Thursday, November 14, 2013

வேலையால் இழந்தது அதிகம்!!

நேற்று கம்யூனிச நண்பர் ஒருவரோடு போனில் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் இருவருக்கும் தெரியாமலே ஒரு முக்கியமான தலைப்புக்குள் நுழைந்துவிட்டிருந்தோம்.. இந்தியாவில் வேலை எப்படி மாறியிருக்கிறது என்பது பற்றிய நீண்ட விவாதம் அது!!

சொல்லப்போனால் இந்தியர்களுக்கு வாழ்க்கை வேறு வேலை வேறு இல்லை.. வேலைக்காக நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.. “ நான் பேப்பர் படிச்சே 3 வருசம் ஆச்சி” என என் நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது.. நண்பர்களை இழந்திருக்கிறோம்.. புதிய நண்பர்கள் கிடைத்திருப்பது போல தெரியும்.. ஆனால் அவர்கள் வேலை சார்ந்த நண்பர்கள்.. அலுவலகம் மாறும் போது நண்பர்களும் மாறுவர்.. 

கார்பரேட்டில் வேறு டீமுக்கு மாறும்போது வேறு நண்பர்களுக்கு மாறுவோம்.. வேலைக்காக சரியான சாப்பாட்டை இழந்திருக்கிறோம்.. குடும்பம்.. குழந்தைகளின் படிப்பு.. ஏன் மனைவியைகூட வெறும் சமைத்து போடும் மெசினாகவும், செக்ஸ் மெசினாகவும் பார்க்க வைத்தது கூட வேலை தான்!! 

இப்படியாக 58 வயது வரை வேலை பார்த்துவிட்டு, திடீரென ரிட்டெயரான ஒருவரை கவனித்திருக்கிறீர்களா? 20 நாள் ஹாஸ்பிட்டலில் பெட் ரெஸ்டில் இருந்துவிட்டு திடீரென ஒரு நாள் டிஸ்சார்ஜ் ஆகும் ஒருவர், ரோட்டில் நடக்கும் போது குழந்தை போல புதிதாக நடக்க முயற்சிப்பாரே... அது போல இருக்கும்!

சொல்லப்போனால் மனிதனிடம் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்ட வாழ்க்கை என்பது இருந்ததில்லை.. விலங்குகள் போல தினம் தினம் உணவு தேடி அலைந்தான்.. அதனால் வாழ்க்கை சுவாரசியமாக போய்க்கொண்டேயிருந்தது.. ஒரே இடத்தில் வாழ திட்டம் போட்டு, அவன் இருக்கும் இடத்திலேயே உணவு உற்பத்தியை துவங்கினான்..ஆரம்பத்தில் உணவு மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது.. இப்போது அதைத்தாண்டிய கவலைகளே நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.. 

இப்படியாக ஒரு மணி நேரம் பேசியும் முடியாமல் நீண்டுகொண்டே போன பேச்சு நிறைய கேள்விகளை கிளறிவிட்டிருக்கிறது!! முடிவிலா யோசனையில் முழுதாக நுழைந்திருக்கிறேன்!!

No comments: