Wednesday, June 11, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 5

கடந்தவாரம் என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். கட்டுமான நிறுவனம் வைத்திருக்கிறார். தினமும் இரு பிரபல ஆங்கில நாளிதழ்களில் தன் நிறுவனம் பற்றி விளம்பரம் கொடுக்கிறார். ஒரு நாள் விளம்பரத்திற்கு எண்ணூறு ரூபாய் ஆகிறதாம்.. மாதம் சுமார் முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை ஆகிறதாம். ”கடந்த மூன்று மாதமாக இந்த விளம்பரம் கொடுக்கிறேன்.. ஒரு கால் கூட வரல” என்று வருத்தப்பட்டார்.இணையத்தில் விளம்பரபடுத்தி எதாவது செய்ய முடியுமா பாருங்களேன் என என்னிடம் வந்தார்.

விளம்பரம் என்று வரும்போது எப்போதும் ஒன்றையே நம்பி இருக்கக்கூடாது. பரவலாக எல்லாவற்றிலும் விளம்பரம் செய்ய வேண்டும். உதாரணமாக அவர் விளம்பரம் செய்யும் பத்திரிக்கையில் ஏகபட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை விளம்பரங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் எல்லா பத்திரிக்கையிலும் ஒரு பக்கம் முழுக்க ரியல் எஸ்டேட் சார்ந்த விளம்பரங்களே குப்பை போல கொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த குப்பையிலிருந்து எப்படி எனக்கு தேவையானதை பெறுவேன்?
அவருக்கு ஒரு மார்க்கெடிங்க் ப்ளான் போட்டு கொடுத்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கென சில சதவீதம் ஒதுக்குங்கள். இணையத்திற்கு கொஞ்சம். எது சிறப்பா வருதோ அதுல அதிகமா போடுங்க.. அவ்ளோ தான் என்றேன்.  நம் பிசினஸை இணையத்தில் அசுர வேகத்தில் இறக்குவது தான் பணம் பண்ணுவதற்கான மிகச்சிறந்த உத்தி.

 நான் சிலரை தொடர்ச்சியாக பார்க்கிறேன். மிகச்சிறப்பாக இணையத்தில் விளம்பரம் செய்து மாசம் கணிசமான வருமானத்தை பார்க்கிறார்கள்.எனக்கு தெரிந்து ஒரு நண்பர். ரிலையன்ஸ் டேட்டா கார்டு விற்கிறார். ஆரம்பத்தில் அவர் தெருவில் விற்றவர் பிறகு olx தளத்தில் ஒரு விளம்பரமாக போட்டார். தினமும் மூன்று பேராவது கால் செய்கிறார்களாம். மாதம் 50 டேட்டா கார்டாவது விற்றுவிடுகிறது என்றார்.

ஒருவர் திருமணத்துக்கான சாப்பாடு ஆர்டர் எடுப்பவர். இதே olx தளத்தின் மூலம் மாதம் நான்கு பிசினஸாவது நடந்துவிடுகிறது என்கிறார். ஆடை விற்பவர், மொபைல் விற்பவர், கல்லூரிக்கு ஆள் சேர்த்துவிடுபவர் என சகலருக்கும் இப்போது இணையத்தில் தான் பிசினஸ் சக்கைபோடு போடுகிறது. ஆனால் இப்போது olxஇலும் குப்பை போல அவ்வளவு பேர் விளம்பரம் செய்கிறார்கள். விளம்பரப்படுத்துதலில் மிக முக்கியமான உத்தியே எல்லோரும் ஒரு இடத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் நாம் அந்த இடத்தில் நுழைந்துவிட வேண்டும். நிறைய பேர் வந்துவிட்டால் வேறு இடத்திற்கு ஓடிவிட வேண்டும்.

உதாரணமாக எல்லோருமே வெள்ளை சட்டை போட்டிருக்கும் ஒரு கூட்டத்தில் நாம் நம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள பச்சை சட்டை மாட்டிக்கொள்ள வேண்டும்.. அவ்வளவே.. நம்மை பார்த்து ஒன்றிரண்டு பேர் பச்சை சட்டை போடத்துவங்கினால் பிரச்சினையில்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே பச்சை சட்டைக்கு மாறுவார்கள். அப்போது நாம் சட்டையை கழட்டி தூக்கி எறிந்தால் முடிந்ததுவேலை.
அடுத்த வாரம் சட்டையை கழட்டுவோம்.