Saturday, March 29, 2014

முதல் முதல் வாங்கிய சைக்கிள்!!

இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு எல்லாமே கேட்காமலே கிடைக்கிறது!! பொம்மையில் துவங்கி, சைக்கிள், பைக் செல்போன் வரை!
அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்! என் வகுப்பில் இலக்கியா என்று ”அழகி”! (அந்த அழகி பற்றிய ஒரு கதை இருக்கிறது!! வேறொரு பதிவில்)
இலக்கியா தான் முதல் ரேங்க் எடுப்பாள்! அவளுக்கும் என் நண்பன் குகனுக்கும் போட்டி! யார் இந்த முறை முதல் ரேங்க் எடுப்பது என்று! குகனின் அப்பா தான் போட்டியை தூண்டினார்! “முதல் ரேங்க் எடுத்தா.. சைக்கிள் வாங்கிதருவேன்” என்பதாக!!
நான் மூணாப்பு படித்த காலத்தில் இந்த முதல் ரேங்க் சைக்கிள் உத்தி ரொம்ப பாப்புலர்! அவனும் வெறித்தனமாக படித்தான்! முதலாண்டு தேர்வு வந்தது!! இலக்கியாவின் அப்பா வீஏஓ! அவருக்கு அவசரமாக பணி மாற்றம் வரவே.. அவள் தேர்வு மட்டும் எழுதிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் பள்ளி விட்டு நீங்கினாள்!!
எப்படியோ இந்த குகன் முதல் ரேங்கை எடுத்து விட்டான்! அவங்கப்பா சொன்னது மாதிரியே சைக்கிள் வாங்கி கொடுத்துவிட்டார்! இப்போது எனக்கு சைக்கிள் வாங்கும் ஆசை வந்தது!! நானும் என் அப்பாவிடம் போய் “அப்பா நான் இந்த முறை ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கறேன்! குகன் அப்பா மாறி சைக்கிள் வாங்கி தர்றியா” என்றேன்!!
“மொதல்ல நீ வாங்கு..பாக்கலாம்” என்றார்!
நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன்! 2வது ரேங்கை தாண்ட முடியவில்லை! 4வது 5வது தாண்டி பத்தாவதெல்லாம் கூட முடித்துவிட்டேன்! நோ ஃபர்ஸ்ட் ரேங்க்! நோ சைக்கிள்!
கடைசியில் 11வது படித்த போது மாண்பு மிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்! வருங்கால பாரத பிரதமர் (  ) 11வது 12வது படிக்கும் எல்லா அரசு பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்! அப்போது தான் வாங்க முடிந்தது!!
அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாக பொண்டாட்டி மாதிரி பாதுகாத்தேன்!!  என்னிடம் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் போராடி வாங்கியது தான்! அதனாலேயே சிறப்பாக பாதுகாத்து வந்திருக்கிறேன்! இலவசமாகவோ கஷ்டபடாமலோ கிடைத்த எல்லாவற்றின் மீதும் ஏனோ தானோ அக்கறைகள் தான் இருந்திருக்கின்றன!
இப்போதிருக்கும் பிள்ளைகளுக்கு எதுவுமே கஷ்டபடாமல் கிடைத்துவிடுகிறது!! சைக்கிளில் இருந்து.. கேம்பஸ் வேலை கொடுக்கும் இஞ்சினியரிங்க் காலேஜ் சீட்டு வரை! வேலை கூட அப்படியே!

No comments: