Sunday, December 30, 2012

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்!!

அப்போது புதியதலைமுறை நியூ இயர் ஸ்பெசல் புத்தகத்துக்காக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அது தான் எனக்கான 2012ஐ துவக்கி வைத்தது. நான் எழுதிய சில உருப்படியான கட்டுரைகளில் அதுவும் ஒன்று.  நண்பர் ஒருவர் கண்டுபிடித்த கருவி பற்றியது அது. எடிட்டிங் எல்லாம் முடிந்து புத்தகம் என் கைக்கு வந்த போது அதிர்ச்சி. அதில் என் பெயர் இல்லை.
”என்ன பாஸ் கட்டுரைல எங்க வாத்தியார் பெயரே வரலை” என்று அந்த கண்டுபிடிப்பாள நண்பர் போன் செய்த போதுகூட எனக்கு சிரிப்பு தான் வந்தது. “பாஸூ அதுல என் பெயரே வரலை” என அவரிடம் சொல்லவில்லை. ஆனால் இதற்காக நான் சண்டை போடவில்லை. காரணம் இருந்தது. அந்த வாரம் எடிட்டிங்கில் இருந்தவர் என் மதிப்பிற்குரியவர். சொல்லப்போனால் என் நண்பர். அவர் வேண்டுமென்றே இதை செய்யக்கூடியவர் அல்லர்.எனக்கான வழிகாட்டியே அவர் தான்.

சொல்லப்போனால் இந்த விசயத்தில் என்னைவிட அதிகமாக கவலைப்பட்டவரும் அவர் தான்.எடிட்டருக்கு இது தெரிந்தால் என்ற கவலைக்கும் மேலே சில கவலைகள் இருந்திருக்கலாம்.இன்னொன்று சண்டை போடுவதால் எதுவும் மாறப்போவதில்லை. புத்தகம் முழுவதும் அச்சாகிவிட்டது. மறுநாள் கடைகளுக்கு போய்விடும்.எனக்கும் சண்டை போடுவது ரொம்ப போராக மாறிவிட்டிருந்தது. பள்ளி கல்லூரிகளிலேயே அதிக சண்டைகளையும் பாலிடிக்ஸ்களையும் நிகழ்த்தியாகிவிட்டது.

”இந்த வருடம் நமக்கு பெருசா எதோ கிடைக்கப்போகுது மக்கா” என பெயர் வெளியிடப்படாத அந்த புத்தகம் என் மனதில் சொல்லிக்கொண்டே இருந்தது. இந்த வருடம் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அது விதைத்திருந்தது. பெரும்பாலும் இது போன்ற மனக்கசப்பு (?!) ஏற்பட்டால் யாரும் தொடர்ந்து எழுத மாட்டார்கள். எனக்கு ஏனோ எழுத தோன்றியது. என்னுடைய உழைப்பு என்பதையும் தாண்டி இந்த வருடத்திற்கான “சிறந்த பத்திரிக்கையாளர் விருதை” அதுதான் வாங்கிக்கொடுத்திருக்கக்கூடும்.  பரிசு வாங்கும் அந்த தினத்தின் போது இந்த சம்பவத்தை சொல்லி அவருக்கு நன்றி சொல்ல என்னுடைய கேணத்தனமான மனம் முந்தியது. ஆனாலும் அது அவரை காயப்படுத்தும் என்ற எண்ணம் என்னைதடுத்துவிட்டது.இந்த கணம் வரை அந்த சம்பவத்தை நானோ அவரோ நினைவு படுத்தியதில்லை.

இப்படியாக துவங்கிய இந்த வருடம் இது போல மறக்கமுடியாத பல நிகழ்வுகளின் மூலம் சந்தோசத்தையும் அதிர்ச்சியையும் வாரி வாரி வழங்கி இருக்கிறது. சந்தோசம் என்றாலும் இழப்பு என்றாலும் அது பெரியதாகவே இருந்திருக்கிறது. மூன்றுவருட கனவான ஜிம்முக்கு போகும் பிரவேசம் ஜனவரி மாதம் துவங்கியது.அதுவே மேமாதம் தொப்பையாக சரிந்தது என சில சந்தோசங்கள் சங்கடமாகி இருக்கின்றன. திரும்ப அந்த தொப்பையை குறைக்க படாத பாடு பட வேண்டி இருந்தது.
ஆசை ஆசையாக சேர்ந்த வேலை  ”இது நமக்கானது இல்லை” என தைரியமாக தூக்கி எறிந்த போது இருந்த சந்தோசம், HRரிடம் ஐடிகார்டை கொடுத்துவிட்டு வெளியே வந்து அந்த பெரிய கட்டிடத்தை திரும்பி பார்த்த போது காணாமல் போயிருந்தது.  எழுத்து என்பதே போரிங்கான விசயம் என நினைத்திருந்த என்னை எழுத்தாளனாக ஒரு கூட்டத்தை ஏற்கச்செய்திருக்கிறது.

