Monday, February 3, 2014

ஃபேஸ்புக் பத்தாண்டு நிறைவு!

ஃபேஸ்புக் பத்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது இன்றோடு! மகிழ்ச்சி! நான் எப்போது ஃபேஸ்புக் வந்தேன் என மிகச்சரியாக நினைவில்லை.ஆனால் கல்லூரி மூன்றாமாண்டு படிக்கும் போது இண்டர்னெட் மார்கெட்டிங்க் தொடர்பாக ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது தான் சோசியல்மீடியாவின் அசுர வேக வளர்ச்சி பற்றிய விவாதம் மெல்லியதாக வலம்வந்துகொண்டிருந்தது. ஆர்குட்டும் மைஸ்பேசும் தான் முன்னணியில் இருந்தன!

மைஸ்பேஸ் ப்ரமோசன் பற்றி தெரியவில்லை.ஆனால் ஆர்குட் மூலமாக பிசினஸ் 30 சதவீத வளர்ச்சியடைந்ததாக சர்வேக்கள் சொல்லிக்கொண்டிருந்தன. top growing social media என்றொரு ஆர்டிக்கள் படித்த போது ஃபேஸ்புக் அசுரவேகத்தில் வளர்வதாக கேள்விபட்டு எனக்கும் ஒரு அக்கவுண்ட் துவங்கிக்கொண்டேன்.அதோடு சரி. ஹ்ரித்திக் போட்டோவை ப்ரொஃபைலில் வைத்ததாக நினைவு.

அதன் பிறகு ஆறு ஏழு மாதங்கள் கழித்து ஒரு வெப்டிசைனிங்க் வேலையில் சேர்ந்தபோது என் இண்டர்னெட் மார்கெட்டிங்க் ஆர்வத்தை பார்த்து அதை என் தலையில் கட்டினார்கள்.அப்போது தான் மீண்டும் ஃபேஸ்புக்கை தூசு தட்டி எடுத்தேன்.ஆரம்பத்தில் மரண மொக்கையாக இருக்கும்.என் நண்பர்கள் யாரும் ஃபேஸ்புக்கில் இல்லை.அவர்களுக்கு அப்படி ஒன்று இருப்பது தெரியுமா என்பதே சந்தேகம் தான். நான் கிராமத்தில் இருந்து வந்தவன்.அதனால் என் ஏரியா காரர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தெரிந்திருந்தாலும் என்னைப்போலவோ அக்கவுண்ட் மட்டும் துவங்கி ப்ரொஃபைல் போட்டோ போட்டு வைத்தவர்களாக இருப்பார்கள்!

2011ல் வேலை தேடி சென்னை வந்தபிறகு மாமா வீட்டில் தங்கினேன்.அங்கே அத்தை பசங்க பயன்படுத்துவதை பார்த்தேன். வெறும் போட்டோஷேரிங்கும் சாட் செய்வதற்குமான ஒரு தளம் போல என நினைத்துக்கொண்டேன்.அண்ணனோடு வீடெடுத்து தங்கிய போது அவன் லேப்டாப் வைத்திருந்தான்.அப்போது பொழுது போகாமல் சில வலைதளங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.யுவகிருஷ்ணா,அதிஷா,சாரு தளங்களை விடாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.ஃபேஸ்புக்கிலும் அவர்களை தொடர்ந்துக்கொண்டிருந்தேன்.

சில மாதத்தில் புதியதலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்தபோது நிறைய எழுத்து பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.குறிப்பாக சுவாரசியமாக எழுதவேண்டும்.எனக்கு நன்றாக பேச வரும்.எழுதி பயிற்சியில்லை.எந்த கட்டுரைப்போட்டியிலும் பங்குபெற்ற அனுபவம் கிடையாது.எழுத முயற்சித்ததும் இல்லை.காரணம் சோம்பேறித்தனம்.அடுத்து யார் படிக்க போறா என்ற நினைப்பு.

அப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் சாரு க்ரூப்பினர் வலுவான நிலையில் இருந்தார்கள்.தினமும் அவர் எதையாவது எழுதுவார் இவர்கள் அது பற்றி விவாதித்து, சாருவை துதிபாடி,சிலர் சாருவை கெட்டவார்த்தையில் திட்டி, திட்டுவாங்கி.ஒரே காமெடியாக இருக்கும்.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுதமுடியும்போல என்று நினைத்து நானும் நெட்டில் சில ஆங்கில வசனங்களை எடுத்து போட்டு பார்த்தேன்.பத்திரிக்கையில் தமிழில் எழுதுவது போல ஃபேஸ்புக்கிலும் எழுதினேன்.பத்திரிக்கையில் வெறித்தனமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஃபேஸ்புக்கிலும் எழுதி தள்ளினேன்.ஆரம்பத்தில் 4லைக் விழுந்தாலே பெரிய விசயம்.இப்போது இருப்பது போல லைக் போட்டி அப்போது இல்லை.காலம் போக போக டிமிட்ரிகள் உள்ளே வந்தார்கள்.கிஷோர் வந்த பிறகு தினமும் அடிதடி தான்.

ஜாதி ஆசாமிகளும் கட்சிக்காரர்களும் எப்போது உள்ளே வந்தார்கள் என நினைவில்லை.ஆரம்பத்தில் திமுககாரர்கள் வலுவாக இருந்தார்கள்.வைகோ ஆசாமிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கினர்.ஈழப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது வெளிநாடுவாழ் தமிழர்கள் மொத்தமாக சேர்ந்து கலைஞரை டார்கெட் செய்தார்கள்! பிறகு கலைஞரை கலாய்த்தால் அதிக லைக் விழும் என்ற ஃபார்முலா வந்தது.தர்மபுரி கலவரம் நடந்த போது தான் பா.ம.கவினர் மொத்தமாக உள்ளே வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் மனுஷை டார்கெட் செய்தார்கள். தினம் தினம் சண்டை என ஒரே குஷியாக போய்க்கொண்டிருந்தது.உண்மையில் ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன கிடைக்கிறது? அது ஒரு மாதிரி போதை. தண்ணி அடிப்பதால் என்ன கிடைக்குமோ அது கிடைக்கும்.ஆனால் அது வாழ்க்கையை சுவாரசியப்படுத்துகிறது. முன்பெல்லாம் என்ன எழுதலாம் என யோசித்தால் எதுவுமே தோன்றாது.இப்போது குப்பையாகவோ சிந்தனையாகவோ எதோ தோன்றிக்கொண்டேயிருக்கிறது! இப்போதைக்கு இது போதும்!

No comments: