Showing posts with label இணைய மார்கெட்டிங்க். Show all posts
Showing posts with label இணைய மார்கெட்டிங்க். Show all posts

Wednesday, June 11, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 5

கடந்தவாரம் என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். கட்டுமான நிறுவனம் வைத்திருக்கிறார். தினமும் இரு பிரபல ஆங்கில நாளிதழ்களில் தன் நிறுவனம் பற்றி விளம்பரம் கொடுக்கிறார். ஒரு நாள் விளம்பரத்திற்கு எண்ணூறு ரூபாய் ஆகிறதாம்.. மாதம் சுமார் முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை ஆகிறதாம். ”கடந்த மூன்று மாதமாக இந்த விளம்பரம் கொடுக்கிறேன்.. ஒரு கால் கூட வரல” என்று வருத்தப்பட்டார்.இணையத்தில் விளம்பரபடுத்தி எதாவது செய்ய முடியுமா பாருங்களேன் என என்னிடம் வந்தார்.

விளம்பரம் என்று வரும்போது எப்போதும் ஒன்றையே நம்பி இருக்கக்கூடாது. பரவலாக எல்லாவற்றிலும் விளம்பரம் செய்ய வேண்டும். உதாரணமாக அவர் விளம்பரம் செய்யும் பத்திரிக்கையில் ஏகபட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை விளம்பரங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் எல்லா பத்திரிக்கையிலும் ஒரு பக்கம் முழுக்க ரியல் எஸ்டேட் சார்ந்த விளம்பரங்களே குப்பை போல கொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த குப்பையிலிருந்து எப்படி எனக்கு தேவையானதை பெறுவேன்?
அவருக்கு ஒரு மார்க்கெடிங்க் ப்ளான் போட்டு கொடுத்திருக்கிறேன். பத்திரிக்கைகளுக்கென சில சதவீதம் ஒதுக்குங்கள். இணையத்திற்கு கொஞ்சம். எது சிறப்பா வருதோ அதுல அதிகமா போடுங்க.. அவ்ளோ தான் என்றேன்.  நம் பிசினஸை இணையத்தில் அசுர வேகத்தில் இறக்குவது தான் பணம் பண்ணுவதற்கான மிகச்சிறந்த உத்தி.

 நான் சிலரை தொடர்ச்சியாக பார்க்கிறேன். மிகச்சிறப்பாக இணையத்தில் விளம்பரம் செய்து மாசம் கணிசமான வருமானத்தை பார்க்கிறார்கள்.எனக்கு தெரிந்து ஒரு நண்பர். ரிலையன்ஸ் டேட்டா கார்டு விற்கிறார். ஆரம்பத்தில் அவர் தெருவில் விற்றவர் பிறகு olx தளத்தில் ஒரு விளம்பரமாக போட்டார். தினமும் மூன்று பேராவது கால் செய்கிறார்களாம். மாதம் 50 டேட்டா கார்டாவது விற்றுவிடுகிறது என்றார்.

ஒருவர் திருமணத்துக்கான சாப்பாடு ஆர்டர் எடுப்பவர். இதே olx தளத்தின் மூலம் மாதம் நான்கு பிசினஸாவது நடந்துவிடுகிறது என்கிறார். ஆடை விற்பவர், மொபைல் விற்பவர், கல்லூரிக்கு ஆள் சேர்த்துவிடுபவர் என சகலருக்கும் இப்போது இணையத்தில் தான் பிசினஸ் சக்கைபோடு போடுகிறது. ஆனால் இப்போது olxஇலும் குப்பை போல அவ்வளவு பேர் விளம்பரம் செய்கிறார்கள். விளம்பரப்படுத்துதலில் மிக முக்கியமான உத்தியே எல்லோரும் ஒரு இடத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் நாம் அந்த இடத்தில் நுழைந்துவிட வேண்டும். நிறைய பேர் வந்துவிட்டால் வேறு இடத்திற்கு ஓடிவிட வேண்டும்.

உதாரணமாக எல்லோருமே வெள்ளை சட்டை போட்டிருக்கும் ஒரு கூட்டத்தில் நாம் நம்மை விளம்பரப்படுத்திக்கொள்ள பச்சை சட்டை மாட்டிக்கொள்ள வேண்டும்.. அவ்வளவே.. நம்மை பார்த்து ஒன்றிரண்டு பேர் பச்சை சட்டை போடத்துவங்கினால் பிரச்சினையில்லை. ஒரு கட்டத்தில் எல்லோருமே பச்சை சட்டைக்கு மாறுவார்கள். அப்போது நாம் சட்டையை கழட்டி தூக்கி எறிந்தால் முடிந்ததுவேலை.
அடுத்த வாரம் சட்டையை கழட்டுவோம்.

Monday, May 5, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 4

இணையத்தில் சம்பாதிக்க சின்னசின்னதாக எவ்வளவோ வாய்ப்புகள்  நாம் தினம்தோறும் கேள்விபட்டுக்கொண்டேயிருக்கிறோம். எஸ்.எம்.எஸ் அனுப்பினால் காசு.. ரீசார்ஜ் பண்ணால் காசு. ஆள் சேத்துவிட்டால் காசு. எழுதினா காசு.. லைக் பண்ணா காசு.. நின்னா காசு உக்காந்தா காசு. என ஏகபட்ட முறைகள் இருந்தாலும் நான் பரிந்துரைக்கும் முறை ஒன்று தான்!

ஒரு தளம் ஒன்று துவங்கி அதில் நேரத்தை செலவிடுங்கள். உதாரணமாக எழுதலாம். தமிழோ.. ஆங்கிலமோ. எனக்கு தெரிந்த ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள், பல்கலைக்கழகத்தில் நடக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் இதெல்லாம் தொடர்ச்சியாக ஒரு வெப்சைட்டில் போட்டு வைத்தால் என்ன? என்று அவருக்கு தோன்றியது.உடனே ஒரு தளத்தை துவங்கி அதில் அவ்வப்போது இந்த தகவல்களையெல்லாம் தொடர்ச்சியாக பதிவேற்றிக்கொண்டே வந்தார்.

முதலில் பத்து பேர், இருபது பேர் என பார்த்தவர்கள் எண்ணிக்கை, நாளாக நாளாக பல்லாயிரமாக பெருகிறது.இப்போதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்போது ரிசல்ட் வருமென அண்ணா பல்கலைக்கழகத்தின் தளத்திற்கு சென்று பார்ப்பதற்கு முன்பே இவரின் தளத்திற்கு சென்று தான் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு பாப்புலராகிவிட்டது.இது தான் அவரின் இணையதளம் : http://www.rejinpaul.com/) ஃபேஸ்புக்கில் மட்டுமே இவர் தளத்தை ஒன்றரை லட்சம் பேர் தொடர்கிறார்கள்.

ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க விளம்பரத்தின் மூலம் மட்டுமே ஆயிரக்கணக்கில் காசு வருகிறதாம். வெளிநாட்டில் எல்லாம் இந்த முறை ரொம்ப பிரசித்தம். இவர்களை பதிவர்(blogger) என்பார்கள். பயணப்பதிவர்கள் (travel blogger) என்று ஒரு குரூப் இருக்கிறார்கள். வாரம் ஒருமுறை எங்காவது சென்று பயணத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் அங்கே கிடைத்த வித்தியாசமான உணவுகள், மனம் கவர்ந்த மனிதர்கள் என எழுதுவார்கள். கூடவே பயணத்தின் போது எடுத்துக்கொண்ட போட்டோவும் போடுவார்கள்.

இப்படி வாரம் ஒருமுறையோ மாதம் இருமுறையோ, அவரவர் வசதிக்கு தகுந்தவாறு எழுதுவார்கள்.இப்படி எழுதுவதையே முழு நேர வேலையாக வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்துகிறவதெல்லாம் வெளிநாடுகளில் சர்வசாதாரணம். அங்க ஓகே.. நம்மூர்ல இதெல்லாம் நடக்குமா? என்கிறீர்களா?

இங்கேயும் சிலர் சம்பாதிக்கிறார்கள்.சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் சில கல்லூரி மாணவர்கள் டெக் பதிவர்கள் (techi bloggers) என்ற பெயரில் அவ்வப்போது வரும் தொழில்நுட்பம் பற்றி எழுதி மாதமானால் ஐநூறு டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.

என்னை கேட்டால் வெப்சைட் என்பது நிலம் வாங்குவது போல தான்.. வருடம் ஆக ஆக அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும். மதிப்பு உயர நாம் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். அவ்வளவே.. கடைசியாக ஒன்று.. olx.com வெப்சைட் தெரியுமா? 2006லேயே இந்த தளத்தை துவங்கிவிட்டார்கள். இப்போது டிவியில் விளம்பரம் செய்யுமளவுக்கு இந்த வெப்சைட் வளர்ந்திருக்கிறதென்றால் தினம் தோறும் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று யோசித்துக்கொள்ளுங்கள்..விபரம் அடுத்த வாரம்

Saturday, April 19, 2014

இணையத்தில் பணம் உண்மையா? - 3

படிப்பதற்கு முன்னால்

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - முதல் பாகம்
இணையத்தின் மூலம் பணம் உண்மையா - இரண்டாம் பாகத்தை படித்துவிடுங்கள்


youmint.com என்றொரு தளம். நம் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்துகொண்டு உள்ளே சென்று பார்த்தால்  நிறைய சின்ன சின்ன ஆஃபர்கள் கொடுக்கிறார்கள்.. அவர்கள் கொடுக்கும் தளங்களில் நம்மை பதிவு செய்துகொண்டால் 5ரூபாய் பத்து ரூபாய் என தருகிறார்கள்.எல்லாவற்றையும் சேர்த்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாமாம்.

இப்படி நிறைய தளங்கள் இருக்கின்றன. rupeemail.com என்றொரு தளம் இதே போல தான். இதில் சென்று பதிவு செய்துகொண்டால் நமக்கு அவ்வப்போது விளம்பர மெயில் அனுப்புவார்கள். அதை க்ளிக்கினால் 0.50 பைசா தருவார்கள். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ ஐம்பது பைசா விளம்பரம் வரும்.

ஆள் சேர்த்துவிட்டால் காசு என்ற ஒரு வகை இருக்கிறது. affliate தளம் என்பார்கள். வெளிநாடுகளில் இது ரொம்ப பாப்புலர்.ஒருவரை சேர்த்துவிட்டால் ஒரு டாலர் தருவார்கள்.  நூறு பேரை சேர்த்துவிட்டால் நூறு டாலர். 50 டாலர் சம்பாதித்தால் போதும். வீட்டுக்கு செக் வந்துவிடும். நம்மூர்காரர்கள் நிறைய பேர் இவற்றை முயற்சி செய்திருக்கிறார்கள். நான் கூட முயற்சி செய்தேன். ஆனால் 50 பேரை சேர்த்து 50 டாலர் வாங்குவதற்குள் வாயில் நுரை வந்துவிடும்.

நம்ம நண்பன்.. நண்பனோட நண்பன்.. அவனோட காதலி..பக்கத்துவீட்டுகாரன் இப்படி நிறைய பேரை சேர்த்துவிட்டேன். ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பார்கள். “அப்றம் சம்பாதிச்சி பெரிய ஆளா ஆயிட்டன்னா என்ன மதிக்கவே மாட்ட தானே” என்பார்கள். ஒருத்தன் அவனால் நான் ஒரு டாலர் சம்பாதித்ததுக்கு ரோட்டு கடைக்கு கூட்டி போய் ட்ரீட் என்ற பெயரில் நூத்தம்பது ரூபாய்க்கு மொய் வைத்துவிட்டான்.

தெரிந்தவர்களை சேர்த்துவிடுவதெல்லாம் சரிபட்டு வராது. குறிப்பாக நாம் இது போல் சம்பாதிக்கிறோம் என்றால் தூக்கம் வராமல் தவிப்பவனே உண்மையான நண்பன். ebay, amazon மாதிரியான தளங்களில் இருக்கும் பொருட்களை நாம் விற்றுக்கொடுத்தால் நமக்கு சில சதவீதம் பணம் தருகிறார்கள்.
உதாரணமாக 200 டாலர் புத்தகத்தை விற்றால் பத்து சதவீதம் தருவார்கள். இருபது டாலர். சட்டை, பேண்ட், மொபைல் என எதுவேண்டும்னாலும் விற்கலாம். எப்படி விற்கபோகிறீர்கள்?  என்பதை பொருத்தே எல்லாம்.

பெரிய துணிகடையில் கொஞ்சம் துணி வாங்கி ரோட்டு கடையில் போட்டு விற்பார்களே. அது போல தான் இதுவும்.. ஆனால் இது இணையத்தில். விற்பனை உத்தி தெரிந்திருக்க வேண்டும். சிலர் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு விற்பார்கள். ட்விட்டரில் ட்வீட்டி விற்பார்கள். மானாட மயிலாடவில் வருவாரே.. நம்ம நமீதா.. அவர் கூட இது போல் பொருள் வாங்கி விற்று காசு பார்த்திருக்கிறாராம். அது பொழுது போக்காம். ஒரு வார இதழில் படித்தேன். நமக்கு இதெல்லாம் சரி பட்டு வருமா? இன்னும் நிறையா இருக்கு! அடுத்த வாரம்!

Monday, April 14, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 2

இணையத்தின் மூலம் பணம் - உண்மையா? (முதல் பகுதியை படித்துவிட்டு மேற்கொண்டு தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக புரியும்!! )

இணையத்தின் மூலம் பணம் என்பது எனக்கு தெரிந்த அளவில் உண்மை! ஆனால் எல்லோரும் சம்பாதிக்க முடியாது. கொஞ்சம் விவரம் தெரிஞ்சாகணும். எடுத்த உடனே கோடிகளில் சம்பாதிக்க முடியாது.பயிற்சி வேண்டும். குறிப்பாக எங்கெல்லாம் ஏமாறக்கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

”டேட்டா எண்டரி வேலை.இத்தனை பக்கம் அடிக்கணும். ஒரு பக்கத்துக்கு ஆறு ரூபாய் கொடுப்போம்” என்று சொல்லி வேலை கொடுத்தார்கள். நண்பர் ஒருவருக்கு. இணையம் தேவையில்லை.வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் போதுமானது என்றார்கள். எவ்வளவோ செலவு பண்றோம் இத பண்ண மாட்டோமா? என நண்பர் கம்ப்யூட்டர் வாங்கினார்.

கம்ப்யூட்டர் வாங்கிய கதை சுவாரசியமானது. ரெண்டு மூணு பேரிடம் விசாரித்திருக்கிறார்.”10ஆயிரத்துக்கு வாங்கினால் கம்ப்யூட்டர் சீக்கிரமே போய்டும். கான்ஃபிகரேசன் சரியா இருக்காது. ஸ்லோவா இருக்கும்.55 ஆயிரத்துல ஒண்ணு வந்துருக்கு. அட்டகாசமா இருக்கும்” என அவர் தலையில் கட்டினார்கள்!

அதான் மாசம் ஆனா முப்பது ஆயிரம் ரூபா சம்பாதிக்க போறோமே.. போட்டதெல்லாம் ஆறு மாசத்துல எடுத்துட மாட்டோம்.என சகட்டுமேனிக்கு செலவு செய்தார்.ஒரு பக்கம் அடித்தால் ஆறு ரூபாய்.ஆயிரம் பக்கம் அடித்தால் ஆறாயிரம் என்று கணக்கு போட்டு தான் ப்ராஜக்ட் எடுத்தார். நண்பருக்கு டைப்பிங்க் தெரியாது. “அதெல்லாம் ஈஸி. நாளு நாள் அடிச்சா நமக்கே வந்துடும்.” என்று யாரோ உசுப்பேத்தி இருக்கிறார்கள்!

நண்பர் ஒரே ஒரு பக்கத்தை அடிக்க ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டார். ஒரு நாள் முழுவதும் செலவிட்டு 6 பக்கம் அடித்து முடித்திருந்தார். இப்படி ஒரு வாரம் கஷ்டபட்டு 50 பக்கம் முடித்து கொடுத்தார்.. எல்லாமே தப்பு தப்பாக அடித்திருந்தார்.தப்புக்கெல்லாம் பணம் கழித்துவிட்டு 150ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாசம் கழிச்சி உங்க அக்கவுண்ட்ல கிரடிட் ஆகும். என்று வங்கி கணக்கு கேட்டிருக்கிறார்கள்.இவர் இதுக்குண்ணே தனியா அக்கவுண்ட் ஒண்ணு துவங்கினார்.

மாதம் முழுக்க கஷ்டபட்டு ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். இந்த அமவுண்டுக்கு தான் 55 ஆயிரம் செலவு பண்ணி கம்ப்யூட்டர் வாங்கினார் நண்பர். நாள் முழுக்க மாங்கு மாங்கென்று கம்ப்யூட்டரை பிண்ணி பெடல் எடுத்து கஷ்டபட்டு அடித்ததில் சம்பாதித்த பணம் அது. இந்த டேட்டா எண்ட்ரி யாருக்கு பொருந்தும்? வீட்டில் கம்ப்யூட்டரை சும்மா வைத்துக்கொண்டு  நல்லா டைப்படிக்க தெரிந்த ஆசாமிக்கு தான் இந்த வேலை சரிபட்டு வரும்.

என்னென்ன பிரச்சினை வரும் என நாமாக யோசித்து கேட்க மாட்டோம். அவர்களாகவும் சொல்ல மாட்டார்கள். இன்னொரு வகை டேட்டா எண்ட்ரி கம்பெனிகள் இருக்கின்றன. நாம் என்ன தான் திறமையாக டைப்படித்துக்கொடுத்திருந்தாலும் காசு இப்போ தர்றேன் அப்பறம் தர்றேன் என்று ஆளை அலைய விடுவார்கள்! ஆனால் சரியாக செய்து சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

 நமக்கு விவரமும் தெரிந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் நன்றாக விசாரித்து தான் வேலை எடுத்து செய்ய வேண்டும். கொஞ்சம் அசந்தால் காசும் உழைப்பும் வீணாகிவிடும். அதே சமயத்தில் ஒருத்தரிடம் ஏமாந்தால் அடுத்து வரும் அத்தனை பேரையுமே அயோக்கியனாக பார்க்கத்தோன்றும்!

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 3ம் பாகம்

Saturday, March 1, 2014

200 ரூபாயில் வெப்சைட் துவங்குவது எப்படி?


”மச்சி எனக்கொரு வெப்சைட் ஓபன் பண்ணனும்.. யாரை போய் கேட்டாலும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரேட் சொல்றான்.. ஒருத்தர் 1000ரூபாய்க்கி சொன்னா இன்னொருத்தர் 5000 சொல்றான், வேற ஒருத்தர்கிட்ட கேட்டா பத்தாயிரமாம்.யார்கிட்ட வாங்கறதுன்னே தெரியல” என்றார்.

துணி வாங்க கடைக்கு போகிறோம்.ரோட்டுக்கடையில் வாங்கினால் ஒரு ரேட்.ஷோரூமில் வாங்கினால் ஒரு ரேட், அதுவே ஷாப்பிங்க் மாலில் ஒருரேட்.தரத்துக்கேற்ப தான் விலை இருக்கும்.எல்லாமே வியாபாரம், லாப நஷ்ட அடிப்படையிலானது.டிசைனுக்கேற்ப விலை மாறும்.அவங்களும் ஆபீஸ் வாடகை குடுக்கணும்.கரண்ட் பில் கட்டணும், நாலு பேர்க்கு சம்பளம் போக அவங்களுக்குன்னு ஒரு லாபம் வைப்பதால் விலை அதற்கேற்ப தான் இருக்கும்.

ரொம்ப செலவு செய்யாமலே  நாமே வெப்சைட் துவங்க முடியும்.அதற்கு முன் சில அடிப்படை தகவல்களை பார்ப்போம்.
டொமைன் (domain) என ஒன்றிருக்கிறது. .com,.in என முடியும். பல வகைகளில் இருக்கிறது! இது தான் அட்ரஸ். இதற்கு ஆண்டுக்கு 500ரூபாய் கட்ட வேண்டும். godaddy.com போன்ற நிறுவனங்கள் 200ரூபாய்க்கு கூட தருகிறார்கள்.டொமைன் வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. 

ஹாஸ்டிங்க்(hosting) என ஒன்று இருக்கிறது.அதற்கு வருடத்திற்கு 1000ரூபாய் வரை கட்ட வேண்டும். வீடு வாங்கினால் மாதம் மாதம் கரண்ட் பில் கட்டுகிறோமே. அது போல வெப்சைட் வாங்கினாலும் சில அடிப்படை விசயங்களுக்காக செலவு செய்ய வேண்டும்.
ஆனால் blogger.comல் உங்களுக்கான வலைப்பதிவு ஒன்றை துவங்கி, இலவசம் தான்.பின் godaddyல் 200ரூபாய் கட்டி .com ஆக்கினால் முடிந்தது வேலை.வெறும் 200ரூபாயில் வெப்சைட்.

blogger கணக்கு துவங்குவது எப்படி?

ப்ளாக்கர் கணக்கு துவங்குவது எப்படி என தெரிந்துகொள்ள மேலே உள்ள லிங்கிற்கு செல்லவும்! அதன் பிறகு ப்ளாக்கரை டொமைனாக்கினால் வேலை முடிந்தது. அது பற்றி அடுத்த பதிவில்! (காத்திருங்கள்) 


Tuesday, January 14, 2014

இணைய மார்கெட்டிங்க் என்பது யாதெனில்

இன்னைக்கு வெப்சைட் வைத்திருப்பது ரொம்ப ஃபேஷனாயிடுச்சி.ஆளாளுக்கு விசிட்டிங்க் கார்டில் போட்டுக்கொள்கிறார்கள்.”இண்டர்னெட் போனீங்கன்னா நம்ம வெப்சைட்ட பாருங்க. செம்மயா இருக்கும்” என்பார்கள்.

இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு வெப்டிசைனிங்க் கம்பெனி வைத்திருக்கிறார்கள். யாரை கேட்டாலும் “வெப் டிசைனிங்க் பண்ணி தர்றோம்..” என்கிறார்கள்.குடிசைத்தொழில் போல ஆகிவிட்டது.இது ஒரு பக்கமென்றால் ஏற்கனவே தங்கள் அலுவலகத்துக்கு வெப்சைட் வாங்கி,பெருமைக்காக விசிட்டிங்க் கார்டில் மட்டும் போட்டுக்கொண்டு “எங்குளுக்கும் வெப்சைட் இருக்குல்ல” என காலர் தூக்கிவிட்டு சுத்திக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் வெப்சைட்டை யார் பார்க்கிறார்கள் என விசாரித்து பார்த்தால், அவர்கள் மட்டுமே பார்ப்பதாக தான் தகவல்.அதுவும் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ.. அப்பப்ப யாராவது நண்பர்கள் பார்க்கலாம்.யாருமே பாக்காத வெப்சைட்டை யாருக்காக துவங்கி வைத்திருக்கிறார்கள்?

வெப்சைட் துவங்குவதோடு வேலை முடிந்துவிட்டதாக நம்மில் பலர் நினைத்துக்கொள்கிறோம். வெப்சைட் என்பது வெறுமனே வெப்சைட் மட்டுமல்ல. அது ஒரு பிசினஸ். நம்ம பிசினஸ் நமக்கு மட்டுமே தெரிந்திருந்தால் போதுமா? நாம் ஒரு ஹோட்டல் பிசினஸ் செய்வதாக வைத்துக்கொள்வோம். நம்ம கடை நமக்கு மட்டுமே தெரிந்து நாம மட்டுமே நாலு வேளை மூக்கை பிடிக்க சாப்பிட்டால் போதுமா? இல்லை நம்ம நண்பர்கள்.. சொந்த காரங்க மட்டும் சாப்பிட்டால் போதுமா? நமக்கு தெரியாத யார் யாரோ வந்து நம் கடையில் சாப்பிட்டால் தான் நமக்கு போணி ஆகும், பணம் வரும், கல்லா கட்டலாம். நிறைய பேர் வரும்போது பிசினஸும் டெவலப் ஆகும். வெப்சைட்டும் அதே போல தான்.  நமக்கு தெரியாத யாரோ பார்க்க வேண்டும்.

