Wednesday, July 11, 2012

சென்னை மோசம்ல!!


சென்னை வந்து சுமார் ஒன்றரை வருடமாகிறது.ஆரம்பத்தில் சென்னை வருவதற்கு பெரிய ஆர்வமோ விருப்பமோ இல்லை.சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல இருக்கிற தொட்டியம், இங்கயே நிறைய கம்பெனி இருக்கு.எங்கயாவது வேலை பாத்து மாசம் ஒரு அமவுண்ட் தேத்தி வாரம் ஆனா வீட்டுக்கு போய் ஜாலியா என்ஜாய் பண்ணி காலத்தை ஓட்டிடலாம்னு கணக்கு பண்ணி கொண்டிருந்த எனக்கு சென்னை வருவதற்கு பெரிய ஆர்வமோ வெறியோ ஏற்படாது போனதில் ஆச்சரியமேதுமில்லை.

ஒரு கட்டத்தில் சென்னைக்கு வந்தால் தான் ஒரு எக்ஸ்போஸர் கிடைக்கும்,பெரிசா எதாவது பண்ணலாம் என்ற எண்ணம் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருந்தது.ஆனால் சென்னை வர யோசித்தற்கு சில அடிப்படை காரணங்கள். சென்னையில் வீடு ரேட்டு அதிகம்,வீடே கிடைக்காது,அப்படி கிடைத்தாலும் வீட்டுக்காரர்கள் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்து தொல்லை கொடுப்பார்கள்.சரி மேன்சனில் ரூம் எடுத்து தங்கலாம் என்றாலும் ரூம்மேட்டாக குடி வெறியர்கள் வந்துதொலைத்து தினமும் தண்ணியடித்து நம் முகத்தில் வாந்தி எடுத்துவிடுவார்கள் என்ற பயம்.

போதும் போதாதற்கு எங்கே சாப்பிடுவது என்ற பயம்.ஹோட்டல் சரி இருக்காது.ரோட்டுக்கடைகளில் சாம்பாரில் சாக்கடையை மிக்ஸ் பண்ணி கொடுத்து விடுவார்கள்.பெரிய கடைக்களில் சாப்பிட ஒரு நாளைக்கு தனிமனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு வேளைக்கு 200ஆவது ஆகும்.அது மட்டுமல்லாமல் சென்னையின் தண்ணி பிரச்சினை பெரிய தலைவலியாக இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் தண்ணியையே குடிக்கவும்,குண்டி கழுவவும் பயன்படுத்த வேண்டிய கொடூர நிலைமை.சில ஏரியாக்கள் மோசமாக இருக்கும். மோசமாக இருக்கும் மீன்ஸ் தாதாக்கள்.தினந்தோறும் யாரையாவது துறத்தி துறத்தி வெட்டுவார்கள்.ரோட்டில் பேருந்துகளை வழிமறித்து எல்லோரையும் இறங்க சொல்லி நாம் அதுவரை நோட்டம் விட்ட ஃபிகர்களிடம் சண்டை பிடிப்பார்கள். நமக்கு நரம்பு புடைத்தாலும் அவர்களிடம் மோதுகின்ற அளவுக்கு திறனில்லாத நோஞ்சான் பாடி.

மெயின் பிரச்சினை.சென்னையில் வேலையில்லாத்திண்டாட்டாம். நமக்கு வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. நாம தமிழ் மீடியமில் படித்து தினத்தந்தி,தினமலர் வாசகர்களாக தமிழில் வலம் வருவோம்.சென்னையில் எல்லோரும் டான்பாஸ்கோவில் ஹிந்து புரட்டுபவர்களாக இருப்பார்கள்.அவர்கள் மத்தியில் எப்படி இங்கிலிபிஸ் பேசுவது. நாம என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்றோம். இண்டர்வுயூவில் அழகான யுவதிகள் முன் ஆங்கிலம் பேசத்தெரியாமல் அவமானப்பட நேரிடும்.

இவ்வளவு பிரச்சினையும் கடந்து கையில் பணமில்லாமல் தண்ணீர் பிரச்சினையால் தினமும் குளிக்காமல், பாதி பல் வெளக்கி, வேலைக்கு போய் சேர்ந்தால், பக்கத்தில் இருக்கிற சக பணியாளர் “ நீங்களும் என்னைப்போல குளிக்கல தானேஎன்று கேட்டால் என் முகத்தை எங்க கொண்டு போய் வச்சிக்கறது என்ற சமகால சங்கடங்கள்.

ஆனால் சென்னை பற்றிய என் பல்வேறு பார்வைகளை சென்னை தவிடுபொடியாக்கியிருக்கிறது என்பது தான் உண்மை. மேலே சொன்னவை எல்லாம் சென்னை பற்றிய திரைப்படப்பதிவுகள். அது நம் மனக்கற்பனைக்குள் சிறகு முளைத்து பறந்ததன் விளைவே வெளீயூரிலிருந்து வருபவர்கள். சென்னை வர பயப்படுகிறார்கள்.
ஆனால் என் அனுபவத்தில் மெரினா,எக்ஸ்பிரஸ் அவென்யூ,செண்ட்ரல், கோயம்பேடு, பெசண்ட் நகர் போன்ற சில அம்சங்கள் தவிர்த்து சென்னைக்கும் நம் ஊருக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக இன்று வரை தோன்றவே இல்லை.

இன்று எனக்கு பழைய கற்பனைகளை அசைபோடும்போதெல்லாம் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.சென்னை வாழவே வக்கத்த ஊராக இருந்தால் இங்கிருப்பவர்களெல்லாம் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஈரோடு அல்லது தூத்துக்குடி பக்கம் செட்டிலாகி விட மாட்டார்கள்?

தண்ணீர் பிரச்சினை சில ஏரியாக்களில் இருக்கின்றன என்பது உண்மை தான்.உதாரணமாக கிண்டி போன்ற ஏரியாக்களில் காலை ஒரு முறை தான் மோட்டர் போடுவாங்கலாம் நண்பர் சொன்னார். அப்போதே பக்கெட்டில் பிடித்து வைத்துக்கொண்டு அந்த நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டுமாம்.சரி மச்சி, தாம்பரம் பக்கத்துல தண்ணி பிரச்சினை இல்லை. அங்கே வந்துட்டு செட்டிலாகிடேன் என்றால் வேண்டாம் என்பார்.

காரணம் கேட்டால் “பழகிடுச்சி இங்கே என்ன கஷ்டம்னாலும், எதிர்த்த வீட்டுல தினமும் காலைல தலைவிரி கோலமா பல் வளக்குற ஃபிகர பாக்குற அப்ப எல்லாம் மறந்து போயிடுதுஎன்று சப்பை கட்டு கட்டுவார்.
 
சென்னை எல்லோருக்குமான வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.இந்த ஓராண்டு காலத்தில் சில பக்குவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.அதாவது ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கின்றன.வெளீயூரிலிருந்து பார்ப்பவர்களுக்கு நம்மூர் பிரச்சினைகள் பெரிதாக தெரியும் “அங்கல்லாம் மனுசன் இருப்பானாஎன்று அவர் அலுத்துக்கொள்வார். நாமும் அவர் ஊரில் ரெண்டு நாள் தங்கிபார்த்துவிட்டு “எப்புடிடா உன்னால மட்டும் முடியுதுஎன்போம். பிரச்சினைகளை வெளியிலிருந்து பார்க்காதவரை நமக்கு அது பற்றிய புரிதல் ஏற்படுவதே இல்லை.

எல்லோரையும் போல சென்னை ரொம்ப மோசம்.. ஹெவி ட்ராஃபிக்.. க்ளோபல் வார்மிங்..புகைஎன்றெல்லாம் புலம்பிவிட்டு “ஏண்டா..ஒரு தடவை ஊர் பக்கம் வந்து ரெண்டு நாள் தங்கிட்டு போயேன்என்று பாசமாக அம்மா கேட்கும் போது “வேலையிருக்குமாஎன்னும் வாழ்க்கைக்கு நானும் பழகிவிட்டேன்.சென்னை மோசம்ல..!!