Wednesday, April 2, 2014

தேர்தல் உலா - 1! வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நிலவரம்

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய மக்கள் மனநிலையை அறிய தமிழகம் முழுக்க பயணம் செய்வதாக நானும் தோழர் பாரதி கண்ணனும் திட்டமிட்டிருந்தோம்! இன்று மதியம் வடசென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை செல்வதாக திட்டம். பத்து நாள் ஒதுக்குகிறோம். அதிகபட்சம் பத்து தொகுதிகள் செல்ல முடியும். 40ம் வாய்ப்பேயில்லை.
யார் ஜெயிப்பார் யார் தோற்பார் என்பது தாண்டி மக்கள் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள். எந்த அடிப்படையில் ஓட்டு போடுகிறார்கள். கருத்து கணிப்புகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்.என்பதையெல்லாம் பரிசோதிக்க ஆசை. பெரும்பாலான கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகளாகவே இருக்கின்றன. மக்களை யாரும் விமர்சனப்பார்வையோடு விசாரிப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

இந்த நாடாளுமன்றத்தேர்தலை இதற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தோம். நிறைய கேள்விகள். குறிப்பாக விவாதித்தோம்.என்ன தோணுதோ எல்லாம் கேட்போம். முன் கூட்டியே தீர்மானித்த கேள்விகள் ஏதுமில்லை.எல்லாமே ஆட்களைப்பொறுத்தது.உதாரணமாக திமுகவுக்கு வாக்களிப்பேன் என்று ஒருவர் சொன்னால், ஏன் என்று கேட்போம். ஸ்பெக்ட்ரமும் இலங்கை பிரச்சினையும் உங்களை பாதிக்கவில்லையா? என்று கேட்போம்!


இன்று மதியம் வடசென்னை வியாசர்பாடியில் இருக்கும் மெகஜிம்புரத்தில் மக்களை சந்தித்தோம். சுமார் 50 பேரை சந்தித்திருப்போம். முதலில் டீகடையில் கேட்டேன். அவர் அடிப்படையில் திமுக ஆசாமி. தேர்தல் அன்னிக்கி பாப்போம்” என்றார். சில குடும்ப பெண்களின் மத்தியில் ஆதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறது. வேட்பாளர் யாரென்ற கவலையில்லை. “அம்மாவுக்காக தான் ஓட்டு போடறோம். தமிழ்நாட்டுலேர்ந்து ஒருத்தவங்க பிரதமரானா நமக்கு தானே பெருமை” என்கிறார்கள்.
“எங்கம்மா அப்பா எல்லாம் திமுக தான்.. அதனால நானும் திமுகவுக்கு தான் போடுவேன்” என்கிறார்கள் 30 வயது தாண்டிய ஒரு குரூப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரித்தால் “யார் தான் ஊழல் பண்ணல.. கொடநாடு மொத்தத்தையும் அந்தம்மா வளைச்சி போட்டுச்சே” என்கிறார் பதிலுக்கு. மக்களிடம் பேச்சு கொடுத்ததிலிருந்து ஒன்று தெரிகிறது. தேர்தலை எதோ கிரிக்கெட் மேட்ச் போல பார்க்கிறார்கள். இந்திய அணியில் எவ்வளவு மோசமான ஆட்டக்காரர்கள் இருந்தாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என வாதாடுவார்களே அது போலவே திமுக ஆதிமுகவுக்கு தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்.அதனால் இந்த ஏரியாவில் இரண்டு கட்சிக்கிடையே தான் கடுமையான போட்டி இருக்கும் என அறிய முடிகிறது.
எந்த ஊழல் பற்றியும் கவலையில்லை என்கிறார்கள்.”யார் வந்தா என்ன? எதும் மாறப்போறதில்ல”என்கிறார்கள். மோடி பற்றி ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேஜ்ரிவால் யாரென்றே தெரியவில்லை. கொஞ்சம் டீடெயில் கொடுத்து டெல்லில ஒருத்தர் ஜெயிச்சாரே என்றெல்லாம் சொன்னால் தான் “ஓ அவரா..” என்கிறார்கள்.ஒரு அம்மா கணவர் கம்யூனிஸ்ட் என்பதால் அவரும் கம்யூனிஸ்டுக்கே போடுவேன் என்கிறார். அதுவன்றோ காதல்! இளைஞர்களும் அம்மா அப்பாக்களை போலவே திமுக ஆதிமுக என்றே சொல்கிறார்கள்.
ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் சவுந்திரராஜன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். ஆதிமுக கூட்டணியில் ஜெயித்தவர். இந்த முறை கம்யூனிஸ்ட் தனியாக நிற்கிறார்கள். நிற்பவர் உ.வாசுகி. அகில இந்திய மாதர் சங்க தலைவி. நிறைய போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஏற்கனவே இந்த தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயித்தவர் டி.கே.எஸ் இளங்கோவன். தி.மு.கவை சேர்ந்தவர்.இப்போது தென் சென்னையில் நிற்கிறார். இதே தொகுதியில் தேர்தலை சந்திக்க பயமா? என்ற கேள்வி வருகிறது.
திமுக மற்றும் ஆதிமுகவிற்கு இருக்கும் பழைய ஓட்டு வங்கியை தவிர்த்துவிட்டு பார்த்தால் இளைஞர்கள் மற்றும் நடுநிலை ஆட்களின் ஓட்டு தான் தீர்மானிக்கும். இளைஞர்களை கவர கம்யூனிஸ்டுகள் ஏதும் செய்யவில்லை.உ.வாசுகி வந்தபோது கூடிய ஆட்களில் ஒரு தலை கூட இளசாக இல்லை.எல்லாமே பெரிய ஆட்கள். இந்த முறை கம்யூனிஸ்டுகள் டெபாசிட் வாங்குவது கூட கஷ்டம் என்ற பேச்சு இருக்கிறது! பார்ப்போம்!

2500 பேர் கொண்ட தலித் மக்கள் ரோட்டில் வசிக்கிறார்கள். தங்களுக்கு பட்டா கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நோட்டா போடும் திட்டத்தில் இருக்கிறார்கள்.இதற்காக ”நோட்டா கொண்டு வந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”என்றெல்லாம் போர்டு வைத்திருக்கிறார்கள். எப்படியும் எங்கல்ல 1500 பேராவது நோட்டா போடுவாங்க என்றார் ஒருவர்!
பா.ஜ.ககூட்டணியில் தே.மு.திக நிற்கிறது.காங்கிரஸும் தனித்து நிற்கிறது. “நான் காங்கிரஸ் தான். ஆனா இந்த தடவ காங்கிரஸ்கு போட மாட்டேன்” என்றார் ஒருவர்.ஆனாலும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் பேசிய போது “ நீங்க வேண்ணா பாருங்க.நாங்க தான் ஜெயிப்போம்” என்றார் கொஞ்சம் கூட சிரிக்காமல்.
இந்த முறை ஓட்டு கணிசமாக பிரியும். சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவோ ஆதிமுகவோ தான் ஜெயிக்கும்.திமுக கையே ஓங்கி இருக்கிறது.தேர்தலில் எல்லாமே கடைசி நேர மாறுதலுகுட்பட்டது! பார்ப்போம்!


No comments: