Friday, January 18, 2013

செக் மேட்!!

செஸ்ஸூக்கும் நம் வாழ்க்கைக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. செஸ்ஸின் துவக்கமும், முடிவும் எப்போதும் ஒரே மாதிரியே அமையும். துவக்கம் என்பது சிப்பாயை நகர்த்துவது என்பதாகவோ, குதிரையை நகர்த்துவது என்பதாகவோ தான் அமையும். முடிவு என்பது ராஜாவை மடக்கிபிடித்து செக் மேட் சொல்ல வேண்டும். வாழ்க்கையும் இதைப்போலவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட துவக்கத்தையும், முடிவையும் கொண்டது. ஆனால் இடைப்பட்ட ஆட்டத்தில் தான் இருக்கிறது சுவாரஸியமே.அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். எனக்கு கிடைத்த அனுபவம் அப்படியே உங்களுக்கு கிடைக்க வேண்டிய அவசியமில்லை. என் அனுபவத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கும் பாடம் என்பது வேறு வடிவத்தில் உங்களுக்கு பயன்படலாம். அவ்வளவே. அதனால் எனக்கு கிடைத்த அனுபவம் தான் சரி, உங்களுக்கு கிடைத்தது மோசம் என நான் சொல்லிவிட முடியாது.
செஸ்ஸில் சில அடிப்படைகள் மட்டும் தெரிந்தால் போதும். யார் வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்கென தனியே திறன்கள் ஏதும் தேவையில்லை.வாழ்க்கையும் அப்படியே, எல்லோரும் ஒருவித ப்ரின்சிபல் எனப்படும் கொள்கைகளை வகுத்துக்கொண்டு ஆட்டத்தை துவங்குகிறோம். ”எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சிக்கோ” என இதை தான் சொன்னார்கள் போல.

செஸ்ஸில் ராணி என்பதை அதிர்ஷ்டம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். ராணி முக்கியம் தான். ஆனால் ராணி மட்டுமே முக்கியமல்ல. ராணியை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டாலும், கடைசி நேரத்தில் சாதாரண சிப்பாயை நகர்த்தியே ராணியை மீட்டெடுக்க முடியும். சிலர் ராணியை இழந்ததுமே விரக்தியாகி எல்லா காயினையும் தட்டிவிட்டு தற்கொலையில் ஈடுபடுவார்கள். ஆனால் ஆட்டம் நன்றாக பிடிபட்டவர்கள் அது போல ஒரு போதும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களுக்கு தெரியும். அபிமன்யூவைப்போல கடைசி வரை காய்களை நகர்த்தி என்ன தான் நடக்கிறது என பார்த்துவிடும் ஆர்வம் அவர்களுக்கு. வெற்றி நோக்கோடு மட்டுமே ஆடுகிற போது கிடைக்கிற அனுபவத்தை விட, வெறும் சுவாரசியத்திற்காக ஆடும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அடுத்த இரண்டு மூன்று நகர்த்தல்களை வேண்டுமானால் ஜோசியம் போல கணித்துவிடலாம். ஆனால் மொத்த ஆட்டத்தையும் முன்கூட்டியே நம்மால் கணித்துவிடமுடியாது.

எப்போதுமே முதல் நகர்த்தல் என்பது மிக மிக முக்கியமானது. அது தான் அடுத்தடுத்த நகர்த்தல்களை தீர்மானிக்கும். முதல் நகர்த்தல்களை ஏனோதானோவென்று நகர்த்திவிட்டால் அடுத்தடுத்த ஆட்டங்கள் கைமீறி போய்விடும்.அதனால் தான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என சொல்லி வைத்தார்கள் போல.

சில சமயம் எதாவது பெரிதாக இழக்க வேண்டிவரும். அது ராணியாகவும் இருக்கலாம், யானையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நேர இழப்பு தான் பெரிய திருப்புமுனையாகி வெற்றியைதரும். பெரிதாக இழக்கத்தயாரானால் தான் பெரிதாக எதையாவது அடையமுடியும் என்ற பெரிய தத்துவத்தை அது நமக்கு அந்த கணத்தில் கற்றுக்கொடுக்கும். காரணம் இழப்பைபற்றி கவலைப்படாதவனால் தான் இறுதியில் வெற்றியை ருசிக்கமுடியும்.

No comments: