள்ளாததால் வங்கிக்கு நாமத்தை போட்டுவிட்டு குதூகலமாக இருந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வேறு வேலை தேடி மீண்டும் சென்னை வந்து செட்டிலாகும் குமாருக்கு வந்தது டவுட் “இந்த பேங்க்காரய்ங்க.. இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும் எப்படி கண்டுபிடிச்சாய்ங்கஎன்று தலையை பிய்த்துக்கொண்டார்.

எப்போதோ பேச்சுவாக்கில் வங்கி ஒன்றில் தான் பணிபுரிவதாக அந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.ஃபேஸ்புக்ல வந்த புள்ள காரணமா இருக்குமோ.. என்று யோசித்தவாறே அந்த பெண்ணுக்கு போன் அடித்த குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது வரை ரொமாண்டிக்காக பேசிய அந்த பெண், இப்போது அதிகார தொனியில் “உங்களோட எல்லா தகவலும் எங்ககிட்ட இருக்கு நீங்க தப்பிக்க முடியாதுஎன சினிமாவில் வரும் வில்லியாக அந்த பெண் பேசியது குமாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

நன்றி – விஜய் டிவி – நடந்த்து என்ன டீம்

வங்கி ஆசாமிகள் இது போல களம் இறங்கி இருப்பது சமீபகாலமாக அதிர்ச்சியளித்திருக்கிறது.கிரெடிட் கார்டில் பணம் வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் தலைமறைவான குமாரை இங்கே நியாயப்படுத்துவதற்கில்லை.ஆனால் வங்கி கணக்கு துவங்கவே இதை கொண்டுவா..அதை கொண்டுவா என சாதாரண மக்களை அலைகழிக்கும் வங்கிகள்.. கார்பரேட் ஆசாமிகளுக்கு நிறுவனத்திற்கே வந்து இலவசமாக சேலரி அக்கவுண்ட் வழங்கி விடுகின்றன. கூடவே கிரெடிட் கார்டு வேறு.ஒரு காலத்தில் லோன் வழங்குவதற்கான மொத்த அதிகாரமும் மேனேஜரின் கையில் தான் இருக்கும்.

இப்பொழுதோ லோனுக்கு ஆள்பிடிக்க ஒரு டீம், லோன் கட்டாதவனின் கழுத்தை பிடிக்க இன்னோரு டீம் என வேலை பிரிக்க பட்டிருப்பதில் தான் பிரச்சினை துவங்குகிறது.
லோன் கொடுக்கிற டீமுக்கு எப்படி கட்டுவான் என்ற கவலையெல்லாம் இல்லை.எவன் தலையிலாவது மிளகாய் அரைத்தால் டார்கெட்டை அடைந்துவிடலாம் என்ற நெருக்கடி, லோன் கட்டாதவனை சிபிஐ போல குறுக்குவழியில் பிடித்து தங்கள் டார்கெட்டை முடிக்க முயல்கிறது இன்னொரு டீம். வங்கியின் இந்த செயல்பாட்டை பற்றி மற்றொரு சமயம் பேசுவோம்.

ஃபேஸ்புக்கில் குமார் கோட்டை விட்ட இடங்களை அலசுவோம்.

1)       எப்பொழுதுமே பெண்களிடமிருந்து ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் வரவே வராது.அப்படி வருகிறதென்றால் உள்ளே எதோ சங்கதி இருக்கிறதென்று அர்த்தம்.

2)       ப்ரொஃபைலை அலசி இருக்க வேண்டும்.படிப்பு மற்றும் ஊர் போன்ற தகவல்கள் இல்லையென்றால் அது ஃபேக் ஐடி என்று பொருள்.

3)       மியூச்சுவல் ஃப்ரெண்ட் யாரும் இருக்கிறார்களா என பார்த்திருக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் எப்படி என்னை தெரியும்? எப்படி என்னை கண்டுபிடித்தீர்கள் என்று விசாரித்திருக்க வேண்டும்.

4)       ஒரு கட்டம் வரைக்கும் தான் ஃபேஸ்புக்கில் சேட்டுவதும்,போனில் பேசுவதுமெல்லாம். ஒருவாரம் பேசியதுமே நேரில் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.அவர் உண்மையான ஆசாமிதானா..இது பெண்ணுக்கு மட்டுமல்ல.ஆணுக்கும் தான்.காரணம் பின்னால் எதாவது பிரச்சினை என்றால் போலீஸை அணுகும் போது ஆள் அடையாளம் சொன்னால் உதவும்.

Monday, June 11, 2012

நீங்களூம் ஆகலாம் கிராண்ட் மாஸ்டர்!

செஸ் என்றாலே இனி விஸ்வநாதன் ஆனந்த் தான். இதுவரை எப்படியோ, இனிமேலும் அப்படியே. காரணம் ஐந்தாவது முறையாக உலக சாம்பியனாக வரலாற்றில் தன்னை பதிந்திருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.யார் ஜெயிப்பார் என கணிக்கவே முடியாதபடி இந்தவருடம் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவ்வளவு டிவிஸ்ட்.



இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. இதுவரை பதிமூன்று கிராண்ட் மாஸ்டர்களை ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பெருமை.ஆண்கள் மட்டுமே பத்து. பெண் கிராண்ட் மாஸ்டர்கள் மூன்று பேர். அதிலும் இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் விஜயலட்சுமி சென்னையை சேர்ந்தவர்.
இளைஞர்களை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் தற்பொழுது சென்னை எஸ்.ஆர்.எம்மில் இரண்டாமாண்டு காமர்ஸ் படித்து வருகிறார்.உலக செஸ் மாஸ்டர்கள் 29 ஆண்களும்,5 பெண்களும் என பட்டியல் நீளுகிறது.

சிறப்பு:

கிரிக்கெட்டுக்கு பிறகு நம்மூரில் செஸ் தான்.இரண்டு பேர் இருந்தாலே போதும். சொல்லப்போனால் தனியாளாக தன் கையே தனக்குதவி என ஒருவரே கூட விளையாடலாம்.கிராண்ட் மாஸ்டர்கள் பலரும் தங்கள் விளையாட்டுத்திறனை சோதிக்க தனியாளாக விளையாடிப்பார்ப்பது உலகப்பிரசித்தம்.தனியே கிரவுண்ட் தேவையில்லை.இந்த உடைதான் அணிய வேண்டும்,ஷூ அணிந்து தான் விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.

எங்கே பயிற்சி பெறலாம்?

“1960இல் மொளல் ஆரான் உலக செஸ் மாஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்நாடுதான் செஸ்ல நம்பர்ஒன்.
என்கிறார் தமிழ்நாடு செஸ் அசோசியன் செயலாளரான மோகன்முரளி.தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சென்னை செண்ட்ரல் அருகிலுள்ள நோரு ஸ்டேடியத்தில் இருக்கிறது.இதன் மாடியில் பயிற்சி அகேடமி ஒன்று தனியாக இருக்கிறது.அங்கே தற்பொழுது 30 பேர் தினந்தேறும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம் என்கிறார் மோகன்.

தமிழகம் முழுக்க 150க்கும் மேற்பட்ட பயிற்சி அகேடமிக்களும்,சென்னையில் மட்டுமே 20 தனியார் பயிற்சி மையங்கள் இருக்கின்றன.5வயதிலிருந்து பயிற்சியளிக்கப்படுகிறது.தினமும் பயிற்சி பெற ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் 300லிருந்து 1000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. வாரம் மூன்று முதல் 6 நாட்கள் வரை பயிற்சியளிக்கப்படுகிறது.

“எங்கள் பயிற்சி மையத்தில் சேருபவர்கள் பெற்றோர்களோடு சேர்ந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்.காரணம் பயிற்சி மையத்தில் தினமும் 1 மணி நேரம் விளையாடும் போது பெற்றோர்களும் அதை கற்றுக்கொள்வதால் வீட்டில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள்.இதனால் அனுபவம் அதிகமாகிறது.எதாவது சந்தேகம் எழும்போது அதை மறு நாள் வந்து இருவரும் கேட்டு விளக்கம் பெறுவார்கள். பெற்றோர்களுக்கும் பிள்ளைகள் மீது அதிக நம்பிக்கை வரும்.பிள்ளைகள் தொடர்ந்து ஜெயிக்க உறுதுணையாக இருப்பார்கள்.என்கிறார் சென்னை திருவொற்றியூரில் சக்தி பயிற்சிமையம் என்ற செஸ் அகேடமி வைத்திருக்கும் சக்திபிரபாகர்.
ஒவ்வொரு பயிற்சி மையமும் ஒவ்வொரு விதமாக பயிற்சியளிக்கிறார்கள்.முக்கியமாக மூன்று நிலைகளில் பயிற்சியளிக்கிறார்கள்.

முதலில் தியரி:

செஸ்ஸில் பிரசித்தமான மூவ்கள் அடங்கிய புத்தகங்கள் புத்தக்க்கடைக்களில் உள்ளன.ஆரம்ப ஆட்டக்காரர்கள் இதன் மூலம் கற்றுக்கொண்டு, செஸ்விதிகளை முழுமையாக கற்றுத்தரப்படுகிறது.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முடிவுற்றதும் கிராண்ட் மாஸ்டர்கள் பயன்படுத்திய பிரசித்தமான மூவ்கள் அடங்கிய புத்தகம் விற்பனை செய்யப்படுகின்றன.அதையும் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாவதாக இரண்டு நபர்கள் இணைந்து விளையாடி பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் சந்தேகம் எழுந்து அதை நிவர்த்தி செய்துகொள்கிறார்கள்.

இணையத்திலும், கணினியிலும் பல்வேறு படி நிலைகளில் உள்ளவர்களுக்கான செஸ் விளையாட்டு மென்பொருள்கள் மூலம் பயிற்சி பெறுவது மூன்றாவது நிலை.