ஃபேஸ்புக் என்னுடைய நிறைய நேரத்தை குடித்திருப்பதாக உணர்கிறேன்.ஆனால் எனக்கே தெரியாமல் என்னை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் ஷார் மார்கெட் உட்பட நான் எடுத்த பல புதிய முயற்சிகள் நிறைய அனுபவத்தையும், துணிச்சலையும் கொடுத்திருக்கிறது.என்னுடைய தாகம் உள்ளூர் சினிமாவை தாண்டி உலக சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.


2013க்கான பொறுப்புகள் கூடி இருக்கிறது.அது பயத்தை கூட்டி இருக்கிறது. பல நாள் கனவான fastrack வாட்சும் பேக்கும் சாத்தியமான அதே நேரம் அதை தொலைத்துவிட்டு அது கிடைக்குமா கிடைக்காதா என்ற பரிதவிப்பு என எல்லாமே இந்த வருடம் எனக்கு கொடுத்த அனுபவங்கள். எல்லா அனுபவங்களுமே எனக்கு கற்றுகொடுத்த பாடம் இவைதான்.

”சந்தோசமோ, சங்கடமோ அது நம்மை பாதிக்காத வரை தான் முன்னேற்றமெல்லாம்”. புதிய கனவுகளையும், பொறுப்புகளையும் எதிர் நோக்கி 2012க்கு சொல்கிறேன் Good bye.

Friday, December 21, 2012

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க!!

டிசம்பர் 16. ஞாயிறு.இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில் தனது ஆண் நண்பருடன் மருத்துவக்கல்லூரி மாணவி ஏறினார். அந்த நண்பரை  தாக்கி பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்ட  6 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இதில் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்னர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவல் ஊடகத்தின் வழியே கசிந்த உடனே நாடு முழுவதும் பற்றி எறிந்தது. பாராளுமன்றத்தில் கடும் அமளி நடந்தது. ஜெயாபச்சன் அழுதார். சோனியாகாந்தி அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆறதல் கூறினார்.
டிரைவர் முகேஷ் சிங்கை போலீஸார் விசாரித்த பொழுது அவர்களுக்கு பாடம் புகட்டவே இவர்கள் அப்படி செய்தார்களாம்.இவர்கள் எந்த கல்லூரியில் லக்சரர்களாக இருந்தார்கள்.அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கு.இதற்கிடையே திகார் சிறையில் உள்ள கைதிகள் முகேஷ் சிங்கை அடித்து நொறுக்கி அவரின் சிறுநீர் மற்றும் மலத்தை அவரை சாப்பிட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த கைதிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என நாடு முழுக்க குரலெழுப்புகிறார்கள்.
இது மாதிரியான பிரச்சினைகள் நடக்கும் போது தான் நமக்குள் இருக்கும் நாட்டாமைகள் விழித்துக்கொள்கிறார்கள்.அவர்களுக்கு அர்ஜெண்டாக எதாவது தீர்ப்பு சொல்லியாக வேண்டிய அவசியம் உண்டாகிறது. போகிற போக்கில் அவனை குத்தணும், கொல்லணும் என்பதாக உளறத்துவங்கி விடுகிறார்கள்.

நீங்க சொல்லறத பார்த்தா அவனை மடியில தூக்கி உக்கார வச்சி கொஞ்சணூமா? என்ற கேள்வியே எழும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பதிவாகி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 2.25 லட்சம்.இதில் பதிவு செய்யபடாத வழக்குகள் எத்தனையாக இருக்கும்? இவர்கள் எல்லோருக்கும் தூக்கு தண்டனை கொடுத்தால் நாடு முழுவதும் பிணக்காடாக காட்சியளிக்கும். போங்க பாஸ். ஆறு பேர் சேர்ந்து ஒரு பொண்ணை கற்பழிக்கறதும். இதுவும் ஒண்ணா? எப்படியோ கற்பழிப்பு கற்பழிப்பு தானே.
ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் பெண்களுக்கெதிரான அத்துமீறல் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிடுவோமா? டெல்லியில் நடப்பதற்கு பதிலாக தமிழகத்தில் நடந்திருந்தால் இன்னேரம் அந்த குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்து என்கவுண்டரில் கொல்லப்பட்டிருப்பார்கள்.  நாமெல்லாம் ஸ்வீட் எடுத்து கொண்டாடி இருப்போம்.

”இதுவே உங்க அக்காவோ தங்கச்சியாவோ இருந்தா இப்படி பேசுவீங்களா பாஸ்?” என ஆக்ரோசமாக கேள்வி எழுப்புவதற்கு முன்னால் சிலவற்றை யோசியுங்கள்.

கடந்த ஜூலை மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் குவாஹாத்தி போன்ற ஒரு நகரத்தில், பரபரப்பான சாலையில், ஓர் இளம் பெண் இருபதுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் துரத்தித் துரத்தி மானபங்கப் படுத்தப்படு-கிறார். பொதுமக்கள் பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றத்துளி யும் முயற்சிக்காமல், தன்னுடைய நிறுவனத் தைத் தொடர்புகொண்டு, குழுவினரை அழைத்து அணுஅணுவாக அதைப் படம் பிடிக்கிறார். அது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகிறது. இவ்வளவு பேர் பார்க்க நடக்கும் ஒரு சம்பவ இடத்துக்குக் காவல் துறை வந்து சேர அரை மணி நேரம் ஆகிறது. ‘‘என்பணி செய்தி சேகரிப்பது. அதை மட்டும்தான் நான் செய்ய முடியும்’’ என்கிறார் நிருபர். ‘‘குற்றம் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்த நிமிஷமே வர காவல் துறை ஒன்றும் ஏ.டி.எம். அல்ல’’ என்கிறார் மாநிலத் தின் காவல் துறை இயக்குநர்.
இந்த சம்பவத்தை நாம் மறந்துவிடவில்லையா? அதே போல் இன்னும் இரண்டு மாதத்தில் டெல்லி சம்பவத்தையும் மறக்க தான் போகிறீர்கள். இப்பொழுதே மாயன் சொன்னானே. உலகம் அழியலையே என்ற கவலையில் நீங்கள் இருக்கக்கூடும். பாத்ரூம் போகிற கேப்பில் டிவியில் ”பெண் கற்பழிப்பு “ என தலைப்பு செய்தியை பார்த்து “ இவனுங்கள நிக்க வச்சி சுடணும்” என தீர்ப்பு எழுதுகிறவர்கள் தானே நாம்.

பிரச்சினையின் முழுபரிமாணம் தேவையில்லை. அதை வேரோடு பிடுங்கி எறிவது பற்றி அக்கறை இல்லை.அரசியல் வாதிகளை போல நாமும் அரசியல் செய்ய பழகிவிட்டோம். அதன் ஒரு வடிவம் தான் இந்த கொந்தளிப்பு.

”அவர்களுக்கு மரணதண்டனை கொடுங்கள்” என்று போராடத்தெரிந்த நமக்கு “எங்களுக்கு பாலியல் கல்வி கொடுங்கள்” என போராடத்தெரியாதது தான் நம் பலவீனம். காரணம் பாலியல் கல்வி என்றாலே முதலிரவு அறையில் பொண்டாட்டியிடம் எப்படி உடலுறவு வைத்துக்கொள்வது என படம் வரைந்து பாகம் குறித்து சொல்லித்தருவார்களாயிருக்கும் என்ற நம்முடைய கேணத்தனமான கற்பனை.இந்த பலவீனத்தை போக்குவது பற்றி நமக்கு அக்கறையில்லை.

இது மாதிரியான ஜூஜிலிப்பா கோரிக்கையை முன்னிறுத்தி போராடினால் ஊர்ல நம்மள ஒரு பயலும் மதிக்க மாட்டான் என்ற நம்பிக்கை. அரசியல் வாதிகளின் கபடத்தனமான கண்ணீரையும் ஆக்ரோசமான மேடை பேச்சுக்களையும் நம்பி வீணாய் போகிறோம் என்பது நமக்கும் தெரியும். இலங்கையில் அத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், காஷ்மீரில் தினம் தினம் நம் ராணுவம் நடத்தும் பாலியல் ஒத்திகையின் போதும் வராத கண்ணீர் ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்கும் போது வருகிறதென்றால் அதற்கு பெயர் கண்ணீரல்ல. கானல்நீர்

அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்டபோது சொன்னீர்களே.. இப்படி பண்ணாதான் தப்பு குறையும் என்று. அவனை தூக்கில் போட்டு இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. குறைந்ததா?
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் எதையுமே புரிந்துகொள்ள திராணி அற்றவர்களாயிருப்பார்கள் என்பது நம் விசயத்தில் உண்மைதானே.

Friday, December 14, 2012

தண்ணி பார்ட்டிகள்

 குடிகாரர்களுடனான என்னுடைய அனுபவம் படுசுவாரசியமானது. சவாலாதும் கூட. குடிகாரர்கள் பற்றி எதாவது சொல்ல வந்தாலே யாராவது படுவேகமாக என்பக்கத்தில் வந்து “தண்ணி அடிக்காதவன்லாம் நல்லவனும் இல்ல. தண்ணி அடிக்கறவனெல்லாம் கெட்டவனும் இல்லை” என போதையில் உளறத்துவங்கி விடுகிறார்கள்.

சமகாலத்தில் உட்கார்ந்து யோசிக்கும்போது “நாம மட்டும் தான் குடிக்காம இருக்கோமோ” என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு நண்பர்கள் எல்லோரும் படுவேகமாக குடிபழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ”ஆமா நீ மீடியால இருக்க.. அங்க அப்படி தான் இருப்பாங்க” என்பதாக எனக்கு பதிலளிக்குமுன்.. ”வெளியேயும் அப்படிதான் இருக்காங்க” என்பது தான் அதிர்ச்சியான நிலவரம்.
”அப்புறம் இன்னிக்கி நைட்டு ட்ரீட்டா” என்பதாக யாராவது வாயைத்திறந்தால் அதில் பீரும் விஸ்கியும் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. வள்ளுவர் சமகாலத்தில் வாழ்ந்திருந்தால் கூட “பீரின்றி அமையாது ட்ரீட்” என்றிருப்பார்.


 நான் தண்ணி அடிக்காததால் நல்லவன் என்றோ, யோக்கியன் என்றோ பதிவு செய்யும் எண்ணம் எனக்கிங்கில்லை. ஆனால் தண்ணி பார்ட்டிகளுடனான என்னுடைய அனுபவமெல்லாம் சலிப்பூட்டுபவையாகவே இருந்திருக்கின்றன. சில சமயம் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கின்றன.
அப்போது திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் 12வது படித்துக்கொண்டிருந்தேன். பத்தாம் தேதிக்குள் ஹாஸ்டல் மெஸ்ஸூக்கு பணம் கட்டியாக வேண்டும்.  இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.இந்த முறை மெஸ்பில் 900. என்னிடம் 100ரூ குறைந்தது.10ஆம் தேதி வியாழக்கிழமை. கட்டவில்லையென்றால் 11ம் தேதி மாலை பாரபட்சமில்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் “பணத்தை கட்டிவிட்டு ஹாஸ்டல்ல தங்கிக்கலாம்” என்பது தான் அவர்கள் சித்தாந்தம்.

“டேய் நீ கொஞ்சம் பொறுமையா இருடா. நான் ஞாயித்திகிழமை திருச்சிக்கு வர்ரேன். பணம் கட்டிடலாம். வார்டன்கிட்ட சொல்லு. ஒண்ணும் பண்ண மாட்டாய்ங்க.” என்பதாக என் அப்பா போனில்.
எவன்கிட்டயாவது 100ரூ வாங்கி கட்டிடலாம் என்பதாக யோசித்து நண்பர்களிடம் கேட்டால் “போடா என்கிட்டயே இல்லை” என்றார்கள் ஆளாளுக்கு. இவ்வளவு பெரிய களேபரமும் 10ம் தேதி மாலை ஸ்டெடி ஹாலில். ராத்திரி சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு 11 மணி ஆகி இருக்கும். 1மணிக்கு என் பக்கத்தில் ஒருவன் வந்து “நவுந்து படுடா” என்று தொல்லை குடுத்தான். அவன் படுத்த போது எதோ விசித்திரமான வாடை. காரணம் தண்ணி. (குவாட்டர் என்பதாக அறிக)

 நமக்கு 100 ரூ குடுக்க கைல இவனுங்களுக்கு பணம் இல்லை 1000ரூவாய்க்கு தண்ணி. சரி விடு பொழைச்சி போறாய்ங்க என்றால். இதில் இன்னொரு சுவாரசியமான விசயம் அவங்க கட்ட வேண்டிய மெஸ் பணத்தில் வாங்கிய சரக்கு தான் அது. சுமார்  5 பேர். அதில் 3 பேருக்கு முன்பின் தண்ணீர் பருகிய அனுபவமில்லை. அதனால் மூர்ந்து பார்த்து வாய்வழியே மூச்சா போயிருக்கிறார்கள். அந்த வாடையை காலையில் ஸ்மெல் செய்த வார்டன் அவர்களை கூப்பிட்டு பாராட்டுவிழா (?!) நடத்தி ஹாஸ்டலை விட்டு வழியனுப்பி வைத்ததோடு அந்த கதையை முடித்துக்கொள்வோம்.
அடுத்து கல்லூரி. விடுதியில் கூட தங்கி இருந்த மாணவனுக்கு உதவித்தொகையாக 5000 ரூபாய் வந்தது. என்னையும் கூட்டிக்கொண்டு நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற(!?) பார் என்று அழைத்து சென்றான். “எனக்கு உடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கா. அதான். பீர் சாப்ட்டா உடம்பு ஏறிடும். உனக்கு தெரியாதா?” என்பதாக ரெண்டு கட்டிங் உள்ளே தள்ளினான். என்னுடைய வேலை அவனுக்கு வைக்கும் சைட் டிஷ்ஷை காலி செய்வது (அம்புட்டு நல்லவனாடா நீ)

”சார் சைட் டிஷ் லிமிட் தான்.. சார்” என்று பார்காரன் சொல்லும்வரை என் சேவை தொடர்ந்தது. அதனால் அவ்வப்போது அவனோடு சைட்டிஸ்ஸுக்காக செல்வேன்.
மூன்றாவது திருச்சி. ரூம் மேட் ரொம்ப தங்கமான மனுசன். சனிக்கிழமை இரவு ஆனால் நிறைய சைட்டிஷோடு தண்ணி வாங்கியாருவார். அவர் ரெண்டு லார்ஞ் உள்ளே தள்ளி இருக்கும் போது பாதி சைட்டிஸ் காலியாகி இருக்கும். ரூமில் நாங்க ரெண்டு பேர் தான். ரூமில் ஒரே ஒரு கட்டில் தான் இருக்கும். மற்ற நாட்களில் யாரும் அதை பயன்படுத்த மாட்டாமல் நிமிர்த்தி வைத்திருப்போம். சனிக்கிழமை மட்டும் அதற்கு வேலை வந்துவிடும். நான் அதன் மேலே படுத்துக்கொள்வேன்.

காரணம் ரூம் மேட். அவர் தண்ணி அடித்து முடித்தவுடன் முழு போதையில் தரையில் கவிழ்ந்தால் சூரியன் போல 360 டிகிரியில் சுற்றி வருவார். நான் கீழே படுத்திருந்தேன். செத்தேன். அவர் உருளும் போது என் மூக்கில் காலைத்தூக்கி போடுவார். அந்த முரட்டுதனமான காலை சில நிமிடங்கள் செலவு செய்து தூக்க வேண்டி வரும். அதனால் தூக்கம் ஸ்பாயில் ஆகிவிடும் என்பதற்காக தான் கட்டில் ஏற்பாடு.

ஆனால் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். தண்ணி அடிக்ககூடாது என்பதில் மட்டுமல்ல. எக்காரணத்தை முன்னிட்டும் இத்தகைய நண்பர்கள் தண்ணி அடிக்கும்போது “மச்சி வேணாம்டா வீணா போய்டாதீங்க” என சொல்லி அவர்கள் மூடை ஸ்பாயில் பண்ணக்கூடாது என்பதில்.
காரணம் நமக்கு தொழில் சைட்டிஷ், இவர்களை வேடிக்கை பார்த்தல்

Saturday, December 1, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

நான்கு நண்பர்கள். எல்லோருமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சுவாரசியமான விளையாட்டு. ஹீரோ விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. எல்லாம் மறந்து விடுகிறது.

எல்லாம் என்றால்.. மறுநாள் ரிஷப்சன் என்பதும், அதற்கடுத்த நாள் கல்யாணம
 நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

் என்பதும். இடைபட்ட ஒராண்டு காலம் நடந்த சம்பவங்களெல்லாம் மறந்துவிடுகிறது!!

ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் லவ்ஸ்.. அது தான் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு.பொண்ணு வீட்டுல எதிர்ப்பு.. “எனக்கு எல்லாமே மறந்துடுச்சி” என்பதை சாக்காக வைத்து ஹீரோயினை கலட்டி விட்டுடுவார் என புத்திசாலித்தனமாக (?!) நாம் யோசித்தால், கதை வேறு வகையில் ட்ராவல் ஆகிறது. காரணம் ஹீரோவுக்கு தான் எல்லாம் மறந்துடுச்சே.. ஞாபகம் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருக்க வாய்ப்பிருக்கு.

ரைட்டு விடு. அவர் தலைல அடிபட்டுடுத்து.எல்லாம் மறந்துடுத்து. கூட விளையாடுனவங்கள சும்மா விடுவானுங்களா? அவர்களை ஹீரோவே பழி வாங்குகிறார். “என்னாச்சி. கிரிக்கெட் விளையாடுனமா? பால் மேல போச்சா.. நா கேட்ச் பிடிக்க போனனா? ஓ.. மிஸ் ஆயிடுச்சா.. நான் கீழ விழுந்துட்டேன்.. தலைல இங்க அடிபட்டுடுச்சி (பின்னந்தலையில் கை வைத்து அந்த இடத்தை காட்டுகிறார்) இங்க தான் Medulla oblongata வில அடிபட்டிருக்கும்(இது என்ன டாபர் ஆம்லா கேச தைலம் மாதிரி இருக்குன்னு பாக்கறீங்கலா.. அது அப்படி தான் கண்டுக்காதீங்க) அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்”

இந்த வசனத்தை அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரே மாதிரியான மாடுலேசனில் படம் முழுக்க பேசி தன்னோடு விளையாடியவர்களை பழி வாங்குகிறார். நம்மையும் (!).. அங்கன அடிபட்டா அப்படி தானாம். எல்லாம் மறந்து போயிடுமாம். ”இப்பிடி எல்லாத்தையும் மறந்துட்டு வந்து நிக்கிறியே.. எடுபட்ட சிறுக்கி” என்பதாக மற்ற மூன்று நண்பர்கள் தங்கள் தலையில் அடித்துக்கொண்டு, அவ்வப்போது செவுத்தில் முட்டிக்கொண்டு தங்கள் நண்பனின் ரிசப்சனையும், திருமணத்தையும் வெற்றிகரமாக நடத்தினார்களா என்பது தான் கதை.

மூணே நாள் கதையை படமாக சுவாரசியமாக சொல்ல வேண்டும், அது தான் சவால். சில வசனங்களையே வைத்துக்கொண்டு ஹீரோ தடுமாறுவார் என்று பார்த்தால் பின்னிப்பொடல் எடுக்கிறார். கூட இருக்கும் நண்பர்கள் அவரை தூக்கி சாப்பிடுகிறார்கள். கேமராமேன் வேறு, நம்மை கதையோடு கழுத்தை பிடித்து தறதறவென இழுத்துக்கொண்டு போகிறார். போதாதற்கு BGM.. Sound mixing ஆசாமிகள் நம்மை பாடாய் படுத்துகிறார்கள்..

இப்ப என்ன ஆச்சின்னு அதுக்குள்ளாற இண்டர்வல் என நாம் தலையை பிய்த்துக்கொள்வது தான் மிச்சம். அந்த மூன்று நண்பர்களும் குடுக்கிற சேட்டை இருக்கிறதே.. அப்பப்பா.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.சந்தானத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போல..

“இது யாரு மச்சி மொக்க பீஸா கீது” என ஹீரோவோடு சேர்ந்து நாமும் ஹீரோயினை கலாய்த்தால், அவர் நேரில் செம்ம அழகாக கீறார். படத்துக்கு பாட்டே தேவையில்லை. ஆனாலும் ஒரு ப்ரோமோ சாங்க் போட்டுக்கறாங்கோ..பகவதி பெருமாள் அண்ணன் பட்டய கெளப்பீருக்காப்ல.(அதான் பக்ஸ்னு படத்துல வருவாரே. நேர்லயும் நாங்க அவரை அப்படி தான் கூப்புடுவோம்).இயக்குனர் பாலாஜி தரணிதரனின் இத்தகு சேவை நாட்டுக்கு தேவை. மத்தபடி படத்த ஒரு தடவைக்கு மேல பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தியேட்டரை அனுகவும்..(டிக்கட் உள்ளவரை மட்டுமே)