Wednesday, September 26, 2012

புரட்சியாளர்

பாரதி என்ற நண்பர் சமீபத்தில் தான் பழக்கம். ஒரே அலுவலகம்.நறுக்கு தறித்தது போல பேசுவார்.சாதாரணமாக நாம் எதாவது பேசினாலும் அதில் எதையாவது புதிதாக கண்டுபிடித்து அவர் நம்மை தாக்குவார்.அது நமக்கே ஒரு மாதிரி இருக்கும்.

அந்த நண்பருக்கும் வீடு தாம்பரம் மெப்ஸ் பகுதியில் தானாம். இன்று தான் எனக்கே தெரியும்.இரண்டு பேரும் பணி சார்ந்து தான் இது வரை பேசிக்கொண்டிருந்திருக்கிறோமே தவிர, இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விசாரணைகள் ஏதும் இருந்ததில்லை. இன்று ஒரே பேருந்தில் ஈகாட்டுத்தாங்கலில் இருந்து தாம்பரம் வரை பயணப்பட்டோம்.

“ உங்க சொந்த ஊர் என்ன? எப்படி இந்த வேலை கிடைச்சிது.இதுல தான் ஆர்வமா?” என்பதாகவெல்லாம் கேள்வி கேட்டார். நானும் ஆர்வமாக பதில் சொன்னவாறு வந்து கொண்டிருந்தேன்.பேச்சு பயங்கர சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது.பேருந்தில் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் “கொஞ்சம் இந்த பக்கம் வர்றீங்களா” என்பதாக தனக்கு முன்னால் இருந்த இடத்தை காட்ட நண்பரும் காரணம் என்னவென யோசித்தவாறே அந்த பெண்ணுக்கு கொஞ்சம் முன்னால் தள்ளி நின்றார்.

நண்பருக்கு என்ன காரணமென்றே தெரியவில்லை.அந்த பெண் ஏன் அப்படி சொன்னார்? நாம என்ன பண்ணோம்.என்பதாகவே யோசித்துக்கொண்டு அவ்வப்போது “சாரி பை பட்டுடுச்சி அதான்” என்று அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்தில் நண்பருக்கு சீட்டு கிடைத்துவிடவே உட்கார்ந்துவிட்டார்.அப்போதும் அந்த பழைய யோசனையிலேயே இருந்தார்.

நான் நைசாக அந்த நண்பரின் காதுக்கருகில் சென்று “பாஸ். அந்த பொண்ணு ஏன் அப்படி சொன்னதுன்னு யோசிக்கறீங்களா?” என்றேன். “ஆமாம்” என்பது போல தலையசைத்தார்.

“அது ஒண்ணுமில்லை.அந்த பொண்ணுக்கு பக்கத்தில் இருந்தவன் அவங்க மேல இடிச்சிகிட்டே இருந்தான்.அது தான் காரணம்” என்றேன்.”அப்படியா? அப்பவே சொல்லக்கூடாதா?” என்றவாரே “இருங்க, அவங்ககிட்ட என்னன்னு கேக்கறேன்” என்றார். “இவர் யார்ரா..என்ன கேக்கப்போறார்..இதை போய் எப்படி கேக்கப்போறார்..கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க” என்பதாக அதிர்ச்சிகலந்த யோசனையில் “அய்யோ வேண்டாம் பாஸ்” என்றேன்.

”அட இருங்க” என்றவாரே.. நான் சொல்ல சொல்ல கேட்காமல் “அவர் என்ன உங்க மேல இடிச்சிட்டிருந்தாரா” என்றார் அந்த பெண்ணிடம். அந்த பெண்ணும் “ஆமாம்.அதனால தான்” என்றார் தர்ம சங்கடமாக “தெரிஞ்சி இவர் என்ன பண்ண போறார்”என்ற ஆர்வம் அவர் கண்களில்.

”ஏங்க அவங்க மேல இடிக்கறீங்க..பஸ்ல வந்தா ஒழுங்கா இருக்கமுடியாதா?” என்று இடித்த ஆசாமியை பார்த்து நண்பர் ஓங்கி குரல் கொடுக்க.எனக்கோ தர்மசங்கடமாகிவிட்டது. “இவர் என்ன புரட்சியாளரா? இல்ல.. பொண்ணுங்களுக்கு எதாவது ஒண்ணுன்னா பொங்குவாரோ” என்பதாக இருந்தது என் எண்ணம்.

இடித்த ஆசாமியும் அசராமல் “யோவ் உனக்கு என்ன? பஸ்ல வந்தோமா நின்னோமான்னு இல்லாம” என்று நண்பரைவிட ஒருமடங்கு அதிகமாக குரல்கொடுத்தார்.

“குடிச்சிருக்கியா? சொல்லுயா..குடிச்சிருக்கியா.போலீஸ்ல சொல்லட்டுமா?” என்றார் நண்பர்.

“நான் என்ன பண்ணேன் போலீஸ்ல சொல்றதுக்கு” - இது அந்த ஆசாமி.
“எதுவுமே பண்ணாம தான் அவங்க சொல்றாங்களா?” என்பதாக அந்த பெண்ணை கைகாட்டினார்.

அந்த பெண்ணும் தனக்கு எதிரே என்ன நடக்கிறது என்று புரியாதவராக “ஆமாம்” என்பது போல அரைதலை அசைத்தார்.

அந்த ஆசாமி சுதாரித்தார்.  ”ஒழுங்கா இருந்துக்கோங்க” என்பதாக நண்பர் குரலெழுப்பினார்.

அதற்குள் அடுத்த ஸ்டாப் வந்துவிடவே, இடித்த ஆசாமிக்கு பக்கத்திலிருந்த சீட்டு காலியாகவே.அந்த ஆசாமியும் இது தான் சாக்கென்று அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.

“பாத்திங்களா.அவன் தப்பு பண்ணலன்னா..எதுக்கு தப்பிக்க பார்த்து இடம் கிடைச்ச உடனே உட்காரணும்” என்றார் நண்பர், என் காதருகே.
நான் இன்னும் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி கலையாதவனாகவே நின்று அவரையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தேன். “ஏங்க,இப்படி பண்றாங்கன்னு எங்ககிட்டயாவது சொல்லக்கூடாதா” என்றார் அந்த பெண்ணிடம். அந்த பெண் ஏதோ சொல்லதயங்க “பஸ்ல இத்தனை ஜென்ஸ் இருக்கோம். நாங்க பாத்துக்க மாட்டோமா” என்றார்.

நாங்கள் இறங்கும் நிறுத்தம் நெருங்கவே படிக்கட்டை நெருங்கியபோது படிக்கெட்டு பக்கத்து சீட்டிலிருந்த பெண் “இவனுங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது” என்றார் “ஆமாங்க.ஒரு வழி பண்ணனும்.இனிமே யார்கிட்டயாவது இப்படி பண்ணுவான்” என்றவாரே இறங்கினார். நானும் அவரை தொடர்ந்து இறங்கினேன்.

அவரிடம் பேசவேண்டி இருந்தது. “என்னங்க? அந்த பொண்ணுகிட்ட போய் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க” என்றேன்.

“பின்ன கேக்காம.இது மாதிரி பிரச்சினையலாம் சும்மா விடக்கூடாது” என்றார்.
“ நீங்க என்ன பாஸ் புரட்சி பேசறீங்க. அந்த பொண்ணு எப்படி ஃபீல் பண்ணிருக்கும்? நீங்க சத்தம் போட்டதுக்கு காரணம் அந்த பொண்ணுதான்னு நினைச்சி, பஸ்ல எல்லாரும் அவங்களையே பாக்க மாட்டாங்களா? அது மட்டுமில்லாம. எனக்கு சம்திங் ராங்க்னு முன்னாடியே தெரியும். நான் பஸ்ல ஏறி கொஞ்ச நேரத்துலயே, உள்ள போகலாம்னு போகப்போனா வழில இந்த ஆளு நின்னுட்டு இருக்கான்.படிக்கெட்டு பக்கத்து சீட்டுல உக்காந்துருந்தாங்கள்ல.அந்த அம்மாவ இடிச்சமாதிரி நின்னுட்டு இருந்தான்”

“இடிச்சிட்டு இருந்தானா.அப்பவே சொல்லக்கூடாதுங்களா” என்றார் நண்பர்.
“இல்ல எனக்கு கன்ஃபார்மா தெரியல.இடிச்சிட்டிருந்த மாதிரி தான் இருந்தது. அந்தம்மாவுக்கு பிறகு குண்டா வெள்ளையா உங்க பக்கத்துல நின்ன பொண்ணுக்கு முன்னாடி ஒரு பொண்ணு இருந்துதே.அது கூட அப்புறம் உட்கார்ந்திருந்தது.அவங்க மேல இடிச்சான். பிறகு தான் இந்த பொண்ணு” என்றேன்.

” நீங்க தான் பேச்சு சுவாரசியத்துல இதெல்லாம் கவனிக்கல” என்றேன் மேலும்.

“ஏங்க அப்பவே சொல்லக்கூடாதா?” என்றார் நண்பர் ஆதங்கமாக. “என்னன்னு சொல்லுவேன்.அந்த பொண்ணே எதுக்கு உங்கள இந்த பக்கம் வர சொன்னாங்க. அவங்க நினைச்சிருந்தா சத்தம் போட்டுருக்கலாம்.ஆனா சத்தம் போட்டா எல்லாரும் நம்மள பார்ப்பாங்க.அசிங்கமா இருக்கும்னு ஃபீல் பண்ணி தான் உங்கள முன்னால வர சொன்னாங்க.ஆனா நீங்க என்னன்னா..சத்தம் போட்டு இப்டி பண்ணிட்டிங்களே” என்றேன்.

“போங்க நீங்க வேற..அவங்களே அவங்களுக்கு சாதகமா பேச ஆள் இல்லைங்கறதுனால தான் அமைதியா இருந்தாங்க.அவங்க நான் பண்ணத நினைச்சி ஃபீல் எல்லாம் பண்ணிருக்க மாட்டாங்க. சந்தோசம் தான் பட்டுருப்பாங்க. நமக்காக ஒருத்தன் கேட்டான் பாரு.அப்டின்னு சேட்டிஸ்ஃபை ஆகிருப்பாங்க.என்னால பஸ்ல இருந்த மத்தவங்க மாதிரி பொட்டையா இருக்க முடியாது” என்றார்.

அந்த பொட்டை என்பது எனக்கும் சேர்த்து பொருந்தியதாகவே பட்டது.

அவரிடம் அதை சொன்னபோது “சீச்சி.. இல்ல.. சாரி” என்றார்.
 நீங்கள் விரும்பும் மாற்றம் முதலில் உங்களிலிருந்தே துவங்க வேண்டும் என்ற காந்தியின் வரிகள் எனக்கு முன்னால் சம்பவங்களாக நடந்ததாக தோன்றியது.

No comments: