Monday, September 3, 2012

இனி நான் பத்திரிக்கையாளனாகவே போவதில்லை


இனி நான் பத்திரிக்கையாளனாகவே போவதில்லை

கல்லூரி மூன்றாவதாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது விகடன் மாணவர்பத்திரிக்கையாளர் திட்டத்தில் தோல்வியுற்றபோது இப்படி தான் நினைத்திருந்தேன்.சென்னையில் காக்னிசண்ட் மென்பொருள் நிறுவனத்தில் பிபிஓ பிரிவில் சேர்ந்த போது அதை மீண்டுமொருமுறை உறுதி செய்திருந்தேன்.

அப்போது காக்னிசண்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த புதிது.மாமா வீட்டில் தான் தங்கி இருந்தேன்.ஒரு ஞாயிற்றுக்கிழமை மெயில் செக் செய்துகொண்டிருந்தேன். “புதியதலைமுறை பத்திரிக்கையாளர் திட்டத்தில் முதல்கட்டத்தேர்வில் தேர்வாகியுள்ளீர்கள்.அடுத்தக்கட்ட எழுத்துத்தேர்வு திருச்சியில் நடக்கிறது.இது தொடர்பான கடிதம் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதை எடுத்து வந்து பங்கு பெறவும் என்பதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்மாவுக்கு உடனடியாக போன்செய்தேன்.

லெட்டர் எதாவது வந்துருக்கா
ஆமா,புதியதலைமுறையிலிருந்து வந்திருக்கு
எதுக்கு சொல்லலை
உனக்குதான் வேலை கிடைச்சிடுச்சே.அதான்.எப்புடியும் போகப்போறதில்லை
யார் சொன்னா
அப்ப போகப்போறியா
ஆமா
ஏற்கனவே வேலையில இருந்துகிட்டே இதுல எழுதறது எல்லாம் நடக்கற காரியமா. நாய் வாயை வெச்ச மாதிரி எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கறதே உனக்கு வேலையா போச்சி
யம்மா..அப்படி சொல்லாத உனக்கு தான் என்னைப்பத்தி எதுவும் தெரியல.காலேஜ் படிச்ச அப்பதான் எதுவும் கிடைக்கல. இப்பவாவது வாய்ப்பு கிடைச்சிருக்கு போகலாம்னு பாத்தா நீ மொக்க போட்டுகிட்டு இருக்க
அப்ப நீ திருச்சி வரப்போறியா
தெரியல.இன்னும் முடிவு பண்ணல
சரி எதுவா இருந்தாலும் யோசிச்சிக்கோபரஸ்பரம் இருவரும் போனை அணைத்தோம்.

நீண்ட யோசனைக்கு பிறகு புதியதலைமுறை அலுவலகத்திற்கு போன் செய்தேன்.சென்னையிலிருப்பவர்கள் சென்னையில் கலந்து கொள்ளலாம் நோ ப்ராப்ளம்என்ற பதில் எனக்கு சந்தோசத்தை கொடுத்திருந்தது.

எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் எப்படியோ தேர்வாகி இருந்தேன்.இந்த முறை இரண்டு நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடப்பதாக லெட்டர் வந்திருந்தது. வீட்டில் கடுமையான எதிர்ப்பு. பத்திரிக்கை வேலை சோறு போடாது.உருப்படாம போய்டுவ.இப்ப இருக்கற வேலையையும் கெடுத்துக்காத... உனக்கு என்ன எழுத வரும்.. எழுதறதுன்னா சும்மாவா...என பயங்கறமாக என்னை மோட்டிவேட் செய்தார்கள்.

காதலில் ஜெயிக்க விரும்புபவர்களும், மீடியாவில் ஜெயிக்க விரும்புபவர்களும் அம்மா அப்பாவை பகைத்தே ஆக வேண்டும் என்பது சமூக நியதி. இரண்டுமே வாழ்க்கை தொடர்பானது. என்பதை அப்போதுதான் உணர்ந்திருந்தேன். வெற்றி கரமாக அவர்களிடம் சண்டை போட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் சுமாராக தான் எழுதினேன். அப்புறம் நிறைய முயற்சி செய்தேன்.கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். குழந்தை நடை பயில்வதை போல. நான் நடை பழுகுவதை அவர்கள் பார்க்க பார்க்க அவர்களுக்குள்ளும் மெல்ல மெல்ல மாற்றம் நடந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

பத்திரிக்கையில் வாரம் வாரம் எதையாவது எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்திருந்தேன். காக்னிசண்டில் இரவு நேரப்பணி.பகலில் பத்திரிக்கை பணி.எல்லா நாட்களிலும் அல்ல. வாரம் இரண்டு நாட்கள் மட்டும்.

டேய் உடம்ப கெடுத்துக்காதடா. நல்லா நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு.பத்திரிக்கை எல்லாம் எதுக்குஎன்பதாக பாசம் பொங்கினார்கள்.

 என்னுடைய ஒரே நோக்கம் ஜெயிப்பதல்ல. அம்மா அப்பா பேச்சை கேட்கக்கூடாது என்பதாக மாறியிருந்த காலம் அது. அதே நேரம் வேறு வகையான நெருக்கடி பிறந்திருந்தது.காக்னிசண்டில் என் டீமில் நெருக்கடியான காலக்கட்டம் அது. வேலை எங்காவது தேங்கினால் எல்லா கேமராவையும் என் மேல் ஃபோகஸ் செய்வார்கள்.

“உன்னோட எய்ம் என்ன?என் சீனியர் ஒருவர் பாசமாக என் தோளில் கைக்கொண்டே இவ்வாறு கேட்டார்.

“சமஸ் மாதிரி ஒரு பெரிய பத்திரிக்கையாளரா ஆகணும்என்றேன்.

அப்ப என்ன பண்ணனும். எதாவது ஒண்ணுல கான்சண்ட்ரேட் பண்ணனும்.இதுல பாதி அதுல பாதின்னு இருக்க கூடாது

இத்தனைக்கும் காக்னிசண்டில் நான் ஒழுங்கா வேலை பார்க்காமலெல்லாம் இல்லை. இரண்டு முறை சிறந்த பணியாளர் விருது வாங்கி இருந்தேன்.(Wah award). அதுமட்டுமல்லாமல் ஒரு வருடம் முழுவதும் லீவே எடுக்காததுக்கு ஒரு விருது வழங்கி இருந்தார்கள்.

அங்கே வேறு யாருக்கும் இது போல வேறு உருப்ப்படியான வேலை கிடையாது.அதனால் வேலை எங்காவது தேங்கினால் நம்மை அட்டாக் பண்ணுவார்கள்.

எப்படியோ எல்லோரையும் சமாளிக்க பழகி இருந்தேன். சமீபமாக அதீத பணியின் காரணமாக பத்திரிக்கையில் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி இருந்தேன்.

“என்னடா பத்திரிக்கையில உன்னோடது எதையுமே காணோம்என் அப்பா விசாரிக்கிறார்.

ஆபீஸ் பிளாக்கில் எழுதுவதை பார்த்துவிட்டு “பையனை சாதாரணமா நினைக்காதீங்க..பத்திரிக்கையிலலாம் எழுதறான்என்றார் அலுவலகத்தில் அன்று அட்வைஸ் செய்த அந்த அண்ணன்.

புதியதலைமுறை பத்திரிக்கையில் சேர்ந்த பிறகு வாழ்க்கை பற்றிய என் பார்வை மாறி இருக்கிறது உண்மை. பத்திரிக்கை பற்றிய பார்வையும் மாறி இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.சொல்லப்போனால் முழு நேர பத்திரிக்கையாளருக்கு கிடைத்த அதே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது.

கல்லூரியில் விஸ்காம் அல்லது ஜெர்னலிஸம் பாடம் எடுக்க வேண்டும் என்பது என் பள்ளி ஆசை.அந்த வருத்தத்தையெல்லாம் புதியதலைமுறை நிறைவு செய்தது.

நேற்று மாலை ஆசிரியர் திரு மாலன் அவர்களின் கையால் “2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பயிற்சி பத்திரிக்கையாளர்என்ற அங்கீகாரத்தை வாங்கிய அந்த கணம் மறக்க முடியாததாக ஆனதற்கு காரணம்.
நான் இது வரை எந்த பத்திரிக்கையிலும் கதை கட்டுரை ஏன் வாசகர் கடிதம் கூட எழுதியிருந்ததில்லை. பத்திரிக்கையில் சேரும் வரை எப்படி எழுதவேண்டும் என சுத்தமாக தெரியாது.

சிறந்த பயிற்சிபத்திரிக்கையாளர் விருது வாங்கிய போது எனக்கு காந்தியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

ஆரம்பத்தில் யாருமே கண்டுக்கொள்ளமாட்டார்கள்..
அப்புறம் எல்லோரும் பார்த்து சிரிப்பார்கள்..
பிறகு எல்லோரும் சண்டைக்கு வருவார்கள்.,
கடைசியில் நீங்கள் ஜெயித்திருப்பீர்கள்..

இப்பொழுது வரை என்மேல் பெரிய நம்பிக்கை வைத்திராத என் அம்மா அப்பாவிற்கு இதை சமர்ப்பிக்கிறேன்.


1 comment:

ezhil said...

வெற்றியை தேடி அழைந்த போது வீண்முயற்சி என்றவர்கள் வெற்றி கிடைத்தபோது விடாமுயற்சி என்பார்கள் .இதுதான் உலகம். முக நூலில் படித்தது .உங்கள் பதிவு குறித்த என் கருத்தும் இதுதான்