Tuesday, April 22, 2014

காதலிக்கத்துவங்கினேன்!!

நான் காதலிக்கத்துவங்கினேன்
எனக்குள்ளிருந்த குழந்தை விழித்துக்கொண்டது
எது எதற்கோ ஆசைப்பட்டு
அது வேணும் என கைகாட்டியது
கிடைத்த போது துள்ளி குதித்தது
கிடைக்காதபோது பிடிவாதம் பிடித்தது
எல்லாமே கைவிட்டு போனபோது
கையிலிருந்ததையும் தூக்கி போட்டு உடைத்தது
கடைசியில் உடைந்ததெல்லாம் வேண்டுமென்று அழுகிறது
உடைந்தது வராது என குழந்தைக்கு தெரியாதே!

Saturday, April 19, 2014

இணையத்தில் பணம் உண்மையா? - 3

படிப்பதற்கு முன்னால்

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - முதல் பாகம்
இணையத்தின் மூலம் பணம் உண்மையா - இரண்டாம் பாகத்தை படித்துவிடுங்கள்


youmint.com என்றொரு தளம். நம் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்துகொண்டு உள்ளே சென்று பார்த்தால்  நிறைய சின்ன சின்ன ஆஃபர்கள் கொடுக்கிறார்கள்.. அவர்கள் கொடுக்கும் தளங்களில் நம்மை பதிவு செய்துகொண்டால் 5ரூபாய் பத்து ரூபாய் என தருகிறார்கள்.எல்லாவற்றையும் சேர்த்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாமாம்.

இப்படி நிறைய தளங்கள் இருக்கின்றன. rupeemail.com என்றொரு தளம் இதே போல தான். இதில் சென்று பதிவு செய்துகொண்டால் நமக்கு அவ்வப்போது விளம்பர மெயில் அனுப்புவார்கள். அதை க்ளிக்கினால் 0.50 பைசா தருவார்கள். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ ஐம்பது பைசா விளம்பரம் வரும்.

ஆள் சேர்த்துவிட்டால் காசு என்ற ஒரு வகை இருக்கிறது. affliate தளம் என்பார்கள். வெளிநாடுகளில் இது ரொம்ப பாப்புலர்.ஒருவரை சேர்த்துவிட்டால் ஒரு டாலர் தருவார்கள்.  நூறு பேரை சேர்த்துவிட்டால் நூறு டாலர். 50 டாலர் சம்பாதித்தால் போதும். வீட்டுக்கு செக் வந்துவிடும். நம்மூர்காரர்கள் நிறைய பேர் இவற்றை முயற்சி செய்திருக்கிறார்கள். நான் கூட முயற்சி செய்தேன். ஆனால் 50 பேரை சேர்த்து 50 டாலர் வாங்குவதற்குள் வாயில் நுரை வந்துவிடும்.

நம்ம நண்பன்.. நண்பனோட நண்பன்.. அவனோட காதலி..பக்கத்துவீட்டுகாரன் இப்படி நிறைய பேரை சேர்த்துவிட்டேன். ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பார்கள். “அப்றம் சம்பாதிச்சி பெரிய ஆளா ஆயிட்டன்னா என்ன மதிக்கவே மாட்ட தானே” என்பார்கள். ஒருத்தன் அவனால் நான் ஒரு டாலர் சம்பாதித்ததுக்கு ரோட்டு கடைக்கு கூட்டி போய் ட்ரீட் என்ற பெயரில் நூத்தம்பது ரூபாய்க்கு மொய் வைத்துவிட்டான்.

தெரிந்தவர்களை சேர்த்துவிடுவதெல்லாம் சரிபட்டு வராது. குறிப்பாக நாம் இது போல் சம்பாதிக்கிறோம் என்றால் தூக்கம் வராமல் தவிப்பவனே உண்மையான நண்பன். ebay, amazon மாதிரியான தளங்களில் இருக்கும் பொருட்களை நாம் விற்றுக்கொடுத்தால் நமக்கு சில சதவீதம் பணம் தருகிறார்கள்.
உதாரணமாக 200 டாலர் புத்தகத்தை விற்றால் பத்து சதவீதம் தருவார்கள். இருபது டாலர். சட்டை, பேண்ட், மொபைல் என எதுவேண்டும்னாலும் விற்கலாம். எப்படி விற்கபோகிறீர்கள்?  என்பதை பொருத்தே எல்லாம்.

பெரிய துணிகடையில் கொஞ்சம் துணி வாங்கி ரோட்டு கடையில் போட்டு விற்பார்களே. அது போல தான் இதுவும்.. ஆனால் இது இணையத்தில். விற்பனை உத்தி தெரிந்திருக்க வேண்டும். சிலர் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு விற்பார்கள். ட்விட்டரில் ட்வீட்டி விற்பார்கள். மானாட மயிலாடவில் வருவாரே.. நம்ம நமீதா.. அவர் கூட இது போல் பொருள் வாங்கி விற்று காசு பார்த்திருக்கிறாராம். அது பொழுது போக்காம். ஒரு வார இதழில் படித்தேன். நமக்கு இதெல்லாம் சரி பட்டு வருமா? இன்னும் நிறையா இருக்கு! அடுத்த வாரம்!

Friday, April 18, 2014

தெனாலிராமன் திரைப்படம் விமர்சனம்

தெனாலிராமன் கதைகள் புத்தகத்திலிருந்து நான்கைந்து கதைகளை எடுத்து, இடையிடையே ரெண்டு மூணு காதல் காட்சிகள் பாடல் எல்லாம் வைத்தால் தெனாலிராமன் படம் வந்துவிடும். இது 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகமாக எடுத்திருக்கிறார்கள்.. புலிகேசியாக கிருஷ்ணதேவராயர். புரட்சியாளனாக தெனாலிராமன்! ஆங்கிலேயர் இருந்த இடத்தில் சீன வியாபாரிகள்! கிருஷ்ண தேவராயர் அவையில் இருக்கும் மற்ற அமைச்சர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள்!
முழுக்க முழுக்க தெனாலிராமன் கதைகள் புத்தகத்தை மட்டுமே வைத்து எழுதபட்ட கதையாக இருக்கலாம்! கிருஷ்ண தேவராயர் என்ன புலிகேசி மன்னனைபோல் டம்மி பீசா? வட இந்தியாவில் அக்பர் எப்படியோ.. அதே அளவு புகழோடும் வீரத்தோடும் திகழ்ந்தவர் கிருஷ்ணதேவராயர் என்பது வரலாறு. அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.
தெனாலிராமனை உயர்வாக கூறுகிறேன் பேர்வழி என கிருஷ்ணதேவராயரை டம்மியாக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் போகட்டும். “டும்”. ஐந்து பாட்டும் மொக்கை! ஒரு பாட்டு எதோ சுமார். ரெண்டு மூணு தடவை கேட்டால் பிடிக்கலாம்.அரண்மனையை கிராபிக்ஸில் செய்துகாட்டி படச்செலவை குறைத்திருக்கிறார்கள்!
உண்மையில் தெனாலிராமன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.இதெல்லாம் ஒரு படம்னு போனபாரு என என்னைபார்த்தே கண்ணாடியில் சிரிக்கவும்.. 120 ரூபாய் போச்சோ! என சிந்திக்கவும் வைக்கிறார். தேர்தல் நேரம் என்பதால் வடிவேலுவின் காமெடி எடுபடவில்லை.

Thursday, April 17, 2014

என் ஓட்டு ஏன் நோட்டாவுக்கு

”அப்றம் மச்சி.. யாருக்கு ஓட்டு” என்றார் நண்பர்!

”நோட்டாவுக்கு தான் என் ஓட்டு” என்றேன்!!

“மச்சி அது வேஸ்ட்டுடா.. அதுக்கு போட்றதுக்கு நீ சும்மா இருக்கலாம்” என்றார்!

அவருக்கு சொன்ன விளக்கத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்!

நம்மை ஒருவர் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துவிடுகிறான்.. எல்லோர் முன்னிலையும்.. “ஓத்தா.. உன்னால எனக்கு எதிரா ஒரு மசுரும் புடுங்க முடியாதுடா.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என சவால் விடுகிறான்! எல்லோருமே அவனுக்கு ஆதரவாக தான் இருக்கிறார்கள்!!

நமக்கு தெளிவாகவே தெரியும் அவனை எதுவுமே செய்யமுடியாதென்று! அவன் பலம் பொருந்தியவன்..அவனுக்கு பின் எல்லோரும் இருக்கிறார்கள்.. நான் ஒருவன் கை உயர்த்துவதால் எதுவுமே மாறிவிடப்போவதில்லை என தெரியும்!!

ஆனாலும் குறைந்த பட்ச வெட்கம் இருப்பதால் அவனுக்கு ஆதரவாக என்னால் இருக்கவியலாது!! உண்மையில் எதிர்க்க வாய்ப்பிருந்தும் வெட்கம் கெட்டுபோய் கேவலப்படுத்தியவனையே ஆதரிப்பவர்கள் தான் வேஸ்ட்டு!!

Monday, April 14, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 2

இணையத்தின் மூலம் பணம் - உண்மையா? (முதல் பகுதியை படித்துவிட்டு மேற்கொண்டு தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக புரியும்!! )

இணையத்தின் மூலம் பணம் என்பது எனக்கு தெரிந்த அளவில் உண்மை! ஆனால் எல்லோரும் சம்பாதிக்க முடியாது. கொஞ்சம் விவரம் தெரிஞ்சாகணும். எடுத்த உடனே கோடிகளில் சம்பாதிக்க முடியாது.பயிற்சி வேண்டும். குறிப்பாக எங்கெல்லாம் ஏமாறக்கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

”டேட்டா எண்டரி வேலை.இத்தனை பக்கம் அடிக்கணும். ஒரு பக்கத்துக்கு ஆறு ரூபாய் கொடுப்போம்” என்று சொல்லி வேலை கொடுத்தார்கள். நண்பர் ஒருவருக்கு. இணையம் தேவையில்லை.வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் போதுமானது என்றார்கள். எவ்வளவோ செலவு பண்றோம் இத பண்ண மாட்டோமா? என நண்பர் கம்ப்யூட்டர் வாங்கினார்.

கம்ப்யூட்டர் வாங்கிய கதை சுவாரசியமானது. ரெண்டு மூணு பேரிடம் விசாரித்திருக்கிறார்.”10ஆயிரத்துக்கு வாங்கினால் கம்ப்யூட்டர் சீக்கிரமே போய்டும். கான்ஃபிகரேசன் சரியா இருக்காது. ஸ்லோவா இருக்கும்.55 ஆயிரத்துல ஒண்ணு வந்துருக்கு. அட்டகாசமா இருக்கும்” என அவர் தலையில் கட்டினார்கள்!

அதான் மாசம் ஆனா முப்பது ஆயிரம் ரூபா சம்பாதிக்க போறோமே.. போட்டதெல்லாம் ஆறு மாசத்துல எடுத்துட மாட்டோம்.என சகட்டுமேனிக்கு செலவு செய்தார்.ஒரு பக்கம் அடித்தால் ஆறு ரூபாய்.ஆயிரம் பக்கம் அடித்தால் ஆறாயிரம் என்று கணக்கு போட்டு தான் ப்ராஜக்ட் எடுத்தார். நண்பருக்கு டைப்பிங்க் தெரியாது. “அதெல்லாம் ஈஸி. நாளு நாள் அடிச்சா நமக்கே வந்துடும்.” என்று யாரோ உசுப்பேத்தி இருக்கிறார்கள்!

நண்பர் ஒரே ஒரு பக்கத்தை அடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டார். ஒரு நாள் முழுவதும் செலவிட்டு 6 பக்கம் அடித்து முடித்திருந்தார். இப்படி ஒரு வாரம் கஷ்டபட்டு 50 பக்கம் முடித்து கொடுத்தார்.. எல்லாமே தப்பு தப்பாக அடித்திருந்தார்.தப்புக்கெல்லாம் பணம் கழித்துவிட்டு 150ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாசம் கழிச்சி உங்க அக்கவுண்ட்ல கிரடிட் ஆகும். என்று வங்கி கணக்கு கேட்டிருக்கிறார்கள்.இவர் இதுக்குண்ணே தனியா அக்கவுண்ட் ஒண்ணு துவங்கினார்.

மாதம் முழுக்க கஷ்டபட்டு ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். இந்த அமவுண்டுக்கு தான் 55 ஆயிரம் செலவு பண்ணி கம்ப்யூட்டர் வாங்கினார் நண்பர். நாள் முழுக்க மாங்கு மாங்கென்று கம்ப்யூட்டரை பிண்ணி பெடல் எடுத்து கஷ்டபட்டு அடித்ததில் சம்பாதித்த பணம் அது. இந்த டேட்டா எண்ட்ரி யாருக்கு பொருந்தும்? வீட்டில் கம்ப்யூட்டரை சும்மா வைத்துக்கொண்டு  நல்லா டைப்படிக்க தெரிந்த ஆசாமிக்கு தான் இந்த வேலை சரிபட்டு வரும்.

என்னென்ன பிரச்சினை வரும் என நாமாக யோசித்து கேட்க மாட்டோம். அவர்களாகவும் சொல்ல மாட்டார்கள். இன்னொரு வகை டேட்டா எண்ட்ரி கம்பெனிகள் இருக்கின்றன. நாம் என்ன தான் திறமையாக டைப்படித்துக்கொடுத்திருந்தாலும் காசு இப்போ தர்றேன் அப்பறம் தர்றேன் என்று ஆளை அலைய விடுவார்கள்! ஆனால் சரியாக செய்து சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

 நமக்கு விவரமும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் நன்றாக விசாரித்து தான் வேலை எடுத்து செய்ய வேண்டும். கொஞ்சம் அசந்தால் காசும் உழைப்பும் வீணாகிவிடும். அதே சமயத்தில் ஒருத்தரிடம் ஏமாந்தால் அடுத்து வரும் அத்தனை பேரையுமே அயோக்கியனாக பார்க்கத்தோன்றும்!

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 3ம் பாகம்

Thursday, April 3, 2014

தேர்தல் உலா - சென்னை தேர்தல் நிலவரம்

தேர்தல் களையிழந்து இருப்பதாக தோன்றுகிறது! முன்பெல்லாம் எந்த தொகுதிக்கு சென்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்.. பார்க்கிற பக்கமெல்லாம் கரை வேட்டிகள்!! அங்கங்கே “அன்பார்ந்த வாக்காள பெருமக்களே” என்று கூவிக்கொண்டே செல்லும் ஆட்டோக்கள் என்றெல்லாம் பார்த்து பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு இந்த இரண்டு நாள் கள நிலவரம் அவ்வளவு திருப்தியாக இல்லை!!

அரசியல்வாதிகளால் முன்பு அளவுக்கு பெரும் பணத்தை உள்ளே இறக்க முடியவில்லை போல தெரிகிறது!! இன்னும் 20 நாள் தான் இருக்கிறது!! சென்னையில் எல்லாரும் பொழப்ப பாக்க போயிட்டாங்க போல.. மற்ற ஊரில் வெறித்தனமாக இருப்பார்கள் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!!

-----------------------

இந்த இரண்டு நாள் சுற்றியதிலிருந்து ஒன்று தெரிகிறது!! திமுகவை சென்னை மக்கள் புறக்கணிக்க தயாராக இல்லை!! கணிசமான வாக்குகள் அப்படியே தான் இருக்கிறது!! 

ஸ்பெக்ட்ரம் ஊழல், தமிழிழீம் போன்றவை பற்றி கவலைப்பட யாரும் தயாராக இல்லை!! ”என்ன தான் கலைஞர் கொள்ளையடிச்சாலும் எங்களுக்கு செய்ய வேண்டியத செஞ்சுட்டாரு” என்று தான் சொல்கிறார்கள்!!

எதோ ஃபேஸ்புக்கில் எல்லோரும் எதிர்க்கிறார்கள்..அதனால் திமுக மண்ணை கவ்வும் என்பதெல்லாம் மாயை! ஊடகங்கள் திட்டமிட்டு பொய் செய்தி பரப்புவது போல தான் தெரிகிறது!! சென்னை இன்னும் திமுக கோட்டையாக தான் இருக்கிறது!! சென்னையில் கணிசமான எம்.பிக்கள் திமுகவுக்கு கிடைக்கலாம்!!!

சென்னையில் ஆதிமுகவினர் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது!!

- -- ---------------------------

தேர்தல் உலா - 2 ஆலந்தூர் இடைத்தேர்தல் நிலவரம்

எல்லா இடைத்தேர்தலிலும் ஆளும்கட்சி தான் ஜெயிக்கும்.. ஆனால் இந்தமுறை நாடாளுமன்றத்தோடு சேர்ந்து ஆலந்தூர் இடைத்தேர்தல் வருவதால் ஆளும்கட்சியினர் இந்த இடைத்தேர்தலை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை போல தெரிகிறது!!
ஆலந்தூரில் இடைத்தேர்தல் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை!! ரொம்ப டல்! ஆதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனோடு ஒப்பிடும்போது திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது!


நேற்று தான் இந்த தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார்! ஆதிமுகவில் “இடைத்தேர்தல் தானே.. எப்டியும் ஜெயிச்சிடலாம் என்ற எண்ணத்தோடு” அசால்டாக இருப்பதாக தெரிகிறது!!
இந்த இரண்டு பேருக்கு மத்தியில் ஆம்ஆத்மி சார்பாக பிரபல (?!) அரசியல் விமர்சகர் ஞாநி களமிறக்கப்பட்டிருக்கிறார்! “இவங்க வேற நடு நடுல காமெடி பண்ணிகிட்டு” என்ற காமெடி தான் நினைவுக்கு வந்து தொலைகிறது!! தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் ஞாநியின் வேகம் போதாது!
3 மாதங்கள் திட்டமிட்டு உழைத்தால் கூட ஜெயிக்க முடியாத ஒரு தொகுதியில் 20 நாள் பிரச்சாரம் செய்தால் மூன்றாவது இடத்தை கூட பிடிக்க முடியுமா தெரியவில்லை! மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது ஆம்ஆத்மிக்கு பிரச்சார படை பெரிய அளவில் இல்லை! எல்லோரும் டீம் கேப்டன் ஞாநியையே நம்பி கொண்டிருக்கிறார்கள்!!
கம்யூனிஸ்டுகள் ஞாநியை ஆதரிக்கிறார்கள்!! ஆனால் அவர்கள் ஞாநிக்காக இறங்கி வேலை செய்வார்களா என்பதை பொறுத்தே மூன்றாவது இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும்! திமுக வேட்பாளர் ஆர்.எஸ் பாரதி முந்துகிறார்! ஒரு வேளை ஆதிமுக ஜெயித்தால் கூட மிகச்சில வாக்குகள் வித்தியாசமே இருக்கும்!

Wednesday, April 2, 2014

தேர்தல் உலா - 1! வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் நிலவரம்

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய மக்கள் மனநிலையை அறிய தமிழகம் முழுக்க பயணம் செய்வதாக நானும் தோழர் பாரதி கண்ணனும் திட்டமிட்டிருந்தோம்! இன்று மதியம் வடசென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை செல்வதாக திட்டம். பத்து நாள் ஒதுக்குகிறோம். அதிகபட்சம் பத்து தொகுதிகள் செல்ல முடியும். 40ம் வாய்ப்பேயில்லை.
யார் ஜெயிப்பார் யார் தோற்பார் என்பது தாண்டி மக்கள் தேர்தலை எப்படி அணுகுகிறார்கள். எந்த அடிப்படையில் ஓட்டு போடுகிறார்கள். கருத்து கணிப்புகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்.என்பதையெல்லாம் பரிசோதிக்க ஆசை. பெரும்பாலான கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகளாகவே இருக்கின்றன. மக்களை யாரும் விமர்சனப்பார்வையோடு விசாரிப்பதில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

இந்த நாடாளுமன்றத்தேர்தலை இதற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தோம். நிறைய கேள்விகள். குறிப்பாக விவாதித்தோம்.என்ன தோணுதோ எல்லாம் கேட்போம். முன் கூட்டியே தீர்மானித்த கேள்விகள் ஏதுமில்லை.எல்லாமே ஆட்களைப்பொறுத்தது.உதாரணமாக திமுகவுக்கு வாக்களிப்பேன் என்று ஒருவர் சொன்னால், ஏன் என்று கேட்போம். ஸ்பெக்ட்ரமும் இலங்கை பிரச்சினையும் உங்களை பாதிக்கவில்லையா? என்று கேட்போம்!


இன்று மதியம் வடசென்னை வியாசர்பாடியில் இருக்கும் மெகஜிம்புரத்தில் மக்களை சந்தித்தோம். சுமார் 50 பேரை சந்தித்திருப்போம். முதலில் டீகடையில் கேட்டேன். அவர் அடிப்படையில் திமுக ஆசாமி. தேர்தல் அன்னிக்கி பாப்போம்” என்றார். சில குடும்ப பெண்களின் மத்தியில் ஆதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறது. வேட்பாளர் யாரென்ற கவலையில்லை. “அம்மாவுக்காக தான் ஓட்டு போடறோம். தமிழ்நாட்டுலேர்ந்து ஒருத்தவங்க பிரதமரானா நமக்கு தானே பெருமை” என்கிறார்கள்.
“எங்கம்மா அப்பா எல்லாம் திமுக தான்.. அதனால நானும் திமுகவுக்கு தான் போடுவேன்” என்கிறார்கள் 30 வயது தாண்டிய ஒரு குரூப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விசாரித்தால் “யார் தான் ஊழல் பண்ணல.. கொடநாடு மொத்தத்தையும் அந்தம்மா வளைச்சி போட்டுச்சே” என்கிறார் பதிலுக்கு. மக்களிடம் பேச்சு கொடுத்ததிலிருந்து ஒன்று தெரிகிறது. தேர்தலை எதோ கிரிக்கெட் மேட்ச் போல பார்க்கிறார்கள். இந்திய அணியில் எவ்வளவு மோசமான ஆட்டக்காரர்கள் இருந்தாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என வாதாடுவார்களே அது போலவே திமுக ஆதிமுகவுக்கு தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்.அதனால் இந்த ஏரியாவில் இரண்டு கட்சிக்கிடையே தான் கடுமையான போட்டி இருக்கும் என அறிய முடிகிறது.
எந்த ஊழல் பற்றியும் கவலையில்லை என்கிறார்கள்.”யார் வந்தா என்ன? எதும் மாறப்போறதில்ல”என்கிறார்கள். மோடி பற்றி ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேஜ்ரிவால் யாரென்றே தெரியவில்லை. கொஞ்சம் டீடெயில் கொடுத்து டெல்லில ஒருத்தர் ஜெயிச்சாரே என்றெல்லாம் சொன்னால் தான் “ஓ அவரா..” என்கிறார்கள்.ஒரு அம்மா கணவர் கம்யூனிஸ்ட் என்பதால் அவரும் கம்யூனிஸ்டுக்கே போடுவேன் என்கிறார். அதுவன்றோ காதல்! இளைஞர்களும் அம்மா அப்பாக்களை போலவே திமுக ஆதிமுக என்றே சொல்கிறார்கள்.
ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் சவுந்திரராஜன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். ஆதிமுக கூட்டணியில் ஜெயித்தவர். இந்த முறை கம்யூனிஸ்ட் தனியாக நிற்கிறார்கள். நிற்பவர் உ.வாசுகி. அகில இந்திய மாதர் சங்க தலைவி. நிறைய போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஏற்கனவே இந்த தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயித்தவர் டி.கே.எஸ் இளங்கோவன். தி.மு.கவை சேர்ந்தவர்.இப்போது தென் சென்னையில் நிற்கிறார். இதே தொகுதியில் தேர்தலை சந்திக்க பயமா? என்ற கேள்வி வருகிறது.
திமுக மற்றும் ஆதிமுகவிற்கு இருக்கும் பழைய ஓட்டு வங்கியை தவிர்த்துவிட்டு பார்த்தால் இளைஞர்கள் மற்றும் நடுநிலை ஆட்களின் ஓட்டு தான் தீர்மானிக்கும். இளைஞர்களை கவர கம்யூனிஸ்டுகள் ஏதும் செய்யவில்லை.உ.வாசுகி வந்தபோது கூடிய ஆட்களில் ஒரு தலை கூட இளசாக இல்லை.எல்லாமே பெரிய ஆட்கள். இந்த முறை கம்யூனிஸ்டுகள் டெபாசிட் வாங்குவது கூட கஷ்டம் என்ற பேச்சு இருக்கிறது! பார்ப்போம்!

2500 பேர் கொண்ட தலித் மக்கள் ரோட்டில் வசிக்கிறார்கள். தங்களுக்கு பட்டா கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நோட்டா போடும் திட்டத்தில் இருக்கிறார்கள்.இதற்காக ”நோட்டா கொண்டு வந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”என்றெல்லாம் போர்டு வைத்திருக்கிறார்கள். எப்படியும் எங்கல்ல 1500 பேராவது நோட்டா போடுவாங்க என்றார் ஒருவர்!
பா.ஜ.ககூட்டணியில் தே.மு.திக நிற்கிறது.காங்கிரஸும் தனித்து நிற்கிறது. “நான் காங்கிரஸ் தான். ஆனா இந்த தடவ காங்கிரஸ்கு போட மாட்டேன்” என்றார் ஒருவர்.ஆனாலும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் பேசிய போது “ நீங்க வேண்ணா பாருங்க.நாங்க தான் ஜெயிப்போம்” என்றார் கொஞ்சம் கூட சிரிக்காமல்.
இந்த முறை ஓட்டு கணிசமாக பிரியும். சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுகவோ ஆதிமுகவோ தான் ஜெயிக்கும்.திமுக கையே ஓங்கி இருக்கிறது.தேர்தலில் எல்லாமே கடைசி நேர மாறுதலுகுட்பட்டது! பார்ப்போம்!


Tuesday, April 1, 2014

தேர்தலை முன்னிட்டு ஒரு பயணம்!

கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் தான் சொல்கின்றன! யாரும் உண்மை சொல்லவில்லை! ”பொட்டி வாங்கிட்டாங்க”! ”நீங்க வேண்ணா பாருங்க மோடி தான் ஜெயிப்பாரு”
அம்மா பிரதமராவாரா? திமுக எத்தனை தொகுதி ஜெயிக்கும்? ஈழ பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? காங்கிரஸ் நிக்கற ஒரு தொகுதில கூட ஜெயிக்காதாம்மே?
ஆம் ஆத்மி பத்தி எல்லோருமா தெரிஞ்சி வச்சிருக்காங்க? இப்படி எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன! உங்களுக்கும் இருக்கும்!
எத்தனை நாள் தான் கேள்விகளோடே வாழ்வது! பதில்களை எப்போது தான் தெரிந்துகொள்வதாம்? பதிலை தேடி நானும் நண்பர் Bharathi Kannanனும் தமிழகம் முழுக்க சொல்கிறோம்!
40 தொகுதிகளும் செல்ல முடியுமா தெரியவில்லை! ஆனால் முடிந்த வரை எல்லா தொகுதிக்கும் செல்வோம்! இன்று வடசென்னை தொகுதியில் உ.வாசுகி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்! அங்கிருந்து தான் எங்கள் பயணம் துவங்குகிறது!! கன்னியாகுமரி வரை செல்வோம்!
அவ்வப்போது பதிவுகள் வரும்! இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்!