நமக்கு சம்பந்தமே இல்லாத, நம் பிசினஸ் தேவைப்படும் ஒருவருக்கு தெரிந்தால் தான் நமக்கு அதனால் லாபம்.
இல்லையென்றால் எதற்காக சில ஆயிரம் செலவு செய்து ஒரு வெப்சைட் துவங்கணும்.வேஸ்ட் இல்லையா? ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கும் போனையே அடித்து துவைத்து சுக்கல் சுக்கலாகும் வரை பயன்படுத்துகிறோமே.. அந்த போனை வைத்து மெசேஜ் அனுப்பறோம், பாட்டு கேக்கறோம்,பொழுதுக்கும் யாருக்கோ போன் பேசறோம்,என்னவெல்லாம் முடியுமோ எல்லாம் செய்து பாடாய் படுத்தறோம். நம் வெப்சைட்டை மட்டும் எதுக்கு வெட்டியா வச்சிருக்கணும்?

இனி நம் வெப்சைட்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்யப்போகிறோம்.அடித்து துவைத்து கசக்கி பிழிந்து எடுக்க போகிறோம்.சரி இதெல்லாம் வெப்சைட் வைத்திருக்கிறவர்களுக்கு.. இல்லாத நாங்க என்ன பண்றது? என குரூப் கேட்பது என் காதில் விழுகிறது. வெப்சைட் இல்லாதவர்கள் அவங்கவங்க ஆபீஸ்க்கு வெப்சைட் துவங்குங்கள்.
இணையதளம் மற்றும் இணைய மார்கெட்டிங்க் பற்றி எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த கட்டுரை. காரணம்.மார்கெட்டில் சகட்டுமேனிக்கு வெப்சைட் துவங்கித்தருபவர்கள் இருக்கும் இந்த நேரத்தில், இணையதளம் துவங்கித்தருபவர்களிடம் நாம் எதிர்பார்க்க வேண்டியது என்னென்ன. வெப்சைட் வாங்கிவைத்துக்கொள்வதால் மட்டும் வேலை முடிந்துவிட்டதா? அதை அடுத்தவரிடம் கொண்டு செல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டும் என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறைந்த பட்ச அக்கறை. அவ்வளவே!

 நீங்கள் இன்வெர்ட்டர் விற்கும் கடை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கடையை பற்றி யார் யாருக்கெல்லாம் தெரியும்? உங்கள் தெருவில் இருப்பவர்,பக்கத்து தெருவில் இருப்பவர்,அதிகபட்சம் உங்கள் ஊரில் இருப்பவர்.பத்து ஊர் தாண்டி இருக்கும் ஒருவர் இன்வர்டர் வாங்க வேண்டி கடையை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் ஊரில் ஆளே இல்லையென வைத்துக்கொள்வோம்.அவருக்கு உங்களை தெரிய வேண்டுமென்றால் நீங்கள் இணையத்தில் இருந்தாகவேண்டியது அவசியம்.

உலகம் சுருங்கிவிட்டது.எல்லாமே இணையத்தில் கிடைக்கிறது.ஜட்டியிலிருந்து ஜமுக்காளம் வரை வீட்டுக்கே கொண்டு வந்து தந்துவிடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் இதே ஜட்டியும் ஜமுக்காளமும் நம்ம தெருவோரத்திலிருக்கும் கடையிலேயே கிடைத்துவிடுகிறது.ஆனால் எங்கிருந்தோ கொண்டு வந்து கொடுப்பவன் நம்ம தெருகாரனை விட 10 ரூபாய் கம்மியாக கொடுக்கிறான். கொடுக்க முடிகிறது என்றால் அதற்கும் ஒரே காரணம் இணையம்.
யோசித்துப்பார்த்தால்..இன்னும் பத்து ஆண்டுகளில் நம் தெருவில் கடையே இருக்கப்போவதில்லை..அப்போது நாம் மட்டும் கடை வைத்திருந்தால் போனியாகுமா.. நாமும் அட்வான்ஸ்டாக யோசித்தாக வேண்டியிருக்கிறது.யோசிச்சிகிட்டே இருங்க. அடுத்த வாரம் பாப்போம்!

இணைய மார்கெட்டிங்க் -2

நன்றி - அரக்கோணம் டைம்ஸ் (ஜனவரி 12 2014)