Saturday, November 10, 2012

டைலர்கள் படுத்தும் பாடு

எட்டாவது படித்திருந்தால் போதும், ஏன் அது கூட தேவை இல்லை.யாராவது ஒரு டைலரிடம் வேலைக்கு சேர்ந்து 2 வருடம் தொழில் கற்றுக்கொண்டால் போதும். ஒரு தையல் மிஷினை வாங்கி நாமும் டைலர் கடை ஆரம்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான்  பத்து ஆண்டுகளுக்குமுன் நம்மூர் ஆசாமிகளிடம் இருந்தது.

அப்போதெல்லாம் தெருவுக்கொரு டைலர் இருப்பார்.அவர் கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும். கூட்டத்திலிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை. பிறந்த நாள், காதுகுத்து, கல்யாணம்,கருமாரி,தீபாவளி, பொங்கல் என எவ்வளவோ காரணங்கள். நம்முடைய எல்லாக்கொண்டாட்டங்களிலும் உடை முக்கியப்பங்கு வகிக்கிறது.தீபாவளி சமயங்களில் சரவணாஸ்டோரில் இருக்கும் கூட்டம், அப்போது டைலர் கடைகளில் இருக்கும். இப்போதும் கூட்டம் இருக்கிறது.ஆனால் அது பெருசுகளின் கூட்டம். எல்லாம் பழைய பஞ்சாங்கங்கள்.

பத்து ஆண்டுகளில் எவ்வளவோ மாறி இருக்கிறது. எங்கூரில் இருந்த எத்தனையோ டைலர்கள் ஊரை காலி செய்துவிட்டு திருப்பூர் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் சூப்பர்வைசராக செட்டிலாகிவிட்டிருந்தார்கள்.கைநிறைய சம்பளம்.18 மணி நேரம் நின்றுகொண்டே வேலை.ஊட்டச்சத்து குறைந்த சாப்பாடு.மூன்று மாதத்துக்கொரு கம்பெனி.இது தான் அவர்களின் இன்றைய வாழ்க்கைமுறை.

“அப்பல்லாம் தீபாவளின்னாலே, என்னோட கடைல என்ன கூட்டம் இருக்குங்குற.அத்தன பேர் வந்து பொத்து பொத்துன்னு விழுவானுங்க. சொன்னா நம்ப மாட்ட, தீபாவளி சீசன்ல மட்டும் 50ஆயிரம் ரூவா சம்பாதிச்சிருக்கேன்.தினமும் 2 மணி நேரம் கூட தூங்குனதில்லன்னா பாத்துக்கோயேன்”

என மணிடைலர் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.”என் கடைல மட்டும் 4பேர் வேலை பார்ப்பானுங்க. ராஜ வாழ்க்கை. யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்ல.எவனும் என்னைய கேள்வி கேக்க முடியாது.ஊர்ல நமக்குன்னு ஒரு மரியாதை இருந்துது” என பேசிக்கொண்டே என்னை ஆழமாக பார்த்தவர் “சொன்னா நம்பமாட்ட, 15 வருசத்துக்கு முன்னாடி நம்மூர்ல டைலரே இல்ல. நான் தான் டைலர்.எவனும் என்னை பகைச்சிக்க முடியாது. ஏன்னா தீபாவளின்னா நம்ம கடைல தானே வந்து நிக்கனும்” என பெருமிதத்தோடு சொன்னார்.

இப்படி ஒவ்வொரு டைலருக்கு பின்னாலும் ஒரு சுவாரசியமான, பெருமிதமான கதை இருக்கும்.இது முதலாளியின் பெருமிதம்.(இன்று அவர் ஒரு தொழிலாளி என்பது வேறு கதை).

அன்று இந்த டைலர்களின் கடையில் முண்டியடித்து, இன்று சரவணா ஸ்டேர்ஸ் ஏறி இறங்கும் என் போன்றவர்களின் கதை வேறு.இந்த கதைகள் அந்த டைலர்களை தோற்கடித்தது. ஊரைவிட்டே ஓட வைத்தது.இந்த கதைகளை அவர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

அப்போதெல்லாம் ரெடிமேட் என்பது எட்டாக்கனி.ரொம்ப செலவாகும்.ஒரு சட்டை, ஒரு பேண்டு எடுக்கவே ஆயிரம் ரூவா ஆகும்.இப்போ தான் ஆயிரத்துக்கு மதிப்பில்ல.அப்போ வெறும் 2000ரூபாயில்(!?) குடும்ப மொத்ததுக்கும் துணி எடுத்து, பலகாரம்,வெடி என எல்லாம் முடிந்து விடும். ஒரு நல்ல சனி, ஞாயிறாக பார்த்து குடும்பம் மொத்தமும் எங்கூரிலிருந்து(தொட்டியம்) திருச்சிக்கு பஸ் பிடிப்போம். இதெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே.எங்கப்பா தீபாவளி துணிக்காக 2 மாதத்துக்கு முன்னமே பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவார்.

திருச்சி சாரதாஸுக்குள் குடும்பமாக நுழைவோம். சட்டை மீட்டர் பிட் 45லிருந்து துவங்கும். பேண்ட் மீட்டர் பிட் 75லிருந்து துவங்கும். நாங்கள் சராசரியான ரேட்டுக்கு தான் வாங்குவோம். நான், அண்ணன்,அப்பா என எல்லோருக்கும் துணி எடுத்து அம்மாவுக்கு புடவை வாங்கி எல்லாம் பட்ஜட்டுக்குள் அடங்குமாறு பார்த்து (பட்ஜட் என்பது சட்டை, பேண்ட் தையக்கூலியும் சேர்த்தது) வாங்கி, திருச்சியிலிருக்கும் துணி கடை காரரிடம் மொத்தமாக கொடுப்போம். அவர் மொத்தமாக எல்லாருக்கும் தைக்க 800 ரூ வாங்குவார்.அதில் பேரம் பேசி 750க்கு முடிப்போம்.

எங்கூரில் துணி தைத்தால் அது வேறு வகை சங்கடங்களை கொடுக்கும்.சொன்ன தேதிக்கு தரமாட்டார்கள். அரசு அலுவலகங்களைப்போல ஐந்தாறு முறை அலயவிட்டால் தான் அவர்களுக்கு நிம்மதி. எனக்கு சட்டை தைக்க சொன்னால் எங்க தாத்தாவின் அளவுக்கு தைப்பார்கள். கேட்டா “இன்னும் 2 மாசத்துல கிடுகிடுன்னு வளர்ந்துடுவ தம்பி” என மொக்கை போடுவார்கள்.  நான் என்ன complan boyயா.ரெண்டு மாசத்தில் 2 அடி வளர்வதற்கு.இல்லை நாமக்கல் ஆஞ்சனேயரா?

“சட்டைய கொஞ்சம் ஆல்டர் பண்ணி குடுங்கன்னே” என்று கேட்டால்..

“தம்பி தீபாவளி முடியறவரைக்கும் டைட்டு.. ஆல்டர் தானே. அப்புறமா பண்ணிட்டா போச்சு” என்பார் சர்வசாதாரணமாக.தீபாவளி அன்றைக்கு எல்லாரும் கச்சிதமாக உடையணிந்திருக்க, நான் மட்டும் தாத்தா சட்டை போட்டுக்கொண்டு நிற்கவேண்டி வரும். தீபாவளி உடை அணிவதற்காகவே தீபாவளிக்கு மறுநாள் பள்ளியில் நாள் ஒதுக்கி இருப்பார்கள்.என்னைபோல பலதாத்தாக்கள் அதில் தோன்றி “நண்பேண்டா” என கட்டிபிடித்து சிரிப்பார்கள்.
தீபாவளிக்கு பிறகு 15 நாள் அந்த டைலர் ஆளே இருக்கமாட்டார்.

“இப்ப தான் தீபாவளி துணியெல்லாம் முடிச்சோம்.அதான் ரெஸ்டு” என்பார். “ஆலட்ர்க்கு துணி இருக்கு”

“திங்ககிழமை வாப்பா.ஏற்கனவே எல்லாரும் ஆல்டருக்கு துணி குடுத்துருக்காங்க” என்பார்.திங்கள் கிழமை புதனாகும், புதன் ஞாயிறாகும்.அவரிடமிருந்து துணி வாங்குவதற்குள் அடுத்த தீபாவளி வந்துவிடும்.

ரெடிமேடு துணியெல்லாம் விலைகுறைவாக(!?) வந்தபிறகு இவர்களிடம் மல்லு கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போனது.அந்த சமயம் டைலர்களெல்லாம் மெல்ல மெல்ல கட்டுபடியாகாத விலை ஏற்றி இருந்தார்கள். துணி பிட்டெல்லாம் காலத்துக்கு தகுந்தவாறு ஃபேஷன் தாங்கி வராமல் பழைய டிசைன்களிலேயே டப்பா டான்ஸ் ஆடினார்கள்.ரெடிமேட் கடைகளிலேயே நமக்கு பிடித்த துணியை போட்டு பார்க்கலாம். பத்தலன்னா வேற டிசைன். பிடிக்கலன்ன வேற கடை.

யாரிடமும் மல்லுகட்டியாக வேண்டிய அவசியமில்லை.இப்படியாக டைலர்கள் இளசுகளை இழந்து கொண்டிருக்க, “பெண்களுக்கு பெண்கள் தான் துணி தைக்கணும், அப்பதான் சரியா வரும்” என மகளிர்குழுக்கள் மல்லுகட்ட கடைசியில் நம்மூர் டைலர்கள் திருப்பூருக்கு மூட்டை கட்டியது தான் மிச்சம். இன்னமும் எப்படி தோற்றோம் என அவர்களுக்கு தெரியாது.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரெடிமேடுகளின் வருகை தானே தவிர, வாடிக்கையாளர்களின் இழப்பல்ல.

பட்டாசு அரசியல்


”தம்பி பட்டாசு வாங்கலயா?”

“இல்ல..”

“ஏன்டா”

“எங்க ஸ்கூல்ல பட்டாசு வெடிக்ககூடாதுன்னு சபதம் எடுத்திருக்கோம்”

நல்லது.. பல வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் போது நானும் கூட இப்படி ஒரு சபதம் எடுத்திருந்தேன். அது நீண்ட காலம் வரை தொடர்ந்தது.

“எங்க வீட்டுல பட்டாசு அதிகமா வாங்கிட்டோம். நீங்க கொஞ்சம் வெடிங்க” என பக்கத்து வீட்டு ஆண்ட்டி, பாசமாக பட்டாசு தரும்வரை அந்த சபதம் தொடர்ந்தது.பல தீபாவளிகள் எங்கள் வீடுகளில் பட்டாசே வாங்கியதில்லை. சில தீபாவளிகள் துணியே வாங்கியதில்லை என்பது வேறு கதை.

பள்ளிகளில் பட்டாசுக்கு எதிரான சபத்திற்கு சொல்லப்படும் காரணங்களில் முக்கியமானது

1) காசை கரியாக்கக்கூடாது
2) சின்ன குழந்தைகளை பணிக்கு அமர்த்துகிறார்கள்
3) எல்லா நல்ல பழக்கங்களையும் குழந்தைகளிலிருந்தே துவங்க வேண்டும்


முதலாவது வேலிட் பாயிண்ட்.பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் காசு கரியாகும் என்பதை எவன் கண்டுபிடித்தானோ.. வாய்வழியே வயிற்றுக்கு பயணிக்கும் கோட்டரும், சுவாசக்காற்றோடு நுரையீரலுக்கு தாவும் புகையிலையும் எந்த லிஸ்டில் சேரும் என்பது பற்றியெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை.இதற்கு எதிராக எந்த சபதமும் எடுக்கபட்டதாக நினைவில்லை. முக்கியமான காரணம் குழந்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது ஒன்று, இன்னொன்று மது, புகையிலையை பயன்படுத்தும் எவரும் நம் பேச்சை கேட்கமாட்டார்கள்.

பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றால், நாம் பயன்படுத்தும் வாகனங்கள் என்ன செய்கின்றனவாம்.அவற்றை பயன்படுத்துவதை குறைப்பதை பற்றி என்றாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோமா?

இரண்டாவது..பட்டாசு தொழிற்சாலையில் சின்னக்குழந்தைகளை பணியமர்த்துகிறார்கள்,  நாம் பட்டாசு வாங்குவது அந்த தொழிற்சாலைகளை மோட்டிவேட் செய்வது போலானது என்கிறார்கள்.” நாம பட்டாசு வாங்கலன்னா அவங்க தொழில் நஷ்டமடையும்” என்ற கேணத்தனமான ஐடியாக்கள் பிள்ளைகளின் மனதில் விதைக்கபடுகின்றன.
 
பட்டாசு தொழிற்சாலையில் குழ்ந்தை தொழிலாளர்களை பணியமர்த்து வதற்கு எதிரான பேரணி, தமிழக அரசு அதை கண்காணிக்க கோரி போராட்டம், என போராட்டங்களை நடத்தி அதில் பிள்ளைகளை பங்கு பெறச்செய்வது தான் அவர்களின் மனதில் போராட்ட விதைகளை தூவும். இது தான் அக்கப்பூர்வமான நடவடிக்கையும் கூட.இந்த பழக்கத்தை தான் குழந்தைகளில் இருந்தே பழக்க வேண்டும்.

ஆனால் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் பள்ளிகள் பங்கு பெறாததற்கு என்ன காரணம்.

ஊரில் எல்லா குழந்தைகளுமே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது ஒரே ஒரு குழந்தை மட்டும் வெடிக்க வில்லை என்றால்
“ நீ மட்டும் ஏன் பட்டாசு வெடிக்கல” என அந்த குழந்தையை நாம் கேட்கும் போது
“எங்க ஸ்கூல்ல பட்டாசு வெடிக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க”

“ நீ எந்த ஸ்கூல்”
என நாம் கேட்கும் போது பள்ளியில் பெயரை அந்த குழந்தை சொல்லும்.

பரவால்லயே நல்ல ஸ்கூலா இருக்கே.. எவ்ளோ நல்ல பழக்கங்களை சொல்லி தருகிறார்கள். என்பதாக அந்த பள்ளிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.எவ்வளவு பெரிய விளம்பர உத்தி இது. பள்ளியின் விளம்பரத்திற்காக ஒரு குழந்தை தன்னுடைய அப்போதைய சந்தோசத்தை பலி கொடுக்கிறது.அது வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் வெடி வெடிப்பதில் சுவாரசியம் இருக்க போவதில்லை.

ஒழிக்க வேண்டியது எவ்வளவே இருக்க பட்டாசை ஒழிப்பானேன்.

நாம் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க பட்டாசுக்கு எதிரான சபதம் ஏன்?

நம்முடைய நோக்கம் சமூக மாற்றமா? வெற்று விளம்பரமா?