Sunday, August 7, 2011

சமச்சீர் சந்தோசம்..

"இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ? எந்திரி டா" அம்மா இப்படி சொல்வது இதோடு எட்டாவது முறை.பாதி தூக்கத்தில் இருந்த பரிதி பத்தாவது படிக்கிறான்.

"ரம்யா..இவனுக்கு அன்னிக்கி மாதிரி மூஞ்சில தண்ணி ஊத்துனா தான் சரிபட்டு வரும்" - இது அப்பா.

அப்பாவின் ஸ்டைலே வேற.மாற்று சிந்தனையாளர்.பணம் பண்ணுவதிலிருந்து பாயாசம்  பண்ணுவது  வரை...

எங்க வீட்டுல எல்லாமே எங்க அப்பா தான்."கூட்டறது,பெருக்கறது,பத்திரம் தேய்க்கறது லேர்ந்து."ஆனால் இதெல்லாம் ஞாயிறு மட்டுமே.

மண்டே ஆனால் வேலைக்கி போயிடுவாரு.அம்மாவும் தான்.நான் போய் பல்லு தேய்க்கலன்னா ஒரு பெரிய சண்டையே வீட்டுல நடக்கும்.

வேற என்ன."புள்ளைய சரியா வளர்க்கல" என்பார் அப்பா.

"எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்" என்பார் அம்மா.கடைசியில் கரண்டிகள் பறக்கும்.

ஒருவழியாக பெட்டை விட்டு எழுந்து பல்லு வெலக்கி விட்டு வழக்கம் போல தினசரிகளை புரட்டினான்.

தலைப்பு செய்தி படித்ததில் இருந்து நிம்மதியே போச்சு.கடந்த இரண்டு மாதங்களை மட்டும் பரிதியால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.
ஒன்பது மணிக்கு துவங்கும் பள்ளிக்கு, எட்டரைக்கே சென்று விடுவான்.காரணம் பத்மா.

பத்மாவின் வீடு பள்ளியை விட்டு ரொம்ப தூரம்.காலை ஏழே கால் பஸ்ஸை விட்டால் வேறு எந்த பஸ்சிலும் ஏற முடியாதவாறு கூட்டம் இருக்கும்.எனவே ரொம்ப சீக்கிரமாக அவள் வந்து விடுவாள்.ஹோம்வொர்க்கை எல்லாம் அவள் பள்ளிக்கு வந்து தான் முடிப்பாள்.காரணம் ராத்திரி வீடு சேர பத்து மணி ஆகி விடும் அவளுக்கு.

கடந்த இரண்டு மாதமாக எங்கள் பள்ளியில் பாடமே நடத்தவில்லை.சமச்சீர் கல்வி பிரச்சினை என் வயிற்றில் பாலை வார்த்தது.பள்ளிக்கு ஒரே ஒரு நோட்டை மட்டும் தான் எடுத்து வருவேன்.சீக்கிரமே பள்ளிக்கு வந்து பத்மாவோடு அரட்டை அடிப்பேன்.

பலவிசயம் பற்றி பேசுவோம் நாங்கள்.அவளுக்கு அம்மா என்றால் உயிர்.ரோஸ் கலர்னா ரொம்ப பிடிக்குமாம்.பானிபூரியும் நூடுல்சும் அவளது விருப்ப உணவுகள்.இப்பொழுது என்னையும் அவளுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

போன வாரம் தான் நைசாக அவள் நம்பரை வாங்கி விட்டிருந்தேன்.அந்த நிகழ்வு ரொம்ப சுவாரஸ்யமானது.

"பத்மா உங்க வீட்ல செல் இருக்கா?"

"ஏன் கேக்கர?"

"சும்மாதான்.ஏதாவது முக்கியமான விஷயம்னா உன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்ல அதான் " என்றேன்.

"அது முக்கியமான விஷயம் வரும் போது பாத்துக்கலாம்" என்றாள்.அவள் என்னுடைய பந்தை மிக லாவகமாக சிக்ஸ் ஆக்கி விட்டிருந்தாள்.மதியம் வரை நான் அவளை கண்டுக்கவே இல்லை.

பிறகு அவளாகவே என்னிடம் வந்து "கணக்கு பாக்கணும்னு நோட் கேட்டல்ல.இந்தா" என்று அவள் நோட்டை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

"நாம எப்ப நோட்டு கேட்டோம்??.." என்று குழம்பியவாறே நோட்டை திறந்தேன்."கடைசி பக்கத்துக்கு முன்னாடி பக்கத்தை திறந்து பார்க்கவும்" என்றிருந்தது..வேக வேகமாக திறந்தேன்.

"Bulb AH"என்று எழுதி இருந்தது.இந்த முறை வாலண்டியராக அவளாகவே வந்து என்னை கேவலப்படுத்தி இருந்தாள்.

"ஐய்ய.யாருக்கு வேணும் உன் நம்பரு.மனசுல பெரிய திரிசான்னு நெனப்பு.இதெல்லாம் வேற யார் கிட்டயாவது வெச்சிக்கோ.உங்க அப்பா தசில்தாருன்னா என்ன வேணாலும் பண்ணுவையோ.ஊர் பணத்த உலைல போடறவைங்க தானே நீங்க!!"என்று ஒரு ஏத்து ஏத்துனேன்.

அவள் அழுதாள்..நல்லா வேணும்.."பல்பாம்ல!!" இப்ப எப்புடி..

அன்று முழுவதும் அவளிடம் பேசவே இல்லை.எனக்கு மனசுக்கு கஷ்டமாக தான் இருந்தது.வேற என்ன பண்ண சொல்றீங்க.யாருக்கா இருந்தாலும் கடுப்பு வரத்தானே செய்யும்.

அன்று மாலை என் செல்லுக்கு "சாரி.சும்மா வெலாட்டுக்கு தான் அப்படி பண்ணேன்" என்று ஒரு மெசேஜ் வந்திருந்தது.அவ தான்.இதை கூட கண்டு பிடிக்க மாட்டோமா..

"It's ok" என்று மட்டும் மெசேஜ் அனுப்பி விட்டு facebook கில் அரட்டை அடிக்க துவங்கி விட்டேன்.அதற்கு பிறகு அவளிடமிருந்தும் மெசேஜ் இல்லை.நானும் அனுப்ப வில்லை.

மறுநாள் காலை நான் லேட்டாக தான் வந்தேன்.வேண்டுமென்றே தான்.இண்டர்வெல் அப்ப அவளே வந்து பேசினாள்."கோவமா பா?"

"இல்ல இல்ல.எனக்கு உடம்பு சரி இல்லை.அதான் ".என்றேன்.அவளை பார்த்தால் பாவமாக இருந்தது.எதற்காக மேலும் அவளை காயப்படுத்த வேண்டும் என்று தான் அப்படி சொன்னேன்.

"நான் வெலாட்டுக்கு தானே டா அப்படி பண்ணேன்.நீ திட்டினது மட்டும் சரியா?.......சொல்லு" என்றாள்..

எனக்கு அவள் முகத்தை பார்த்தால் சிரிப்பு தான் வந்தது.இன்று அவள் எப்பொழுதும் இருப்பதை விட அழகாக தான் இருந்தாள்.

ஒருவழியாக ரெண்டு பேரும் சமாதானமாகி பேச துவங்கி விட்டோம்.இப்படி தான் அவ நம்பர வாங்குனேன்.அப்புறம் இரவு பனிரெண்டு மணி வரை முரட்டுத்தனமாக மெசேஜ் அனுப்புவோம்.சில சமயம் ஒரு மணி ரெண்டு மணி கூட ஆகிடும்.

இன்று பேப்பர் பார்த்ததிலிருந்து இதெல்லாம் இனி நடக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

காரணம் சமச்சீர் கல்வி பற்றிய தீர்ப்பு வந்து விட்டது.இன்னும் ஓரிரு வாரத்தில் எல்லாருக்கும் புக்கு தந்துடுவாங்க.வீட்டுல கேபிள் கட் பண்ணிடுவாங்க.காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சி அரக்க பறக்க டியூஷன்க்கு போகணும்.

அவகிட்ட இருந்து செல்ல புடுங்கி வெச்சிடுவாங்கலாம்.அவங்க வீட்டுல..எங்க வீட்டுலயும் தான்.

இனி அவளிடம் முன்ன மாதிரிலாம் பேச நேரம் இருக்காது.அவளுக்கும் தான் நேரம் இருக்காது.

உச்ச நீதி மன்ற தீர்ப்பு தள்ளி போக வேண்டுமென்று இப்பொழுதே இறைவனிடம் வேண்ட ஆரம்பித்து விட்டேன்.

1 comment:

விஸ்வப்ரியா said...

சமச்சீர் கல்வில அந்த அளவுக்கு படிக்க ஒண்ணுமே இல்ல.. அதுலயும் படிப்புக்காக இந்த சின்னஞ்சிறுசுக எதையும் தள்ளி எல்லாம் போடாதுங்க