Wednesday, May 16, 2012

ஏன் பிறந்தாய் மகனே!!


மே 16, இன்று.. என் பிறந்த நாள். நிறைய நண்பர்களின் வாழ்த்து. என்னுடைய ஃபேஸ்புக் முகப்பு நிரம்பி வழிகிறது. குறிப்பாக இத்தனை வாழ்த்துக்களை சென்னவர்களில் பலரை எனக்கு  தெரியவே தெரியாது.. 

எல்லாம் டெக்னாலஜி சங்கதிகள்.ஆனாலும் இது பிடித்திருக்கிறது. 

ஒவ்வொருவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் ஒவ்வொரு வகை. 

பள்ளி பருவத்தில் புத்தாடை அணிந்து கேக் வெட்டி கொண்டாடுதல், கல்லூரி வயதில் நண்பர்களோடு படத்திற்கு செல்லுதல் (இப்பலாம் இஸ்கோலு பசங்களே போகிறார்கள்), காதலர்கள் வெளியே எங்காவது தனியே இருக்க விரும்பி பீச்,பார்க், சினிமா  என உலா வருவார்கள். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பு பரிமாறுவார்கள்..அதே பீச், பார்க், சினிமா வகையறா.. சிலர் கோர்ட் வாசலில்.

ஆனால் அம்மா,அப்பாவான பிறகு அவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதே இல்லை. தங்கள் பிள்ளைகளை கொண்டாட வேடிக்கைப்பார்ப்பதில் தனிச்சுகம் காண்பார்கள். சமீபகால நடைமுறைகள் இதை மாற்றி இருக்கிறது.

கடந்த கால நிகழ்வுகள் என் மனதில் சிரிப்பாய் சிரிக்கின்றது. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே பிறந்த நாள்கள் மிக முக்கியமானவை. நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதை விட மற்றவர்களின் பிறந்த நாளை கொண்டாடியது தான் அதிகம்.

என் பிறந்த நாள் மே மாத இடைப்பட்ட நாள். பள்ளி கல்லூரிகள் விடுமுறையாக இருக்கும். எனக்கு சின்ன வயதிலிருந்தே அந்த ஏக்கம் இருக்கும். என் சக வகுப்பு தோழர்கள் எல்லாரும் அவர்களின் பிறந்த நாள் அன்று மட்டும் பள்ளி சீருடையை தவிர்த்து புதிய உடை அணிந்து கேக் கட் செய்து, சாக்லேட் வழங்கி… ஆனால் இன்று வரை நான் அப்படி கொண்டாட முடிந்ததில்லை. இனியும் கொண்டாட முடியாது.
பள்ளி நாட்களில் கொண்டாடிய பிறந்த நாள்கள் சிம்பிளானவை. நானும் நான்கு நண்பர்களும் சேர்ந்து கொண்டாடுவோம். மிட்டாய் செலவுகள்,பத்து ரூபாய்க்குள் முடிந்துவிடும். 

காலப்போக்கில் படிப்புக்காக வெளியூர் விடுதிகளில் தங்கிய பிறகு நண்பர்கள் யாரும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அதே பத்துரூபாய்க்குள்ளான சாக்லேட்டுகள் படியளக்கப்படும். இந்த விசயத்தில் விலைவாசி உயர்வு என்னை பாதித்ததே இல்லை.யாருன்னாலும் பத்து ரூவாய் தான்.

அப்போதெல்லாம் தகவல் தொடர்புகள் இந்த அளவு இல்லை. அது மட்டுமல்லாமல் நான் என்ன அரசியல் கட்சித்தலைவரா.. ஊர் முழுக்க என் சொந்த செலவில் போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்த. “எனக்கு இன்று பிறந்த நாள்” என்று குரூப் லிஸ்டில் எல்லோருக்கும் மெஸ்ஸேஜ் அனுப்பினால்…அல்லது ஒவ்வொரு நண்பருக்கும் போன் செய்து “எனக்கு பிறந்த நாள், எனக்கு பிறந்த நாள்” என்று கேட்டாலோ ( நினைக்கவே படுகாமெடியாக இருக்கும்).

பள்ளி, கல்லூரி காலங்கள் இப்படி இருக்க, பணி இடங்களில் சம்பிரதாயமாக கேக் வெட்டி எல்லோரும் ஹேப்பி பர்த்டே பாடி பத்து நிமிடத்தில் கொண்டாடி பிழைப்பை பார்க்க சென்று விடுவோம்.

 நம்ம பிறந்த நாளுக்கு எவனாவது வாழ்த்து சொல்ல மாட்டானா என ஏங்கிய காலத்தில் google,way2sms,indyarocks.com போன்ற தளங்களில் இருந்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” குறுந்தகவல் வந்து பயங்கர சந்தோசம் கொடுக்கும்.(நம்ம மேல இவனுங்களுக்கு எவ்வளவு பாசம் என்பதாக எனக்கு புல்லரிக்கும்).

ஆனால் டெக்னாலஜிகள் வளர்ந்த பிறகு ஃபேஸ்புக்கே இன்று யார் யாருக்கு பிறந்த நாள் என காட்டிவிடுவதால் எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்வது எளிதாகிவிட்டது. சில நண்பர்கள் எனக்கு போனெல்லாம் செய்து பாச மழை பொழிந்து திக்குமுக்காட செய்துவிட்டார்கள்.

தீபாவளி,பொங்கல் என நாம் கொண்டாடும் எல்லா நாட்களுமே நமக்கானவை அல்ல. அவை எல்லாருக்கும் பொதுவானவை. ஆனால் பிறந்த நாள் நமக்கே நமக்கானவை.
எல்லோரும் வருட துவக்கத்தில் புதிதாக சபதம் எடுப்பார்கள், கடந்த ஆண்டு என்ன சாதித்தோம் என அசை போடுவார்கள்.  நம் பிறந்த நாள்கள் தான் என்னை பொருத்தவரை புத்தாண்டுகள். இத்தனை வருடம் என்ன கிழித்தோம் என்பதை இன்றாவது யோசித்தாக வேண்டும்.

நான் யோசித்தேன் பட் எதுவும் தெரியல..

(என்னையும் மதித்து வாழ்த்து தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்)

No comments: