Sunday, September 9, 2012

தன்னம்பிக்கை கூட்டங்கள் - mindfresh


”இந்த ஐநூறு ரூபாய் யாருக்கு வேணும்”

ஒரு பெரிய ஹோட்டலில் கோட்டு சூட்டு போட்ட ஆசாமி ஒருவர், வயர்லெஸ் மைக்கை கழுத்தில் சட்டை பட்டனுக்கிடையே மாட்டிக்கொண்டு தன் போச்சிணூடே இரண்டாவது வரிசையில் இருந்த நபர் ஒருவருக்கு அருகில் சென்று கேட்ட கேள்வி தான் “இந்த ஐநூறு ரூபாய் யாருக்கு வேணும்”.. அந்த நபரின் முகத்திற்கருகே சென்று “டூ யூ வாண்ட் திஸ் ஃபைவ் ஹண்ட்ரட்”..

அந்த ஆசாமி ஒரு நிமிடம் அந்த ஐனூறை பார்க்கிறார்.. “தருவானா.. மாட்டானா...” என்பதாக அந்த ஐனூறை பார்த்தவாறே யோசிக்கிறார்.எதுக்கு வம்பு அமைதியாவே இருப்போம்.. நாம கேக்க போய் அந்தாளு எதாவது மொக்க போடப்போகிறார்.. என்ற யோசனையில் அமைதியாகவே இருக்கிறார்.


ஒட்டு மொத்த கூட்டத்தின் நடுவே சென்று “யாருக்கு வேணும் இந்த ஐனூறு”
“கைதூக்குங்க பாஸ்” என்கிறார்.. யோசித்து யோசித்து ஒவ்வொருவராக  கைதூக்குகிறார்கள்.

பேச்சாளர் கூட்டத்தை உற்று பார்த்தவாறே ” நம்மளோட நோக்கம் ஐனூறு ரூபாயில்லை.. ஐனூறு கோடி”
கூட்டத்திலிருக்கும் எல்லோரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள்.
“டூ யூ பிலீவ் இட்..ஆர் நாட்.. வீ கேன்.. ஐ ஹேவ் மோர் எக்சாம்புல்ஸ் ஹியர்..” என தன் பேச்சை காரசாரமாக தன்னம்பிக்கை தெறிக்க நரம்பு புடைக்க பேசுகிறார்.

இது ஒரு பிசினஸ் மீட்டிங். நான் கல்லூரியில் படிக்கும்போது சும்மா போய் பாப்போமே என நுழைந்த மீட்டிங் தான் இது. பள்ளி பருவத்திலிருந்து கார்பரேட் வேலையில் சேர்ந்த பிறகு கூட நிறைய தன்னம்பிக்கை தொடர்பான சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன்.

ஆரம்பத்தில் கலந்து கொண்ட மீட்டிங்குகளில் முடிந்து வெளியே வரும்போது ரத்தம் தெறிக்க நம்பிக்கை பொங்கி.. வெளியே வரும்போது வெறியாக வருவேன். நான் மட்டுமல்ல. என்னோடு நிறைய பேர் இதே மாதிரிதான்.விக்ரமன் படத்தில் வருவது போல ஒரே ராத்திரியில் ரத்தன் டாட்டா ஆகிவிட வேண்டுமென்ற வேகம் வரும். கூட்டத்தில் பேசுபவர்கள் கை நிறைய வடிவேலு காமெடிகளை அள்ளி வீசியவாறே அம்பானி கதைகளையும், அமெரிக்க ஆசாமிகளை பற்றியும்  அள்ளி விடுவார்கள். நடு நடுவே டி.ஆர் போல ரெண்டு மூணு நச் பஞ்ச்கள் இடம் பெறும். வெளியே போகிறவரை நல்லா பொழுது போகும்.வீட்டுக்கு போய் டிவியை ஆன்செய்கிறவரை தான் தன்னம்பிக்கையும் டைம் மேனேஜ்மெண்டும்.அதன்பிறகு சேப்டர் கொளோஸ்.அடுத்த வேலையை பார்க்க போய்விட வேண்டியது தான்.

தன்னம்பிக்கை மீட்டிங்குகளில் பங்கு பெறும் பலரின் நிலையும் இதே தான்.ஒவ்வொரு வருடமும் புத்தகத்திருவிழாக்களில் தன்னம்பிக்கை புத்தகங்கள் சக்கைபோடு போடுகின்றன.அதன் கதை வேறு.பத்து பக்கம் தாண்டியதும் மட்டையாகிடுவோம்.தன்னம்பிக்கை என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு போதை.இங்கே கார்பரேட் டிரெயினிங் என்பதும், ஸாஃப்ட் ஸ்கில் ட்ரெயினிங் என்பதும் குடிசைதொழிலாகி ரொம்ப நாளாகிறது.டாஸ்மாக் செய்யும் அதே வேலையை காசைவாங்கிக்கொண்டு இவர்கள் செய்கிறார்கள்.



உண்மையிலேயே இது போன்ற ட்ரெயினிங் எடுக்கிறவர்கள் நம் வாழ்க்கையை மாற்றுவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்களா. இது போன்ற நிகழ்ச்சி எடுப்பதற்கு என்னதான் கல்வித்தகுதி? வெறுமனே பேச்சுத்திறமை மட்டும் போதுமா. இணையத்திலிருந்து சில தகவல்களை பவர்பாயிண்டில் புகுத்தி இரண்டு மூன்று வடிவேலு காமெடியை சேர்த்து அடித்து விட்டால் வேலை முடிந்ததா? என்ற கேள்விகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும்.

சென்னை ஐஐடிஎம் ரிசர்ச் சென்டர்.. இன்று காலை ஒரு சாஃப்ட்ஸ்கில் ட்ரெயினிங்.இந்த முறை நிறைய எதிர்பார்ப்பு.காரணம் நண்பர் ஒருவர் சொன்னது.”எடுப்பவர் மற்றவர் போலல்ல.சைக்காலஜிஸ்ட்.மைண்ட் ட்ரெயினர்”.பெயர் கீர்த்தன்யா.பதினைந்து ஆண்டுகளாக மைண்ட் ட்ரெயினராக பணியாற்றிவருகிறார் என்ற தகவல்.குழந்தைவளர்ப்பு பற்றிய சைக்காலஜிக்கல் தொடர் ஒன்றை திருச்சி தினமலர் பெண்கள் மலர் பதிப்பில் எழுதியபோது நான் படித்திருக்கிறேன்.

பெரும்பாலும் சைக்காலஜிஸ்டுகளெல்லாம் லெக்சரர்களை போல மணிக்கணக்காக பாடம் நடத்தி நம்மை தாலாட்டி தூங்க வைப்பார்கள் என்ற என் நம்பிக்கையை கீர்த்தன்யா தவிடுபொடியாக்கிவிட்டார்.இத்தனைக்கும் ஒரு வடிவேலு காமெடிகூட இல்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி பீட்டர் விடாமல் நமக்கு தெரிந்த பரிச்சயமான வார்த்தைகளையும் உதாரணங்களையும் பயன்படுத்தி அழகாக, நேர்த்தியாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளை போட்டு மெல்லிய குரலில், அட்வைஸ் பண்ணுகிற தொணி ஏதுமில்லாமல் அவர் பேசும் பேச்சை நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

”நம் மனதுக்கு அதீத சக்தி இருக்கிறது. அது தான் நினைப்பதை கண்முன்னே நடத்திக்காட்டவல்லது” என்ற சைக்காலஜிக்கல் கலந்த அறிவியல் தான் தலைப்பு.தலைப்பும், சொல்ல வந்த கருத்தும் அறிவியல்பூர்வமானதாக இருந்தாலும், யாராலும் நம்ப முடியாத கருத்துக்களை உள்ளடக்கியது என்பதால் விளக்குவது சிரமம்.காரணம் கொஞ்சம் ஏமாந்தால் கேட்பவர்கள் கடவுளை உள்ளே இழுத்துக்குழப்பிக்கொள்வார்கள்.இல்லையென்றால் பீலா என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஜக்கியும்,கார்பரேட் சாமியாரான சுகபோதானந்தாவும் போலல்லாமல்ஆன்மீக உதாரணங்கள் ஏதுமில்லாமல் சில அறிவியல் ரீதியான விளக்கங்கள் தான் கீர்த்தன்யாவை தனித்துகாட்டுகிறது.


மூளை எப்படி தகவல்களை உள்வாங்குகிறது,அது எப்படி தான் நினைப்பதை கண்முன்னே நிகழ்த்திக்காட்டுகிறது, அது ஏற்படுத்தும் தாக்கம் நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி குழப்பாமல்,முக்கியமாக தூக்கத்தில் தள்ளாமல் ,தலைப்புக்குள்ளேயே நம்மை சிக்கவைத்து மிகத்திறமையாக யோசிக்க வைக்கிறார் கீர்த்தன்யா.கூடவே சில பயிற்சிகளும் நம்முள் எதோ ஒரு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

சொல்லப்போனால் சுகிசிவமும்,கோபிநாத்தும் கொடுத்துவிடமுடியாத சில அசாத்திய நம்பிக்கைகளை இவரின் அறிவியல் பூர்வமான பேச்சு  நமக்கு கொடுக்கிறது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது ரொம்ப நாள் முன்னால் படித்த ஒரு சைக்காலஜிகல் கதை நினைவுக்கு வந்தது.அது கீர்த்தன்யாவின் மைண்ட் ப்ரோக்ராமோடு நேரடி தொடர்புடையது.

ஒரு கோழிக்குஞ்சுகூட்டத்துக்குள் துரதிருஷ்டவசமாக ஒரு கழுகுக்குஞ்சு சிக்கிக்கொள்கிறது. கோழிக்குஞ்சு வளர வளர கழுகுக்குஞ்சும் வளர்கிறது.எல்லாமே வளர்ந்து பெரிதானதும் கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் வளரும் கழுகு தன்னை கோழியாகவே நினைத்து, கோழியின் மேனரிசத்தோடே வளர்கிறது.வளர்ந்த அந்த கோழிகளோடு இந்த கழுகு விளையாடுவதை தூரத்திலிருந்து ஒரு வேடன் பார்க்கிறான்.
அவனுக்கு ஆச்சரியம்.கழுகு கோழிக்குஞ்சை அடித்து சாப்பிடும் குணம் கொண்டது.”இது எப்படி இந்த கூட்டத்தில்? அதுவும் பறக்க முடியாமல் தடுமாறியவாறு” என்ற கேள்வி அவனுக்குள்.

 கார்மேகங்கள் சூழ்ந்து மழை வரும் அறிகுறி தோன்றும் வேளையில் எல்லா ஜீவராசிகளும் தங்களுடைய கூடுகளில் அடைபட்டுக்கொள்ளும்.ஆனால் கழுகு தான் அந்த மேகத்தையும் தாண்டி வானத்தில் பறக்கும்.அதன் கனவு அவ்வளவு பெரிது.

ஆனால் அந்த கழுகு கோழிக்கூட்டத்துக்கு மத்தியில். அந்த கழுகுக்கு அதன் பலத்தை உணர்த்துகிறான் வேடன்.அனுமானுக்கு ஜாம்பவான் உணர்த்தியதை போல.பின்அது வானில் சிறகடித்து பறக்கிறது. நாமும் கூட கோழிகளுக்கிடையில் வளர்ந்த கழுகுதான். கீர்த்தன்யா போல யாரோ ஒருவர் தெளிவான விளக்கத்தோடு தேவைப்படுகிறார்.அவ்வளவே!!

கீர்த்தன்யாவின் நிகழ்ச்சி பற்றிய அறிய mindfresh.in

1 comment:

Ela said...

நல்ல பதிவு, மக்களின் பலகீனங்களையும் பிரச்சனைகளையும் பணமாக்கும் பலருக்கு மத்தியில் நல்ல திறமை உள்ள ஒருவரை மக்களுக்கு தெரிவிக்கும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்