Monday, June 11, 2012

இந்தியனா பொறந்தது தப்போ


இந்தியனா பொறந்தது தப்போகாலை ஒரு ஏழு மணிக்கு பல்துலக்கிக்கொண்டிருந்தேன். காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்த அந்த நேரத்திலும் என் கண்ணெதிரே அந்த கடுப்பு தெரிந்தது. வழக்கம் போல ரோடுலைட் எரிந்துகொண்டிருந்தது. இது பத்தாவது முறை. ஏற்கனவே பலமுறை பக்கத்திலிருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு பேசி இருக்கிறேன்.

இந்த ரோடுலைட் பிரச்சினை எல்லா ஊரிலும் எல்லா காலக்கட்டத்திலும் நடக்கிற ஒன்று தான்.இதில் என்ன புதுசா நீங்க கண்டுபிடிச்சீங்க என்று கேட்கலாம்.

காலை ஆறு மணி ஆனாதும் ரோடுலைட் தானாகவே அணைவது போல ஒரு சின்ன கண்டுபிடிப்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். நம் கடிகாரத்தில் இருக்கும் அலாரம் செயல்படும் அந்த தொழில்னுட்பத்தை பட்டி டிங்கரிங் செய்தாலே போதும் பிரச்சினை சால்வ்ட். நானே ஒரு இரண்டு நாள் தம் கட்டி உட்கார்ந்தால் இதற்கான கண்டுபிடிப்பை கண்டுபிடித்து விடுவேன்.ஒருவேளை ஏற்கனவே யாராவது கண்டுபிடித்திருந்திருக்கலாம்.

கண்டுபிடிப்பது ஒரு பிரச்சினையே அல்ல.அதற்கு பேட்டண்டும் வாங்கி வைத்துவிடுவேன். அதை இலவசமாக அரசிடம் ஒப்படைக்கவும் தயார். அரசு வாங்கிக்கொள்ள வேண்டுமே!! அரசு வாங்கிக்கொள்ளாததற்கு ஆயிரம் காரணங்கள். இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு யோசிக்கும். ரோடுலைட்டை போடுவதும், அணைப்பதும் மட்டுமே வேலையாக இருக்கும் ஒரு பணியாளனின் வேலை பாதிக்கப்படும்.இந்த கண்டுபிடிப்பை காரணம் காட்டி அவனை பணி நீக்கம் செய்தால் அவன் வீதியில் இறங்கி போராடுவான். இது மீடியாவில் பெரிதாக்கப்படும். கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாலே போதும் பிரச்சினை கொளோஸ். இதை தான் அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

நம்மூரில் புதிதாக எதையாவது கண்டுபிடித்துவிடுவது ரொம்ப ஈசி. கண்டுபிடிப்புகளுக்கான தேவையும், கண்டுபிடிப்பாளர்களும் அதிகமாக இருக்கிற ஒரே தேசம் இந்தியா தான். இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தினந்தோறும் பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுகின்ற கண்டுபிடிப்புகளே இதற்கு சாட்சி. ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் என்ன ஆகின்றன. இதை யாராவது யோசித்திருப்போமா?
சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் நவீன் என்ற மாணவன் பற்றி புதியதலைமுறை பத்திரிக்கையில் எழுதி இருந்தேன்.அவர் கண்டுபிடித்த கருவி மீனவர்கள் கடல் எல்லை தாண்டினால் படகில் இருக்கும் என்ஜினை அணைத்து மேற்கொண்டு படகை நகரவிடாமல் தடுக்கும். அருமையான கண்டுபிடிப்பு. இந்திய கடற்பாதுகாப்பு படையின் பெரிய அதிகாரிகள் அவரை பாராட்டி விழா எடுத்து கொண்டாடி இரண்டு நாள் முழுவதும் கைகுலுக்கி வழியனுப்பியதோடு கடமையை முடித்துக்கொண்டனர்.

இந்தியாவின் ஒரே அணுவிஞ்ஞானியான அப்துல் கலாம்கூட அவரை கூப்பிட்டு பாராட்டி காபி கொடுத்து வழியனுப்பி வைத்தார். அதோடு அந்த கண்டுபிடிப்பின் சேப்டர் கொளோஸ். நெல்சன் நவீன் சென்னைகாரர்.

சரி கிராமத்து மாணவர் கதையை பார்ப்போம்.சமீபத்தில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள லெ.விலக்கில் கிராமத்து மாணவர் ஒருவர் காது கேட்காதவர்கள் செல்போனில் பேசுவதற்கு உதவும் கருவி ஒன்றை கண்டுபிடித்திருந்தார்.

“தம்பி பேடன்ட் வாங்கிட்டீங்களா” என்றேன் அவரிடம்.. “அப்டீன்னா” என்றார்.
”உங்கள் ஆசிரியரிடம் அது பற்றி கேளுங்கள்” என்று கூறி சில வழிகாட்டுதல்களை சொன்னேன்.

நம்மூர் கண்டுபிடிப்பாளர்களின் உண்மை நிலை இது தான்.அவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற வழிகட்டல்களோ உதவியோ வரவேண்டிய இடத்திலிருந்து வருவதே இல்லை.

கண்டுபிடிப்புகள் ஒரு தேசத்தை அலங்கரிக்கவேண்டியவை, மாறாக கண்டுபிடிப்பாளன் வீட்டு பரணை அலங்கரிக்கின்றன. இரவு பகலாக கண்டுபிடித்து ஒன்றுக்கும் பயன்படாத வகையில் அந்த கண்டுபிடிப்பை குப்பை சூழ பரணில் பார்க்கிற அந்த வலி, வேறு எந்த நாட்டு கண்டுபிடிப்பாளனுக்கும் வந்திருக்காது.

ஆனால் நம்மூரில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. யாராவது கண்டுபிடிப்பு தொடர்பான ஆர்வம் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று நிறைய பணம் பண்ணும் போது, வயித்தொரிச்சல் வந்து “ நீ என் வரிப்பணத்தில் படித்து, வெளி நாட்டை முன்னேற்றுகிறாயே.. தாய் நாட்டின் மீது உனக்கு பற்றே இல்லையா. நீ தேச துரோகி’ என கண்டுபிடிப்பாளரை நம் வீட்டுக்கு கூட்டிவந்து காதிலிருந்து ரத்தம் வரும்வரை பிளேடு போடுவோம்.இதுவும் நடக்கும்.

நம் அரசாங்கம் கண்டுபிடிப்புகளுக்கென்று ஆண்டு தோறும் சில கோடிகளை வழங்குவதாக பட்ஜெட் தகவல்கள் சொல்கிறது.ஆனால் அது எங்கே போகிறது. இது போல யோசித்துகொண்டே இருக்கும் போது எதேச்சையாக ஒரு கேள்வி உதித்தது

”இந்தியனா பொறந்தது தப்போ”