Saturday, November 10, 2012

பட்டாசு அரசியல்


”தம்பி பட்டாசு வாங்கலயா?”

“இல்ல..”

“ஏன்டா”

“எங்க ஸ்கூல்ல பட்டாசு வெடிக்ககூடாதுன்னு சபதம் எடுத்திருக்கோம்”

நல்லது.. பல வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் போது நானும் கூட இப்படி ஒரு சபதம் எடுத்திருந்தேன். அது நீண்ட காலம் வரை தொடர்ந்தது.

“எங்க வீட்டுல பட்டாசு அதிகமா வாங்கிட்டோம். நீங்க கொஞ்சம் வெடிங்க” என பக்கத்து வீட்டு ஆண்ட்டி, பாசமாக பட்டாசு தரும்வரை அந்த சபதம் தொடர்ந்தது.பல தீபாவளிகள் எங்கள் வீடுகளில் பட்டாசே வாங்கியதில்லை. சில தீபாவளிகள் துணியே வாங்கியதில்லை என்பது வேறு கதை.

பள்ளிகளில் பட்டாசுக்கு எதிரான சபத்திற்கு சொல்லப்படும் காரணங்களில் முக்கியமானது

1) காசை கரியாக்கக்கூடாது
2) சின்ன குழந்தைகளை பணிக்கு அமர்த்துகிறார்கள்
3) எல்லா நல்ல பழக்கங்களையும் குழந்தைகளிலிருந்தே துவங்க வேண்டும்


முதலாவது வேலிட் பாயிண்ட்.பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் காசு கரியாகும் என்பதை எவன் கண்டுபிடித்தானோ.. வாய்வழியே வயிற்றுக்கு பயணிக்கும் கோட்டரும், சுவாசக்காற்றோடு நுரையீரலுக்கு தாவும் புகையிலையும் எந்த லிஸ்டில் சேரும் என்பது பற்றியெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை.இதற்கு எதிராக எந்த சபதமும் எடுக்கபட்டதாக நினைவில்லை. முக்கியமான காரணம் குழந்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது ஒன்று, இன்னொன்று மது, புகையிலையை பயன்படுத்தும் எவரும் நம் பேச்சை கேட்கமாட்டார்கள்.

பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்றால், நாம் பயன்படுத்தும் வாகனங்கள் என்ன செய்கின்றனவாம்.அவற்றை பயன்படுத்துவதை குறைப்பதை பற்றி என்றாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோமா?

இரண்டாவது..பட்டாசு தொழிற்சாலையில் சின்னக்குழந்தைகளை பணியமர்த்துகிறார்கள்,  நாம் பட்டாசு வாங்குவது அந்த தொழிற்சாலைகளை மோட்டிவேட் செய்வது போலானது என்கிறார்கள்.” நாம பட்டாசு வாங்கலன்னா அவங்க தொழில் நஷ்டமடையும்” என்ற கேணத்தனமான ஐடியாக்கள் பிள்ளைகளின் மனதில் விதைக்கபடுகின்றன.
 
பட்டாசு தொழிற்சாலையில் குழ்ந்தை தொழிலாளர்களை பணியமர்த்து வதற்கு எதிரான பேரணி, தமிழக அரசு அதை கண்காணிக்க கோரி போராட்டம், என போராட்டங்களை நடத்தி அதில் பிள்ளைகளை பங்கு பெறச்செய்வது தான் அவர்களின் மனதில் போராட்ட விதைகளை தூவும். இது தான் அக்கப்பூர்வமான நடவடிக்கையும் கூட.இந்த பழக்கத்தை தான் குழந்தைகளில் இருந்தே பழக்க வேண்டும்.

ஆனால் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் பள்ளிகள் பங்கு பெறாததற்கு என்ன காரணம்.

ஊரில் எல்லா குழந்தைகளுமே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது ஒரே ஒரு குழந்தை மட்டும் வெடிக்க வில்லை என்றால்
“ நீ மட்டும் ஏன் பட்டாசு வெடிக்கல” என அந்த குழந்தையை நாம் கேட்கும் போது
“எங்க ஸ்கூல்ல பட்டாசு வெடிக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க”

“ நீ எந்த ஸ்கூல்”
என நாம் கேட்கும் போது பள்ளியில் பெயரை அந்த குழந்தை சொல்லும்.

பரவால்லயே நல்ல ஸ்கூலா இருக்கே.. எவ்ளோ நல்ல பழக்கங்களை சொல்லி தருகிறார்கள். என்பதாக அந்த பள்ளிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.எவ்வளவு பெரிய விளம்பர உத்தி இது. பள்ளியின் விளம்பரத்திற்காக ஒரு குழந்தை தன்னுடைய அப்போதைய சந்தோசத்தை பலி கொடுக்கிறது.அது வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் வெடி வெடிப்பதில் சுவாரசியம் இருக்க போவதில்லை.

ஒழிக்க வேண்டியது எவ்வளவே இருக்க பட்டாசை ஒழிப்பானேன்.

நாம் ஒழிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க பட்டாசுக்கு எதிரான சபதம் ஏன்?

நம்முடைய நோக்கம் சமூக மாற்றமா? வெற்று விளம்பரமா?



No comments: