ஒரு வழியாக நெட் ஸ்பீட் நன்றாக அமைந்துவிட்டதால் இந்த வீடியோவை பதிவேற்ற முடிந்திருக்கிறது. கல்லூரி மூன்றாமாண்டு கல்ச்சுரல்ஸில் கடலோர கவிதைகள் திரைப்படத்தை ரீமேக்கினோம். வேறு ஒரு படத்தை ரீமேக் செய்யலாம் என்பது தான் ஆசை.நண்பர் டோனி க்ரேக் தான் வற்புறுத்தி ”டேய் இதுல இருக்கற பாட்ட வச்சே நாம ஜெயிச்சிடலாம்” என்றார்.
நான் அரைமனதாக தான் ஓகே சொன்னேன். காரணம் இருந்தது. டீச்சர் கெட்டப் நான் போட வேண்டும் என்பதே. ”ஏற்கனவே நம்ம பசனுங்க தெணறத்தெணற கலாய்ப்பயங்களே. பத்தாததுக்கு இது வேறயா. என்ற பயம் தான் காரணம்” ஒரு வழியாக சமாதானமாகி மேடைஏற பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் நன்றாக அமையவே நிறைய நம்பிக்கையை கொடுத்தது.
குறிப்பாக வகுப்பில் உடன் படிக்கும் பெண்களுக்கு ஒரே குஷி. புடவை மேக்கப், நகை விசயங்களுக்கு உதவுவதாக ரொம்ப ஆர்வமாக முன்வந்தார்கள். (அப்பக்கூட எனக்கு தெரியல).
கணினித்துறை லேப்பில் ஆடை மாற்றும்போது தான் தெரிந்தது. ஜாக்கெட் பத்தவில்லை. இனி என்ன செய்வது. என்று தலையை சொறிந்து கொண்டு நின்றபோது ஒரு தோழி முன்வந்து லேடீஸ் ஹாஸ்டல்ல வாங்கியாறேன் என போனார். அங்கே யாரும் துவைக்காமல் வைத்திருந்திருப்பார்கள் போல!!.. “யார்கிட்டயும் இல்லடா. அட்ஜஸ்ட் பண்ணிக்கே” என தோழி கைவிரிக்கவே. மேடை ஏறுவோமா என்பதே டவுட்டானது. ”அதனால என்ன பனியன்ல ஊக்கை குத்தி சமாளிக்க வேண்டியது தான். தூரத்துலேர்ந்து பாக்கற மடையனுக்கு தெரியவா போகுது” என ஒரு ஐடியா கொடுத்தார். அந்த ஐடியா அப்போதைக்கு தேவையாயிருந்தது.
மேக்கப்பெல்லாம் போட்டு ஒருவழியாக தயாரானோம். எல்லா பயலும் என்னை கொண்டுபோய் மறைவிடத்தில் நிறுத்திவிட்டு “ இந்த லேடி கெட்டப்பை சீக்ரெட்டா வச்சிக்கறோம். சரியா” என்று அதிரடி முடிவெடுத்தார்கள்.(பெரிய சங்கரு). அப்படி மறைவாக நின்று கொண்டு இருக்கும் போது தூரத்திலிருந்து எவனோ குறுகுறுவென பார்த்துகொண்டிருந்தது ஒரு மாதிரியாக இருந்தது. “டேய் பொறம்போக்கு. நான் பையண்டா” என சொல்லி பார்த்தேன். எங்களுக்கிடையில் இருந்த கண்ணாடி ஜன்னல் அந்த வார்த்தையை தடுத்துவிட்டது. ”தம்பி இங்கல்லாம் நிக்க கூடாது” என ஒரு பேராசிரியர் கிருஷ்ணன் போல வந்து அந்த பையனை வழியனுப்பி என் மானத்தை காத்தார். எதிர்பார்த்தது போலவே பாடல்களுக்கு செம்ம அப்லாஸ்!!
குறிப்பாக அந்த ஜாக்கெட் மேட்டர் தான் பலரின் கண்களை உறுத்தியது. ப்ரோக்ராம் முடிவை நெருங்கும் போது புடவை பாதி அவுந்துவிட்டது. ஒரு கையால் அதை பிடித்துக்கொண்டே சமாளிக்க முயற்சித்தேன் முடியவில்லை. நடக்கும்போது புடவையில் கால்தடுக்கி மேலும் அது கழன்றுகொண்டது. நானும் வேட்டி சொருகுவது போல சொருகி சமாளித்தேன். மேடையின் முன்வரிசையிலிருந்து என்னுடைய இந்த சங்கடத்தை VP பார்த்துக்கொண்டே இருந்தார்.
“அவுந்துடுச்சின்னா அவமானமா போய்டும். கீழ இறக்கிவிடுங்க” என்பதாக அவர் லைப்ரரியனிடம் பேசிக்கொண்டிருந்தார். மேடையிலிருந்துகொண்டே இதை பார்த்த எனக்கு ஒருவித பயம்.பாதியில் இறங்கினால் எங்களுக்கு அவமானமாக போய்விடும். அதனால் நான் இன்னும் மும்முரமாக கடைசி காட்சிகளை நடித்துக்கொண்டிருந்தேன். முன்வரிசையில் இருந்த எல்லோருடைய கண்ணும் புடவை மீதே இருந்தது. பாவிகளா. என்னை திரவுபதி ஆக்காமல் விட மாட்டார்கள் போல என எனக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். இது பத்தாதென்று என்னோடு நடித்த நண்பர் புடவையை உருவுவதே குறியாக இருந்தார். (துச்சாதனா). எல்லோரையும் சமாளித்து மேடை இறங்கி உடை மாற்றும் அறைக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழியில், எங்கள் நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.
குறிப்பு : நிகழ்ச்சி வீடியோ வடிவில் வந்திருந்தது பொழுது அந்த புடவை காட்சிகள் வெட்டப்பட்டே சிடியாக்கி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் என் மானம் காப்பாற்றப்பட்டது..அவ்வ்வ்!!
No comments:
Post a Comment