டிப்ஸ்:

செஸ் விளையாட அதிக பொறுமை தேவை எனவே தியானம் யோகா போன்றன கைகொடுக்கும்.போட்டிகாலங்களில் மாமிச உணவை தவிர்த்தலும்,அரை வயிறு சாப்பிடுவதும் நல்லது.அதிகாலை பயிற்சி பெறுவது நல்ல பலனளிக்கும் என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.

கிராமங்களின் மோசமான நிலை:

தமிழகத்தில் சாதித்த கிராண்ட் மாஸ்டர்களின் பின்னணியை அலசினால் ஒரு உண்மை புலப்படும்.அவர்களில் பெரும்பாலோர் சென்னை,மதுரை போன்ற நகரங்களை சேர்ந்தவர்கள்.ஏற்கனவே ஜெயித்த கிராண்ட் மாஸ்டர்கள் கூட சென்னையிலேயே பயிற்சி மையம் துவங்கி செட்டிலாகிவிடுகிறார்கள்.
இதனால் கிராமங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.கிராமங்களிலிருந்து ஜொலித்தவர்கள் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இதற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கிராமங்களில் பயிற்சிமையங்கள் குறைவு.செஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை.யாரும் அங்கே பயிற்சி மையங்கள் துவங்காத்தால் அவர்களுக்கு சொல்லித்தர ஆளில்லை.

“கிராமங்களில் அதிக அளவில் போட்டிகள் நடத்துவதன் மூலம் அதிக மாணவர்களை ஈர்க்க முடியும்.அதிக மாணவர்கள் ஆர்வமாக முன்வரும்போது பயிற்சி மையங்கள் துவங்க முன்வருவார்கள்.
என்கிறார் கிராண்ட் மாஸ்டரான ஆர்.பி.ரமேஷ்.இவர் கடந்த 15 ஆண்டுகளாக செஸ்குருகுல் என்ற பயிற்சி மையம் நடத்துகிறார்.

இரண்டாவது காரணம் செஸ் பணக்காரர்களுக்கான விளையாட்டு. தனியாளாக பயிற்சி பெற ஒருவருக்கு 5000லிருந்து 1 லட்சம் வரை செலவாகும். மாநில மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு பதிவுக்கட்டணமாக ஆயிரங்களில் செலவு செய்ய வேண்டி வரும்.
சாதாரணமாக ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் பதிவுக்கட்டணமாக 100லிருந்து வசூலிக்கப்படுகிறது.போட்டி நடத்த இடம்,சாப்பாடு என போட்டி அமைப்பாளர்கள் செலவு செய்துவிட்டு திரும்பிப்பார்த்தால் லாபமே மிஞ்சாது.எனவே யாரும் போட்டி நடத்த யோசிக்கிறார்கள்என்கிறார் சக்திபிரபாகர்.

மூன்றாவது காரணம் செஸ் விளையாடுபவர்களுக்கு அரசு வேலைகிடைக்காது. மாணவர்கள் நாங்க இதை விளையாடினால் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.என்கிறார் ஆர்.பி.ரமேஷ்.
ஆரம்பகாலங்களில் வங்கிகள்,எல்.ஐ.சி,ரெயில்வே,இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் வேலைக்கு எடுத்தார்கள்.தற்போது அது கணிசமாக குறைந்துவிட்டது என்கிறார்கள் பயிற்சியாளர்கள்.
”””செஸ் விளையாடினால் அறிவு கூர்மையாகும்.எங்கள் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் எல்லோரும் +2வில் அதிக மதிப்பெண் பெற்று பெரியகல்லூரிகளில் பொறியியல் சேரப்போகிறார்கள் என்கிறார் சக்திபிரபாகர்.

அரசு ஆணை:
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழக அரசு 7 வயதிலிருந்து 17 வயதுவரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் செஸ் விளையாடப்பயிற்சி தரப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஆணை வெளியிட்டிருந்தார்.

இந்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது.இதற்காக ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம்,தர்மபுரி,ஈரோடு,ராமநாதபுரம்,திருச்சி
ஆகிய இடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.
அரசின் அறிவுறுத்தல் படி பள்ளிக்கொரு கிளப்பும் அதை கண்காணிக்க ஒரு ஆசிரியரும் இருக்க வேண்டும்.

அரசின் ஆணை செயல்படுத்தப்படும் போது எல்லா மாணவர்களும் செஸ் பயிற்சி பெறுவார்கள்.அவர்களுக்கு அதன் மூலம் ஆர்வம் அதிகரிக்கும்போது தானாகவே பயிற்சி மையங்கள் அதிகரிக்கும்.கிராண்ட் மாஸ்டர்கள் உசிலம்பட்டியிலும்கூட உருவாவார்கள்.விஸ்வநாத் ஆன்ந்த மட்டுமே தமிழ்நாடல்ல!!

(கிராண்ட் தமிழர்கள்):

சசிகிரண் – தமிழகத்தின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர்(2000). 32வயதாகும் இவர் சென்னையைச் சேர்ந்தவர்.ஆசிய அளவில் மூன்றாவது ரேங்கிங்கும் உலக அளவில் 26ஆவது FIDE ரேட்டிங்கும் பெற்றவர்.இவரது நகர்த்தல்கள் internet chess club இல் பப்லூஎன்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.மத்திய அரசு 2002இல் அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.

ஆர்.பி.ரமேஷ் –

பனிரெண்டு வயதில் பக்கத்துவீட்டுக்காரருடன் துவங்கியது இவரது செஸ் ஆர்வம்.2003இல் கிராண்ட் மாஸ்டரானார்.செஸ்ஸில் அடியெடுத்துவைத்தவர் தற்பொழுது சென்னையில் செஸ்குருகுள் என்ற பயிற்சிமையத்தை நடத்தி வருகிறார்.இந்திய செஸ் ஃபெடரேசன் தேர்வு கமிட்டி உறுப்பினர்.உலக அளவிலான போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர்.

மகேஷ் சந்திரன் – 

இவரது செந்த ஊர் மதுரை.இந்தியாவின் பனிரெண்டாவது கிராண்ட்மாஸ்டர்.ஏழுவயதில் அண்ணன் மற்றும் அம்மா அப்பா செஸ் விளையாடுவதை பார்த்த போது ஆர்வம் தொற்றிக்கொண்டது.இவர் செஸ்பயிற்சியாளரும் கூட.டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை கணிப்பொறி பட்டப்படிப்பு பயின்றவர்.

தீபன் சக்கரவர்த்தி – 

2006ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்ட்த்தை வென்ற இவர் இந்தியாவின் 14வது கிராண்ட் மாஸ்டர். மதுரையை சேர்ந்தவர்.இவரது அப்பா ஜெயக்குமார் விளையாடியதை பார்க்கும்போது ஏற்பட்ட ஆர்வத்தில் இவரும் களத்தில் குதித்தார்.எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றவர்.இருபது வயதுக்குள் ஆசியன் சேம்பியன்பட்டத்தை கைப்பற்றிய பெருமைக்குரியவர்.

அருண்பிரசாத் – 2008ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.

சுந்தர்ராஜன் கிடம்பி – 2009ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்.

ஆர்.ஆர்.லக்‌ஷ்மண் – 2008ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில் ஜெயித்த இவர் இந்தியாவின் இருபதாவது கிராண்ட்மாஸ்டர் 

அதிபன் இந்தியாவின் 23வது கிராண்ட்மாஸ்டர்.இவரது தந்தை பாஸ்கரன்.சென்னையை சேர்ந்த இவர் தற்பொழுது எஸ்.ஆர்.எம்மில் படித்து வருகிறார்.

சேதுராமன்
இந்தியாவின் மிக இளம்வயது கிராண்ட் மாஸ்டர்.சென்னையை சேர்ந்தவர்.சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இரண்டாமாண்டு காமர்ஸ் படிக்கிறார். நான்கு வயதில் செஸ்ஸில் அடி எடுத்துவைத்த இவர் தன் அப்பாவிடமிருந்தே பயின்றார்.8வயதில் சென்னை அளவில் ஜெயித்த இவர்,2009இல் தன் பதினாறு வயதில் உலகசாம்பியனாக தடம் பதித்தார். இதுவரை உலக அளவில் 2தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளிபதக்கம்,ஆசிய அளவில் 4,காமன்வெல்த் போட்டிகளில் 2ம்,இந்திய அளவில் 10 பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்கள் பெற்றிருக்கிறார்.

விஜயலக்‌ஷ்மி
இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர்.சென்னையை சேர்ந்தவர்.தந்தை சுப்பராமன் தான் இவரது பயிற்சியாளர்.செஸ் ஒலிம்பியாடில் வென்ற முதல் பெண் 2000 மற்றும் 2002 ஆண்டுகளில் வென்றவர்.இந்திய பெண்கள் சேம்பியனாக ஆறுமுறை ஜெயித்த பெருமைக்குரியவர்.2005இல் கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீயம் ஜாவை மணந்தார்.ஏர் இந்தியாவில் பணிபுரிகிறார்.

ஆர்த்தி ராமசாமி
2003ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டார்.சென்னையை சேர்ந்தவர்.எட்டுவயதில் ஆழ்வார்பேட்டையிலுள்ள முத்தையா செட்டியார் பள்ளியில் துவங்கியது இவரது செஸ் வாழ்க்கை.1993இல் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முதல்பரிசை வென்றது தான் இவரது ஆரம்பம்.கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷை திருமணம் செய்தார்.

பயிற்சி மையங்கள்

சென்னை
1)       8 பை 8, மேற்கு மாம்பலம், 98407 03544
2)       அண்ணாநகர் செஸ் அகேடமி - 98401 82753
3)       செஸ் குருகுள் – டி.நகர், 9444409043
4)       குரோம்பேட்டை செஸ் இன்ஸ்டிட்யூட் , 9884107267
5)       கிங் செஸ் ஃபவுண்டேசன்,மாதவரம், 9551046464;
6)       புரசை செஸ் அகேடமி,புரசைவாக்கம், 9444005250
7)       சக்தி செஸ் அகேடமி,மைலாப்பூர் 9444255196.
8)       டிநகர் செஸ் அகேடமி,டி.நகர், 94444 66155
காஞ்சிபுரம்
1)       மாஸ்டர் மைண்ட் செஸ் அகேடமி
பம்மல்
9444177703
2)       மவுண்ட் செஸ் அகேடமி,உல்லாகரம், 9444210914,
புதுக்கோட்டை
1)       மீனாக்க்ஷி செஸ் அகேடமி, 98435 84015
சேலம்
1)       நோவா செஸ் அகேடமி, அலகாபுரம் புதூர்
2)       யுடிலிடிஃபாரம் ஆஃப் செஸ்,மெய்யனூர், 9443240899
சிவகங்கை
கேஸ்ட்ல் செஸ் அகேடமி,காரைக்குடி, 98431 36945
தஞ்சாவூர்:
தி கிங் பான் செஸ் அகேடமி,கபிஸ்தலம், 9894030450
திருவள்ளூர்
ப்லூம் செஸ் அகேடமி,திருவெற்றியூர் 9380832268


( நன்றி : புதியதலைமுறை)

மக்களை முற்றுகையிடும் முப்பது கேள்விகள்


கடந்த மே மாதம் சென்னையில் துவங்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஜூன் பத்தாம் தேதி முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படி எடுக்கப்படுகிறது? அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மக்கள் இதற்கு எப்படி பங்களிக்கிறார்கள்? ஒரு நேரடி ரிப்போட்..

நாம் சென்ற இடம் சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்னமலை பகுதியிலுள்ள ஆரோக்கியமாதா நகர் குடிசைப்பகுதி. சுமார் ஆறு செண்ட் அளவே உள்ள இந்த பகுதியில் சுமார் 50வீடுகளில் 200பேர் வசிக்கிறார்கள்.
கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரி மற்றும் அவரது உதவியாளரும் ஒரு வீட்டு குடும்பத்தலைவியிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.

நாம் அவரோடு சின்னமலைப்பகுதிகளில் பயணப்பட்டோம்.கணக்கெடுப்பை பதிவு செய்ய ஒரு டேப்லட் கணினி அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்தது.அதில் சுமார் முப்பது கேள்விகள் இடம்பெற்றிருந்தது. அதில் 4 கேள்விகள் மட்டுமே ஜாதி தொடர்புடையது. எஸ்.சி, எஸ்.டியை பிரிவினை தனித்தனியாகவும் மற்றசாதியின் பெயர்பதியப்பட்டு எல்லாமே “மற்றவைஎன்ற பிரிவின்கீழ் குறிக்கப்படுகிறது.சாதி இல்லைஎன்ற பிரிவும் உள்ளது வரவேற்கத்தக்கது.தங்கள் ஜாதியை சொல்ல விரும்பாதவர்கள் இந்த பிரிவில் வருவார்கள்.

மீதமுள்ள 26 கேள்விகளில் பெயர்,பாலினம்,திருமணமானவரா போன்ற அடிப்படைகேள்விகள்.இதர கேள்விகள் சமூக பொருளாதாரம் தொடர்புடையவை.எத்தகைய வீட்டில் தங்கி இருக்கிறார்? மாடிவீடா? ஓட்டுவீடா? குடிசை வீடா? மற்றும் குடிதண்ணீருக்கு அரசுவழங்கும் தண்ணீரா? கேண்களா? கழிவறை இருக்கிறதா? இருந்தால் வீட்டுக்குள் இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? போன்ற கேள்விகள்.

செல்போன்,ஃபிரிஜ்,கம்ப்யூட்டர்,லேப்டாப் போன்றன இருக்கிறதா? என பொருளாதார ரீதியாக கேள்விகள். நாம் நேரடியாக பார்த்தவரையில் மக்கள் அதிகாரிகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்கள்.தாங்கள் எந்த ஜாதி என்று சொல்வதில் யாருக்கும் எந்த தயக்கமும், கூச்சமும் இல்லை.எல்லோரும் தைரியமாக முன் வந்து சொல்கிறார்கள்.இதில் மேல்தட்டு,அடித்தட்டு என்ற பாகுபாடெல்லாம் இல்லை.

சிலர் தங்கள் ஜாதி தெரியவில்லை என்று சொன்னது ஆச்சரியமான அனுபவம்என்கிறார் கணக்கெடுத்த அதிகாரி ஒருவர்.

கலப்புத்திருமணமோ, காதல் திருமணமோ செய்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணவனின் ஜாதியை கொடுத்திருக்கிறார்கள். யாரும் “ஜாதி இல்லை என்று சொல்ல முன்வருவதில்லை

ஓரிருவர் மட்டுமே “ஜாதி வேண்டாம்
என்று தங்கள் ஜாதியை சொல்ல மறுக்கிறார்கள்.அவர்களும் மேல்தட்டு மக்கள். ஜட்ஜ்காலனியில் “என் ஜாதி என்ன என்று கேட்பது சட்டப்படி குற்றம்என ஒருவர் சண்டைப்போட்டார்.இப்படி பலதரப்பட்ட மக்கள்.

மக்களிடம் கேட்கப்பட்ட 30 கேள்விகள் ஜாதிக்கணக்கை மட்டும் காட்டுவதாக இல்லை.அவை மூன்றுவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒன்று - உண்மையிலேயே எந்த ஜாதி பொருளாதார ரீதியில் வளர்ந்திருக்கிறது என்பதும் எந்த ஜாதிமக்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்பதும் இந்த கண்கெடுப்பின் மூலம் வெட்டவெளிச்சமாகும்.

இரண்டு -  எத்தனை பேர் அரசு வழங்கும் குடிநீரை பயன்படுத்துகிறார்கள்.யார் யாரிடம் செல்போன் புழங்கி இருக்கிறது.கழிப்பறையில்லாத வீடுகள் எத்தனை போன்ற புள்ளிவிவரங்கள் தெரியவரும்.இந்த புள்ளி விவரங்கள் எதிர்காலத்திட்டமிடுதலுக்கு வழிவகுக்கும்.

மூன்று - உண்மையிலேயே கிராமங்களை எல்லாவசதிகளும் எட்டி இருக்கிறதா என்பதும் கிராமம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதும் தெரிந்துவிடும்.

(நன்றி : புதியதலைமுறை)


இந்தியனா பொறந்தது தப்போ


இந்தியனா பொறந்தது தப்போகாலை ஒரு ஏழு மணிக்கு பல்துலக்கிக்கொண்டிருந்தேன். காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்த அந்த நேரத்திலும் என் கண்ணெதிரே அந்த கடுப்பு தெரிந்தது. வழக்கம் போல ரோடுலைட் எரிந்துகொண்டிருந்தது. இது பத்தாவது முறை. ஏற்கனவே பலமுறை பக்கத்திலிருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு பேசி இருக்கிறேன்.

இந்த ரோடுலைட் பிரச்சினை எல்லா ஊரிலும் எல்லா காலக்கட்டத்திலும் நடக்கிற ஒன்று தான்.இதில் என்ன புதுசா நீங்க கண்டுபிடிச்சீங்க என்று கேட்கலாம்.

காலை ஆறு மணி ஆனாதும் ரோடுலைட் தானாகவே அணைவது போல ஒரு சின்ன கண்டுபிடிப்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். நம் கடிகாரத்தில் இருக்கும் அலாரம் செயல்படும் அந்த தொழில்னுட்பத்தை பட்டி டிங்கரிங் செய்தாலே போதும் பிரச்சினை சால்வ்ட். நானே ஒரு இரண்டு நாள் தம் கட்டி உட்கார்ந்தால் இதற்கான கண்டுபிடிப்பை கண்டுபிடித்து விடுவேன்.ஒருவேளை ஏற்கனவே யாராவது கண்டுபிடித்திருந்திருக்கலாம்.

கண்டுபிடிப்பது ஒரு பிரச்சினையே அல்ல.அதற்கு பேட்டண்டும் வாங்கி வைத்துவிடுவேன். அதை இலவசமாக அரசிடம் ஒப்படைக்கவும் தயார். அரசு வாங்கிக்கொள்ள வேண்டுமே!! அரசு வாங்கிக்கொள்ளாததற்கு ஆயிரம் காரணங்கள். இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு யோசிக்கும். ரோடுலைட்டை போடுவதும், அணைப்பதும் மட்டுமே வேலையாக இருக்கும் ஒரு பணியாளனின் வேலை பாதிக்கப்படும்.இந்த கண்டுபிடிப்பை காரணம் காட்டி அவனை பணி நீக்கம் செய்தால் அவன் வீதியில் இறங்கி போராடுவான். இது மீடியாவில் பெரிதாக்கப்படும். கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாலே போதும் பிரச்சினை கொளோஸ். இதை தான் அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

நம்மூரில் புதிதாக எதையாவது கண்டுபிடித்துவிடுவது ரொம்ப ஈசி. கண்டுபிடிப்புகளுக்கான தேவையும், கண்டுபிடிப்பாளர்களும் அதிகமாக இருக்கிற ஒரே தேசம் இந்தியா தான். இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தினந்தோறும் பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுகின்ற கண்டுபிடிப்புகளே இதற்கு சாட்சி. ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் என்ன ஆகின்றன. இதை யாராவது யோசித்திருப்போமா?
சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் நவீன் என்ற மாணவன் பற்றி புதியதலைமுறை பத்திரிக்கையில் எழுதி இருந்தேன்.அவர் கண்டுபிடித்த கருவி மீனவர்கள் கடல் எல்லை தாண்டினால் படகில் இருக்கும் என்ஜினை அணைத்து மேற்கொண்டு படகை நகரவிடாமல் தடுக்கும். அருமையான கண்டுபிடிப்பு. இந்திய கடற்பாதுகாப்பு படையின் பெரிய அதிகாரிகள் அவரை பாராட்டி விழா எடுத்து கொண்டாடி இரண்டு நாள் முழுவதும் கைகுலுக்கி வழியனுப்பியதோடு கடமையை முடித்துக்கொண்டனர்.

இந்தியாவின் ஒரே அணுவிஞ்ஞானியான அப்துல் கலாம்கூட அவரை கூப்பிட்டு பாராட்டி காபி கொடுத்து வழியனுப்பி வைத்தார். அதோடு அந்த கண்டுபிடிப்பின் சேப்டர் கொளோஸ். நெல்சன் நவீன் சென்னைகாரர்.

சரி கிராமத்து மாணவர் கதையை பார்ப்போம்.சமீபத்தில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள லெ.விலக்கில் கிராமத்து மாணவர் ஒருவர் காது கேட்காதவர்கள் செல்போனில் பேசுவதற்கு உதவும் கருவி ஒன்றை கண்டுபிடித்திருந்தார்.

“தம்பி பேடன்ட் வாங்கிட்டீங்களா” என்றேன் அவரிடம்.. “அப்டீன்னா” என்றார்.
”உங்கள் ஆசிரியரிடம் அது பற்றி கேளுங்கள்” என்று கூறி சில வழிகாட்டுதல்களை சொன்னேன்.

நம்மூர் கண்டுபிடிப்பாளர்களின் உண்மை நிலை இது தான்.அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற வழிகட்டல்களோ உதவியோ வரவேண்டிய இடத்திலிருந்து வருவதே இல்லை.

கண்டுபிடிப்புகள் ஒரு தேசத்தை அலங்கரிக்கவேண்டியவை, மாறாக கண்டுபிடிப்பாளன் வீட்டு பரணை அலங்கரிக்கின்றன. இரவு பகலாக கண்டுபிடித்து ஒன்றுக்கும் பயன்படாத வகையில் அந்த கண்டுபிடிப்பை குப்பை சூழ பரணில் பார்க்கிற அந்த வலி, வேறு எந்த நாட்டு கண்டுபிடிப்பாளனுக்கும் வந்திருக்காது.

ஆனால் நம்மூரில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. யாராவது கண்டுபிடிப்பு தொடர்பான ஆர்வம் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று நிறைய பணம் பண்ணும் போது, வயித்தொரிச்சல் வந்து “ நீ என் வரிப்பணத்தில் படித்து, வெளி நாட்டை முன்னேற்றுகிறாயே.. தாய் நாட்டின் மீது உனக்கு பற்றே இல்லையா. நீ தேச துரோகி’ என கண்டுபிடிப்பாளரை நம் வீட்டுக்கு கூட்டிவந்து காதிலிருந்து ரத்தம் வரும்வரை பிளேடு போடுவோம்.இதுவும் நடக்கும்.

நம் அரசாங்கம் கண்டுபிடிப்புகளுக்கென்று ஆண்டு தோறும் சில கோடிகளை வழங்குவதாக பட்ஜெட் தகவல்கள் சொல்கிறது.ஆனால் அது எங்கே போகிறது. இது போல யோசித்துகொண்டே இருக்கும் போது எதேச்சையாக ஒரு கேள்வி உதித்தது

”இந்தியனா பொறந்தது தப்போ”

Monday, June 4, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 5


யார் இந்த அல்டாப் ஆறுமுகங்கள்.அதை தெரிந்துகொள்ள நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

அது ஒரு காலம்.அப்பொழுது அப்பாவியாக இவர்கள் ஃபேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருப்பார்கள். ஃபேஸ்புக் என்றால் என்ன? ஸ்டேட்டஸ் என்றால் என்ன? ஏன் லைக் போடுகிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவே தெரியாது.
திக்குத்தெரியாத காட்டில் இலக்கின்றி பயணித்திருப்பார்கள்.இன்று இவர்கள் குட் நைட்என்று ஸ்டேட்டஸ் தட்டினால் கூட அதை இருபது கொசுக்கள் லைக்கும்.



ஆரம்பத்தில் இவர்களை உற்று பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும். எல்லா ஸ்டேட்டஸுக்கும் லைக்கை போடுவார்கள். “யார்ரா அது நம்ம ஸ்டேட்டஸையும் மதிச்சி லைக் போடறதுஎன எல்லோரும் இவர்களை பார்த்து திரும்பி, உலகம் இவர்களது ஸ்டேட்டஸை லைக்கும். பிறகு இவர்கள் கமெண்டுவார்கள், அவர்கள் பதிலுக்கு கமெண்டுவார்கள். ஒரு கட்டத்தில் இவர்களுடைய ஸ்டேட்டஸுகள் பெரும்பாலோரால் கவனிக்கப்படும்போது நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் அதே ஃபார்முலாவை கடைபிடிப்பார்கள். “இவனை எல்லாம் எதுக்கு மதிக்கணும் என எவனையும் கண்டுகாமல் திரிவார்கள்கேட்டால் பிஸி.. “ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாக,அமெரிக்கால ஒபாமா கூப்டாக என உளருவார்கள்”.

இவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் ஆக்டிவ் யூசர்கள். பெரும்பாலும் அல்டாப்புகளை நண்பர்கள் லிஸ்டில் வைத்துக்கொள்வதால் நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக வெளியே தெரியுமே தவிர ஒரு புண்ணியமும் இல்லை. சாதா ஆசாமிகள் தான் நமக்கு லைக்கும் கமெண்டும் போடுவார்கள் என்பதால் இத்தகையவர்களை டார்கெட்டினாலே போதும் நாமும் பிரபலமாகி விடலாம்.

ஃபேஸ்புக்கில் பிரபலமாவது ரொம்ப சிம்பிள்.24 மணி நேர இணைய தொடர்பு. எல்லோருடைய ஸ்டேட்டஸுக்கும் லைக்,கமெண்ட், நமக்கு வரும் எல்லா நண்பர் அழைப்பையும் அக்ஸெப்டுதல், கொஞ்சம் காமெடி,கலாய்ப்புகள், குறிப்பாக எந்த கட்சியும் சாராமல் தனிப்பதிவுகளாக ஸ்டேட்டஸ் போட்டாலே போதும், அடுத்த ஆறே மாதத்தில் ஃபேஸ்புக் உங்களைத்திரும்பி பார்க்கும்.

ஆனால் பிரபலமான பின் ஒரு விலை கொடுத்தாக வேண்டும்.அது ரஜினியானாலும் சரி, நயன்தாராவானாலும் சரி,.. அது என்ன விலை. 

1) நீங்கள் வழக்கம் போல் எல்லோருடைய கமெண்டுக்கும் லைக், கமெண்ட் போடாவிடில் “அவனுக்கு தலைக்கணம் வந்துடிச்சி மச்சி”””’” என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.

2) எப்பொழுதும் யாராவது செட்டில் வந்து தொல்லை கொடுப்பார்கள்.

3)கண்ட போட்டோக்களிலும் உங்களை டேக் செய்து வேடிக்கை பார்ப்பார்கள்

4)அவர்களுக்கு பிடித்த குருப்பில் உங்களை சேர்த்து விட்டுவிடுவார்கள், உங்கள் அனுமதியில்லாமலே. ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தால் நண்பர்களின் எண்ணிக்கையை விட நீங்கள் இணைந்திருக்கும் குரூப்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

5) நீங்கள் உங்களையும் அறியாமல் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகி இருப்பீர்கள்

6)யார் யாரோ போடும் ஸ்டேட்டஸின் கீழ் இவர்கள் போடும் சண்டையில் உங்களை அழைத்து மத்தியஸ்தம் கூப்பிடுவார்கள்

7)எல்லா ஸ்டேட்டஸும் எல்லோரும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது.உங்கள் ஸ்டேட்டஸில் யாருக்காவது உடன்பாடு இல்லையென்றால் “என்ன பாஸ்இப்படி பண்ணிட்டீங்கஎன ஏதோ கொலைக்குத்தம் செய்தது போல விசாரிப்பார்கள்.

சரி நன்மைன்னு எதுவுமே சொல்ல மாட்டீங்களான்னு கேக்கறது தெரியுது?

ஏன் இல்லை.இருக்கிறதே.

பவர்ஸ்டார் – கோபிநாத் சண்டையில் எல்லோரும் யார் பக்கம் நின்றார்கள்.அதே.. உங்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமே இருக்கும். எனவே கவலை வேண்டாம்.உங்களை பகைத்துகொண்டு எவனும் உயிரோடு ஊர் போய்விட முடியாது.

என்னைகேட்டால் ஃபேஸ்புக்கைப்போல் ஒரு சிறந்த எண்டர்டெயின் மெண்ட் இருக்கவே முடியாது.தினமும் எதாவதொரு பிரச்சினையை யாராவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். தினந்தோறும் யார் செய்யும் தவறுக்காவது தூக்குதண்டனை வழங்கப்படும். தீர்ப்பு எழுதப்படும். எதாவதொரு கட்சி ஆட்சியமைக்கும். ஒரு கட்சி மோசம் என முத்திரை குத்தப்படும்.யாருடைய டவுசராவது அவுக்கப்படும்.

நிறைய பேருக்கான அங்கீகாரத்தை ஃபேஸ்புக் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கிறது. இருக்கும். இருக்கட்டும்..!!


(முகத்திரை விலகும்)