Tuesday, January 14, 2014

இணைய மார்கெட்டிங்க் என்பது யாதெனில்

இன்னைக்கு வெப்சைட் வைத்திருப்பது ரொம்ப ஃபேஷனாயிடுச்சி.ஆளாளுக்கு விசிட்டிங்க் கார்டில் போட்டுக்கொள்கிறார்கள்.”இண்டர்னெட் போனீங்கன்னா நம்ம வெப்சைட்ட பாருங்க. செம்மயா இருக்கும்” என்பார்கள்.

இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு வெப்டிசைனிங்க் கம்பெனி வைத்திருக்கிறார்கள். யாரை கேட்டாலும் “வெப் டிசைனிங்க் பண்ணி தர்றோம்..” என்கிறார்கள்.குடிசைத்தொழில் போல ஆகிவிட்டது.இது ஒரு பக்கமென்றால் ஏற்கனவே தங்கள் அலுவலகத்துக்கு வெப்சைட் வாங்கி,பெருமைக்காக விசிட்டிங்க் கார்டில் மட்டும் போட்டுக்கொண்டு “எங்குளுக்கும் வெப்சைட் இருக்குல்ல” என காலர் தூக்கிவிட்டு சுத்திக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் வெப்சைட்டை யார் பார்க்கிறார்கள் என விசாரித்து பார்த்தால், அவர்கள் மட்டுமே பார்ப்பதாக தான் தகவல்.அதுவும் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ.. அப்பப்ப யாராவது நண்பர்கள் பார்க்கலாம்.யாருமே பாக்காத வெப்சைட்டை யாருக்காக துவங்கி வைத்திருக்கிறார்கள்?

வெப்சைட் துவங்குவதோடு வேலை முடிந்துவிட்டதாக நம்மில் பலர் நினைத்துக்கொள்கிறோம். வெப்சைட் என்பது வெறுமனே வெப்சைட் மட்டுமல்ல. அது ஒரு பிசினஸ். நம்ம பிசினஸ் நமக்கு மட்டுமே தெரிந்திருந்தால் போதுமா? நாம் ஒரு ஹோட்டல் பிசினஸ் செய்வதாக வைத்துக்கொள்வோம். நம்ம கடை நமக்கு மட்டுமே தெரிந்து நாம மட்டுமே நாலு வேளை மூக்கை பிடிக்க சாப்பிட்டால் போதுமா? இல்லை நம்ம நண்பர்கள்.. சொந்த காரங்க மட்டும் சாப்பிட்டால் போதுமா? நமக்கு தெரியாத யார் யாரோ வந்து நம் கடையில் சாப்பிட்டால் தான் நமக்கு போணி ஆகும், பணம் வரும், கல்லா கட்டலாம். நிறைய பேர் வரும்போது பிசினஸும் டெவலப் ஆகும். வெப்சைட்டும் அதே போல தான்.  நமக்கு தெரியாத யாரோ பார்க்க வேண்டும்.

நமக்கு சம்பந்தமே இல்லாத, நம் பிசினஸ் தேவைப்படும் ஒருவருக்கு தெரிந்தால் தான் நமக்கு அதனால் லாபம்.
இல்லையென்றால் எதற்காக சில ஆயிரம் செலவு செய்து ஒரு வெப்சைட் துவங்கணும்.வேஸ்ட் இல்லையா? ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கும் போனையே அடித்து துவைத்து சுக்கல் சுக்கலாகும் வரை பயன்படுத்துகிறோமே.. அந்த போனை வைத்து மெசேஜ் அனுப்பறோம், பாட்டு கேக்கறோம்,பொழுதுக்கும் யாருக்கோ போன் பேசறோம்,என்னவெல்லாம் முடியுமோ எல்லாம் செய்து பாடாய் படுத்தறோம். நம் வெப்சைட்டை மட்டும் எதுக்கு வெட்டியா வச்சிருக்கணும்?

இனி நம் வெப்சைட்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்யப்போகிறோம்.அடித்து துவைத்து கசக்கி பிழிந்து எடுக்க போகிறோம்.சரி இதெல்லாம் வெப்சைட் வைத்திருக்கிறவர்களுக்கு.. இல்லாத நாங்க என்ன பண்றது? என குரூப் கேட்பது என் காதில் விழுகிறது. வெப்சைட் இல்லாதவர்கள் அவங்கவங்க ஆபீஸ்க்கு வெப்சைட் துவங்குங்கள்.
இணையதளம் மற்றும் இணைய மார்கெட்டிங்க் பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த கட்டுரை. காரணம்.மார்கெட்டில் சகட்டுமேனிக்கு வெப்சைட் துவங்கித்தருபவர்கள் இருக்கும் இந்த நேரத்தில், இணையதளம் துவங்கித்தருபவர்களிடம் நாம் எதிர்பார்க்க வேண்டியது என்னென்ன. வெப்சைட் வாங்கிவைத்துக்கொள்வதால் மட்டும் வேலை முடிந்துவிட்டதா? அதை அடுத்தவரிடம் கொண்டு செல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டும் என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறைந்த பட்ச அக்கறை. அவ்வளவே!

 நீங்கள் இன்வெர்ட்டர் விற்கும் கடை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கடையை பற்றி யார் யாருக்கெல்லாம் தெரியும்? உங்கள் தெருவில் இருப்பவர்,பக்கத்து தெருவில் இருப்பவர்,அதிகபட்சம் உங்கள் ஊரில் இருப்பவர்.பத்து ஊர் தாண்டி இருக்கும் ஒருவர் இன்வர்டர் வாங்க வேண்டி கடையை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் ஊரில் ஆளே இல்லையென வைத்துக்கொள்வோம்.அவருக்கு உங்களை தெரிய வேண்டுமென்றால் நீங்கள் இணையத்தில் இருந்தாகவேண்டியது அவசியம்.

உலகம் சுருங்கிவிட்டது.எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது.ஜட்டியிலிருந்து ஜமுக்காளம் வரை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் இதே ஜட்டியும் ஜமுக்காளமும் நம்ம தெருவோரத்திலிருக்கும் கடையிலேயே கிடைத்துவிடுகிறது.ஆனால் எங்கிருந்தோ கொண்டு வந்து கொடுப்பவன் நம்ம தெருகாரனை விட 10 ரூபாய் கம்மியாக கொடுக்கிறான். கொடுக்க முடிகிறது என்றால் அதற்கும் ஒரே காரணம் இணையம்.
யோசித்துப்பார்த்தால்..இன்னும் பத்து ஆண்டுகளில் நம் தெருவில் கடையே இருக்கப்போவதில்லை..அப்போது நாம் மட்டும் கடை வைத்திருந்தால் போனியாகுமா.. நாமும் அட்வான்ஸ்டாக யோசித்தாக வேண்டியிருக்கிறது.யோசிச்சிகிட்டே இருங்க. அடுத்த வாரம் பாப்போம்!

இணைய மார்கெட்டிங்க் -2

நன்றி - அரக்கோணம் டைம்ஸ் (ஜனவரி 12 2014)