Thursday, February 14, 2013

கண்ணா காதல் செய்ய ஆசையா!!


கல்லூரியில் படிக்கும் போது வந்த காதலர் தினங்கள் மறக்கமுடியாதது!!

ஒருவாரத்திற்கு முன்பே “எந்த கலருக்கு என்ன அர்த்தம்” என்பதாக மெசேஜ் அனுப்பத்துவங்குவார்கள்! “போடா.. அந்த கலருக்கு அது அர்த்தம் இல்ல. நான் நெட்ல பார்த்தேன்” என ரோட்டில் கட்டி உருளுவார்கள்.

"போடா நான் அன்னிக்கி கருப்பு கலர் சட்டை போட போறேன்"
“ எனக்கு காதலே பிடிக்காது” என்ற ஆசாமிகள் இப்போதைய ராமதாஸை நினைவுபடுத்துகிறார்கள்.

“டேய் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு காதலே பிடிக்காதுன்னு சொல்ற பசங்களதான் ரொம்ப பிடிக்கும்” என கருப்பு சட்டை காரர்கள் காதோரம் கிசுகிசுப்பார்கள்!!

”சட்டையே போடாம போயிட்டா”என குசும்பாய் யோசித்தவர்களும் உண்டு. “அப்பறம் என்ன ப்ளான்?” என ஆளாளுக்கு விசாரித்துக்கொள்வார்கள். காதல் வாய்க்கப்பெற்றவர்களைத்தவிர எல்லோரிடமும் இந்த கேள்வி உலாவரும்.

சிலருக்கு காதலே வாய்த்திருக்காது ஆனாலும் “என் ஆளு செம்ம அழகா இருப்பா மச்சான். விடிய விடிய போன்ல உருகறா” என அள்ளிவிடுவார்கள். “நம்ம கூட தானே இருந்தான்? இவனுக்கு மட்டும் எப்படி?” என சிலர் ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள்.

“அந்த மூஞ்சை காதலிக்கறதுக்கு தூக்குல தொங்கலாம்” என சில விசமிகள் இருக்கிற காதலுக்கும் வெடி வைப்பார்கள். "மச்சான் இந்த காலத்து பொண்ணுங்கள நம்பவே கூடாதுடா. நம்மட்ட நல்லா கரந்துட்டு. அத்த பையன கல்யாணம் பண்ணிக்குவாளுக” என சிலர் கோர்த்துவிடுவார்கள்.

“வீட்டுக்கு போய் போன் பண்ணு” என தூரத்து காதலிக்கு காற்றிலேயே படம் வரைந்து சிலர் கமுக்கமாக வேலை பார்ப்பார்கள்..

காதலர்தினம் நெருங்க நெருங்க ஒவ்வொருவர் நரம்பும் பின்னிப்புடைத்துக்கொள்ளும்.

 “மச்சான் அவ பாத்துகிட்டே இருக்கால்ல. அன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துடணும்”.

 “டேய் காதல்ங்கறது” என சுவாரஸ்யமாக பாத்ரூம் சந்துகளில் சிலர் பாடமெடுப்பார்கள். கவிதைகளுக்காக கல்லூரி கவிஞர்களிடம் முட்டி மோதுவார்கள். “டேய் இந்த கவிதைக்கு மட்டும் அவ செட்டாகட்டும். வொக்காலி உனக்கு ட்ரீட்டு தாண்டா” என்பார்கள்.

“மொதல்ல அம்மா அப்பாவ காதலிங்கடா” என சசிகுமார் பாணி வசனங்களும் வவுத்தொச்சல் வார்த்தைகளும் சத்தமாக உலாவரும்.

” நாளைக்கி லீவ் போடறவங்களுக்கு 1000 ரூபாய் ஃபைன்” என பிரின்சிபால் ப்ரஸ்மீட் நடத்துவார். “அந்தாளை பத்தி தெரியும்டா. வாய் மட்டும் தான்” என  நம்மாட்கள் சட்டையை மடித்து ரவுடியாவார்கள் (ரவுடிப்பசங்கள தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்)

”டேய் என்கிட்ட பச்சை கலர் சட்டை இல்லடா. மச்சி உன்கிட்ட இருக்கா. டேய் ஒரு நாள் மட்டும்டா” என சிலர் கெஞ்சி கொஞ்சுவார்கள்.

கடைசி கடைசியாக அந்த நாளும் வந்தது. ஒவ்வொருவரும் “ நம்மாளு வந்துடுச்சா” என அவள் பெஞ்சை நோக்க, அவளும் அர்த்தத்தோடு சிரித்து அட்டண்டன்ஸ் போடுவாள். “மச்சி உன் ஆள் இல்லாத அப்பவே தெரியும்றா. வேற எவனோடயாவது படத்துக்கு போயிருக்கும்” என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவார்கள்.

”டேய் கோபால கிருஷ்ணனும், ப்ரியாவும் ஆளக்காணம்றா. நாங்கதான் சொன்னமுல்ல”  என திடுக்கிடும் சம்பவங்கள் அம்பலமாகும்.

“எல்லாரும் வந்துட்டாங்களா?” என பிரின்சிபால் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு உலாவருவார்.

“டேய் பெருசா பேசுன. என்ன காலேஜூக்கு வந்துட்ட”

“எனக்கு ஆளு இருந்தா நான் ஏன் வரப்போறேன். போங்க தம்பி.போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க”

”டேய் சொன்னியாறா”

“இல்லடா.. ஆனா அவ என்னைய பாத்து சிரிச்சாறா. அதுக்கு என்ன அர்த்தம்”

“டேய் சிரிப்பு கூட காதலின் அறிகுறி தாண்டா”

சிலர் உடம்பு சரியில்லை என்றாலுமே கூட விழுந்து பிறண்டு கல்லூரிக்கு வந்திருப்பார்கள். அதற்கு காதல் காரணமல்ல.. எல்லாம் 1000 ரூபாய் சேதி.

பொண்ணுங்களும் பயங்கர விவரமாக தங்களின் கண்ணனைத்தேடி கலர்கலராக வலம்வருவார்கள். ”உனக்கு எத்தன டீ” என ஆளாளுக்கு குசலம் விசாரிப்பார்கள்.

“நான் எங்க அம்மா அப்பாக்கு துரோகம் பண்ண மாட்டேன்” என பசங்களிடம் நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்.சிலரோ உஷாராக “ நான் எங்க அத்தைபையன தான் கட்டிப்பேன்” என எல்லா பசங்களையும் அலசியபிறகு கடைசி கடைசியாக சபதமேற்பார்கள்.

காதலை சொல்லப்போன ஆசாமியை ராத்திரி மடக்கி கேட்டால்..

”சொல்லலடா” என்பார்கள்

“டேய் ஏண்டா சொல்லல”

“பயமாயிருக்குறா”

காதலர்தினம் என்பது பழையகாதல்களை அசைபோட்டு பார்ப்பதற்கும், நமக்கும் யாராவது சிக்குவாங்களா என பரீட்சித்து பார்ப்பதற்கும், கடைகாரர்களுக்கு ஆஃபர் கொடுத்து பொருட்களை விற்பதற்கும், கடற்கரையில் காதலர்களுக்கு தொல்லைகொடுத்து சுண்டல் விற்கும் பையன் கல்லாகட்டுவதற்குமானது. நிறைய காதல் வெளிப்படுத்தத்தெரியாமலே இறந்திருக்கின்றன என்பது தான் உண்மை.

No comments: