Thursday, February 14, 2013

நூல்களுக்கிடையே ஒரு காதல்



எனக்கு அதிசயமாக இருக்கிறது. நான் இவ்வளவு மாறி இருக்கிறேன். நான் அதிகம் படிப்பவனில்லை. தலையணை அளவுள்ள புத்தங்களின் வாசனையை கூட முகர்ந்ததில்லை. நூலகத்திற்கும் எனக்கும் தொடர்பே இருந்ததில்லை. கல்லூரியில் கட்டாயமாக லைப்ரரி வகுப்புவேளை இருந்த சமயத்தில் கூட விருப்பமில்லாமல் கட்டடித்து வெளியே சுற்றுபவன், இன்று அதிசயமாக நூலகம் வந்திருக்கிறேன். அண்ணா நூலகம். சென்னையின் மிகப்பெரிய. மன்னிக்கவும், ஆசியாவின் இரண்டாவது பெரிய. இருக்கட்டும். நான் நூலகத்திற்கு வந்ததைப்பற்றி சிலாகிக்க என்ன இருக்கிறதென யோசிக்கலாம். இன்று காதலர்தினம்.


இதுவரை என்னுடைய எந்த காதலர்தினத்தன்றும் எனக்கு காதல் வாய்த்ததில்லை. காதலை சொன்னதில்லை. சின்னதாக ஒரு முத்தமில்லை. யார் கையையும் பிடித்து தோளில் சாய்ந்து ரோட்டில் நடந்ததில்லை. கிஃப்ட் கொடுத்ததில்லை. கடற்கரையில் குதித்துவிளையாடியதில்லை. எனக்கு வாய்த்த எல்லாக்காதலும், காதலர்தினம் வருவதற்கு முன்பே சொல்லப்படாமலே சொர்க்கம் சேர்ந்திருக்கின்றன. அந்த அலுப்புகூட இன்று நூலகம் வருவதற்கு காரணமாக இருக்கலாம்.

இது எதோ திட்டமிட்டு நடந்ததாக நினைக்க வேண்டாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  நூலகத்தில் நுழைந்து சில மணி நேரம் கழித்து தான் இன்று காதலர்தினமென்பதே தெரியும். எப்படி மறந்தேன் என்பதே தெரியவில்லை. சினிமா தொடர்பான ஒரு புத்தகத்தை தேடிதான் அண்ணா நூலகம் வந்திருந்தேன். ஆறாவது தளம் செல்ல வேண்டுமாம். படிக்கட்டில் தான் ஏறி சென்றேன். ஆறாவது தளத்தை அடைந்ததுமே  நுழைவுவாயில் அருகே ஒரு அம்மணி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. எனக்கு அவர் பற்றி பெரிய அக்கறை ஏதுமில்லை.

கண்டதும் காதல் வரும் என்றெல்லாம் சொல்லப்படும் சேதிகள் கட்டுக்கதை.பீலா. புருடா இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் அதுவே. நேரே உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு புத்தகமாக தேடி மேய்ந்தேன். எடிட்டிங், கேமரா ஆங்கிள், சினிமா வரலாறு என நிறைய புத்தகங்கள் இருந்தன. எல்லாம் ஆங்கில புத்தகங்கள். best 100 films என்ற புத்தகம் எடுத்தேன். அதில் பவர்ஸ்டார் படம் இருக்கலாம் என்ற என்னுடைய கணிப்பே காரணமாக இருக்கலாம். புத்தகத்தின் அட்டையால் கவரப்பட்டு அதை பார்த்துக்கொண்டே வந்து ஒரு  நல்ல சீட்டாக தேர்வு செய்து உட்கார்ந்தேன்.

5 பக்கங்களைத் தாண்டியிருப்பேன். சரியாக அந்த  படம் என் கண்ணில்பட்டது. the kiss என்ற திரைப்படத்தில் இருந்த முத்தக்காட்சி போட்டோ ஒன்றை பதிப்பித்திருந்தார்கள்.எனக்கு வெக்க வெக்கமாக வந்து தலையை உயர்த்தினேன். எனக்கு எதிரே அழகே உருவான ஒரு தேவதை.ஆம் தேவதையே தான். வட்டவடிவ முகம். பூசினாற்போன்ற முகம்.மஞ்சள்  கலந்த வெளிர் நிறம்.5.8 அடி உயரம் இருக்கலாம். கோவா பட நாயகி பியா போல இருந்தார். ஆமாம் exactly. இதற்குமேல் எந்த வர்ணனையும் தேவையில்லை.

அவளுக்கு முன் நிறைய புத்தகங்கள் பரப்பிவைக்கப்பட்டிருந்தன. எல்லாம் தலையணை உயரப்புத்தங்கள். குண்டு குண்டாக இருந்தது.தலைப்பை பார்த்தேன். எல்லாம் cryptology தொடர்பான புத்தகங்கள். எனக்கு க்ரிப்டாலஜி ரொம்ப விருப்பம். எப்போதிருந்தென்றால், உன்னைப்போலொருவனில் என்னென்னவோ காட்டுவார்களே. கமல் கூட callஐ ரூட்டிங் செய்து சூப்பர் மேன் வேகத்தில் செல்வதாக சொன்ன போது ஏற்பட்டது தான் அது. அதன்பின் கல்லூரியில் அது தொடர்பான பாடம் வந்தபோது படித்தது. ஆனால் பாடத்தில் வந்தது மொக்கை. மனப்பாடத்திற்கானது. அதன்பிறகு எத்திகல் ஹேக்கிங் பற்றி நிறைய தேடினேன். அது படிக்க ஒன்றரை லட்சமாகுமாம்.

ஆனால் எனக்கு முன்னே ஒரு ஹேக்கிங் எக்ஸ்பர்ட் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுகொடுத்தால் எனக்கு வேண்டிய தகவல் கிடைக்கலாம். எதிரே புத்தகங்களுக்கு மேலாக ஆப்பிள் லேப்டாப் ஒன்றும் இருந்தது. அவள் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். கிசுகிசுப்பாய்.. காதலனோ.. என்ன பேசுகிறார்களென கவனிக்க அவளை உற்று பார்த்தேன்.ஐயோ அவள் என்னை பார்த்துவிட்டாள். நான் புத்தகத்தை பார்ப்பது போல நடித்தேன்.  திரும்பவும் அவள் உதடு என்ன பேசுகிறதென உற்று பார்த்தேன். அழகாக இருந்தது. அவள் பேச்சு.  நீண்ட நேரமாக அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ஒரு மணி நேரம் ஆகி இருக்கும்.  நான் விடாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். பேச்சை எப்படித்துவங்கலாம் என தயார் செய்துகொண்டிருந்தேன்.

எப்படியோ அவள் மொபைலை கீழே வைத்துவிட்டாள். அது ஐபோன். சமீபத்திய மாடல். அவள் மீதிருந்து புதுவகையான செண்ட் வாசனை வந்து கொண்டிருந்தது. அது என்னை எதோ ஒரு லோகத்துக்கு தறதறவென இழுத்து சென்று கொண்டிருந்தது.

அவள் என்னை பார்த்தாள். அதில் கொஞ்சம் முறைப்பு இருந்தது. “என்ன சைட்டா” என்ற கேள்வி பொதிந்திருந்தது. “ நீங்க க்ரிப்டாலஜி படிக்கறீங்களா” முதல் பாலே மூக்கை நோக்கி வீசினேன். கண நேரம் தாமதித்தாலும் அவளுக்கு போன் வரக்கூடும் என்ற இக்கட்டான நிலை. ”ஆமாம்” என ஆச்சரியமாக சிரிக்க முயற்சித்து கையை அகலவிரித்து, எப்படி என என் கண்ணை உற்றுப்பார்த்தாள்.அவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “இந்த புக்ஸ் பார்த்தேன். எனக்கு ஹேக்கிங் மேல ரொம்ப ஆர்வம்” என நேரடியாக பேச்சுக்குள் நுழைந்தேன். அவள் ஐஐடியில் படிக்கிறாளாம்.கிரிப்டாலஜி 3ஆம் ஆண்டாம். இங்கே அமைதியாக இருப்பதால் படிக்க வருகிறாளாம்.

”நீங்க என்ன பண்றீங்க” அவள் கேட்டாள். என்ன சொல்வேன். உண்மையை சொல்வதா? பொய் சொல்வதா? தீர்மானித்துக்கொண்டேன். உண்மையை சொல்லிவிடுவதென முடிவெடுத்துவிட்டேன். ”நான் உங்க அளவுக்குலாம் படிக்கல. நீங்க பெரிய ஆளு. ஐஐடியில படிக்கறீங்க. நான் வெறும் BCA" என்றேன்.

"look எந்த படிப்பும் சின்னது இல்ல. படிப்புல சின்னது பெரிசுன்னுலாம் எதுவும் இல்ல. சரியா” என டாபிக்குக்கு உள்ளே சென்றார்.

யெஸ். இதற்காகத்தான் காத்திருந்தேன். சேகர் சிக்கிட்டான்.

“ நீங்க லவ்வர்ஸ்டே செலப்ரேட் பண்ணலையா?”

“எனக்கு அதுலலாம் இண்ட்ரஸ்ட் இல்ல. நீங்க”

“எனக்கும்”

”என்னங்க. இவ்ளோ அழகா இருக்கீங்க. பொய் பேசறீங்க”

“என்ன பொய் பேசுனேன்”

“லவ் இல்லன்னு சொன்னீங்கல்ல”

“ரியலாவே இல்ல. ஆமா எனக்கு லவ் இருந்தா உங்களுக்கு என்ன? இல்லாட்டி உங்களுக்கு என்ன” கோவம் காட்டினாள்.

“ஹே டோண்ட் பீ சீரியஸ். சும்மா டெம்போ ஏத்த தான் அப்டி கேட்டேன். பட். நீங்க கோவப்பட்டா கூட அழகா இருக்கு”

அவள் வெட்கப்பட்டாள்.

“அழகா? உங்க கண்ல எதோ ப்ராப்லம்”

“ஆமாம். அதான் நீங்க கூட அழகா தெரியறீங்க”

அவள் கடுப்பில் லைபரரி புத்தகத்தைத்துக்கி என்மேல் அடித்தாள்.

“ஏங்க இது லைப்ரரி புக்குங்க” என்றேன்.

 “அப்டி தான் போடுவேன். என்ன பண்ணுவீங்க” என்றாள்

அவள் பெயர் அனுரக்‌ஷாவாம். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் போய் செட்டிலான குடும்பமாம்.சென்னை வெயில் தான் பிடிக்கவில்லையாம். இங்கே இருக்கும் பசங்க மாதிரி வேறு எந்த ஊர் பசங்களும் முதல் சந்திப்பிலேயே பச்சக் என ஒட்டிக்கொள்வதில்லையாம். இது எனக்காகவே அவள் சொல்லியிருக்க வேண்டும்.அவங்க அப்பா ஷாப்பிங் மால் வைத்திருக்கிறாராம். சமீபத்தில் பார்த்த திரைப்படம் கடலாம்.அதன் மொக்கை தன்மை குறித்து பேசினோம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பற்றி. பேச்சு பிறகு எங்கெங்கோ சென்று ஸ்லம்டாக் மில்லியனர். அதன் இயக்குனர் வெளிநாட்டுக்காரர் என்பதாலேயே ஆஸ்கர் கொடுக்கப்பட்டதாக நான் சொன்ன கணிப்புகள். அவள் ரோஜா படத்திலிருந்து அவர் போட்ட இசையை ஒப்பிட்டு மறுத்தது என எல்லாமே சுவாரசியம்.

லைப்ரரியில் பேசவேகூடாது என்ற கட்டுப்பாடெல்லாம் அவளிடம் பேசியபோது காணாமல் போனது. நடுநடுவே என் குரல் உயர்ந்த போது  நூலக கண்காணிப்பாளர் ஒருவர் வந்து “சார். பேசறதுன்னா வெளில போய் பேசுங்க” என்றார்.அவளைப்பிரிந்து வெளியே போக பயந்து “சாரி சார்” என்பதாக சொல்லிவிட்டு அமைதியானேன். அவள் புன்னகைத்தாள்.முதல் சந்திப்பே இவ்வளவு சுவாரசியமாக இருக்குமென யோசிக்கவேயில்லை. திடீரென அவளுக்கு கால் வந்தது. “சாரி. ஹேவ் டு கோ” என்றாள்  நான் கூச்சமே படாமல் “யோர் நம்பர்” என்றேன். சிரித்தாள். கொடுத்தாள். காதலர் தினம் காதலை சொல்வதற்காக மட்டுமல்ல. உருவாக்கிக்கொள்ளவும் தான்!!

இப்படி எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன்.அந்த க்ரிப்டாலஜி புத்தகம் அவள் எடுத்ததில்லையாம். நான் அசடு வழிந்துகொண்டே. “சாரி.இல்ல புக் மேல இருந்துது. அதான் கேட்டேன்” என்றபோது அவளுக்கு கால் வந்தது. அவள் ஃபோனை காதில் வைத்து மும்முரமானாள். நான் அந்த இடத்தைவிட்டு விலகினேன். இதுக்குன்னே வந்துடறானுங்க என அவள் நினைத்திருக்கக்கூடும்.

கண்ணா காதல் செய்ய ஆசையா!!


கல்லூரியில் படிக்கும் போது வந்த காதலர் தினங்கள் மறக்கமுடியாதது!!

ஒருவாரத்திற்கு முன்பே “எந்த கலருக்கு என்ன அர்த்தம்” என்பதாக மெசேஜ் அனுப்பத்துவங்குவார்கள்! “போடா.. அந்த கலருக்கு அது அர்த்தம் இல்ல. நான் நெட்ல பார்த்தேன்” என ரோட்டில் கட்டி உருளுவார்கள்.

"போடா நான் அன்னிக்கி கருப்பு கலர் சட்டை போட போறேன்"
“ எனக்கு காதலே பிடிக்காது” என்ற ஆசாமிகள் இப்போதைய ராமதாஸை நினைவுபடுத்துகிறார்கள்.

“டேய் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு காதலே பிடிக்காதுன்னு சொல்ற பசங்களதான் ரொம்ப பிடிக்கும்” என கருப்பு சட்டை காரர்கள் காதோரம் கிசுகிசுப்பார்கள்!!

”சட்டையே போடாம போயிட்டா”என குசும்பாய் யோசித்தவர்களும் உண்டு. “அப்பறம் என்ன ப்ளான்?” என ஆளாளுக்கு விசாரித்துக்கொள்வார்கள். காதல் வாய்க்கப்பெற்றவர்களைத்தவிர எல்லோரிடமும் இந்த கேள்வி உலாவரும்.

சிலருக்கு காதலே வாய்த்திருக்காது ஆனாலும் “என் ஆளு செம்ம அழகா இருப்பா மச்சான். விடிய விடிய போன்ல உருகறா” என அள்ளிவிடுவார்கள். “நம்ம கூட தானே இருந்தான்? இவனுக்கு மட்டும் எப்படி?” என சிலர் ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள்.

“அந்த மூஞ்சை காதலிக்கறதுக்கு தூக்குல தொங்கலாம்” என சில விசமிகள் இருக்கிற காதலுக்கும் வெடி வைப்பார்கள். "மச்சான் இந்த காலத்து பொண்ணுங்கள நம்பவே கூடாதுடா. நம்மட்ட நல்லா கரந்துட்டு. அத்த பையன கல்யாணம் பண்ணிக்குவாளுக” என சிலர் கோர்த்துவிடுவார்கள்.

“வீட்டுக்கு போய் போன் பண்ணு” என தூரத்து காதலிக்கு காற்றிலேயே படம் வரைந்து சிலர் கமுக்கமாக வேலை பார்ப்பார்கள்..

காதலர்தினம் நெருங்க நெருங்க ஒவ்வொருவர் நரம்பும் பின்னிப்புடைத்துக்கொள்ளும்.

 “மச்சான் அவ பாத்துகிட்டே இருக்கால்ல. அன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துடணும்”.

 “டேய் காதல்ங்கறது” என சுவாரஸ்யமாக பாத்ரூம் சந்துகளில் சிலர் பாடமெடுப்பார்கள். கவிதைகளுக்காக கல்லூரி கவிஞர்களிடம் முட்டி மோதுவார்கள். “டேய் இந்த கவிதைக்கு மட்டும் அவ செட்டாகட்டும். வொக்காலி உனக்கு ட்ரீட்டு தாண்டா” என்பார்கள்.

“மொதல்ல அம்மா அப்பாவ காதலிங்கடா” என சசிகுமார் பாணி வசனங்களும் வவுத்தொச்சல் வார்த்தைகளும் சத்தமாக உலாவரும்.

” நாளைக்கி லீவ் போடறவங்களுக்கு 1000 ரூபாய் ஃபைன்” என பிரின்சிபால் ப்ரஸ்மீட் நடத்துவார். “அந்தாளை பத்தி தெரியும்டா. வாய் மட்டும் தான்” என  நம்மாட்கள் சட்டையை மடித்து ரவுடியாவார்கள் (ரவுடிப்பசங்கள தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்)

”டேய் என்கிட்ட பச்சை கலர் சட்டை இல்லடா. மச்சி உன்கிட்ட இருக்கா. டேய் ஒரு நாள் மட்டும்டா” என சிலர் கெஞ்சி கொஞ்சுவார்கள்.

கடைசி கடைசியாக அந்த நாளும் வந்தது. ஒவ்வொருவரும் “ நம்மாளு வந்துடுச்சா” என அவள் பெஞ்சை நோக்க, அவளும் அர்த்தத்தோடு சிரித்து அட்டண்டன்ஸ் போடுவாள். “மச்சி உன் ஆள் இல்லாத அப்பவே தெரியும்றா. வேற எவனோடயாவது படத்துக்கு போயிருக்கும்” என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவார்கள்.

”டேய் கோபால கிருஷ்ணனும், ப்ரியாவும் ஆளக்காணம்றா. நாங்கதான் சொன்னமுல்ல”  என திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலமாகும்.

“எல்லாரும் வந்துட்டாங்களா?” என பிரின்சிபால் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உலாவருவார்.

“டேய் பெருசா பேசுன. என்ன காலேஜூக்கு வந்துட்ட”

“எனக்கு ஆளு இருந்தா நான் ஏன் வரப்போறேன். போங்க தம்பி.போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க”

”டேய் சொன்னியாறா”

“இல்லடா.. ஆனா அவ என்னைய பாத்து சிரிச்சாறா. அதுக்கு என்ன அர்த்தம்”

“டேய் சிரிப்பு கூட காதலின் அறிகுறி தாண்டா”

சிலர் உடம்பு சரியில்லை என்றாலுமே கூட விழுந்து பிறண்டு கல்லூரிக்கு வந்திருப்பார்கள். அதற்கு காதல் காரணமல்ல.. எல்லாம் 1000 ரூபாய் சேதி.

பொண்ணுங்களும் பயங்கர விவரமாக தங்களின் கண்ணனைத்தேடி கலர்கலராக வலம்வருவார்கள். ”உனக்கு எத்தன டீ” என ஆளாளுக்கு குசலம் விசாரிப்பார்கள்.

“நான் எங்க அம்மா அப்பாக்கு துரோகம் பண்ண மாட்டேன்” என பசங்களிடம் நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்.சிலரோ உஷாராக “ நான் எங்க அத்தைபையன தான் கட்டிப்பேன்” என எல்லா பசங்களையும் அலசியபிறகு கடைசி கடைசியாக சபதமேற்பார்கள்.

காதலை சொல்லப்போன ஆசாமியை ராத்திரி மடக்கி கேட்டால்..

”சொல்லலடா” என்பார்கள்

“டேய் ஏண்டா சொல்லல”

“பயமாயிருக்குறா”

காதலர்தினம் என்பது பழையகாதல்களை அசைபோட்டு பார்ப்பதற்கும், நமக்கும் யாராவது சிக்குவாங்களா என பரீட்சித்து பார்ப்பதற்கும், கடைகாரர்களுக்கு ஆஃபர் கொடுத்து பொருட்களை விற்பதற்கும், கடற்கரையில் காதலர்களுக்கு தொல்லைகொடுத்து சுண்டல் விற்கும் பையன் கல்லாகட்டுவதற்குமானது. நிறைய காதல் வெளிப்படுத்தத்தெரியாமலே இறந்திருக்கின்றன என்பது தான் உண்மை.

Friday, February 1, 2013

கடல் திரைவிமர்சனம் (ஏமாத்திட்டீங்களே மணி)


ராவணன் ஃபிளாப்புக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்போடு மணிரத்னம் படம் பார்க்கப்போனேன். போதாக்குறைக்கு கார்த்திக் மகன் கௌதம் ஹீரோ, ராதா மகள் துளசி ஹீரோயின், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி, அர்ஜூன் நடிப்பு, ஏ.ஆர் ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் உச்சமாக பின் நவீனத்துவ புகழ் ஜெயமோகனின் கதை,திரைக்கதை(மணிரத்னமும் கூட இருக்கார்) என எதிர்பார்ப்பின் உச்சத்தோடு திரையரங்குக்குள் நுழைந்தேன்.

படத்தின் துவக்கமே இரண்டு பாதிரியார்களைப்பற்றியது. ஒருவர் நல்லவர்(அரவிந்த்சாமி). இன்னொருவர் கெட்டவர்(அர்ஜூன்).இருவரின் நோக்கமே ஃபாதர் ஆவது. அரவிந்தசாமி ஆர்தோடெக்ஸ் வகையை சேர்ந்தவர். அர்ஜூன் அதில் பெரிய ஆர்வமில்லாமல், எதோ வயிற்றுப்பாட்டுக்காக இந்த பக்கம் கரை ஒதுங்கியவர். இந்த வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டுமென நினைத்து எனோதானோவென வாழ்பவர்.

ராத்திரி நேரத்தில் மெஸ்ஸில் வேலைபார்க்கும் அம்மணி ஒருவரோடு அரசல்புரசலாக இருந்து அரவிந்தசாமியிடம் கையும் களவுமாக சிக்கி மடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வழக்கமான தமிழ்சினிமா வில்லன் போல “உன்னை பழிவாங்குனா தான் என் ஆத்மா சாந்தி அடையும்” என சொல்லிவிட்டு கதையிலிருந்து தலைமறைவாகிவிடுகிறார்.

ஹீரோவை காட்டுகிறார்கள், அவர் அம்மாவை இழப்பது, அயோக்கிய அப்பன் வேறு ஒரு பெண்ணோடு வாழ, வீட்டைவிட்டு துரத்தப்பட்டு தெருப்பொறுக்கியாகி, அரவிந்தசாமி ஃபாதரோடு ஐக்கியமாகி மீன்பிடி வாழ்க்கைக்குள் தஞ்சம்புகுகிறார். திடீரென ஒரே பாடலில் வளர்ந்து, ஹீரோயினை ஒரு பக்கம் எதேச்சையாக பார்த்து, பரவசமாகி, லவ்வாகி எல்லோரையும் போல நாசமாக போகிறார். அப்புறம் அர்ஜூன் எண்ட்ரியாகிறார். யாராலோ சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவரை அரவிந்த்சாமி காப்பாற்றி சோறு போட்டால், உடல் குணமாகியதும் தலைமறைவாகி, அர்ஜூனின் கீப்போடு அரவிந்தசாமி கிசுகிசுக்கப்பட்டு, நடுவில் கசமுசாவாகி means அதிரடி திருப்பமாகி கொலைகேசில் நான்கு ஆண்டுகள் உள்ளே தள்ளப்படுகிறார்.

அர்ஜூன் நம்ம ஹீரோவை மைண்ட்வாஷ் பண்ணி, தப்புதண்டாவுக்குள் தள்ளி அராஜக ஆசாமியாக்கி என கதையானது, சென்னைக்குள் புதிதாக நுழைந்து வழிதெரியாமல் அட்ரஸ் தேடி அலையும் ஆசாமி போல பயணித்து புதுப்புது தடங்களில் அதிரடியாக நுழைந்து திடீரென “ச்சீ.. இந்த வீடுதானா” என நம்மை செல்ல வைத்துவிடுகிறது. படத்தின் முதல் 30 நிமிடங்கள் உலக சினிமா ரேஞ்சுக்கு நம்மை மிரட்டுகின்றன. போகப்போக உள்ளூர் சினிமாவிடமே தோற்று தலை தொங்கி “மிடில” என சரண்டர் ஆனது வேறு கதை. ஏஆர் ரஹ்மான் பின்னி எடுத்திருக்கிறார். மனிதர் கையில் நாலைந்து ஆஸ்காரைத்திணித்தால் தான் அமைதியாவார் போல. ராஜீவ் மேனனின் கேமரா நம் கண்களுக்கு இதமளிக்கிறது. வழக்கமாக ஹீரோயின் தான் ஊறுகாயாக பயன்படுத்தப்படுவார், இந்த படத்தில் ஹீரோவும். ஹீரோயின் மனவளர்ச்சி குன்றியவர் என்று சொல்லி நம்மை பைத்தியமாக்குகிறார்கள். படம் முடியும் போது உண்மையான ஹீரோவே அரவிந்தசாமி தான் என்பது போல தோன்றுகிறது.

படம் கன்யாக்குமரி பகுதிகளிலுள்ள மீனவ கிருத்துவ மக்கள் பற்றியது என்பதால், பாடல்களில் சர்ச் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. ஏமாத்திட்டீங்களே மணி.