Saturday, December 24, 2011

இந்தியன் தாத்தா(அண்ணா ஹசரே(?))வின் மவுசு குறைஞ்சிபோச்சா



கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா ஹசரே உண்ணாவிரதம் இருந்த போது அவரது போராட்டத்த்தில் ஒரு நாளில் சராசரியாக கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை முப்பதாயிரம்.ஆனால் சமீபத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்த போது வெறும் பதினெட்டாயிரம் பேரே கூடினர்.

“இதை பார்த்தாலே தெரியல!! அண்ணா ஹசரேக்கு மவுசு குறைஞ்சி போச்சின்னு” என்கிறார்கள் ஹசரே எதிர்ப்பாளர்கள்.

“மாப்புள அவரு பா.ஜ.க ஆளுடா!! அதனால தான் இப்படி என்கிறார்கள் என் நண்பர்கள்..
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது? என இதை பற்றி மொக்கையாக ஒரு ப்ளாக் போடலாம் என அக்கம் பக்கம் விசாரித்து அலசலாயினேன். 

ஆரம்பத்தில் அண்ணா ஹசரே உண்ணா விரதம் இருந்த போது யாருக்குமே அவரைப்பற்றி முழுசாக தெரியவில்லை என்பது தான் உண்மை.அது மட்டுமல்லாமல் இந்தியன் தாத்தா, இன்னொரு காந்தி என கொடுக்கப்பட்ட ஏகப்பட்ட பில்ட்டப்களும், “அவரை எப்படி ராசா இருக்கற திகார்ல கொண்டு போய் அடைக்கலாம்?” என்ற கேள்விகளும், காங்கிரஸ் ஆட்சி மீதான கடுப்புகளும், ஸ்பெக்ட்ரம் விவகாரமும் சேர்ந்துகொள்ள, போதும் போதாததற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக என்.டி.டிவிக்கள் பொழுதுக்கும் நடத்திய விவாதத்தை பார்த்து லேக்கியம் விக்கிரவனுக்கு கூடிய கூட்டத்தை விட அதிகமாக ஆட்கள் கூடிய போது, “ஒருவேளை ஆட்சிய புடிச்சிடுவாய்ங்களோ” என அத்தனை கட்சிகளும் வாய் பிளந்தார்கள்.

ஹசரே கூட்டம் கூட்டி, உண்ணா விரதம் இருந்ததோடு நிறுத்தி கொண்டிருக்கலாம், அதை விட்டுவிட்டு “நான் சொல்லறது தான் சட்டமாக்கும்” என்ற ரீதியில் “ஜன்லோக்பாலை ஆதரிக்காத எம்.பி வீடுகளை கேரோ செய்யுங்கள்” என்றும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு இணையாக  காங்கிரசுக்கு எதிராக களம் இறங்கி பிரச்சாரம் செய்ததையும் பார்த்த பலரும்
‘மாப்புள இவனுங்க காமெடி பீஸ் மாப்ள” என்ற கணக்காக என வேடிக்கை பார்க்கதுவங்கி விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு பின்னால் கூடிய இளைஞர்களின் மனோநிலையை பல்ஸ் பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.அவர் எப்படி சுதந்திரப்போராட்ட காந்தி அல்லவோ, அதே போல அவருக்கு பின்னால் சென்றவர்களும் காந்தியின் followers அல்ல.காந்திக்கும், அவரை பின்பற்றியவர்களுக்கும் பொறுமை இருந்தது, ஆனால் நம்மவர்கள் பாஸ்ட்பூட் மனோநிலை “கொலைவெறி” ரசிகர்கள்.அவர் போன வேகத்தை பார்த்தவர்கள் “அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தவுடனே அரசு கண்ணைமூடிக்கொண்டு ஜன்லோக்பாலை சட்டமாக்கி விடுவார்கள், அந்த சட்டம் அமுலுக்கு வந்த அடுத்த அரைமணிநேரத்தில் இந்தியா வல்லரசாகி விடும்” என்ற வெற்றிகொடிகட்டு வேக மாயக்கற்பனையில் மூழ்கி இருந்தார்கள்.

அவர்கள் “ஏற்கனவே இருக்கும் சட்டங்களே ஊழலை ஒழிக்க போதுமானவை” என்பதை ஏற்றுகொள்ள தயாராக இல்லை. 

இது ஒருபுறமிருக்க அன்னாவின் மீதும் அவர் கூட்டத்தின் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலருக்கும் திகிலாக இருந்தது.இவர் சொன்ன லோக்பாலில் கார்பரேட்கள் இல்லை, இதற்கு காரணம் இவரது உண்ணாவிரதத்திற்கு ஒரு கார்பரேட் நிறுவனம் “ஐம்பது லட்ச ரூபாய் வழங்கி இருந்தது” என்பது தான் என்றபோது அது சர்ச்சைகுள்ளானது.அன்னா ஹசாரே தனக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்து பணத்தை தன் பிறந்தநாள் கொண்டாட பயன்படுத்தியது, அரவிந்த் கேய்ஜிரிவால் நிறுவனத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் வெளிநாட்டு பணம் குவிந்தது, கிரண்பேடி ஊரில் இருக்கும் தொண்டுநிறுவனத்திடம் எல்லாம் பணத்தை பிடுங்கி தன் தொண்டு நிறுவனத்தை வளர்த்தது, என்பன போன்ற ஹசரே குழுவினரின் தினசரி ஆக்டிவிட்டிக்கள் அவரை, திமுகவுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்த வடிவேலுவாக்கியது. 

இவை எல்லாம் தான் அவர் பின் செல்லும் கூட்டத்தை குறைக்க காரணம் என்கிறார்கள் சிலர்.

தன் மீதும் தன் குழுக்களின் மீதும் படிந்துள்ள கரையை துடைக்கவேண்டிய கறை ஹசரேவுக்கு உள்ள நிலையில், மீண்டும் அதே போன்ற கூட்டத்தை இவரால் சிறைநிரப்பும் கூட்டத்திற்கு கூட்ட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்த பதிவை எழுதும் இந்த நேரத்தில் டிவியில் ஓடும் “இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது” என்ற வடிவேலு காமெடி ஹசாரேவுக்கும் பொருந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.