Sunday, July 17, 2011

நான் அமெரிக்க ஜனாதிபதி ஆக போகிறேன்..

சென்ற வாரம் செய்தி சேகரித்து வீடு வரும் வழியில் வித்தியாசமான அனுபவம் நேர்ந்தது.

நான் சென்னைக்கி வேலை தேடி வந்த போதே எங்க அப்பா சொன்னார்..நம்ம ஊர் மாறி இல்லடா சென்னை.."ஒரு நாயும் உன்ன கவனிக்காது.நீ என்ன பண்ணாலும் கேக்க நாதி இருக்காது.உனக்கொரு பிரச்சனனா ஒரு பய வர மாட்டானுங்க" என்றெல்லாம் சென்னை பற்றிய அருமை பெருமைகளை அள்ளி வீசினார்.

அவர் பேச்சை கேக்காதது என் தவறு தான்.நான் செய்தி சேகரித்து விட்டு வீடு வர கிட்ட தட்ட பதினோரு மணி இருக்கும்.நான் லோக்கல் சேனல்ல வேலை பார்த்த அப்பலாம் கூட மிக சாதரணமாக ராத்திரி பனிரெண்டு மணிக்கு பஸ் பிடித்து வீடு வந்திருக்கிறேன்.

சென்னைல பஸ் கிடையாதாம்.அதனால் ஆட்டோ பிடித்து வந்தேன்.ஆட்டோவும் உங்க தெரு வரைக்கும்லாம் போக மாட்டோம் இங்கயே இறங்கிக்கோங்கனு பாதி வழில இறக்கி விட்டுட்டான்.

"ஒரு நாள் நடுத்தெருவுல நிப்ப அன்னிக்கி உனக்கு தெரியும் இந்த அப்பாவோட அருமை பெருமை எல்லாம்.அன்னிக்கே அப்பா பேச்ச கேட்டுருந்தா இந்த மாதிரிலாம் நடந்துருக்காதுல்ல" என்று எப்பொழுதோ என் அப்பா என்னை திட்டியது நினைவுக்கு வந்து வெறுப்பேற்றியது.

ஆட்டோ காரனை திட்டியவாரே நடைய கட்டினேன்.வேற வழி!! நான் வரும் வழியில் தான் போலீசின் செக் போஸ்ட் இருக்கிறது.ஆகா போலீஸ்! மாட்னோமா?

சந்தேக கேஸ்ல புடிச்சிட்டு போய் உள்ள உக்கார வச்சி ஜட்டியோட கும்மி புடுவாங்களோ!! என்கிற பயம் அடி வயிற்றில் ஏற்பட்டாலும்."பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?" என்று மனதுக்குள் கூறியவாறே.போலீசிடம் என்ன சொல்லலாம் என்று எண்ணியவாறே போலீசை நெருங்கினேன்.

"சார் நான் ரிப்போர்ட்டர்.சென்னைல ராத்திரி நேரத்துல என்னலாம் நடக்குதுங்கறது பத்தி ஒரு கட்டுரை எழுதலாம்னு பிளான் அதான்!!" என்று சொல்லலாமா?

அல்லது உண்மையை சொல்லி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகி விடலாமா என்றெல்லாம் யோசித்தேன்.

நல்ல வேலை போலீஸ் என்னை கண்டுக்கவே இல்லை.நானும் அவங்கள பாக்காத மாதிரியே நடித்து அப்பீட் ஆனேன்.

"இனி இப்படி எதுவும் நடக்காம பாத்துக்கணும்.இல்லனா கொலை கேஸ் ஆகிருக்குமா இல்லையா? ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கற" என்று  என் மனம் என்னை கேள்வி கேட்டது..

"இப்படிலாம் இல்லனா நாளைக்கி எப்படி துப்பறியும் தொடர்கள் லாம் எழுதரதாம்?பத்திரிக்கையாளன்னா பயமே இருக்க கூடாது.அதுவும் தன்னம்பிக்கை பத்திரிக்கையாளர் ஆகரதுன்னா சும்மாவா? நாங்களும் கோ படம் ஜீவா மாறி ஆவோம்ல!" என்று மனதுக்கு பதில் கூறியவாறே வந்தேன்.
தூரத்தில் இருந்து ஒரு நாய் என்னை நோக்கியே குரைத்த வாறு ஓடி வந்தது.நாங்க போலீஸ்க்கே டிமிக்கி குடுத்தவைங்க. யாரு கிட்ட? ஓடலாமா என்று ஒரு கணம் எண்ணினேன்.

"நாய பாத்து நாம ஓடற வரைக்கும் தான் அது நம்மள துரத்தும்.அதே நாய திரும்பி ஒரு பார்வை பாத்த..அந்த நாய்க்கு பயம் வந்து ஓடும்" என ரன் படத்துல ரகுவரன் பேசிய வசனம் நினைவுக்கு வந்தது.
திரும்பி ஒரு பார்வை பார்த்தேன்..... பாக்கணுமே!
பாவிங்களா..எங்க இருந்தோ வந்த இரண்டு நாய்கள் இந்த நாயோடு சேர்ந்து கொண்டு என்னை பார்த்து திரும்பவும் குரைக்க ஆரம்பித்தது.    
என்னுடைய எல்லா அஸ்திரங்களும் வீணாயின.கடைசி அஸ்திரமாக என் செல் போனை எடுத்தேன். காதில் வைத்தேன்.

"சொல்லு மாப்ள! ஏண்டா காலேஜ் போய்ட்டன்னா  போனே பண்ண மாட்டாயா? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ? இரு உன் ஆள நான் கரெக்ட் பண்ணிடறேன்.அப்பவாவது உனக்கு புத்தி வருதா பாப்போம்."
"இல்லடா மெசேஜ் கார்டு போடல டா...அதான்."

என்று கைவசம் இருந்த அத்தனை வசனங்களையும் போனில் பேசியவாறு அந்த நாய்களை கண்டு கொள்ளாதது போலவே மிக சாதாரணமாக நடந்தேன்.நாய்களும் நம்பி விட்டன.

என்னுடைய நடிப்பு திறமையை  முழுவதுமாக அன்று தான் உணர்ந்தேன்.
"தமிழ் திரையுலகில் சிவாஜிக்கான இடம் காலியாகவே இருக்கிறது" என்று எப்பொழுதோ யாரோ சொன்னதாக நினைவு.

அந்த இடத்தை நான் நிரப்ப போகிறேன்.இன்னும் பத்து வருடங்கள் நடித்துவிட்டு அதற்குள் ரசிகர் மன்றத்தை டெவலப் பண்ணனும்.அப்ப தான் அடுத்த இருபது வருடத்துக்குள் ஆச்சிய பிடிக்க முடியும். ச்சி.. ஆட்சியை பிடிக்க முடியும்.

நான் அமெரிக்க அதிபர் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஒரு கருப்பன் அமெரிக்க அதிபர் ஆகும் போது நிச்சயமாக ஒரு தமிழன் ஆக முடியும்.

2 comments:

Anonymous said...

அமெரிக்க அதிபர்! ஒங்கள மாரி இளைஞர் நாட்டுக்கு தேவ! நல்ல வருவீங்க தம்பி! போற வழில மாமி மெஸ் ல 4 இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி சில்றைய குடுத்துட்டு போப்பா!!

♔ம.தி.சுதா♔ said...

வந்தவுடன் எனக்க பச்சைஅட்டை தருவிங்களா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்