Friday, May 18, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 4


போலி அசலையும் விஞ்சிவிடும்” – வைரமுத்து.

ஃபேஸ்புக்கில் உலா வருபவர்களில் யார் போலி,யார் உண்மை என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.

சொந்த பெயரில் உலா வராதவர்கள் போலிகள் என்றொரு பொது அபிப்ராயம் உள்ளது. அது தவறு. பெயரை வைத்து போலி என அடையாளம் காண்பது எளிது என்பதால் இந்த நம்பிக்கை.

ஒரு போலியை உதாரணமாக எடுத்துகொள்வோம்.. என் நண்பன்.. பெயர் மட்டும் தான் உண்மை. பிறந்த நாளை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டாம். சொந்த ஊர் சென்னையாம்.(அவன் சொந்த ஊர் பக்கா கிராமம்). படித்தது எஸ்.எஸ்.என் கல்லூரியாம். போட்டோ போலி. ஏண்டா இப்படின்னு கேட்டா.. “நாம நிறையா பேருக்கு(பொண்ணுங்களுக்கு) தினமும் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் குடுக்கறோம். அவங்க நம்ம ஃப்ரொஃபைலை பார்த்தா கேவலமா இருக்க கூடாது பாருஎன்கிறான்.

போலிகள் மூன்று விதமாக உருவாகிறார்கள்.

தங்கள் சொந்த தகவல் கொடுத்தால் மற்றவர்களால் எதாவது பிரச்சினை வந்து விடலாம், தொல்லை கொடுக்கக்கூடும். தங்கள் கருத்து சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாக எண்ணுபவர்கள் இந்த வரிசையில் வருவார்கள்.(பெண்கள் இந்த வரிசையில் அதிகமாக வருகிறார்கள்). பாதுகாப்பு காரணமாக போலியானவர்கள் தான் அதிகம்.

இரண்டாவது வகையினர் ரெகக்னைசன் எனப்படும் பாராட்டுதலுக்காக அரிதாரம் பூசுபவர்கள்.  நடிகர் நடிகை போட்டோவை வைத்துக்கொண்டு “ கருப்பு எம்.ஜி.ஆர்” என்பது போன்ற வித்தியாசமான பெயரை வைத்துக்கொண்டால் அதிக லைக் கமெண்ட் வாங்கி இணையத்தில் பாப்புலராக உலாவலாம் என்ற பொது அபிப்ராயம் இத்தகையவர்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

மூன்றாவது ஆசாமிகள் ஜகஜ்ஜால கில்லாடிகள். நம்மை கில்மாவான போட்டோவில் டேக் செய்வது தொடங்கி, பெண்கள் லாகின் செய்ததுமே ”ஹாய் ஸ்வீட்டி” என திரையில் தோன்றுவது,பெண் வேடமிட்டு நம்மை வசியப்படுத்தி நம்பர் வாங்கி ஜில்பான்ஸேவாக பேசி பணம் கரந்துவிடுவது வரை பக்கா அயோக்கியத்தனங்களின் கூடாரம், சாட்சாத் இவர்களே.

முதலாவது வகையினர் நமக்கு எந்த தொந்திரவும் செய்யப்போவதில்லை என நம்புவோம். 

இரண்டாவது வகையினர் ரொம்ப காலம் மார்கெட்டில் இருக்க முடியாது. ரஜினி போலவே மெமிக்ரி செய்பவரை யாரும் எந்திரன் படத்திற்கு நடிக்க கூப்பிடமாட்டார்கள்.


மூன்றாவது ஆசாமிகளை நாம் அடையாளம் காண்பதே கடினம். தெரியாத்தனமாக இவர்களை நம் நண்பர்களாக இணைத்துக்கொண்ட பின்னரே இவர்களின் பசுந்தோல் விலகும். இந்த ரிஸ்க்கை விரும்பாதவர்கள் இவர்களை வாசலிலேயே விசாரித்து வழியனுப்புவது நல்லது. 

தவறி வீட்டுக்குள் அனுமதிக்கிறவர்கள் தகுந்த இழப்பீடுகளை சந்திக்க நேரிடும். ஃப்ரிரெண்ட் ரெக்வஸ்ட் வரும்போதே சம்பத்தபட்ட நபரின் முகப்பை சிப்பி.பிப்பி.ஐ கண் கொண்டு அலசுங்கள்.
என்னைப் பொறுத்தவரை நம் முழு தகவலையும் பதியும் முன் நம் தைரியத்தை சிடி ஸ்கேனில் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை போலிகளால் நமக்கு ஆபத்து வரும் போது அதை தாங்கும் மன தைரியம் இருந்தால் தைரியமாக நம் போன் நம்பர் என்ன.. வீட்டு அட்ரஸே கொடுக்கலாம்.
ஆனால் போலிகளுக்கு தான் இங்கே முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

“எல்லா மேனேஜரும் நல்லவர்களல்ல” என நான் ஸ்டேட்டஸ் போடுகிறேன் என வைத்துக்கொள்வோம். “அப்ப உங்க மேனேஜர் அயோக்கியனா பாஸ்” என்பதாக எவனாவது கமெண்ட்டிவிட்டு அதை என் மேனேஜர் பார்த்தால் வாழ் நாளுக்கும் எனக்கு ப்ரொமோசனே கிடைக்காது. அப்ரைசல் மனசாட்சியே இல்லாமல் 300 ரூபாய் போடப்படும்.

இது போன்ற தலைவலிகள் போலிகளுக்கு இல்லை. போலிகளால் மற்றவர்களுக்குத்தான் தொல்லையே தவிர அவர்களுக்கல்ல. அவர்கள் யாரையாவது பூடகமாக தாக்கி எழுதினால் ”யாரை மச்சி சொல்லற” என யாரும் போன் போட்டு கேட்கமாட்டார்கள். “என்ன பாஸ் நீங்க போய் இது மாதிரி எழுதிருக்கீங்க” என எவனும் விசாரிக்க மாட்டான்.

அவர்கள் பாட்டுக்கு பத்தவைத்துவிட்டு பதுசாக போய்க்கொண்டே இருப்பார்கள். மூன்றாம் உலகப்போரே நடந்தாலும் மூக்கை பிடிக்க சாப்பிட்டுவிட்டு ஸப்பாடா என இருப்பார்கள்.
போலிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அவர்களின் பதில்  ”உங்களை பாதுகாத்துகொள்ள அஸ்திரமும் கேடயமும் கொடுக்கபட்டிருக்கும்போது அதை கையாள தகுந்த பயிற்சியோடு உலாவ வேண்டியது உங்கள் கடமை.

காரணம்..

ஃபேஸ்புக்கில் உண்மையான தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.
(அடுத்த பதிவில் அல்டாப்பு ஆறுமுகங்கள்)
(முகத்திரை விலகும்)

No comments: